
செழிப்பாகப் பூத்துள்ள மலர்களுக்கு நடுவில் வாடிய மலரைப்போலத் தனித்து நிற்கும் வீட்டின் எதிரில், வண்டி குலுக்கலுடன் நின்றது. வண்டியில் சிலர் உறங்கிக்கொண்டும் சிலர் கைபேசியைப் பார்த்துக்கொண்டும் இருந்தனர். மடியில் இலேசான கதகதப்புடன் இருந்த பையைக் கீழே வைத்துவிட்டு, எதிரில் வாய் பிளந்து உறங்கிய சந்தீப்பின் தோளில் மெல்லத் தட்டினான் முரளி. எந்தக் கோட்டையைப் பிடிக்கும் முயற்சியில் இருந்தானோ அவன்? அலங்கமலங்க விழித்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தான். ‘நினைச்ச நேரத்துல எப்படித்தான் இவனால தூங்க முடியுதோ?’ முரளி சிறு பொறாமையுடன் சந்தீப்பைப் பார்த்தான். வாயோரம் வழிந்திருந்த எச்சிலைப் புறங்கையால் துடைத்துக்கொண்டிருந்தான் சந்தீப்.
லாரியிலிருந்து அன்றைய வேலைக்குத் தேவைப்படும் உபகரணங்களை அருகில் இருந்தவர்கள் மீது இடிக்காமல் முரளி எடுத்துக்கொண்டிருந்தபோது, தனது பையை தோளில் மாட்டிக்கொண்டு சந்தீப் தொப்பெனக் குதித்தான். தன் கையில் இருந்தவற்றையாவது வாங்குவான் என முரளி எதிர்பார்த்தான். தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பதைப்போலக் கைப்பேசியின் ‘இயர் பீசை’ காதுகளில் நுழைத்தான். எடுத்த பொருட்களை வீட்டுக்கு எதிரில் செடிகொடிகளாக இருந்த இடத்தில் போட்டுவிட்டு ஒரு கையில் தனது பையையும் மறு கையில் டிரல்லரையும் எடுத்துக்கொண்டு முரளி கீழே இறங்கினான். அதற்காகக் காத்திருந்த கம்பெனி வண்டி சிராங்கூன் சென்ட்ரலிலிருந்து துவாசை நோக்கிக் கிளம்பியது.
சந்தீப் உரத்த குரலில் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தான். ‘இயர் பீசின் வயரை கடிச்சிக்கிட்டுதான் பேசணும்னு மனசுல பதிவாகியிருக்குமோ? ஆளப்பாரு… செம்பட்டை முடியும் அவனும்… ம்… குறைஞ்சது ஒரு மாசமாவது இவனோடு பாடுபடணுமே…’ முரளியின் மனத்தில் வெறுப்பு மண்டியது.
சந்தீப் தானாக ஒரு வேலையும் செய்யமாட்டான். செய்யச் சொன்னாலும் எதையும் ஒரு முறைக்கு இரு முறை சொன்ன பிறகு போனாப் போகுது என்பதைப்போலச் செய்வான். ‘இவனுக்கு நாம பேசுறது புரியலையா? இல்ல வேணும்னே இப்படிப் பண்றானா?’ என்ற சந்தேகம் எல்லாருக்குமே இருந்தது. சில நேரங்களில் இருவர் செய்யும் வேலையை தனி ஆளாகச் செய்தும் முடிப்பான்.
முரளி, வேலை செய்ய வேண்டிய வீட்டின் கிரில் கேட்டில் பையை மாட்டிவிட்டுக் கீழே எடுத்துப் போட்ட பொருட்களை எடுத்து சுவற்றில் சாய்த்து வைத்தான். வேலை ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. கம்பெனி டிரைவர் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ள விரும்பாததால் முன்னதாகவே வண்டியைக் கிளப்பிவிடுவார். ஒரு மழை நாளில் வேலை இடத்திற்குச் செல்ல சில நிமிடங்கள் தாமதமாகிவிட்டதால், அன்று மேலாளர் வாங்கின் சத்தம் இடி முழக்கத்தைவிட அதிகமாய்க் கேட்டது. அன்றிலிருந்து யார் வருகிறார்களோ இல்லையோ லாரி டிரைவர் ஆறரை மணிக்கே தன் கடமையை ஆரம்பித்துவிடுவார். முரளியின் பார்வை கைக்கடிகாரத்திற்குப் போனது. மணி ஏழு பத்து. ஏழே முக்காலுக்குள் வேலை இடத்துக்கு வந்துவிடுவதாக வாங் சொல்லியிருந்தார்.
