சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசிய நூல் தொகுதிகளுக்கான துணை நூலகராகப் பொறுப்பிலிருக்கும் ஜாக்குலின் லீ BiblioAsia இதழுக்காக எழுதியுள்ள Man Vs Nature: Speculative Fiction and the Environment (April-June 2021) ஆங்கிலக்கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு
எழுத்தாளர்கள் தங்கள் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் அழுத்தமான சுற்றுச்சூழல் கவலைகளை வெளிப்படுத்தும் நுட்பம் இன்று சிங்கப்பூரின் ஊகப் புனைகதை வெளியில் மேலோங்கி வந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. காலநிலை மாற்றம் என்னும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், புவி வெப்பமடைதல் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முக்கிய விவாதங்களில் அதிகளவில் மைய இடத்தைப் பிடித்து வருகின்றன. ஊகப் புனைகதை எழுத்தாளர்கள் பலர் தங்கள் படைப்புகளில் அடிக்கடி கையாளும் முக்கிய கருப்பொருளாகவும் இது உள்ளது.
ஊகப் புனைகதை என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட, கற்பனையான அல்லது எதிர்கால கூறுகளைக்கொண்ட ஒரு பரந்த வகை எழுத்து. மேலும் அறிவியல் புனைகதை, கற்பனை, திகில் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளை எழுதுவது போன்ற துணைமை வகைகளையும் உள்ளடக்கியது. சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் முன்னாள் இயக்குநரும் கவிஞருமான இயோவ் கை சாய், ஊக புனைகதைகள் “மனிதகுலத்தின் தலைவிதி, சுற்றுச்சூழல் மற்றும் மாற்று யதார்த்தங்களைப் பற்றி கற்பனை செய்து கேள்விகளைக் கேட்க நம்மைத் தூண்டுகின்றன” என்று குறிப்பிடுகிறார்.
அண்மைய ஆண்டுகளில் இந்த வகை எழுத்து சிங்கப்பூரில் கணிசமான அளவில் பிரபலமடைந்து வருகிறது. மே 2017இல், தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை, முந்தைய ஆறு மாதங்களில் குறைந்தது இதுபோன்ற எட்டு உள்நாட்டு நாவல்கள் மற்றும் தொகுப்புகள் வெளியிடப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அத்தகைய ஒரு நாவல் – நூரலியா நூராசிட்டின் The Gate Keeper 2016இல் Epigram Books Fiction பரிசையும், 2018இல் சிங்கப்பூர் புத்தக விருதுகளில் சிறந்த புனைகதை தலைப்பு மற்றும் சிறந்த புத்தக அட்டை வடிவமைப்புப் பரிசையும் வென்றுள்ளது. இத்தகைய தனிப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் தவிர ஊகப் புனைகதைகளை ஊக்குவிக்கும் உள்ளூர் தளங்களும் இருந்துள்ளன. அவற்றுள் முக்கியமான ஓன்று LONTAR: The Journal of Southeast Asian Speculative Fiction. சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட இந்த இதழ் 2013க்கும் 2018க்கும் இடையில் செயல்பட்டது. அதன் ஆசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பெர்க், சிங்கப்பூரில் ஊகப் புனைகதைகளை நீண்டகாலமாக ஆதரிப்பவராக இருந்து வருகிறார்.
எண்ணெய் மற்றும் பெட்ரோ ஹாரர் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கையாளும் ஊக புனைகதைகள் சமீபத்திய காலங்களில் பிரபலமாகிவிட்டாலும், போருக்குப் பிந்தைய ஆண்டுகளில்கூட இத்தகைய ஊகப் புனைவுப் படைப்புக்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள் உள்ளன. An Oily Mirror: 1950s Orang Minyak Films as Singaporean Petrohorror என்ற கட்டுரையில், யோகேஷ் துளசி, சிங்கப்பூரில் மலாய் சினிமாவின் பொற்காலத்தில் (1950கள்-60கள்) பிரபலமாக இருந்த ஒராங் மினியாக் (மலாய் மொழியில் “எண்ணெய் மனிதன்”) பற்றிய படங்கள் ஒரு “கொடூரமான பெட்ரோநவீனத்துவம்” மற்றும் அதன் பாரம்பரிய வாழ்க்கை முறைகளின் அழிவின் நாடகமாக்கல்கள் என்று எழுதுகிறார்.
