(நேர்காணல்) சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் புலம்பெயர் சமூகங்களின் அனுபவங்களையும் தமிழ் இலக்கியத்தின் புதிய கோணங்களையும் வெளிப்படுத்துகின்றன

நேர்காணல் தொகுப்பு: மணலி அப்துல் காதர்

கலிபோர்னிய பல்கலைக்கழக பேராசிரியர் வாசுகி கைலாசம்

மணலி அப்துல் காதர்
முனைவர் வாசுகி கைலாசம் அவர்கள் பெர்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தெற்கு/ தென் கிழக்கு ஆசிய  ஆய்வு துறையில் (SSEAS) தமிழ் ஆய்வு பேராசிரியர்ராக பணிபுரிந்து வருகின்றார் 

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தாங்கள் தற்போது Asian Studies துறையில் பேராசிரியாக உள்ளீர்கள். தங்களின் பணி எவ்வகையில் அமைந்திருக்கிறது?

நான் தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை ஆராய்ச்சி செய்கிறேன். அதோடு, தெற்கு/ தென் கிழக்குப் ஆசிய visual culture தொடர்பான பாடங்களையும் கற்பிக்கிறேன். எங்கள் துறை முதுநிலை (graduate) மாணவர்களுக்கான பயிற்சியில் அதிக கவனம் செலுத்துகிறது, அவர்களை ஆராய்ச்சிக்கும் சிறப்பாகத் தயார் செய்கிறோம். இளங்கலை மாணவர்கள் (undergraduates) இன்ஜினியரிங் மற்றும் சயின்ஸ் போன்ற பல்வேறு துறைகளிலிருந்து வந்தும், தங்களின் பட்டப் படிப்பு தேவைகளை நிறைவேற்ற எங்கள் வகுப்புகளை எடுக்கிறார்கள். தற்கால இலக்கியத்தின் சமூக, இலக்கிய அழகியல், கலாச்சார அம்சங்களை ஆராய்வது எனது மையப்பணி.  

தங்கள் துறையில் தமிழ் இலக்கிய பிரிவில் மாணவர்கள் பயில்கின்றனரா?

எங்களிடம் தமிழ் ஆய்வுக்கான தனி துறை இல்லை. நாங்கள் தென் மற்றும் தென்கிழக்காசியாவைப் பற்றிய Area Studies துறையாக செயல்படுகிறோம், இதில் தென் மற்றும் தென்கிழக்காசியாவின் 13 மொழிகளை கற்பிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் UC Berkeleyயில் உள்ள இளங்கலை மாணவர்களில் சுமார் 70 பேர் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் தொடர்பான பாடங்களை தேர்வு செய்கிறார்கள்.

தற்போது தாங்கள் Pertanean Faculty Enrichment Award பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இந்த விருது குறித்தும் இந்த விருதின்  நிதி நல்கையின் மூலம் தாங்கள் தொடரவிருக்கும் ஆய்வுக்களங்கள் பற்றி…4.தாங்கள் தற்போது பெற்றிருக்கும் இந்த விருதினை ஏற்கனவே 2022 ல் நோபல் பரிசு பெற்ற பேரா.கரோலின் பெர்டோஸி என்பவரும் பெற்றிருக்கிறார். அந்த அளவிற்கு இந்த விருது ஒரு மகத்துவமாகவும், முக்கியமானதாகவும் அறிவுசார் ஆய்வுலகத்தால் பார்க்கப்படுகிறது. இந்த விருதுக்கு தாங்கள் எப்படி தேர்வானீர்கள் என்பது பற்றி.. 

இந்தப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. தேர்வு குழு மூன்று முக்கிய தரங்களை ஆராய்கிறது: ஆய்வு, கற்பித்தல், மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் (mentorship). இந்த விருது பெண் உதவி பேராசிரியர்களுக்காக வழங்கப்படுகிறது. பொதுவாக, இவ்விருது, அறிவியல் துறையின் கணக்கிடக்கூடிய (quantifiable) ஆய்வுகளை விரும்பி பரிசளிக்கப்படுவதால், மனிதவியல் (humanities) துறைக்கு இவவிருது கிடைப்பது மிக அரிது.  இந்த ஆண்டு விருது வழங்கும் குழு தமிழ் ஆய்வுகள் தொடர்பான கற்பித்தல் மற்றும் ஆய்வுகளின் முக்கியத்துவத்தையும், அதன் Potential-ஐயும் மையமாக வைத்து விருது வழங்கியிருப்பது  நெகிழ்ச்சியளிக்கிறது.

