(கட்டுரை) நவீனக்கவிதைகளும் மொழித்தூய்மையும்

0
1353

அ.பிரபாதேவி

நவீனக் கவிதை என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கூறும் நல்லுலகில் தோன்றி வளர்ச்சிபெறத் தொடங்கியதாகக் கூறுகின்றனர். பாரதியாரின் கவிதைகளே நவீனக்கவிதையின் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாக அமைந்தன என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. நம்முடைய தமிழ்மொழியின் இலக்கியங்கள் எல்லாம் முதன்முதலில் செய்யுள் வடிவத்தில்தாம் எழுதப்பட்டன. யாப்பிலக்கணத்தின்படி எழுதப்பட்ட அவற்றைத்தாம் நாம் மரபுப்பாக்கள் என்கிறோம். மரபுப்பாக்களில் பின்பற்றப்பட்ட எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற அடிப்படை இலக்கணக்கூறுகளைப் பின்பற்றாமல் எளிய நடையில் எழுதப்பட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன. அவற்றை உரைநடைக்கவிதை என்றும் அழைத்திருக்கின்றனர். யாப்பிலக்கணத்தைப் பின்பற்றாவிட்டாலும் புதுக்கவிதைகள் மொழியிலக்கணத்தினை விலக்காமல் தம்மோடு வைத்திருந்தன என்றுதான் சொல்லவேண்டும். புதுக்கவிதையின் முன்னோடியாகவும் பாரதியாரின் கவிதைகள்தாம் முன்வைக்கப்படுகின்றன.

இவ்விடத்தில்தான் ஒரு சிறிய முரண் ஏற்படுகின்றது. பாரதியார் எழுதியவை புதுக்கவிதைகளா நவீனக்கவிதைகளா? புதுக்கவிதை கொண்டிருந்த இயைபு ஒழுங்கு வருணனை போன்றவற்றைத் தவிர்த்து உள்ளதை உள்ளபடியே காட்சிப்படுத்துவதே நவீனக்கவிதை என்கின்றனர். முதலில் நவீனம் என்ற சொல் தமிழ்ச்சொல்லன்று. அதுவொரு வடசொல். புதிய, புதுமை, தற்காலத்திலுள்ள என்ற பொருளினைச் சொல்கின்ற வடசொல். ஆக புதுக்கவிதையைத்தான் வடசொல்லில் நவீனக்கவிதை என்று அழைக்கின்றனர். புதுக்கவிதையில் பின்பற்றப்படும் சில விதிகளைப் பின்பற்றாமல் எழுதப்படும் கவிதைகளுக்கு நம் தமிழ்ச்சொல் கொண்டே வேறொரு நல்லபெயர் வைத்திருக்கலாம்.

நவீனக்கவிதை என்பதாலேயே அவற்றிற்கு மொழியிலக்கணம் தேவையன்று என்று நினைப்பது ஓர் அறியாமைதான். என்ன வடிவத்தில் ஒரு படைப்பு எழுதப்பட்டாலும் அதில் சொற்பிழையோ பொருட்பிழையோ இருக்கக்கூடா என்பதுதான் ஒரு மொழி நமக்குக் கற்றுத்தரும் அடிப்படை. ஒருமை பன்மைகூடத் தெரியாமல் ஒரு படைப்பாளியால் எப்படி எழுதமுடியும்? ஒற்றுப்பிழைகள் இல்லாமல் எழுதுவது என்பது மொழியின் செம்மையான வடிவம். அதை எவ்வாறு போகிறபோக்கில் ஒதுக்கிவிட்டுப் போகமுடியும்? மொழியின் உயர்ந்த அழகுவடிவம் கவிதை என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் குமுகாயத்தில் வாழ்ந்துகொண்டு பிழைகளொடு கவிதைகளையெழுதி அதன் அழகினைச் சிதைக்கலாமா?

நவீனம் என்ற சொல் வடசொல் என்பதாலேயே நவீனக் கவிதைகளிலும் வடசொற்கள் மலிந்தே கிடக்கின்றன. வடசொற்கள் சேர்ப்பதும் தவிர்ப்பதும் எழுதுவோரின் தனிப்பட்ட விருப்பம் என்று பார்த்தாலும் வடசொற்களையும் பிழையாக எழுதும்போது என்ன செய்வது? எந்த மொழியில் எழுதினாலும் பிழையின்றித்தானே எழுத வேண்டும். அந்தக்கவனம் எல்லோர்க்கும் எழுதும்போது வந்துவிட்டால் போதும். நவீனக்கவிதைகளில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்ற / தவறாக எழுதப்படுகின்ற பிறமொழிச்சொற்களைப் பற்றிச் சற்றுப் பார்க்கலாம்.  