ஒராங் மினியாக் பளபளப்பான கருப்பு கிரீஸால் பூசப்பட்ட ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினமாக விவரிக்கிறார். அவர் இரவில் இளம் பெண்களைக் கடத்துகிறார், மேலும் அவரது வழுக்கும் தோல் காரணமாக சுவர்களில் ஏறி பிடிபடுவதைத் தவிர்க்க முடிகிறது. மலாய் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றினாலும், உள்ளூர் செய்தித்தாள்களில் ஒராங் மினியாக் பற்றிய முதல் குறிப்பு 1957இல் பெரிட்டா ஹரியானில் வந்துள்ளது.
உயிரினங்களின் இழப்பு
பொது அறிவியல் புனைகதைகளில் ஒரு பிரபலமான கருப்பொருள் பல்லுயிர் இழப்பு. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று பிலிப் கே.டிக்கின் 1968ஆம் ஆண்டு நாவலான Do Androids Dream of Electric Sheep? (இந்த நாவல் 1982ஆம் ஆண்டு புகழ்பெற்ற திரைப்படமான Blade Runnerக்கு அடிப்படையாக அமைந்தது). அதேபோல், சிங்கப்பூரின் ஊகப் புனைகதைகளிலும் பெரிய அளவிலான பல்லின உயிரினங்களின் அழிவு ஒரு தொடர்ச்சியான கருப்பொருளாக வந்துள்ளது.
மெலிசா டி சில்வாவின் “Blind Date” (2016) என்ற சிறுகதையில், உள்ளூர் வனவிலங்கு இனங்களின் அழிவு, ரோபோக்களை நம்பியிருக்கும் சிங்கப்பூரில் யூரேசியர்களின் அழிவுக்கு இணையாகப் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை பொருட்களுக்குப் பதிலாக எஃகு எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் இந்தப் பதிப்பில், மக்கள்தொகை கணக்கெடுப்பு மீதமுள்ள இரண்டு யூரேசியர்களை மட்டுமே தெரிவிக்கிறது – 75 வயதான மார்ட்டின் டெஸ்கர் மற்றும் 66 வயதான ஜெரால்ட் பெரேரா. இதற்கிடையில், சாம்பார் மான் மற்றும் ராஃபிள்ஸ் மல்கோஹா (ஒரு பறவை இனம்) போன்ற விலங்குகள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது, அவை ஹாலோகிராம்களாக இடைவெளியில் தோன்றும் வகையில் திட்டமிடப்பட்டு ஆடியோ வர்ணனையுடன் தோன்றும்.
டி சில்வா சுற்றுச்சூழல் அழிவு மற்றும் வனங்களின் அழிப்புப் பிரச்சினைகளை கதையில் லேசாகப் பின்னிப் பிணைக்கிறார். கதையில், மார்ட்டினும் ஜெரால்டும் ஒரு ஓட்டலில் சந்திக்க ஏற்பாடு செய்கிறார்கள். பின்னர், அவர்கள் ஃபோர்ட் கேனிங்கில் ஒரு மாடத்தில் அமர்ந்து புகை மூட்டத்தின் பின்னால் பின்னால் தோன்றும் வெளிர் சூரியனை கவனிக்கிறார்கள். ஓட்டலில், மார்ட்டின் இந்த தொழில்நுட்பம் அனைத்திற்கும் எதிராக எதிர்வினையாற்றுகிறார், இது எல்லாம் “மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, ஆனால் இந்த அற்புதமான தொழில்நுட்பப் பம்மாத்துக்களால் மனிதகுலம் மறைக்கடிக்கப்படுவதாக அவர் அடிக்கடி உணர்ந்தார். கடந்த ஒரு மணி நேரத்தில் அவர் ஆர்டர் செய்த இரண்டு காபிகள் கூட எஃகு குப்பியில் சர்க்கரைத் துகள்களுடன் வந்தன. நீங்கள் அதை உங்கள் பானத்தில் தெளித்து மிகக்குறைந்த கலோரிகளுடன் தப்பிக்க வேண்டும்” என்கிறார்.
