
மொழியாக்கம்: ச. மோகனப்ரியா (உதவி: மஹேஷ் குமார்)
ஒவ்வொரு காலையிலும்
ஒரு உலகம் உருவாகிறது.
குவித்து வைக்கப்பட்ட இரவின் சாம்பல்கள்
கதிரவனின் இளஞ்சிவப்புக் குச்சிகளால்
மீண்டும் இலைகளாக மாறி
உயரமான கிளைகளை
இறுகப்பற்றிக்கொள்கின்றன.
கருப்புத் துணியெனத் தோன்றும்
குளங்களில்
தீட்டப்பட்ட ஓவியத் தீவுகளாய்
கோடை அல்லிகள்.
மகிழ்ச்சியாய் இருப்பதே உங்களின் இயல்பெனில்
நீங்கள் மென்தடங்களில் மணிக்கணக்காக நீந்தி வர,
உங்கள் கற்பனைகள் ஆங்காங்கே படிகின்றன
ஈயத்தினும் கனமானதொரு முள்ளை
உமது ஆன்மா
தனக்குள் சுமந்தலையுமானால்…
உம்மால் ஆகக்கூடியது
தடுமாற்றத்துடன் நடக்க மட்டுமேயெனில்…
உமக்குள் ஆழத்தில் எங்கோ
இன்னும் இருக்கும்
ஒரு கொடுமிருகம் உரக்கச் சொல்கிறது
தான் வேண்டிய உலகம் இதுவேதானென.
தழலாயெரியும் அல்லிகளுடன் கூடிய ஒவ்வொரு குளமும்
செவிமடுக்கப்பட்ட பிராத்தனைகளுக்கான ஆசீர்வாதங்கள்.
ஒவ்வொரு புலரியிலும்.
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக
இருக்கத் துணிந்தீர்களோ இல்லையோ
நீங்கள் எப்போதும் பிராத்தித்தபடி
இருக்கத் துணிந்தீர்களோ இல்லையோ.
கவிஞர் பற்றிய குறிப்பு: மேரி ஆலிவர்– 1935 ஆண்டு பிறந்த பிரபலமான ஒரு அமெரிக்கக் கவிஞர். தேசிய புத்தக விருது மற்றும் புகழ்பெற்ற புலிட்சர் பரிசுகளை வென்றவர். இயற்கையின் மீது இடையறாத ஈர்ப்பும், காடுகளுக்குள் வாழ்நாள் முழுக்கத் தனிமையில் நடைப்பயணம் மேற்கொண்ட பழக்கமும் இவரது கவித்துவத்துக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. இவரது கவிதைகள் இயற்கை பற்றிய ஆச்சரியங்களால் நிரம்பியவை; தெளிவான காட்சிப்படிமம் கொண்டவை; எளிய மொழியில் எழுதப்பட்டவை. 2007ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இவரது கவிதை நூல்கள் அதிகம் விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்.
mpriya.be@gmail.com


