நூறு டால்பின்கள் சூழ ஆழ்கடலுக்குள் நுழைந்த
எருது சண்டை வீரனின் பேரன்

‘‘நான் ஒரு பறவை ; என் உடல் அதன் கூண்டு;
அதை அடையாளமாக வைத்துவிட்டு பறந்து செல்கிறேன் “

-இமாம் அல் கஸ்ஸாலி மரணவேளையில் தனது தலைமாட்டில் எழுதி வைத்த குறிப்பிலிருந்து…

ரியாஸ் அகமது

நான் இனிமேல் ஆழ்கடலுக்குள் வாழப்போவதில்லை மீண்டும் நிலத்திற்கே திரும்பி மனிதனாக வாழப்போவதென்று முடிவெடுத்திருந்தேன். அம்முடிவு இன்று நேற்றல்ல. பல ஆண்டுகள் என் உள்ளத்தில் கனன்றுக்கொண்டிருக்கும் ஆசை. என் தோள்புஜத்தில் வளந்திருந்த மீன் செதில்களை துடுப்பிட்டவாறே எனது கால்களை ஆட்டிப்பார்த்தேன். இப்போது அவை கால்கள் அல்ல மீனின் வால் பகுதி. நான் நீரின் அடியாழத்திலிருந்து மேல்நோக்கி சென்றேன். ரத்தின சுருக்கமாக கூறின் மீன் உடலில் சிக்கி தவிக்கும் மனித ஆன்மாவின் நீச்சல் அது..

எனது உருமாற்றம் பல கட்டங்களில் நிகழ்ந்திருக்கலாம். முதலில் கால்கள், பின்பு தோள்பட்டை, தலை,கழுத்து எல்லாம் ஒரு மீனாக மாறிப்போன என் வாழ்வில் சிந்தனை மட்டும் அப்படியே மனித சிந்தனை. எனக்குள் நிகழும் இந்த உருமாற்றம் நான் விரும்பக்கூடிய ஒன்றல்ல என்பதை நீங்கள் முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

இனிமேல் மனித வாழ்விற்கு திரும்புவது சாத்தியமா? நான் ஒருகாலத்தில் மனிதனாக வசித்த மேற்கு கரை இன்னும் இருக்கிறதா? அங்கு முத்துக்குளிக்கும் போராட்டத்தில் பறங்கியர்களோடு மோதி மரித்துப்போன என் முன்னோர்களின் ஸ்தூபி இருக்கிறதா? என் உம்மா இன்னும் அங்கு தான் வசிக்கிறாளா? அவளிடம் சுருட்டு புகைத்துக்கொண்டே இறந்துபோன காளை வீரனான என் தாத்தனின் உடல் இருக்கிறதா என்று உங்களை போலே எனக்கும் பல குழப்பங்கள் இருக்கின்றன.

நான் குழப்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறேன். அதற்கு இப்போதே நான் நிலத்திற்கு திரும்பவேண்டும்.

இப்படி பாதியிலே ஆழ்கடல் வாழ்க்கையை கைவிட்டு நிலத்திற்கு திரும்பினால் உன்னுடய முன்னோர்களின் சமாதியை யார் பாதுகாப்பது ? என்றது ஆலிவர் ஆமை.

தான் ஒளிந்திருந்த பவளபாறையை நீக்கிக்காட்டியது ஆமை. அச்சொட்டாக அப்படியே ஐந்து பிரேதங்கள். கடலின் அடியாழத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் எனது முன்னோர்கள். அவர்களின் ஒவ்வொருவரின் மீதும் பச்சை பிறை கொடி போர்வை போர்த்தியிருந்தது. ஒவ்வொருவரின் உடலுக்கும் அருகில் நடந்து சென்றேன். மன்னிக்கவும்… நீந்திச்சென்றேன். அவர்களின் போர்வையை நீக்கிப்பார்த்தேன். அத்தனையும் பிரகாசமான முகங்கள். அவர்கள் நீடித்த நித்திரையில் இருந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி அவர்களை இங்கே எப்படி எடுத்து வந்தேனோ அப்படியே அவர்கள் இருந்தார்கள். அவர்களின் உடலில் எந்த மாறுதல்களும் இல்லை. அவர்களின் முகத்தில் தவழும் புன்னகையில் கூட மாற்றம் இல்லை. இன்னும் அவர்களின் உடலிலிருந்து திமிங்கலத்தின் உமிழ்நீரிலிருந்து பெறப்படும் அம்பர் பிசினின் வாசனை.