அடுக்குமாடி வீடுகளில் புதுப்பிப்பு பணிகள் பெரும்பாலும் மூன்று வாரத்தில் முடிந்துவிடும். இது தனி வீடென்பதால் எத்தனை நாட்களாகும் எனத் தெரியவில்லை. வீடா இது? மாளிகையைப்போன்ற அவ்வீட்டைச் சுற்றிப் பார்வையைப் படரவிட்டான் முரளி. வண்ணம் தீட்டிப் பல ஆண்டுகளாகிவிட்டன என்பதை வெளிப்புற கிரில் கேட் சொல்லாமல் சொன்னது. இடது புறமிருந்த நீச்சல் குளத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளமே கொஞ்சமும் தெரியவில்லை. வலது புறமிருந்த ஊஞ்சல், காற்றடித்தால் மட்டும்தான் எனக்கு வேலை என்பதைப்போல அசையாமலிருந்தது. வீட்டுக்கு வெளியே இருந்ததைப்போலவே சுற்றுச் சுவருக்குள்ளும் நடப்பதற்குக்கூட வழியின்றி புற்கள் மண்டிக் கிடந்தன. நாங்களும் இங்கேதான் இருக்கிறோம் என்பதைப்போலச் சாம்பல் வண்ணப் புறாக்கள் மேல் மாடியில் அங்குமிங்குமாகப் பறந்துகொண்டிருந்தன.
ஏப்ரல் மாத வெயிலின் ஆவேசத்தை தாங்க முடியவில்லை. கைக்குட்டையால் நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டுப் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான் முரளி.
“கூ…. குக்கூ… கூ…” குயிலின் குரல் மிகவும் அருகில் கேட்டது. ‘இந்த மாமரத்திலிருந்துதான் கூவுதோ?’ அண்ணாந்து பார்த்தான். கொத்துக் கொத்தாகத் தொங்கிக்கொண்டிருந்த மாங்காய்கள்தான் கண்களுக்குத் தெரிந்தன. பறவைகளோ அணிலோ கொறித்துப் போட்ட மாம்பழங்கள் கீழே கிடந்தன. அந்தப் பகுதியில் மாம்பழ மணம் வீசிக்கொண்டிருந்தது. தண்ணீரைக் குடித்தபடி கீழே கிடந்த மாம்பழங்களைக் கொத்திக்கொண்டிருந்த மைனாக்களைப் பார்த்தான். சில புறாக்களும் மாம்பழங்களை நாடி வந்தன.
மீண்டும் குயில் குரல் கொடுத்தது. எங்கிருந்தாவது இதற்குப் பதில் வருமா என்ற அவனது எதிர்பார்ப்பு வீணானது. அதன் குரலில் தொனித்த சோகம் அவனை என்னவோ செய்தது. ‘இந்நேரம் சத்யா எழுந்திருப்பாளா?’ யோசிக்கையில் கைப்பேசி ஒலித்தது. காற்சட்டைப்பையிலிருந்து எடுத்துப் பார்த்தான். சத்யாவேதான்.
“சாரிங்க… ராத்திரி சீக்கிரமாவே தூங்கிட்டேன்” என்றாள்.
“பரவாயில்லை. நீ பதில் போடாமயிருக்கவும் அத்தைகிட்ட பேசினேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு. நான் வேலைக்கு வந்துட்டேன். பிரேக்ல பேசுறேன்” கைப்பேசி சட்டைப் பைக்குள் அடைக்கலமானது.
“ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்றேன்னு அதிலேயே கிடந்து உழல்வதை விட்டுட்டுக் கொஞ்ச நாளாவது பிரிஞ்சி இருங்க. கஷ்டம்தான்… என்ன பண்றது? இதுவும் ஒரு வைத்தியம்தான். முயற்சி செய்து பார்ப்போமே” எனக் குடும்ப மருத்துவரின் சொல் கேட்டு கடல் கடந்து வந்து ஆறு மாதங்களாகின்றன. இரவு பகல் எனத் தூக்கமே இல்லாமல் இருந்த மனைவி, தூங்கியதாகச் சொன்னது பெரும் நிம்மதியாய்த் தோன்றியது.