நிங் யி-ஷெங்கின் Lion City (2019) பல விலங்குகள் அழிந்துவிட்ட ஒரு காலத்தைக் கையாள்கிறது. சிறுகதையில் சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் உள்ள “விலங்குகள்” பற்றிய திரைக்குப் பின்னால் ஒரு பார்வை கதை சொல்பவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விலங்குகள் உண்மையில் கம்பி வலை, கேபிள் ஸ்பாகெட்டி போன்ற நகரத்தின் கழிவுப்பொருட்களால் ஆனவை என்பது தெரியவந்துள்ளது. அவை செயற்கைத் தோல்களை அணிந்துகொண்டு உண்மையான விலங்குகளைப் போல தோற்றமளிக்கவும் செயல்படவும் திட்டமிடப்பட்டுள்ளன. கதை சொல்பவர் ஒரு சிங்கக் குட்டியுடன் தொடர்பு கொள்கிறார். அது உண்மையான சிறிய சிம்பா, மீசை மற்றும் எல்லாவற்றுடனுமான ஒற்றுமையைக் குறிப்பிடுகிறார். இந்த மாற்று பிரபஞ்சத்தில், சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை – உலகெங்கிலும் உள்ள பிற மிருகக்காட்சிசாலைகளுடன் சேர்ந்து – ரோபோ விலங்குகளைப் பயன்படுத்தி பல வருடங்களாக சந்தேகப் படாத பார்வையாளர்களை முட்டாளாக்கி வருகிறது. ராட்சத பாண்டா ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அழிந்துவிட்டது என்பதையும் கதை வெளிப்படுத்துகிறது.
நிலப்பற்றாக்குறை
சிங்கப்பூர் எழுத்தாளர்களிடையே நிலப்பற்றாக்குறை என்பது ஒரு தொடர்ச்சியான கருப்பொருளாகும். கிளாரா சோவின் 2017ஆம் ஆண்டு சிறுகதையான Welcome, 265 Aggregate Scorersஇல், சிங்கப்பூரில் நிலப்பற்றாக்குறை நாட்டை தீவிரமாக நிலத்தை மீட்டெடுக்கத் தள்ளியுள்ளது; நில மீட்புத் திட்டங்கள் எவ்வாறு மிதமிஞ்சி விட்டிருக்கின்றன என்பதைக் கதையாசிரியர் குறிப்பிடுகிறார்.
நிலப்பற்றாக்குறையால் எழும் கட்டுப்பாடுகள் ஹசன் ஹசாரீ அலியின் மலாய்ச் சிறுகதையான “Doa.com”க்கு (2013) பின்னணியை வழங்குகின்றன. இது இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான நிலப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான கற்பனையான தீர்வை முன்வைக்கிறது. கதையில், தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளதால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஒரு நிலத்தடி கல்லறை வளாகத்தை கட்ட முடிந்தது. குடும்பத்தினரும் நண்பர்களும் கல்லறைகளை நேரில் பார்வையிட முடியாது, ஆனால் அவர்கள் Doa.comஇல் ஆன்லைனில் சென்று, ஒரு ஸ்பீக்கர் மூலம் நிலத்தடி கல்லறைக்கு ஓதப்படும் பிரார்த்தனையைத் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு பிரார்த்தனையின் விலையும் பிரார்த்தனை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதைப் பொறுத்தது. இந்தப் புத்தகம் 2014ஆம் ஆண்டு மலாய் புனைகதைக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்குப் பட்டியலிடப்பட்டது.
2012ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் ஒலிவியா லீ மற்றும் பிராண்டன் சியூ ஆகியோரை உள்ளடக்கிய தி சென்டிபீட் கலெக்டிவ் எழுதிய “Chapter 28: Energy” என்ற சிறுகதையின் கருப்பொருள் நிலப்பற்றாக்குறை மற்றும் மாற்று ஆற்றல். கதையில், நிலப்பற்றாக்குறை காரணமாக புதிதாக இறந்த அனைவருக்கும் அரசாங்கம் தகனம் செய்வதை கட்டாயமாக்கியது பற்றி சொல்லப்படுகிறது. பின்னர் தொழில்துறை, குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டிற்காக இன்னும் அதிகமான நிலங்களை விடுவிக்க அனைத்து கல்லறைகளையும் தோண்டி எடுக்க ஒரு சட்டம் இயற்றப்படுகிறது. 2040ஆம் ஆண்டளவில், அனைத்து இறந்தோர் சாம்பலை வைக்க உள்ள அமைவுகளும் முழு கொள்ளளவை எட்டப் போவதால் சிங்கப்பூரர்கள் தீவைச் சுற்றியுள்ள நீரில் சாம்பலைச் சிதறடிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.
