தமிழருவி மணியன் சிறப்புரை – புறநானூற்றுச் சிந்தனைகள்

0
849

தமிழ்மொழி மாத நிறைவு விழாவாக கவிமாலை ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் திரு தமிழருவி மணியன் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையின் சில முக்கியமான கருத்துக்கள்.

பொதுவாகவே சங்க இலக்கியங்கள் குறித்த சிந்தனை குறைந்து கொண்டே வருகிறது. தமிழ் இலக்கியங்களை அடிப்படையாக வைத்து தான் உலகின் தொண்மொழி எனும் பெருமையையும், உயர்தனிச் செம்மொழி எனும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது. ஈராயிரம் ஆண்டுக்களுக்கு முன்னால் நமது முன்னோர்கள் சிந்தித்து சிந்தித்து நமது மொழியை வளர்த்து நம்மிடையே வளர்த்து வந்திருக்கிறார்கள். 700 கோடி மக்கள் வாழும் உலகில் 6000 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் தமிழ், சமஸ்கிருதம், சீனம், லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு ஆகிய 6 மொழிகளுக்கு மட்டுமே உயர்தனிச் சொம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. ஐக்கிய நாடுகளின் அங்கமான 196 நாடுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு மொழிகள் உயர்தனிச் செம்மொழியாக இருப்பது நமக்குப் பெருமை. இவற்றில் சமஸ்கிருதமும், லத்தீனும் வழக்குமொழியாக இல்லாமல் செத்த மொழியாகவும், கிரேக்கமும் ஹீப்ருவும் செத்துப் பிழைத்திருக்கிறது. ஆக தமிழும், சீனமும் மட்டும் தான் ஈராயிரம் ஆண்டுகளாக மக்களுடைய நாவில் தொடர்ந்து நடமாடக்கூடிய பெருமையைப் பெற்றுள்ளது. எவ்வளவு உயர்ந்த மொழியாக இருந்தாலும் பேச்சு மொழியாக , நடைமுறை மொழியாக , வீட்டு மொழியாக, வாழ்க்கை மொழியாக பராமரிக்கப்படாமல் போனால் நாளடைவில் அந்த மொழி தானாகவே கண்மூடி விடும். தமிழ் சார்ந்து சிந்திப்பவர்கள் குறைந்து கொண்டே போவதன் விளைவு, நாளை தமிழும் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையை மாற்ற நினைத்தால், நமது முன்னோர்கள் தோள்மாற்றி தோள்மாற்றி நமது தோளில் இறக்கி வைத்த மொழியை நமது பிள்ளைகளுக்கு தோள்மாற்றும் பெரும் கடமை நமக்கு உள்ளது.

அறம் சார்ந்த வாழ்வுதான் தமிழரின் அடிப்படை அடையாளம் என்பதை இன்றைய இனம் புரிந்து கொள்ள வேண்டும். அறத்தொடு நிற்றல் என்பது தான் தமிழருடைய தனிப்பெரும் பண்பு. பசியற்ற சமூகம், நோயற்ற சமூகம், பகையற்ற சமூகம், அறம் சார்ந்த ஒரு சமூகம் தான் தமிழரின் கனவு. இந்த மாபெரும் கனவை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்மனி சங்க இலக்கியத்தில் கூறியிருக்கிறார். சங்க இலக்கியங்களை படித்தால் தான் நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பெருமைகளை முழுமையாக உணர முடியும். மிகச்சிறந்த எண்ணங்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருப்பதுதான் உண்மையான பேரிலக்கியம். சங்ககாலம் தொட்டு வகுத்துவைத்திருக்கிற தமிழ் இலக்கியத்தின் நோக்கமாக உலகப் பொதுமை, மனித நேயம், அறம் சேர்ந்த வாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,