பேசி முடித்திருந்த சந்தீப் கைப்பேசியைவிட்டுக் கண்களை எடுக்காமல் எதையோ பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான். அவனது சட்டைப் பையில் நைந்துபோன இயர்பீஸ் பரிதாபமாய்த் தொங்கியது. கொரிக்கப்பட்ட பழம் ஒன்று அவன் பக்கத்தில் விழுந்தது. அதை அவன் காலால் எத்திவிட்டதில் மைனாக்களும் புறாக்களும் பறந்து போக மாம்பழம் சாலையின் நடுவில் உருண்டது. கைப்பேசியைப் பார்த்தவாறு சிரிப்பைத் தொடர்ந்தான்.
மணி ஏழு இருபது ஆகியிருந்தது. அப்பகுதியிலிருந்த வீடுகளிலிருந்து வாகனங்கள் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தன. அந்த வீட்டுக்கும் எதிரிலுள்ள பெரிய கட்டடத்தின் கம்பி வேலிக்கு அருகில் மூன்றடிபோலச் செடிகள் வைக்க இடம்விட்டு நடைபாதை போடப்பட்டிருந்தது. வரிசையாக நடப்பட்டிருந்த மரங்களும் செடிகளும் நடைபாதையில் நிழலைத் தாராளமாகத் தந்துகொண்டிருந்தன. இரண்டு தோள்களிலும் பைகளோடு அவ்வழியே நடந்து சென்ற ஒரு பெண்மணி நின்று, இடது பக்கமாக மாட்டியிருந்த பையிலிருந்து எதையோ எடுத்தார். வயிற்றைத் தள்ளிக்கொண்டிருந்த பூனை ஒன்று மரத்தின் பின்னாலிருந்து மெல்ல அவரது கால்களை உரசிக்கொண்டு வந்து நின்றது. டப்பாவிலிருந்த பூனை உணவை, கீழே கொட்டினார். சாப்பிடத் தொடங்கிய அதன் முதுகை, குனிந்து வருடிவிட்டுக் கிளம்பினார். பூனையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்துக் குரல் கொடுத்தது. புன்னகையுடன் அதற்குக் கையசைத்துவிட்டுச் சென்றார்.
வேண்டா வெறுப்பாக அவ்வுணவை சாப்பிட்ட பூனை, என்ன நினைத்ததோ? சாலையைக் கடந்து வந்தது. இங்கே என்ன செய்கிறாய் என்பதைப்போல முரளியைப் பார்த்தது. அவனுக்கும் அதை வருடிவிட வேண்டும் என்று தோன்றினாலும் செய்யவில்லை. மெல்ல நடந்து சந்தீப்பின் அருகில் சென்றது. அவன் அதைச் சட்டென எத்திவிட்டான். சாலையில் விழுந்த பூனை அலறிக்கொண்டு ஓடியது. ஏதோ பெரிதாகச் சாதித்ததுபோல வெற்றிப் புன்னகையை முரளியை நோக்கி வீச, அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். சாலையின் மறுபக்கம் போன பூனை ஒருமுறை இந்தப் பக்கமாகத் திரும்பிப் பார்த்துவிட்டுப் பார்வையிலிருந்து மறைந்தது. ‘வெறியன்… எதுக்கு அப்படி எத்தினான்?’ முரளியின் பற்கள் நெரிபட்டன.
பக்கத்து வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. ஒரு மூதாட்டி கைத்தடியுடன் வெளியே வந்தார். ‘பூனை கத்திக்கிட்டு ஓடியதைப் பார்த்திருப்பாரோ?’ அதன் கழுத்தில் கட்டியிருந்த மணி மனத்தில் வந்து போனது.
முரளியையும் சந்திப்பையும் பார்த்து என்னவோ கேட்டார். அவரது மொழி புரியாமல் பார்க்கவும் சுவற்றில் சாய்த்து வைத்திருந்த உபகரணங்களைப் பார்த்து ஏதோ கேட்டார். ‘நல்லவேளை பூனையை விசாரிக்க வரல’ முரளியின் மனத்தில் இலேசாக நிம்மதி படர்ந்தது. வீட்டுப் புதுப்பிப்புப் பணி செய்யப் போவதாகச் சொன்னான். ‘ரெனவேஷன்’ என்ற சொல் விளங்கியதுபோல. உள்ளங்கையை உயர்த்தி விரித்து ஏதோ சொல்லிவிட்டு திரும்பிப் போய்விட்டார். ஐந்து என்று சொல்கிறாரோ? என்ன ஐந்தாக இருக்கும்? யோசனையை நீட்டிக்கவிடாது கறுப்பு வண்ண BMW வாகனம் அமைதியாக வந்து நின்றது.