தனது தந்தையின் உடல் தகனத்தைக் கண்ட சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு புத்திசாலித்தனமான ஆராய்ச்சியாளர், தகனங்களால் ஈர்க்கப்பட்ட மாற்று எரிசக்தி மூலத்தைக் கண்டுபிடிக்கிறார். இறந்த உடல்களில் காணப்படும் மறைந்திருக்கும் ஆற்றலைச் சேகரித்து, பேட்டரிகள் மற்றும் பவர் கார்களை உருவாக்கக்கூடிய நெக்ரோயில் என்ற திரவத்தை உருவாக்குவதன் மூலம், சிங்கப்பூர் “ஆற்றல் மீளுருவாக்கத்திற்கான மாதிரியாக” மாறுகிறது, இது உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் கூடுதல் நன்மை என்னவென்றால், சிங்கப்பூரில் இனி எந்த இறந்த உடல்களும் அப்புறப்படுத்தப்பட வேண்டியதில்லை, ஏனெனில் அவை தானாகவே நெக்ரோயிலாக மாற்றப்படுகின்றன. “Chapter 28: Energy’ என்பது சிங்கப்பூரின் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் “ஒரே இயற்கை வளம்” – அதன் மக்கள் – அடுத்த தலைமுறைக்கு இதுகுறித்த அவர்களின் எதிர்காலப் பார்வையைக் குறிப்பிடும் ஒரு பகடி.
கடல்மட்ட உயர்வு
காலநிலை மாற்றத்தின் அடிக்கடி குறிப்பிடப்படும் விளைவு கடல் மட்ட உயர்வு ஆகும், இது தாழ்வான கடலோரப் பகுதிகளை அச்சுறுத்துகிறது. நிலப்பரப்பின் ஒரு சதவீதம் கடல் மட்டத்திலிருந்து ஐந்து மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. சிங்கப்பூர் காலநிலை ஆராய்ச்சி மையம், நாடு “மிகவும் தீவிரமான மற்றும் அடிக்கடி கனமழை நிகழ்வுகளை அனுபவிக்கக்கூடும், மேலும் 2100 ஆம் ஆண்டுக்குள் சராசரியாக கடல் மட்டம் 1 மீட்டர் வரை உயரக்கூடும்” என்று திட்டமிடுகிறது. எனவே, சிங்கப்பூரின் பெரும்பகுதிகள் தண்ணீரால் மூழ்கடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு மிகவும் உண்மையானது.
வெய்ன் ரீயின் 2018 சிறுகதையான “Satay” யில், சிங்கப்பூரர்கள் கடல் மட்ட உயர்வு காரணமாக நாட்டின் வானளாவிய கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கதையில், ரஃபியும் அவரது தந்தை, ஒரு satay விற்பனையாளர். மெரினா பே சாண்ட்ஸில் வாழ்கின்றனர். இந்த ஹோட்டல் சிங்கப்பூர் சமூகத்தின் படிநிலையின் நேரடி அடுக்காக மாறுகிறது: சலுகை பெற்ற உயர் வகுப்பினர் 56 மாடி கட்டிடத்தின் மேல் தளங்களில் வாழ்கின்றனர். எப்போதும் நிறைந்து ததும்பும் குளத்தில் விருந்துகளை அனுபவிக்கின்றனர், மேலும் அவர்கள் “மேல்மட்ட குடும்பங்கள்” என்று குறிப்பிடப்படுகிறார்கள். ஏழை மக்கள் கீழ் தளங்களில் வசிக்கிறார்கள். இருப்பினும் கட்டிடத்தின் 31 தளங்கள் கடலில் மூழ்கியுள்ளதால் மிகவும் தாழ்வானவை அல்ல. ரஃபியும் அவரது தந்தையும் 40ஆவது மாடியில் வசிக்கின்றனர், மேலும் அவர்கள் நடுத்தர வர்க்கத்தினராகக் கருதப்படுகிறார்கள். ரஃபியின் தந்தையின் satay மிகவும் பிரபலமானது, இது அவர்களுக்கு அனைத்து நிலைகளிலும் நண்பர்களைப் பெற உதவுகிறது, மேலும் முக்கியமாக, மேலேயுள்ள மொட்டைமாடி விருந்துகளில் Satay கிரில் செய்ய அவர்கள் பணியமர்த்தப்படுவதால், உயர் மட்ட குடியிருப்பாளர்களிடமிருந்து சில சிறப்பு சலுகைகளும் ஆதரவும் கிடைக்கிறது.
