
அமெரிக்க-சீன வர்த்தகப் போர் ஒரு உச்சத்தை எட்டி உலகத்தையே உலுக்கிப்போட்டுள்ள நிலையில் சிங்கப்பூர் தனது நிலையை உரக்கவும் தயக்கமின்றியும் சொல்லியுள்ளதை உலகின் பல தலைவர்களும் ஊடகத் துறை வல்லுனர்களும் உற்றுக் கவனித்துள்ளனர். தனது 60ஆவது சுதந்திர தினத்தை இந்த ஆகஸ்டில் எட்டவிருக்கும் சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 27ஆம் தேதி நவம்பருக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆயினும் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்ட வேகத்தைப் பார்த்தால் மே மாதம் இறுதிக்குள் பொதுத் தேர்தல் நடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த நேரத்தில் தேர்தல் பரபரப்பும் சேர்ந்துகொண்டுள்ளது.
புதியதாக நியமிக்கப்பட்ட பிரதமர் திரு லாரன்ஸ் வோங் தொடர வேண்டுமானால் மீண்டும் தேர்தலில் நின்று மக்கள் செயல் கட்சியின் பிரதிநிதியாக நாட்டின் பிரதம மந்திரியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆளும் கட்சியாக மக்கள் செயல் கட்சி தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தாலும் சிங்கப்பூரர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்குரல், மாற்றுக்கருத்துகள் ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மக்கள் செயல் கட்சியுடன் மோத ஒன்றிரண்டு எதிர்க்கட்சிகளே இருந்தன. ஆனால் இந்த முறை ஐந்து எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடவிருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி, சிங்கப்பூர் ஜன நாயகக் கூட்டணிக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, ஒன்றுபட்ட சிவப்புப்புள்ளிக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக்கட்சி என்று ஐந்து எதிர்க்கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்க மும்முரமாக தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளன. மக்கள் செயல் கட்சி கிட்டத்தட்ட 27 புதியவர்களை தங்கள் கட்சி வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தியுள்ளது. நிறைய இளையர்களுக்கு வேட்பாளர்களாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் என்ன மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெடுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது.
சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி. இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம். சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனைத்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். படைப்புகளை editor@serangoontimes.com முகவரிக்கு அனுப்புங்கள். இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம்.
-ஆசிரியர் குழு, தி சிராங்கூன் டைம்ஸ்