வண்டியைவிட்டு இறங்கிய வாங், முரளி சொன்ன காலை வணக்கத்துக்கு இலேசாகத் தலையசைத்துவிட்டு டிக்கியைத் திறந்தார். சில காலி அட்டைப்பெட்டிகளும் கறுப்பு நெகிழிப் பைகள் அடங்கிய ஓர் உறையும் உள்ளேயிருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு வரச் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றார். கதவைத் திறக்கும் முன் அவர் கண்கள் சந்தீப்பை தேடின. ‘இங்கதான இருந்தான்?’ என்பதைப்போல முரளி பார்த்த வேளையில், சிகரெட் வாடையோடு வந்து வணக்கம் சொன்னான்.
வாங் கேட்டை திறந்து உள்ளே போக, கைகளில் பொருட்களுடன் பின்தொடர்ந்தான் முரளி. சந்தீப் தன்னுடைய பையை மட்டும் எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான். வெளியேயுள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு வருமாறு முரளி அவனிடம் சொன்னான். ‘நீதான் எடுத்துட்டு வந்துட்டியே’ என்பதைப்போல முரளியின் கைகளைப் பார்த்தான். “மீதி வெளியே இருக்கு” என்று சொன்ன பிறகுதான் போனான்.
சுற்றுச் சுவருக்குள் படர்ந்து கிடந்த செடிகள் போர்டிகோவின் உள்ளேயும் நுழைந்திருந்தன. காற்றின் கைங்கரியத்தால் சருகுகள் ஒரு மூலையில் நிறைந்து கிடந்தன. வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் மண்டிக்கிடக்கும் செடிகொடிகளை அப்புறப்படுத்திய பிறகுதான் மற்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டுமென வாங் சொன்னார்.
போர்டிகோவில் சில விளையாட்டுப் பொருட்களும் சில காலணிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்தன. சிறுவர் ஓட்டுகிற மினி ஸ்கூட்டர் ஒன்றும் சாய்ந்து கிடந்தது. மூன்று அல்லது நான்கு வயதுடைய பிள்ளையுடைய இளஞ்சிவப்பு crock காலணி ஒன்றும் கிடந்தது. முரளியால் ஒருகணம் அவற்றிலிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.
வாங்கின் அழைப்பைக் கேட்டுச் சட்டென நிமிர்ந்தான். கதவைத் திறந்திருந்தவர், சாவியை எடுத்துக்கொண்டு உள்ளே போகுமாறு கை காட்டினார். கதவைத் தள்ளித் திறந்து உள்ளே காலடி எடுத்து வைத்தபோது முரளியின் தோள்மேலே ஏதோ விழுந்தது. சட்டெனக் காலைப் பின்னுக்கு இழுத்தான். கொழுத்துப் போயிருந்த கறுப்பு பல்லி ஓடி மறைந்தது. சந்தீப் அவனைப் பார்த்துக் கறை படிந்த பற்கள் தெரிய அலட்சியமாகச் சிரித்ததைக் கண்டுகொள்ளாமல் இரண்டு கதவுகளையும் திறந்தான்.
வீட்டுக்கு உள்ளே வந்த வாங் மின் விளக்குகளை எரியவிட்டார். முரளியின் கண்கள் வியப்பை வெளிப்படுத்த, ‘வாவ்…’ என்று சொன்ன சந்தீப்பின் வாய் சில வினாடிகள் மூட மறந்தது. ஆளுயரத்தில் இருந்த சன்னலை வாங் திறந்துகொண்டிருந்தார். முரளி மற்ற சன்னல்களின் கொக்கிகளை நீக்கிவிட்டு திரைச்சீலைகளை ஒதுக்க, அடுத்தடுத்துத் தும்மல் வந்தது. சன்னல் திறந்திருந்தால் வீட்டுக்குக் காற்றாடியே தேவையில்லை என்பதைப்போலக் காற்று உள்ளே நுழைந்தது. சந்தீப்பின் பார்வை அப்போதும் வீட்டையே சுற்றிக்கொண்டிருந்தது.