இப்படித்தான் அவர்கள் ஒவ்வொரு நாளும் விதம் விதமாக நறுமணத்தை பரப்பும் பூங்காவின் தென்றல் போல் அவர்கள் முன்பு நிலத்திலும் மணத்துக்கொண்டிருந்தார்கள். நான் அப்படியே நீந்தி ஒரு பெண் சடலத்திற்கு முன்பாகப் போய் நின்றேன். அவருடய கழுத்தில் ஒரு வெட்டுகாயம் இருந்தது. மாலைதீவு காட்டிற்குள் மலைவாசியாக வாழ்ந்தவள். அவளைத் தழுவிய புதிய சமய நம்பிக்கையின்படி அவளை கழுவிலேற்றி கொன்றிருந்தார்கள். அதன் சின்னமாக கழுத்தில் இருக்கும் இரத்தவடுவுடன் பூரண சந்திரனாக காட்சியளித்தாள்.

இப்படித்தான் அவர்கள் ஒவ்வொரு நாளும் விதம் விதமாக நறுமணத்தை பரப்பும் பூங்காவின் தென்றல் போல் அவர்கள் முன்பு நிலத்திலும் மணத்துக்கொண்டிருந்தார்கள்.

என் உம்மாவைப் போல் நான் சடலங்களோடு உரையாட விரும்பினேன். அவள்தான் அவர்களோடு சரளமாக பேசுவாள். உம்மா தோட்டத்திற்கு பின்னால் சடலங்களின் கிடங்கிற்கு சென்று உரையாடும் முகமன் மொழியை தேடித்தேடிப் பார்த்தேன். ஒரு வழியாக நினைவுக்கு வந்தது. அது ஒரு புராதான சம்பிரதாயம்.

’..இறைவனிடமிருந்து உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது கிடைத்துவிட்டதா..’

என் நினைவில் இருந்த சொற்கள் வாய் வழியாக விட்டேன். பேச்சாக வளரவில்லை. மாறாக என் வாயிலிருந்து மீனின் சொற்களான நீர்குமிழ்களாக சடலங்களை போய்ச் சேர ஆரம்பித்தன.

[2]

எங்களின் சமய மரபுப்படி, இறைவனின் பாதையில் உயிர் நீத்த நல்லடியார்களின் உடலை மண் அழிப்பதில்லை. மண்ணறையில் ஒரு புதிய மணவாளனை போல் உறங்குவார்கள்! அவர்களுக்கு இறைவனின் புறத்தில் இருந்து உணவு அளிக்கப்படும் என்று என் உம்மா கூறுவாள். என் சிறிய வயதில் அவ்வாறான நல்லடியார்களின் சமாதிகள் எனது ஊரான மேற்குக் கரையில் நிறைந்திருந்தன. தொல்பாண்டிய மன்னனுக்கு உதவி செய்யபோய் மடிந்துபோன இருபது அரபு வணிக வீரர்களின் உடல்கள் மேற்குக் கரை ஆற்றுப் படுகை ஓரத்தில் புதைக்கப்பட்டிருந்தன. அவர்களின் சமாதிகள் பல நூற்றாண்டுகளின் வரலாறை சுமந்திருந்தன.

எங்களின் சமய மரபுப்படி, இறைவனின் பாதையில் உயிர் நீத்த நல்லடியார்களின் உடலை மண் அழிப்பதில்லை. மண்ணறையில் ஒரு புதிய மணவாளனை போல் உறங்குவார்கள்! அவர்களுக்கு இறைவனின் புறத்தில் இருந்து உணவு அளிக்கப்படும்

அவர்கள் மடிந்துபோன காரணம் ஒவ்வொன்றும் விசித்திரமானவை. அவற்றை இருவகையாக நான் வகைப்படுத்தி உங்களுக்கு கூறவேண்டுமானால் அவர்கள் ஒன்று ஒரு சிந்தனையை இவ்வுலகில் உயிரூட்டுவதற்காக தன் உயிரை விட்டிருப்பார்கள் அல்லது மனித மாண்புகளை மண்ணில் நிலை நிறுத்தவே தங்கள் உயிரை தந்திருப்பார்கள். இன்னும் ஒருபடி கூர்மையாக ஒன்றுப்படுத்திக் கூறவேண்டுமானால் இறைவனை சந்திக்க வேண்டும் என்ற முனைப்பு அவர்களுக்கு மரணத்தை விருப்பத்துடன் தேர்ந்தெடுக்க அவர்களை உந்தி தள்ளியிருக்கவேண்டும்.