ஒரு காட்சியில், ரஃபி கூரையில் நிற்கிறார் – அவரது தந்தை மேல் மட்ட குடியிருப்பாளர்களுக்கு satay வழங்க பணியமர்த்தப்பட்டுள்ளார். மாலை வெளிச்சம் மற்ற பெரும்பாலும் நீரில் மூழ்கிய வானளாவிய கட்டிடங்களின் உச்சியில் இருந்து எவ்வாறு பாய்ந்து, அலைகள் கட்டிடங்களின் எஞ்சியிருந்தவற்றின் பக்கங்களில் மெதுவாகத் தட்டுகின்றதைக் கவனிக்கிறார்.
Satay வெள்ளத்தில் மூழ்கிய சிங்கப்பூரை வெளிப்படையாக சித்தரித்தாலும், பாட்ரிசியா கருனுங்கனின் சிறுகதையான “அகதா”வில் (2018) கடல்மட்ட உயர்வு மறைமுகமாக உள்ளது. கதையின் கதாநாயகி அகதா மற்றும் பிற கதாபாத்திரங்கள் ஒரு உயர் தொழில்நுட்ப உட்புற வசதியில் வாழ்கின்றனர், மேலும் வெளி உலகின் ஒரே பார்வை “மழையின் ஊடாக கட்டிடங்கள் தொலைவில் உயர்ந்து நிற்கும் தரிசு நிலத்தின் பரப்பை” காட்டுகிறது.
கதையின் பெரும்பகுதி இந்த உட்புற வசதியில் நடைபெறுகிறது. மேலும் கதை திடீரென கதாபாத்திரங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் முடிவடைகிறது. காலப்போக்கில் வெள்ளம் மோசமடைவதால், ஒரு நெருக்கடி நிலை எட்டப்படுகிறது. மேலும் சிங்கப்பூர் அரசாங்கம் அனைத்து தண்டனை பெற்ற மற்றும் சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்றும், மருத்துவமனைகளில் உள்ள அனைத்து உயிர் ஆதரவு அமைப்புகளும் ஆஃப்லைனில் இருக்கும் என்றும் ஆணையிடுகிறது. அரசாங்கம் ஒரு கூண்டு அமைப்பதாகவும் அறிவிக்கிறது. இதன் உட்குறிப்பு என்னவென்றால், வரவிருக்கும் “கடல் முற்றுகை”யிலிருந்து சிங்கப்பூரின் குறைந்தபட்சம் சில குடியிருப்பாளர்களை எப்படியாவது பாதுகாப்பதற்கான ஒரு வழியாக, இந்த கூண்டு ஒரு கடைசி முயற்சியாகும்.
ஒரு இருண்ட எதிர்காலம்
இந்தப் படைப்புகள் மூலம் நூற்றாண்டின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை அவதானிப்பதற்கு சிங்கப்பூரின் ஊகப் புனைவு படைப்புகள் ஒரு நல்ல வாய்ப்பான புனைவு வளங்களாகத் தெரிகின்றன. கடந்த தசாப்தத்தில், இங்குள்ள எழுத்தாளர்கள் சாத்தியமான எதிர்காலங்களை ஆராய்வதன் மூலம் காலநிலை மாற்ற அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தற்போதுள்ள போக்குகளைப் (புவி வெப்பமடைதல், கடல் மட்ட உயர்வு, விலங்குகளின் பெருமளவிலான அழிவு) பார்த்து, சிங்கப்பூரும் உலகமும் எப்படி இருக்கக்கூடும் என்பதற்கான ஒரு மோசமான சித்திரத்தைத் கற்பனை வெளியில் வரைந்து தருகிறார்கள்.
தங்கள் உரைநடை மூலம், எழுத்தாளர்கள் மிக முக்கியமான ‘என்ன செய்வது’ என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். கடல் மட்டம் உயர்ந்து சிங்கப்பூரின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கினால் என்ன செய்வது? பூமியில் உள்ள பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது? சிங்கப்பூர் நிலம் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது? இந்தப் பிரச்சினைகளை எழுப்பிய பிறகு, அடுத்ததாக நம் முன்னர் உள்ள முக்கிய மான கேள்வி ‘ இப்போது நாம் என்ன செய்யவேண்டும்? என்பது.
mdsaleem@jamiyah.org.sg


