சிங்கப்பூரில் பொன்னியின் செல்வன்

0
1268


காலத்தால் அழியாத காவியமான கல்கியின் பொன்னியின் செல்வன் நாடகவடிவத்தை, சிங்கப்பூரில் நேற்று கண்டுகளிக்க வாய்த்திருந்தது எனக்கு. நேற்றிரவு நடந்த சிறப்புக்காட்சியில் பத்திரிக்கைக்காளர்களுக்கும் வாய்ப்பு. சிராங்கூன் டைம்ஸ் சார்பில் நானும் விஜயும் கலந்துகொண்டோம். சிறு அறிமுகத்துடன் நொடிக்கு நூறு ஆண்டுகள் என பத்து நொடிகளுக்குள் சோழநாட்டுக்குள் நம்மை உள்ளிழுத்துக்கொண்டது நாடகம்.

நாவலைப்போலவே நாடகத்திலும் முதற்காட்சியே ஆடிப்பெருக்குதான். அங்கே ஆரம்பிக்கும் உற்சாகம், நம்பி-வந்தியத்தேவன் சைவ-வைணவ நகைமோதல்கள், குடந்தைச்சோதிடர், முதலை- வானதி மயக்கம், கடம்பூர் அரண்மனைச் சந்திப்பு, யானை ஊர்வலம், இலங்கையில் அறிமுகமாகும் பொன்னியின்செல்வன், பூங்குழலியின் படகுப்பயணம் சுந்தரச்சோழர் பார்த்து அதிர்ச்சியாகும் ஊமைத்தாய், ஆதித்யகரிகாலன் கொலை என எல்லா முக்கியகாட்சிகளின் வழியாகவும் ஊடுபாவிச்செல்கிறது.


ஏறக்குறைய நாற்பது முறை தமிழ்நாட்டிலும் முதன்முறையாக (வெளிநாடான) சிங்கப்பூரிலும் நடக்கும் இந்நாடக கதாபாத்திரங்களுக்கு நடிகர் தேர்வும் பிசிறாத வசனங்களும் அதியற்புதம். தமிழ்நாட்டின் சிறந்த மேடை நாடகர்கள் பலரும் முன்னணிப்பாத்திரங்கள் வகிக்கின்றனர் என்றால் அதைக்குறைசொல்லமுடியுமா? அழகியை மணந்துகொண்டோமா துரோகியை மணந்துகொண்டோமா என்று வாழ்நாளெல்லாம் துயரும், சோழத்தின் மூத்த விசுவாசியான பெரிய பழுவேட்டரயராக ஐயா ராமசாமி (ஜோக்கர் படத்தில் வெளுத்து வாங்கியிருப்பார்) அவர்கள் கண்ணில் நிற்கிறார். வந்தியத்தேவன், குந்தவை, நம்பி, சுந்தரச்சோழர், நந்தினி, பழுவேட்டரையர்கள், வானதி, பூங்குழலி, பொன்னியின் செல்வன், ஆதித்தகரிகாலன் போன்ற முக்கியப்பாத்திரங்கள் மட்டுமல்லாது நாடகத்தில் வரும் சிறுசிறு பாத்திரங்கள் கூட, கூத்துப்பட்டறை போன்ற தேர்ந்த மேடைநாடகர்கள்தாம் என்பது நாடகத்தை இன்னும் ஒருபடி மேலே தூக்குகிறது. தேவராளனாகவும் பார்த்திபேந்திரனாகவும் வரும் நண்பர் பழனி (மெட்ராஸ் படத்தில் நடித்திருப்பார்) மிரட்டும் அவர்களில் ஒருவர். 

ரவிதாசனாய்(மந்திரவாதி) வந்து தன் உடற்மொழியில் தேர்ந்து நிற்கும் நடிகர்தான், பொன்னியின் செல்வன் நாவலை நாடகவடிவத்துக்கு மாற்றியவர் என்று சொன்னார்கள். ராதாமோகன் படத்தில் நடித்தவர் என்று கூகுளில் தேடாமல், யாரிடமும் கேட்காமல் என் புகைப்படத்தையும் பார்ர்து யூகிக்காமல், நாடகத்தில் வரும் காட்சியைமட்டும் வைத்து அவர் யாரென கண்டுபிடித்துச் சொல்வோருக்கு தஞ்சாவூர் சாம்ராஜ்யத்தில் அரைக்கிரவுண்ட் இடம் வாங்கித்தருகிறேன். அவ்வளவு சிறப்பாய்ச் செய்திருக்கிறார். அவரின் அன்னைக்கே இந்நாடகம் சமர்ப்பிக்கப்படுகிறது.

நாடகத்தில் சிங்கப்பூர் நாடக நடிகர்களும் இணைந்து படைத்ததைப்பார்க்கையில் உற்சாகம் வந்தது. ஷாஷா, ஆனந்தக்கண்ணன், பானுசுரேஷ், ஹேமா போன்றோரின் உடல்மொழிகள் அசரடித்தன. 

நாவலைப்போலவே அப்படியே ஆரம்பித்து அப்படியே முடித்தது நாவலை மீண்டும் ஒருமுறை படித்ததுபோலவும் படிக்காதவர்கள் படிக்கத்துண்டும் விதத்திலும் காட்சிகளும் வசனங்களும் உள்ளன.

வந்தியத்தேவனின் குறும்பு, குந்தவையின் நிர்வாகமேலாண்மை, வானதியின் மென்மை, நந்தினியின் துயரும் வன்மமும் நிறைந்த மனம், பூங்குழலியின் பெண்ணியப்போக்கு, ஆதித்தகரிகாலனின் மூர்க்கமும் அன்பும், கோவிலூர் மலையமானின் பாசம், பழுவூரார்களின் விசுவாசம், அருள்மொழிவர்மனின் மக்கள்நலம், கடம்பூர் அரசரின் பாவ உணர்வுகள், பார்த்திப்பேந்திரரின் ஈகோ என அத்தனை நாவல் உணர்வுகளையும் நாடகத்தில் காணமுடிந்ததில் பெருமகிழ்வு.

இன்றும், நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் மொத்தம் மூன்று காட்சிகள் எஸ்பிளனேட் நாடக அரங்கில் நடக்கின்றன. சிங்கப்பூர் நாடக, கல்கி, வந்தியத்தேவன், குந்தவை ரசிகர்கள், நண்பர்கள் காணத்தவறாதீர்கள். கல்கியை நேரிடையாய் ரசிக்க அருமையான சந்தர்ப்பம்.

எல்லாமே அருமை என்றால் ஒன்று கூடக்குறையில்லையா என்று கேட்காதீர்கள்.. விரிவான விமர்சனம் “மே மாத சிராங்கூன் டைம்ஸ்” இதழில்..


எம்.கே.குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here