இப்படியிருக்க மேற்கு கரையில் புதியதாக முளைத்த சீர்த்திருத்தம் இந்த கருத்திற்கு எதிராக இருந்தது. மெய்யடியார்களின் உடல்களை சேகரிப்பது அவர்களின் சமாதி மீது பச்சை பிறை கொடிபோர்வை போர்த்துவது எல்லாம் மூடபழக்கம் என்று இந்த கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்தது. இன்னும் சொல்வதென்றால் நவீன சீர்திருத்தம் கடந்தகால வரலாற்றின் மீது கோடாரியை எறிந்தது. அதனிடமிருந்து எப்படியோ உம்மா ஐந்து உடல்களை காப்பாற்றி முதன்முதலில் தோட்டத்திற்குள் பின்னால் இருக்கும் இரும்பு கிடங்கிற்குள் கொண்டு வந்து வைத்திருந்தாள். அவர்களின் இடுப்பில் ஒரு கத்தி இருந்ததை கண்டு என் உம்மாவும் ஒரு கத்தி இடுப்பில் முடிந்து வைத்திருந்தாள். அவளைப் பொறுத்தவரை கத்தி என்பது இறைவனுக்கு மாறு செய்யும் எண்ணங்களை அறுத்து முற்றுப்பெறாத ஒரு சிந்தனையை உள்ளத்தில் நிலை நிறுத்தும் போராட்டத்தில் வீசப்படும் கூரிய ஆயுதம். ஒவ்வொரு கணமும் அந்த கத்தியை உள்ளத்தில் சுழற்றிக்கொண்டேயிருக்கும் போராட்டத்தில் சூஃபியாக்கள் கத்தியை ஒரு குறியீடாக வைத்திருந்தார்கள். இக்கலையை தன் முன்னோர்களிடமிருந்தே அவள் கற்றிருந்தாள். அவள் இக்கலையின் உச்சம் தொட்ட ஒரு நாளில் அரபு எழுத்தின் ‘லாம் அலிஃப்’பைப் போல் மிகக் கூர்மையாக அவள் உடல் மாறியிருந்தது. வில்லாளனின் உடல் வில்லைப்போல் மாறும் விந்தை அது.

இதனையறிந்த அக்கம்பக்கம் ஊர்களிலிருந்தும் உம்மாவை பொறுப்பேற்கும் படி சில மெய்யடியார்களின் உடல்களைக் கொண்டுவந்திருந்தனர். யாருக்கும் அவள் மறுப்பேதும் கூறவில்லை. எல்லோருடய கோரிக்கையை ஏற்று உடல்களையும் வாங்கி, வீட்டின் தோட்டத்திற்கு பின்னால் இருக்கும் இரும்புக் கிடங்கிற்குள் கொண்டுப்போய் கிடத்தினாள். ஒவ்வொரு நாளும் நவீன சீர்திருத்தம் வலுப்பெற என் வீட்டிற்கு மேலும் உடல்கள் மேற்குக் கரை அருகாமையிலிருந்து வர ஆரம்பித்தன.

என் வீட்டுத் தோட்டம் முழுதும் சடலங்களால் நிறைந்திருந்தன. வீட்டிற்குள் உடல் சேகரம் ஆவதை மேற்குக்கரைவாசிகள் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். உடல்கள் அழுகி இனி மேற்குக்கரை மனிதர்கள் வசிக்கமுடியாத பிணவாடை வீசும் பகுதியாக மாறிவிடும் என்று எச்சரித்துவிட்டுப் போனார்கள். என்னையும் உம்மாவையும் சூனியக்காரர்கள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். உறவினர்கள், அண்டைவீட்டார்கள் ஒவ்வொருவராக எங்களை கை விட ஆரம்பித்தார்கள். உம்மா ஒவ்வொரு நாளும் இரவு வீட்டின் தோட்டத்திற்குப் பின்னால் சென்று பிரேதங்களோடு உரையாடினாள். நான் கூட அவளுக்கு ஏதோ மனபிறழ்வு ஏற்பட்டு விட்டதோ என்று பயந்தேன். என் உம்மா மீது எனக்கும் கடுமையான கோபம் வந்தது.

