(கட்டுரை) நாளொரு மேனி

லஷ்மி பாலகிருஷ்ணன்

சிங்கை எழுத்தாளர் விழா 2024

சின்னஞ்சிறு சிவப்புப் புள்ளி என்று சிங்கப்பூரைச் செல்லமாகச் சொல்வதுண்டு. ஆனால் அங்கு நிலவும் செழுமையான பல்லின, பல்கலாச்சார சூழல் வியப்பூட்டக் கூடியது. அரசின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளான ஆங்கிலம், மாண்டரின்(சீன மொழி), மலாய், தமிழ் ஆகிய 4 மொழிகளிலும் கலை இலக்கியச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் நடந்தபடியே இருக்கின்றன.

1986 முதல் ஆர்ட் ஹவுஸ் எனும் அமைப்பின் மூலம் பன்மொழி எழுத்தாளர் விழாவொன்று ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அந்த எழுத்தாளர் விழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து நானும் அழைக்கப்பட்டிருந்தேன். விழாவில் மூன்று அமர்வுகளில் நான் கலந்து கொண்டேன். மூன்றுமே கலந்துரையாடல் வடிவிலான நிகழ்வுகள். 

முதல் அமர்வு “நாங்கள் அக்கறை கொள்கிறோம் – பேணுனர்களின் கதைகள் (Because we care: Writing stories on care giving)” எனும் தலைப்பில் நடைபெற்றது. ஆங்கிலத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் என்னைத் தவிர இன்னும் இருவர் பங்கு பெற்றனர். சிங்கப்பூரைச் சேர்ந்த ஆட்டிச நிலைச் சிறுவன் ஒருவரது தாயாரான லிடியாவதி என்பவர் அவரது இரு புத்தகங்களை முன் வைத்துப் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவரது மகனுக்கும் என் மகனைப் போலவே 15 வயதுதான் என்பதால் கடந்துவந்த எங்களது பயணம் நிறைய அம்சங்களில் ஒன்று போலவே இருந்தது. இவர் “ஒரு தகுதியான பந்தயம் ( A Worthy Race)”, “நெஞ்சில் கொள்ளத்தக்க நம்பிக்கை ( A Hope Worth Having)” ஆகிய இரு நூல்களின் ஆசிரியர் ஆவார்.

சார்மெய்ன் சான் (Charmaine Chan) எனும் சிங்கப்பூர் எழுத்தாளர் புற்றுநோயால் காலமான தன் இளைய சகோதரியுடனான தனது பயணத்தை “ஒரு மாய வளையம்(The Magic Circle)” எனும் பெயரில் நூலாக்கியிருந்தார்.

நாங்கள் மூவரும் எங்களது புத்தகங்களிலிருந்து ஒரு சிறிய பகுதியை வாசித்தோம். மற்ற இருவருடையதும் ஆங்கில நூல்களே என்பதால் நேரடியாக புத்தகத்திலிருந்தே வாசிக்க, நான் எழுதிய “எழுதாப் பயணம்”  நூலில் இருந்து சில அத்தியாயங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வாசித்தேன்.

பின்னர் நடந்த உரையாடலில் “ஏன் இப்படியான நூல்களை எழுதினோம்?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இயல்பிலேயே மானுட சமத்துவத்தைக் கனவாகக் கொண்டவள் நான் என்பதால் ஆரம்பம் முதலே பாலியல் சமத்துவம் நோக்கியதாகவே என் எழுத்தும் பேச்சும் இருந்து வந்தது. மற்றொரு விளிம்பு நிலைச் சமூகமான சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளின் உலகிற்குள் நுழைந்தபோது அவர்களையும் உள்ளடக்கிய ஒரு மேன்மையான சமூகத்தைக் கனவு காணத் தொடங்கினேன். அதன் விளைவாகவே ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வுக்கான கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன். என் மகனுக்கு பத்து வயதானபோது அது வரையில் நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை, வலிகளை, நிராகரிப்புகளை, அவமானங்களையும் இன்னொரு புறம் கண்டெடுத்த நம்பிக்கைகளை, வென்றெடுத்த இதயங்களை, பெற்ற கதகதப்பான அணைப்புகளையும் சேர்த்தே எழுத்தில் சேமிக்க வேண்டும் என விரும்பினேன். அதன் பயனே எழுதாப் பயணம் நூல் என்று விளக்கினேன்.