எனும் அகநானூற்றுப் பாடலில் பொருளாதாரம் ஈட்ட தொலைதூரம் சென்ற தலைவன் தலைவியைக் காண தேரில் திரும்பிச் செல்கையில் கடக்கும் சோலையில் உள்ள ஒரு பூவில் இன்புற்றுக் கிடக்கும் இரு வண்டுகளின் இன்பத்தைக் கெடுக்காமலிருக்க அசைந்தாடும் மணிகளை கைகளில் பிடித்தவாறு செல்கிறான் என்பது தான் இப்பாடலின் அர்த்தம். வெறும் வண்டுக்கு மனமிறங்கிய தமிழன், மயிலுக்கு போர்வையும், முல்லைக்கு தேர் வழங்கிய தமிழன் நமது அறம் சார்ந்து வாழ்ந்த தமிழரின் பெருமைகளை சங்க இலக்கியங்களைப் படித்தால் தான் உணர முடியும். உயர்ந்த பண்பாட்டில் உலவிய நமது இனம் இன்று மனித நேயம் அற்று சரிந்து கிடக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். எனது தாயின் கருவில் இருந்தபோது முதன் முதலாக நான் கேட்ட தெய்வ மொழி தமிழை நான் தேடித்தேடி படித்தேன். நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்த நல்ல சிந்தனைகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

புறநானூற்றுப் பாடல் – 1

ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!

இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.

இன்னாதம்மை உலகம்

ஒருவர் வீதியில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு வலப்பக்கம் ஒரு வீட்டில் இறந்தவரை வைத்து அழுது கொண்டிருக்கிறார்கள். அதே வீதியின் இடப்பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் மங்கள இசையுடன் திருமண விழா நடந்து கொண்டிருக்கிறது. இது தான் வாழ்க்கை, உலகம், இறைவனின் படைப்பு. இந்த சூழ்நிலையை வைத்து இறைவனை பண்புகெட்ட பாவி என சபிக்கும் கவிஞர் பக்குடுக்கை கணியனார் பின் அடுத்த இரண்டு வரிகளில் பெரும் தத்துவத்தை எடுத்துரைத்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் பேச வைக்கிறது. இந்த உலகம் பெரும் துன்பமயமானது. துன்பமயம் சூழ்ந்த இவ்வுலகத்தில் பிறந்துவிட்டதால் நாம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கலாமா ? துன்பமயமான இந்த வாழ்க்கையில் அதன் இயல்பு அறிந்து இன்புற்று வாழ்வது பற்றி கண்டறிந்து வாழவேண்டும். இந்த நொடிதான் உனக்குச் சொந்தம், நொடிநொடியாய் வாழ்வது தான் வாழ்க்கை.

புறநானூற்றுப் பாடல் – 2

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றனார்.

தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடல்கள் அனைத்து அழிவுற்றாலும் இந்த ஒரே ஒரு பாடல் மட்டும் உலவுகிற வரையில் தமிழ் செம்மொழி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. தமிழ் இனத்தின் பண்பாடு, வாழ்க்கை முறை அனைத்தையும் ஒரு கோப்பைக்குள் சேர்த்து விட்ட சாறாகவே இப்பாடலைக் கருதுகிறேன். இந்த வரியை திரும்ப திருப்ப யோசியுங்கள். இந்த வரியைப் பேசுகிற நாம், அதன் படி நடந்து கொள்கிறோமா ? பேதமற்ற, பகையற்ற உலகத்தில் உள்ள உயிர்களையெல்லாம உறவாக கருதும் பண்புற்ற மனத்தினால் தான் இவ்வளவு பெரிய வார்த்தை தத்துவங்களைக் கூற முடியும். பன்னிரெண்டாயிரம் பாடல்களைப் பாடிய கம்பனுக்கு கிடைக்காத பெயரும் புகழும் கனியன் பூங்குன்றனாருக்கு கிடைத்து விட்டது. எல்லாமும் என் ஊர் எல்லோமும் என உறவினர் எனும் சொல்லில் உலகெங்கும் உள்ள வளர்ச்சியுற்ற 46 நாடுகளில் தமிழன் கொடி பிடித்து வாழும் வாழ்க்கையின் பார்வை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு கவிஞனுக்கு கிடைத்திருக்கிறது. எல்லாம் என் உறவு என ஒருவனால் சிந்திக்க முடிந்து விட்டால், சாதி, மதம், பண ஏற்றத்தாழ்வு, அறிவு உயர்வுதாழ்வு பார்க்காமல் அனைத்தும் ஒன்று எனும் ஞானம் பிறக்கிறது. இரண்டை ஒன்றாக இணைத்துப் பார்க்கும் இதயம் இருந்தால் அவன் தான் ஞானம் கனிந்த ஞானி. வாழ்வு என்பதே ஒன்றை இரண்டாக வெட்டுவதாக இல்லாமால், இரண்டை ஒன்றாக கட்டுவதாக இருக்க வேண்டும். யாதும் ஊரே யாவரும் கெளிர் எனும் சொல் வெறும் வார்த்தைகள் அல்ல, அவை தான் ஞானத்தின் உச்சம். தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் சொல்லில் உள்ள தத்துவத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. மேலை நாடுகளில் தத்துவங்களின் வாசல் கதவை திறந்து வைத்த பிளாட்டோ முதல் நான் பெரிதும் மதிக்கும் ஜெ. கிருஷ்ணமூர்த்தி வரை சொல்ல முனைந்த தத்துவங்களை ஒற்றை வரியில் போகிற போக்கில் கூறிவிட்டுச் சென்றிருக்கும் தமிழனின் தத்துவங்கள் இவை. இவனால் நான் வாழ்ந்தேன் எனச் சொல்வதும் அவனால் நான் வீழ்ந்தேன் எனச் சொல்வதும் பொய். வாழ்வும் தாழ்வு, வளர்ச்சியும் வீழ்ச்சியும், இன்பமும் துன்பமும் உன்னால் மட்டுமே. உனக்குள் உருவாகக்கூடிய எண்ணத்தினால், எண்ணத்தை செயல்படுத்தக் கூடிய செயலால், அந்த செயலால் பெறக்கூடிய விளைவால் உனக்கான வாழ்க்கை வாய்க்கிறது. ஒருவக்கு கிடைக்கும் நன்மையும் தீமையும் அவனது நடவடிக்கையைப் பொறுத்தே அமைகிறது. மரணம் என்பது தவிர்க்க முடியாதது. மனிதன் இறப்பிற்கு அச்சப்படுவது என்பது இறப்பதனால் என்ன கிடைக்கும் என்பதல்ல, எதையெல்லாம் இழக்கப் போகிறோம் என்பதனாலே தான். மரணத்தின் கனவு என்பது வாழ்க்கையில் அடங்கியிருக்கிறது. இப்பாடலின் முடிவை அழகாக முடித்திருக்கிறார் கவிஞர். ஒருவன் நல்லவன் என்று எப்போது நாம் முடிவெடுக்கிறோமோ அப்போதே மற்றொருவன் கெட்டவன் என முடிவெடுப்போம். நல்லது கெட்டது எனப் பிரித்து ஒன்றைப் போற்றுவதும், ஒன்றைத் தூற்றுவதும் என இருந்தால் உன் மனது சமநிலையில் இல்லை. இதன் பொருள்படும் பாடலை மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே வரிகளின் மூலம் கொடுக்கிறார்.

அடுத்து மூன்றாவது பாடல்,

‘ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார்த் குறவர் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள’ என,
‘நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!

உயிர் வளர்க்கும் அமுதமாகிய பாலைப் பொழிகின்ற பசுவின் மடிக்காம்பை அறுத்து எறிகின்ற இரக்கமற்ற அரக்கனுக்கும் மன்னிப்பு உண்டு. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிற பெண்ணை எட்டி உதைத்து வயிற்றில் வளரும் கருவினைச் சிதைக்கும் ஒருவனுக்கும் மன்னிப்பு உண்டு. அறிவைக் கொடுக்கும் ஆசிரியருக்கு இழைக்கும் பாவத்திற்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் நன்றியை கொன்றவனுக்கு என்றுமே பாவ‌ மன்னிப்பு இல்லை. நன்றி என்பது மிகப்பெரிய விஷயம். தினமும் நான் எழும்பொழுது எனது கைகளை முதலில் பார்த்து என்னைப் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் நன்றி சொல்லி விட்டே எனது பொழுது தொடங்கும். நாம் உடுத்தும் உடைகளுக்கு உழைத்த நெசவாளிகளுக்கும், நமக்கு உணவை அளிக்கும் விவசாயிகளுக்கும் உரிய நன்றியை எப்போது சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நொடிநொடியாக நகரும் வாழ்க்கையில் சமூக மனிதர்கள் உதவியும் இன்றி எவராலும் வாழ்ந்து விட முடியாது. ஆக அனைவருக்கும் நன்றி பாராட்ட வேண்டிய அவசியத்தை இப்பாடல் உணர்த்துகிறது.