ஒரு முறை அவளிடம் ‘இப்படி உடல்களை சேகரித்துக்கொண்டே சென்றால் நாம் வசிப்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும். இதனால் உனக்கு என்ன வரப்போகிறது ?’

அதற்கு அவள் சிரித்துக்கொண்டே ‘உண்மையில் நான் சேகரிப்பது உடலை அல்ல. அவர்களுக்குள் உறைந்துப்போன லட்சியத்தை. அவர்கள் நம்பிய புதிய நம்பிக்கையின் சுடரை. ஒரு சுடரில் இருந்து இன்னொரு சுடர் தொற்றிக்கொள்வது போல். உண்மையில் அவர்களிடம் நாம் தேடுவது ஆதிசுடரை. நான் வைத்திருப்பது எல்லாம் அவர்களின் லட்சியத்தின் நினைவாய் உடல் எனும் வெறும் உறை…’

கொஞ்சம் மெளனமாக இருந்தவள் பின்னர் ’புத்ர! மரணித்தவர்கள் விழித்துவிட்டார்கள். அவர்கள் உண்மையை நேருக்கு நேர் சந்தித்துவிட்டார்கள்; உண்மையில் நித்திரையில் இருப்பது நாம்தானே..’

’அதற்காக நம்மையும் சாகச் சொல்கிறாயா?’

.. நம்முடைய தவணை வருவதற்கு முன்பாக மெய் எது பொய் எது பிரித்தாளும் கலையைப் பற்றி பேசுகிறேன்..’

‘எனக்குப் பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது.. நீ இறந்தவர்களோடு பேசுகிறாயா.. உண்மையில் நீ பேசுவதை அவர்கள் கேட்கிறார்களா? அவர்கள் உனக்கு பதிலளிக்கிறார்களா? ‘என்று கேட்டேன்.

அப்போதுதான் வெள்ளைப் பனித்துளிபோல் சமாதியிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு குழந்தையின் உடல் புதிதாக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தது. அதன் தலையை வருடியாவாறே உம்மா கூறினாள்.

‘இறந்தவர்கள் நம்மைவிட அதிக கேள்வியுறுகிறார்கள். இன்னும் நம்மோடு அதிகம் பேசக்கூடியவர்களும் அவர்களே..’ என்று தீர்க்கதரிசி போர் முடிந்ததும் அதில் கொல்லப்பட்ட பகைவர்களின் பிரேதங்களோடு உரையாடிய புராதான வார்த்தையிலிருந்து ஒரு வாக்கியத்தை தேர்ந்தெடுத்து அவள் பிரேதங்களோடு பேச ஆரம்பித்தாள்.

‘இறைவனிடமிருந்து உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது கிடைத்துவிட்டதா.. நீங்கள் நல்லவர்களாக இருப்பின் உங்களுக்கு இறைவனின் நன்மாராயம் …’ என்று கூறியவளாக தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து என் இடுப்பில் சொருகிவைத்தாள்.

‘இறைவனிடமிருந்து உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது கிடைத்துவிட்டதா.. நீங்கள் நல்லவர்களாக இருப்பின் உங்களுக்கு இறைவனின் நன்மாராயம் கெட்டவர்களாக இருப்பின் நீடித்த சீழ்ப்பிடித்த நரகம் காத்திருக்கிறது.

என் வீடு முழுதும் உடல்கள் நிரம்பிகிடந்தன. அவர்களில் போரில் வெட்டப்பட்டு காயங்களொடு சிலர், சன்மார்க்க பரப்புரைக்காக பல மைல்கள் கடல் தாண்டி வந்த ஞானிகள், சுதந்திர போராட்டத்தில் வெட்டுப்பட்ட உடல்கள், மக்களுக்காக போராடி துண்டு துண்டாக வெட்டப்பட்ட அரசனின் உடல், அநீதிக்காக தனியாக போராடி மரித்த உடல், தன்னை பிழிந்து தவமேற்று சுடராகி போன உடல் என்று எல்லா உடல்களிலும் வெட்டுக்காயங்கள் இருந்தன.