கூடத்திலிருந்த பூசை அலமாரியில் சீனக் கடவுள் சிலைகள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. சோபா, உணவு மேசை அனைத்திலுமே, படிந்திருந்த தூசை மீறிச் செல்வச் செழிப்பு தெரிந்தது. பால்கனியில் ஒரே அளவில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த வெள்ளை செராமிக் தொட்டிகளில் என்றோ சருகாயிருந்த செடிகள் இருந்தன. நன்கு துடைத்துவிட்டாலே வீடு கண்ணாடி போலாகிவிடும் எனத் தோன்றியது.
செய்ய வேண்டிய வேலைகள் என்னவென்று சொல்வதாகக் கூறிக்கொண்டே வாங் போக, சந்தீப்பை அழைத்துக்கொண்டு பின்தொடர்ந்தான் முரளி. அவர் முதலில் அடுப்பங்கரையின் விளக்கைப் போட்டார். சுவற்றில் ஒரு பக்கம், முழுக்க கண்ணாடியால் ஆன அலமாரியில் பீங்கான் பொருட்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. மற்ற இரண்டு பக்கச் சுவற்றில் இருந்த வெள்ளை நிற அலமாரிகளுக்கும் கண்ணாடிக் கதவுகள் போடப்பட்டிருந்தன. வெண்கலத்தால் ஆன அலமாரி கைப்பிடிகள் இலேசாக கறுத்துப் போயிருந்தாலும் அவற்றிலிருந்த நுட்பமான வேலைப்பாடுகள் கவனத்தை ஈர்த்தன.
‘இங்கு என்ன வேலையிருக்கும்?’ என்ற கேள்வி உள்ளுக்குள் குடைந்தது.
அங்கிருக்கும் கண்ணாடி அலமாரியைத் தவிர மற்ற அனைத்தையுமே உடைத்துவிட வேண்டுமென வாங் சொன்னார். அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, கண்டுகொள்ளாமல் கூடத்துக்குப் போனார். அலமாரிகள், சோபா, டைனிங் டேபிள் எல்லாத்தையும் அப்புறப்படுத்திவிடச் சொல்லிவிட்டு அடுப்பங்கரைக்குப் பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்தார். அந்த அறையிலிருக்கும் விளக்கு எரியவில்லை என்று சொல்லிக்கொண்டே கதவை நன்றாகத் திறந்து வைத்தார். ஓர் அறையைப் பாதியாகத் தடுத்ததுபோல அந்த அறை இருந்தது. ஒரு பக்கச் சுவற்றோரம் இரும்பால் ஆன ரேக்கில் சில பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
‘வீட்டில் போட்டது போட்டபடி அப்படியே விட்டுட்டு யாராவது போயிருப்பாங்களா?’ கேள்வி முரளியைச் சுற்றியது.
ரேக்கின் கீழ்ப்பகுதியிலும் அறையின் மூலையிலும் இருந்த பளு தூக்கும் சாதனங்களைப் பார்த்தவுடன் சந்தீப்பின் கண்கள் ஒளிர்ந்தன. உடற்பயிற்சி என்றாலே நஞ்சைப்போலப் பார்க்கும் முரளிக்கு சந்தீப் நேர்மாறானவன். காலையில் எழுந்தவுடன் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பான். என்றைக்காவது தாமதமாக எழுந்துவிட்டால் இரவு தூங்கப் போவதற்குள் எந்நேரமாகயிருப்பினும் கடமையை முடித்துவிடுவான். இரண்டு மாதங்களுக்கு முன், கடைத்தொகுதி ஒன்றிலிருக்கும் உடற்பயிற்சிக்கூடத்தில் சேர்ந்திருப்பதாகச் சொன்னான். கட்டணம் அதிகமாக இருக்குமே என்பதைப்போலப் பார்த்தபோது, ‘ஒன்லி நைன்ட்டி டாலர்ஸ்’ என்று முரளியை அதிர வைத்தான்.
“இங்க இருக்கிற எல்லாத்தையுமே எடுத்துடணும். இதில் உங்களுக்கு ஏதாவது தேவைன்னாலும் எடுத்துக்குங்க” வாங்கின் சொற்களைக் கேட்டதும் சந்தீப்பின் முகம் அவ்வீட்டில் ஒளிர்ந்த அலங்கார விளக்குகளின் ஒளியைவிட அதிகமாய்ப் பிரகாசித்தது.