தற்போது தாங்கள் பணிபுரியும் துறையில் இரண்டு ஆய்வுத்திட்டங்களுக்கு பொறுப்பாக உள்ளதாக தெரிகிறது..அதன் விபரம் கூறுங்கள்… 6.தமிழ் யதார்த்தங்கள், உலகளாவிய தமிழ் நாவல் வாசிப்பு, மற்றும் பின்காலணித்துவ கால நாவல் வளர்ச்சி  குறித்தும், தமிழ் காட்சி பண்பாடுகள், உலகளாவிய காட்சிப்பண்பாடுகளின் பரிணாம வளர்ச்சிகளில் நவீனத்துவம் குறித்தெல்லாம் ஆய்வுத்திட்டங்களை வகுத்திருக்கிறீர்கள்… அவைகள் குறித்தும் சொல்லுங்கள்.

என்னுடைய முனைவர் ஆய்வு – “Textual Spaces of Reconciliation: Reading Postcolonial Sri Lanka” – இலங்கைப் போர் (1983-2009) காலகட்டத்தில் எழுதப்பட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் படைப்புகளை ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வு, போரின் கோரத் தாக்கங்களை கற்பனை உலகில் சமரசத்திற்கும் வன்முறைக்கு மாற்று வழிகளைச் சிந்திக்கும் இலக்கியப் படைப்புகளின் முக்கியத்துவத்தையும், வரலாற்று வன்முறைகளை புரிந்து கொள்ளும் முயற்சிகளையும் விளக்குகிறது. என்னுடைய முதல் புத்தகத் திட்டம் – “தென் மற்றும் தென்கிழக்காசியாவில் தமிழ் யதார்த்தவாத நாவல்” – தமிழின் நவீன யதார்த்தவாத (literary realism) நாவல்களை தென் மற்றும் தென்கிழக்காசிய இலக்கிய சூழலில் ஆராய்கிறது.  இந்தப் புத்தகம் 20ஆம் நூற்றாண்டின் முக்கியமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைக் கவனிக்கிறது. இதில் கா.நா.சுப்பிரமணியம், பா.சிங்காரம், பூமணி, டி.எம்.சி.ரகுநாதன், கே.டேனியல், மற்றும் சுந்தர ராமசாமி ஆகிய எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள் ஆராயப்படுகின்றன. உலகளவில் தமிழ் காட்சிப் படைப்புகளின் வளர்ச்சியையும், தமிழ் கலாச்சார நவீனத்துவத்துடன் அதன் தொடர்பையும், மேலும் பாலின சார்ந்த (gendered) பயன்பாட்டுச் சூழல்களையும் ஆய்வு செய்கிறேன். அதேசமயம்  பொதுஜன தமிழ் கலாச்சாரம் (popular Tamil culture) குறித்தும் எனக்கு ஆர்வம் உள்ளது. இது எனது ஆராய்ச்சியின் முக்கியப் பகுதியாகும். இந்த ஆய்வு தொடர்பான கட்டுரைகள் South Asian Popular Culture மற்றும் Tamil Cinema in the Twenty First Century: Caste, Gender and Technology ஆகிய நூல்களில் வெளிவந்துள்ளன.

தங்களின் ஆய்வுக்களங்களில் புலம்பெயர் இலக்கியம் முக்கிய பங்கு வகிப்பதாக அறிகிறோம். அவைகளின் ஆய்வுக்கூறுகளையும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

புலம்பெயர் தமிழ் இலக்கியம் தமிழ் சமூகங்களின் இடம்பெயர்வையும், புதிய இடங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் ஆழமாகப் பிரதிபலிக்கிறது. இது தனிப்பட்ட நினைவுகளின் வழியாக சரித்திரம், அடையாளம், மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைப் பராமரிக்கிறது, ஆனால் அதே நேரத்தில் புதிய சூழலில் உருவாகும் சிக்கல்களையும் வெளிப்படுத்துகிறது. சாதி, வர்க்கம், பாலினம் போன்ற சமூக அரசியல்களுடன் உரையாடும் இந்த இலக்கியங்கள், தமிழ் மரபுகளை மறுபரிசோதிக்கவும், உலகளாவிய தமிழ் அடையாளத்தை உருவாக்கவும் வழிவகுக்கின்றன. எனது இலங்கை, சிங்கப்பூர், மற்றும் மலேசிய தமிழ் இலக்கிய ஆய்வுகள், புலம்பெயர் சமூகங்களின் இந்த சிக்கலான அனுபவங்களைச் சுட்டிக்காட்டுவதோடு, தமிழ் இலக்கியத்தின் புதிய கோணங்களையும் வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக, என் கட்டுரைகளில் ஒன்றில், நான் இலங்கை தமிழ்க்கவிஞர் சேரன் ருத்ரமூர்த்தியின் கவிதைகள் புலம்பெயர் அனுபவத்தினால் உருவான கவிதை புதிய கவிதை இலக்கணங்களை (உதாரணமாக, எந்த திணையில் பனி (snow) நிலப்பரப்பாக இருக்கும்? புலம்பெயர் இலக்கியங்களில், குறிப்பாக இலங்கைத் தமிழ் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளில், பனி முக்கியமான பின்னணியாக மாறுகிறது) வழங்கி, தமிழ் இலக்கிய மரபுகளின் மறுவடிவமைப்பை எவ்வாறு முன்வைக்கின்றன என்பதைக் கவனிக்கிறேன். என் ஆய்வு, புலம்பெயர் தமிழ் இலக்கியம் சமூக அடையாளங்களை எவ்வாறு மறுசீரமைக்கிறது, மேலும் நிலையான பாரம்பரியங்களுக்கும் பிந்தைய தேசிய (post-national) எதிர்காலங்களுக்கும் இடையேயான உரையாடலை எவ்வாறு உருவாக்குகிறது என்பதை ஆராய்கிறது. இதன்மூலம், புலம்பெயர் தமிழ் இலக்கியம் சிக்கலான, ஆனால் அதே நேரத்தில் மறுபரிசோதிக்க வேண்டிய ஒரு முக்கியமான துறையாகத் தன்னை நிலைநிறுத்துகிறது.