அடுத்து நான்காவது பாடல்,

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
பிறவு மெல்லா மோரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே

தமிழன் வாழ்வை எப்படியெல்லாம் பார்த்திருக்கிறான் என எனக்கு பாடம் நடத்தும் பாடல். உலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக்குடையின் கீழ் ஆளும் அரசனானாலும் சரி ஆண்டியானாலும் அடிப்படை தேவை உண்ண உணவும், உடுத்த உடையும் தான். நாம் சேர்க்கின்ற செல்வத்தின் பயன் என்பது அதனை இல்லாதவர்களுக்கு கொடையாக அளிப்பது. . எனது பள்ளிக்காலங்களில் தினமும் ராப்பிச்சைக்காரனுக்கு எனது அம்மா உணவளிக்கும் பழக்கும் உண்டு. இன்று ராப்பிச்சைக்காரன் வருவதே இல்லை. மீதமாகவும் உணவையாவது ராப்பிச்சைக்காரன் வாங்கிச் சென்றான். ஆனால் இன்று மீதமாகும் உணவைனைத்தும் குளிர்சாதனப் பெட்டிக்குள் சென்று நாமே சாப்பிட்டுக் கொள்வும் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமில் உள்ள ஐந்து கடமைகளில் ஒன்று ஜகாத். தான் சேர்த்த செல்வத்தில் இருந்து உறவே இல்லாத ஒருவருக்கு இரண்டரை விழுக்காடு கட்டாயமாகக் கொடுக்க வேண்டும். அறம் செய விரும்பு என்றெல்லாம் இல்லை, கட்டயாகமாக தான் சேர்த்த செல்வத்தில் இருந்து கொடுத்தால் தான் நீ இஸ்லாமியன் என இருக்கிறது. எந்த சமூகத்திலிருந்து பெருகிறாயோ அந்த சமூகத்திற்கு நீ திருப்பிக் கொடு. நாம் சேர்க்கும் செல்வங்களின் பலன் என்பது இதனை மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதால் தான் எனும் தத்துவத்தை இப்பாடல் கொண்டு சேர்க்கிறது.

இறைவனிடம் செல்லும் நாம் நமக்கான தேவைகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிற நாம் இந்த மனித சமூகங்களுக்கென எதையும் கேட்பதில்லை. நமக்கான கல்வி, பொருளாதாரம் பற்றி வேண்டுகிற நாம் மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. செக்கு மாடு சுற்றுகிற இடத்திலே சுற்றிக் கொண்டு இருப்பது போல சுயநல வட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் மனிதர்களாக உள்ளனர். எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என இறைவனிடம் கேட்பது பிரார்த்தனை இல்லை. சராசரி மனிதர்கள் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை எடுப்பதில்லை, பிச்சை எடுக்கிறார்கள். பெரும் வறுமைச் சூழலிலும் பிள்ளையாரிடம் சென்ற பாரதி தனக்கென எதுவும் கேளாமல், தனது இரண்டு பிள்ளைகளுக்கு என எதுவும் கேளாமல் சொல்லும் பாடலில்..

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்;
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள்,புற்பூண்டு,மரங்கள்;
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
‘பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக!துன்பமும்,மிடிமையம்,நோவும்.

சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிசெலாம்
இன்புற்று வாழ்க’என்பேன்!இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
‘அங்ஙனே யாகுக’ என்பாய்,ஐயனே!

இதுதான் அய்யா பிரார்த்தனை, இனியாவது பிரார்த்தனை செய்வோம் எனக் கூறி முடித்து பெருத்த கரயோசையோடு சிறப்புரை முடிவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here