மேலும் சிலபல கேள்விகளுக்குப் பின்னர் நிகழ்வின் இறுதிக் கேள்வியாக ஆட்டிசம், புற்றுநோய் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஏன் அவசியம் என்ற கேள்வியை முன் வைத்தனர். 

ஐக்கிய நாடுகள் அவையின் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் (Sustainable Development Goals – SDGs) 17இல் மூன்று குறிக்கோள்கள் சிறப்புத் தேவையுள்ளோரின் உரிமைகளோடு தொடர்புடையவை.  அனைவருக்குமான நல்வாழ்வையும், சமத்துவத்தையும் வலியுறுத்தும் 3வது, 10வது குறிக்கோள்கள் சிறப்புத் தேவையுள்ளோருக்கும் பொருந்துவனவே. குறிப்பாக 16வது வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோளான அமைதி, நீதி என்பது தெளிவாக அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் (Inclusive Society) தேவையை வலியுறுத்துகின்றன. 

  • நிலையான, வளங்குன்றா வளர்ச்சிக்காக அமைதியான, யாவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல், அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், எல்லா நிலைகளிலும் சிறப்பான, பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய சூழல்களை உருவாக்குதல். 
  • செயல்திறன்மிக்க, பதிலளிக்கும் பொறுப்புடைய, யாவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்துதல்.

இந்த குறிக்கோள்கள் அனைத்தும் ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவே உருவாக்கப்பட்டவை. எனவே அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் என்ற கனவு சிறப்புத் தேவையுள்ளோரின் தேவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுட குலத்தின் உயர்வுக்குமே அடிப்படையானவை என்ற ஐநாவின் கருத்தை சுட்டிக்காட்டி, விழிப்புணர்வுப் பணிகளின் தேவையை வலியுறுத்தினேன்..

சிறப்புத் தேவையுள்ளோரின் பேணுனர் குரல்கள் வலுவாக உலக அரங்கில் முன்வைக்கப்பட்டு வருவது மிகுந்த நிறைவைத் தருகிறது. தங்களின் தேவைகளைத் தாங்களே முன்வைக்கத் தெரிந்த சக விளிம்பு நிலைச் சமூகத்தவர் நடுவில், தங்களுக்கு என்ன தேவையென்றே சரியாக புரிந்து கொள்ளவோ தெரிவிக்கவோ இயலாத சிறப்புக் குழந்தைகளின் குரல்களும் அந்தப் பேணுனர்களின் இதயத்திலிருந்து உதடுகளின் வழி அரங்கத்தில் ஒலிப்பது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் இந்தக் கலந்துரையாடலில் என் கருத்துக்களைப் பகிரக் கிடைத்த வாய்ப்பு மிகவும் நிறைவைத் தந்தது. அன்றைய நாளின் கடைசி நிகழ்வாக இருந்தபோதும், கணிசமான பார்வையாளர்கள் பங்கேற்றதும், இறுதியில் கேள்வி பதில் பகுதியில் அர்த்தபூர்வமான உரையாடலை முன்னெடுத்ததும் மிகுந்த மகிழ்வினைத் தந்தது. 

மறுநாள் காலையில் “பெண்களின் கதைகள்: உலகத் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் சித்தரிப்பு Her-Stories: Women’s Place in Tamil Diasporic Literature” எனும் தலைப்பிலான நிகழ்வு நடைபெற்றது. சிங்கப்பூர் எழுத்தாளர்களான ஹேமலதா, அழகுநிலா ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டேன். 

