
சூரியன் வருகையில்
அவருக்கு நாம் எப்படி முகமன் கூறுவது?
அவரைக் கண்டு திடுக்கிட மாட்டோமா?
அவரைக் கண்டு அஞ்ச மாட்டோமா?
அதுவும் நீண்ட நேர நிழலின் அமர்வுக்குப் பின்?
காலம் முழுதும் இரவுகளில்
நாம் அவருக்காக அழுதிருந்தாலும்,
நாம் பிரார்த்தனை செய்தாலும் —
துலங்கிய மின்னும் அதிகாலையில்
அவர் தனது உறுதியான விரல்முட்டிகளால்
கதவை அதிரத் தட்டும் ஓசை கேட்டு
நாம் கண்விழித்தெழுந்தால்?
நாம் நடுங்க மாட்டோமா?
நாம் நன்கறிந்த நன்மையுண்டாக்கும் மூடுபனியின் பாதுகாப்பான ஒதுங்கிடத்தில்
அடைக்கலம் தேடி
நாம் அங்கிருந்து ஓட மாட்டோமா?
இனிது! இனிது!
கதகதப்பான அறியாமையின்
குளுமையில் உறங்குவது.
இருள் கனத்துத் தொங்குகிறது
கண்களில்.
mpriya.be@gmail.com
குவெண்டிலின் ப்ரூக்ஸ் ( 1917 – 2000 )
இருபதாம் நூற்றாண்டின் பிரபலமாக வாசிக்கப்பட்டவரும் அறியப்பட்டவருமான அமெரிக்க கவிஞர் ஆவார். டொபிகா நகரில் கன்சாசில் பிறந்தவர், இளமைப்பருவத்தில் அமெரிக்காவின் சிக்காகோவிற்கு தனது பெற்றோருடன் குடியேறியவர்.
20க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியவர். தனது வாழ்நாளிலேயே “புலிட்சர் விருது பெற்ற முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையுடன், கவிதைக்கான முகவராக லைப்ரரி ஆஃப் கான்கிரஸில் “பொயட் லோரெட் கன்சல்டண்ட் இன் பொயட்ரி” என்ற பதவியில் இருந்த முதல் கறுப்பினப்பெண் இவர். மேலும், இவரது எழுத்தானது, தனது இன அடையாளத்திற்கானக காத்திரமான குரலாகவும், சமத்துவத்திற்கான குரலாகவும் இருந்தது.