அடுத்த அறையில் சுவற்றோரம் ஓர் ஒற்றைக் கட்டில் போடப்பட்டிருந்தது. சிறு மேசை, நாற்காலி மட்டுமிருந்த அவ்வறையில் அலமாரிகள் துடைத்து வைத்ததைப்போலிருந்தன. எல்லாவற்றையும் எடுத்துவிட வேண்டும் என்பதைப்போல வாங் கை காட்டினார். அவரது கைப்பேசியில் அழைப்பு வந்தது. எடுத்துப் பார்த்தவர் பேசிக்கொண்டே அறையைவிட்டு நகர்ந்தார். உடனே பக்கத்து அறைக்குச் சென்று உடற்பயிற்சி சாதனங்களை ஆவலுடன் தொட்டுப் பார்த்த சந்தீப்பின் கண்களில் தெரிந்த கனிவில், இவனா பூனையை எத்தினான் என்ற சந்தேகமே முரளிக்கு வந்தது.
சன்னல் பக்கமாக வந்தான். அருகிலிருந்த பாலர்பள்ளிக்கு வெளியே ஒரு பெண்மணி தள்ளுவண்டியிலிருந்து சிறுவனை இறக்கிவிட்டு, வண்டியில் மாட்டியிருந்த கார் படம்போட்ட புத்தகப் பையைத் தோளில் மாட்டிவிட்டார். கை காட்டிவிட்டுச் சென்ற சிறுவன் உடனே திரும்பி வந்தான். அந்தப் பெண்மணி சிரித்துக்கொண்டே குனிய, அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டுக் கையசைத்தவாறு பள்ளிக்கு உள்ளே ஓடினான். சன்னல் கம்பியைப் பற்றியிருந்த முரளியின் விரல்கள் சொரசொரப்புடன் இருந்த கன்னத்தைத் தடவின.
‘பள்ளிக்கூடத்துக்குப் போன புள்ள இப்படியா வீட்டுக்குத் திரும்பணும்…?’
கேட்டுக் கேட்டு உருகிப்போன சொற்கள். துக்கத்தின் கசப்பு வீட்டின் மூலை முடுக்குகளைக்கூட விட்டுவைக்கவில்லை. வீடதிர பிள்ளையின் பெயரைச் சொல்லியழும் சத்யாவின் குரலும் ஓயவில்லை. ‘குழிப்புள்ள மடியிலன்னு சொல்வாங்க’ சுற்றத்தாரின் பேச்சுகளை அறவே வெறுத்தாள். அவளை நெருங்கினாலே வெப்பமிகு சொற்களை உமிழ்ந்தாள். வறண்டிருக்கும் தொண்டையை நனைக்கவே நாளும் படாதபாடு படவேண்டியிருந்தது. நாளும் பொழுதும் தேறுதல் சொல்லியே ஓய்ந்து போனதில் சொந்த வீடே அந்நியமாகிப் போகும் அளவுக்கு மனத்தில் வெறுப்பு வேர்விடத் தொடங்கியது. எல்லாக் கதவுகளையும் தாழிட்டுக்கொண்டு வெளியே வரமாட்டேன் என அடம்பிடிப்பவளை என்ன செய்வதென யாருக்கும் புரியவில்லை.
“நீங்க பக்கத்திலேயே இருக்கிறதாலதான் இப்படிப் பண்றா. கொஞ்ச நாள் எங்கியாவது போயிட்டு வாங்க.”
இதைத்தானே டாக்டர்களும் சொல்றாங்க எனும் எண்ணத்தில் மாமியாரின் பேச்சுக்கு காது கொடுக்க வேண்டி வந்தது. நெஞ்சை உலுக்கிய நோவிலிருந்து மெல்ல மாறி வருவதை சத்யாவின் பேச்சுகளில் புரிந்துகொள்ள முடிந்தது. கண்கள் நிரம்பி வழிய சன்னல் கம்பிகளில் முகத்தைப் பதித்தவாறு நின்றிருந்த முரளியை சந்தீப்பின் குரல் திருப்பியது. அவசரமாகக் கைக்குட்டையை எடுத்தான்.
“இதையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டால் நான் ஜிம்முக்குப் போகத் தேவையே இல்லை.”
இவ்வளவு மகிழ்ச்சியாக சந்தீப் பேசி முரளி பார்த்ததேயில்லை. ‘மேலும் கீழும் படுக்கைகளுடன் ஆறு பேர் நடமாட மட்டுமே இடமிருக்கிற விடுதி அறையில் இவற்றை எங்கே கொண்டு போய் வைப்பது?’ என்ற கேள்வியை உள்ளுக்குள் அழுத்தினான் முரளி.