தற்காலப் பெண் எழுத்தாளர்கள் எழுதும் தனித்துவமான பார்வைகள், அனுபவங்கள், பெண் எழுத்துக்களில் பெண்களைப் பற்றிய சித்தரிப்புகள், புலம் பெயர் இலக்கியத்தில் பெண்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசினோம்.  

குறிப்பாக இந்த அவையில் பார்வையாளர்களாகப் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினரும் சிங்கப்பூரைச் சேர்ந்த படைப்பாளிகளே என்பதால் இது ஒரு கூட்டுக் கலந்துரையாடல் நிகழ்வாகவே நடைபெற்றது எனலாம். சித்ரா ரமேஷ், மோகனப்ரியா, மலையரசி, ரமா சுரேஷ், ஜான்சிராணி தனபால், பாரதி மூர்த்தியப்பன், ப்ரியா ராஜீவ், ப்ரியா ஜெயக்குமார் என நீளும் அந்த படைப்பாளர்களின் பட்டியலில் விடுபடல்கள் இருக்கக்கூடும். ஆனால் அனைத்துப் பெண் படைப்பாளிகளையும் ஒரே அரங்கில் சந்திக்க முடிந்தது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது. 

அனைவரும் இணைந்து என்னவெல்லாம் புதிய விஷயங்களைப் பெண் பார்வையில் எழுதுகிறோம் என்பது தொடங்கி, இன்னும் என்னவெல்லாம் பேசப்பட வேண்டியவை என்பது வரை தெளிவாக விவாதிக்க முடிந்ததால் அவ்வரங்கு எனக்கு மன நிறைவை அளித்தது.

அன்று மாலை “நாளொரு மேனி: சிறப்புத் தேவை பிள்ளை வளர்ப்பு குறித்த பார்வைகள் (Stories of Nurture: Perspectives on Special Needs and Child Development)” எனும் கலந்துரையாடல் நடைபெற்றது. சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் மட்டுறுத்துனராக இருந்தார். அக்கலந்துரையாடலில் என்னுடன் குழந்தைகள் நல மருத்துவரான ஐஷ்வர்யா ராம்குமாரும், சிறப்புக் கல்வியாளரான தமிழ்ச்செல்வியும் மேடையைப் பகிர்ந்து கொண்டனர். மூவரும் சிறப்புத் தேவை உள்ள குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்கள் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள், கண்டறிதலில் தொடங்கி அக்குழந்தைகளுக்கான பயிற்சிகள் வரை அனைத்திலும் பெற்றொர்கள் கவனம் கொள்ளத் தக்க அம்சங்களைப் பற்றியும் பேசினோம். 

அவையெல்லாவற்றையும்விட சமூகம் இக்குழந்தைகள்பால் காட்டவேண்டிய அன்பும் பரிந்துணர்வும் எத்தகையது என்பதைப் பற்றிய கருத்துக்களோடு அக்கலந்துரையாடலை நிறைவு செய்தோம்.

மூன்று நிகழ்வுகளும் வெவ்வேறு வகையில் மிக முக்கியப் புள்ளிகளில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. தெற்காசிய நாடுகளில் நடைபெறும் இலக்கிய விழாக்களில் முதன்மையானதும், முக்கியமானதுமான சிங்கை எழுத்தாளர் விழாவில் கலந்து கொண்ட நிறைவும், மகிழ்வும் என் வாழ்வில் மறக்க இயலாத ஒன்றாகும். 

அதனை சிராங்கூன் டைம்ஸ் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். இத்தகைய அருமையான நிகழ்வை மிகுந்த திட்டமிடலுடனும், சிறப்பான ஏற்பாடுகளுடனும் நடத்திவரும் சிங்கப்பூர் ஆர்ட் ஹவுஸ் நிறுவனத்தினருக்கு எனது அன்பும் பாராட்டுக்களும்.