நமது தாய்மொழியாம் தமிழ் ஒரு வினைச்சொல் மொழி. அதுவே அதன் நிலைத்தன்மைக்கு முதன்மையான காரணி என்றுகூடச் சொல்லலாம். இதுவே  வடமொழியினை எடுத்துக்கொண்டால் அதுவொரு பெயர்ச்சொல் மொழி. ஆம் வடமொழியில் நிறைய பெயர்ச்சொற்கள் உண்டு. அதனால்தான் வடமொழியின் தாக்கத்தில் இன்றும் நம்மில் பெரும்பான்மையினர் வடமொழிப் பெயர்களையே தாங்கி நிற்கிறோம்.  வடமொழியில் வினைச்சொற்கள் குறைவு. வடசொற்கள் பலவற்றின் வேரடி நம் தமிழ்மொழியிலிருந்து எடுக்கப்பட்டவையே என்று சான்றுடன் உறுதிப்படுத்தியிருக்கிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். வினைச்சொற்கள் குறைவாக இருப்பதாலேயே பல இடங்களில் பெயர்ச்சொற்களை வினைச்சொல்லாக்கிப் பலரும் எழுதுகின்றனர். எத்துணைப் பெரிய பிழை அச்செயல் ! ஒரு வினைச்சொல்லைப் பெயர்ச்சொல்லாக மாற்றலாம். அதைத்தான் தமிழில் தொழிற்பெயர் என்கிறோம். வினையாலணையும் பெயர் என்பதும் தமிழில் உண்டு. அவற்றிற்குத் தமிழ்மொழியில் இலக்கணமே இருக்கிறது. ஆனால் பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்றவே முடியாது.

நவீனக்கவிதைகளில் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தாமதம். இதுவொரு வடமொழிப் பெயர்ச்சொல். இதை அப்படியே வினையாக்கித் தாமதித்தல் / தாமதித்து / தாமதித்தான் என்றெல்லாம் பிழையாக எழுதுகின்றனர். மதித்தல் என்னும் தமிழ்ச்சொல்லொடு குழப்பிக்கொள்வதால் இவ்வாறு பிழை நிகழ்கின்றது. தாமதம் என்ற பெயர்ச்சொல் ஒருபோதும் வினைச்சொல் ஆகாது. தாமதம் ஆயிற்று , தாமதம் ஆக்கினான், தாமதமாக வந்தான் என்று அதற்குரிய வினைச்சொல்லைச் சேர்த்துத்தான் எழுதவேண்டும். தாமதம் என்னும் வடசொல்லுக்குப் பதிலாகக் காலத்தாழ்ச்சி / காலந்தாழ்த்துதல் / சுணங்குதல் / பிந்துதல் / பிந்தி வருதல் / நேரமாகி விட்டது போன்ற சொற்களை இடத்திற்கேற்றவாறு பயன்படுத்தலாம்.

அதேபோன்று பிழையாக எழுதப்படும்  இன்னொரு வடமொழிப் பெயர்ச்சொல் பிரகாசம். அதை அப்படியே வினைச்சொல்லாக்கிப் பிரகாசித்தது என்று பிழையாக எழுதுகின்றனர். பிரகாசமாய் இருந்தது / தெரிந்தது என்று அதனுடன் பொருத்தமான வினைச்சொல்லைச் சேர்த்துத்தான் எழுதவேண்டுமேதவிர பிரகாசித்தது என்றெழுதுவது பிழை. அட அதற்கு நம்மிடம் சொற்கள் இல்லையா என்ன? ஒளிர்தலைத்தான் வடமொழியில் பிரகாசம் என்கின்றனர். ஒளிர்ந்தது / பொலிவுற்றது / மினுங்கியது என்றெல்லாம் இடத்திற்கேற்றவாறு கையாளலாம். சொலித்தல் என்பதும் தமிழ்ச்சொல்லே என்கிறார் பாவாணர். (சுல் — சொல் – சொலி – சொலித்தல். சுல்லி என்றால் அடுப்பு என்று பொருள். சுல் – சுள் இரண்டுமே வெய்யில் / தீ இரண்டுடனும் தொடர்புடைய செயலைக் குறிக்கின்றன. வெய்யில் போல / தீ போல ஒளிர்தல் சொலித்தல் என்றாகிறது )  

நம்மிடையே சொற்கள் இருக்கையில் நாம் ஏன் கடன்வாங்கி வடசொல்லைப் பயன்படுத்தவேண்டும்? எந்த மொழியாயினும் அதற்குரிய தூய்மைத்தன்மையுடன் அதைப் பயன்படுத்துவது ஒரு படைப்பாளியின் முதன்மையான கடமை. அதுதான் நம்மைப் படைப்பாளியாய் இவ்வுலகுக்குக் காட்டிய மொழிக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக்கடன். எல்லாவற்றிலும் கலப்படம் தவிர்க்கவேண்டும் என்று சொல்கின்ற நாம் மொழிக்கலப்பினை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு செய்துவிடலாமா? அறியாமல் செய்வதுவேறு. எழுத்து என்பது படைப்பு என்றாகும்போது கூரறிவு கொண்டு ஒவ்வொன்றையும் கவனத்துடன் கற்றுக்கொள்ளவேண்டியதும் ஒரு படைப்பாளியின் கடமைதான்.

இயன்றவரை தாய்த்தமிழிலேயே எழுத முயல்வோம். தமிழ்ப்படைப்பு என்பது மெய்யாகவே தமிழில் எழுதப்படட்டும். அதற்கு நாமும் துணை நிற்போம்.