பேசி முடித்திருந்த வாங் வேகமாக அடுத்த அறைக்குள் நுழைந்தார். உடற்பயிற்சி சாதனங்களைவிட்டு இம்மியும் அசையாதிருந்த சந்தீப்பை அழைத்துக்கொண்டு அடுத்த அறைக்குச் சென்றான். அறையின் ஒரு பக்கச் சுவற்றை அடைத்தவாறு இருந்த பெரிய புத்தக அலமாரியில் புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. எல்லாப் புத்தகங்களையும் நூலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
“யாராவது இப்படி எல்லாப் பொருட்களையும் விட்டுவிட்டுப் போவாங்களா?” அவ்வீட்டுக்கு வந்ததிலிருந்து மனத்தில் பலமுறை எழுந்து அடங்கிய கேள்வி முரளி அறியாமலே வெளியே வந்தது.
“ஐந்தாண்டுகளுக்கு முன், வீட்டு உரிமையாளரின் ஒரே குழந்தைக்கு விபத்தில் பலியாகிவிட்டது. அந்தத் துயரிலிருந்து விடுபட ஆஸ்திரேலியாவிற்குப் போனவங்க, திரும்ப இங்கே வர விரும்பவில்லை. வீட்டை வாங்கியிருப்பவன் எல்லாத்தையும் எடுத்துடச் சொல்லியிருக்கான்.” அதிகமாகப் பேசிவிட்டதுபோல நினைத்தாரோ என்னவோ, ‘இதெல்லாம் உனக்குத் தேவையா?’ என்பதைப்போல அவனைப் பார்த்தார்.
உடனே அங்கிருந்து போக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. தான் கொண்டு வந்த அட்டைப்பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டுபோய் காரில் வைக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு வாங் மாடிப்படிகளில் ஏறினார்.
அறையின் சன்னலைத் திறந்தவுடன் படபடத்த புறாக்கள், இங்கு உங்களுக்கு என்ன வேலை என்பதைப்போலப் பார்த்தன. வீச்சம் தாங்காது சன்னலை உடனே மூடுமாறு வாங் சைகை செய்தார். அறையின் நடுவில் போடப்பட்டிருந்த பெரிய கட்டிலில் ஒரு பாபி பொம்மை கிடந்தது. அறைக்குள்ளிருந்த ஒரு கதவைத் திறந்த வாங், விளக்கைப் போட்டார். சிறு அறைபோலிருந்த அலமாரியில் அயர்ன் செய்த உடைகள் ஹேங்கரில் மாட்டித் தொங்கின. அந்த அலமாரியையும் உடைத்துவிட வேண்டும் என்று சொல்லிவிட்டு வேக வேகமாகக் கீழே இறங்கினார்.
இருப்பிடத்தை நோக்கி கம்பெனி வண்டி சென்றுகொண்டிருந்தது. உயர உயரப் பறந்து செல்லும் சிறகினைப்போல முரளியின் மனத்தில் உற்சாகம் உயர்ந்தது. இடைவேளையின்போது, சிங்கப்பூருக்கு வரவிரும்புவதாக சத்யா சொன்னதிலிருந்து மனம் ஒரு நிலையில் இல்லை. ‘விசா எடுப்பதற்கு என்ன நடைமுறைன்னு இணையத்தில் பார்க்கணும்? எங்கே வீடு பார்ப்பதுன்னு அறை நண்பர்களிடம் கேட்கணும்? இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு முக்கியமா டாக்டருக்கு நன்றி சொல்லணும்’ எனப் பல்வேறு யோசனையிலிருந்தவன் கைப்பேசியில் தொணதொணவெனப் பேசும் சந்தீப்பிடமிருந்து சத்தமேயில்லாததை நீண்ட நேரத்திற்குப் பிறகுதான் உணர்ந்தான்.
‘உடற்பயிற்சி சாதனங்களை வண்டியில் ஏற்றலாமா எனக் கேட்டபோது ஏன் வேணாம்னு சொன்னான்?’ சந்தேகத்தோடு அருகில் இருந்தவனைப் பார்த்தான். பாபி பொம்மையை இறுகப் பற்றியிருந்த சந்தீப்பின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.