புகழ்பெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆய்வு முடித்துள்ளீர்கள். இதுவே தங்களுக்கு மிகவும் சிறப்பளிக்ககூடிய தகுதியாகும். இந்த முனைவர் ஆய்வு தொடர்ச்சியாக தற்போதைய தங்களின் ஆய்வு மற்றும் கல்வி புலத்தில் உதவுகிறதா?

நிச்சயமாக. எனது முனைவர் ஆய்வு தமிழிலும் ஆங்கிலத்திலும் இலங்கையின போர்க்கால இலக்கியங்களைப் பற்றி கவனம் செலுத்தியது. இந்த இலக்கியங்கள் சமரசம் மற்றும் அமைதியை எவ்வாறு கருத்தாக்குகின்றன என்பதே என் ஆய்வின் மையமாக இருந்தது.  சிங்கப்பூர் தமிழ் சமுதாயம் இந்தப் பயணத்தில் எனக்கு சிறந்த ஆதரவாக இருந்தது. தமிழ் மொழி விழா, மற்றும் NUS தமிழ் மொழி சங்கம் போன்ற நிகழ்வுகள் தமிழ் மற்றும் அதை அடுத்த தலைமுறைக்கு எப்படி வழங்கலாம் என்பதைக் குறித்த எனது சிந்தனைகளுக்கு வழிகாட்டியாக இருந்தன. 

முனைவர் ஆய்வு காலத்தில் நான் ஆராய்ச்சி அனுபவத்தையே விட, வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான அனுபவங்களை கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமான ஒன்று பொறுமை. நீண்ட கால முயற்சியில் சிரமங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து செயல்படுவதற்கான திறனை வளர்த்தேன்.  இந்த காலத்தில் உங்களைத் தானே ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, உங்கள் இருபதுகளில் இதைச் செய்யும்போது, மற்றவர்கள் அதிக வருமானமான வேலைகளைச் செய்வதை பார்க்கும்போது. “நான் இதை ஏன் செய்ய வேண்டும்? நான் ஏன் வேறேதாவது செய்யக்கூடாது?” என்று அடிக்கடி சிந்திக்க நேரிடும். ஆனால், சில நேரங்களில் நாம் செய்யும் வேலைகள் நிறைவுபெறுவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டாலும் அல்லது உடனடி பயன் அளிக்காதவையாக இருந்தாலும், அதுவும் ஒரு முக்கியமான அறிவியல் சிருஷ்டி முயற்சி என்பதே நான் எனது ஐந்து ஆண்டுகால முனைவர் பட்ட ஆய்வு பயணத்தில் கற்றுக் கொண்ட பாடமாகும்

தங்களின் பூர்வீகம் மற்றும் தொடக்ககால கல்வி மற்றும் குடும்பப்பிண்ணனிகள் குறித்தும்..

நான் சென்னை நகரில் பிறந்து வளர்ந்தேன். என் அப்பா ஒரு வேதியியல் பொறியாளராக இருந்தாலும், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனக்கு ஒரு சகோதரி இருக்கிறார். அவர் ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்துடன் வசிக்கின்றார். கணக்குப் பரிசோதகராக (ஆடிட்டர்) பணியாற்றுகிறார். எங்கள் பெற்றோர் எங்களை இருவரையும் எப்போதும்  எங்களுக்கு பிடித்த கல்விப் பாதையில் செல்ல  ஊக்குவித்தனர். என் கணவர் கணினி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது NVIDIA என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பிரிவின் மேலாளராக பணியாற்றுகிறார். என் குடும்பம் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை ஆதரித்தும் ஊக்குவித்தும் வந்துள்ளது.