சிலர் இயற்கையாக மரணித்தவர்களின் உடலில் இருந்த வெட்டுக்காயங்களை என்னிடம் காண்பித்து இவர்கள் தங்களது இடுப்பில் இருக்கும் கத்தியை சரியாக பயன்படுத்தியவர்கள் என்றாள் உம்மா. எனது இடுப்பில் இருந்த கத்தியைத் தடவிப்பார்த்துக்கொண்டேன். அத்தனை சடலங்களும் சுடர் விட ஆரம்பித்தன. எனது வீடே ஒளிப்பிழம்பாக மாறிபோனதை கண்டு மேற்கு கரைவாசிகள் பயந்துப்போனார்கள். வீட்டு பின்புறம் தெரியும் கடலை தவிர என் வீட்டிற்கு செல்லும் எல்லா வழிகளையும் அடைத்து விட்டார்கள்.

நாளுக்கு நாள் வளரும் சுடரில் நாங்கள் இருவருமே மடிந்துவிடுவோம் எனுமளவுக்கு ஒளியின் பிரகாசம் கூடிக்கொண்டேபோனது. நாங்கள் உண்டு குடித்தே நாற்பது நாட்களுக்கு மேலாகிப் போனது. இடுப்புக் கத்தியோடு எனது உடல், உம்மாவின் உடலைப்போல குறுகிக்கொண்டேபோனது. உம்மா எழுந்து போய் பிரேதங்ளோடு பேச ஆரம்பித்தாள். இறைவனின் புறத்திலிருந்து நல்லடியார்களுக்கு கிடைத்த வெண்ணை போன்ற உணவை எடுத்து வந்து என்னிடம் கூறினாள்.

‘நீ இங்கிருந்து தப்பித்து மேற்குக்கரையில் நிற்கும் படகில் ஏறி எங்கேயாவது சென்று விடு. இது எனது உத்தரவு.‘ என்றாள். நான் தயங்கித் தயங்கி நின்றேன். அவள் தன் காலடியைத் தூக்கி நிலத்தில் அடித்தாள். ஒரு கிளையாறு அவள் பூமியை மிதித்த இடத்தில் இருந்து வெடித்து பீறிட்டது. நான் உடனடியாக அங்கிருந்து கிளம்பி மேற்குக்கரைக்கு ஓட எத்தனித்தபோது என் முதுகில் ஒரு பெரிய பொதியை வைத்தாள் உம்மா. அதில் ஒரு பெண் உட்பட நால்வர்களின் உடல்கள் இருந்தன.

‘இவர்கள் நம் முன்னோர்கள்! இவர்களைப் பாதுகாப்பது உன் பொறுப்பு‘ என்றாள். நான் ஓட்டமும் நடையுமாக யாருக்கும் தெரியாமல் மேற்குக்கரை படகை நோக்கி ஓடினேன்.

நான் படகில் ஏறியபோது என் வீட்டு மீது மேற்குகரைவாசிகள், ‘இத்தோடு இந்த சூன்யக்கார கிழவியின் சூழ்ச்சியை விட்டும் நம்மை இறைவன் காக்கட்டும்’ என்று தீப்பந்தங்களை எறிந்தார்கள். தீப்பிழம்பு வீட்டின் கூரை மீது நாலாபுறமும் பற்றி ஏறியது. கூரையில் பற்றிய தீயைவிட மெய்யடியார்களின் சுடர் வீட்டின் மீது மேலொங்கியிருந்தது. சுடர் மேலும் சுடர்விட்டு தூய சுடராகிப்போனது.

[3]

உம்மாவின் தாத்தாவிடம் இருந்துதான் உடலை சேகரிக்கும் பழக்கம் தொற்றிக்கொண்டதாக அவள் கூறினாள். அவள் சிறிய வயதில் மேற்குக்கரை கிணற்று மேட்டிலிருந்து ஒரு மரித்துப்போன சிட்டுக்குருவி ஒன்றை வீட்டிற்கு எடுத்துவந்தாள். தன் குஞ்சுகளுக்கு இரை கவ்வி செல்லும் வழியில் தாய்ச் சிட்டு இறந்துபோக அதனை தன் வீட்டிற்கு எடுத்து வந்ததாகவும், “இறைவனின் வாக்கு பொய்க்காது; தன் மக்களுக்காக குடும்பத்திற்காக போராடி மரித்தவர்கள் யுக முடிவு நாள் வரும்வரை அவர்கள் அழகிய நித்திரையில் இருப்பார்கள்; அவர்களின் உடல் அழியாது; இது இறைவனின் வாக்கு! பொய்க்காது” என்று திரும்பத் திரும்பக் கூறினாள்.

பழைய துமாசெக்கில் வசித்த என் உம்மாவின் தாத்தா, ஒரு எருது சண்டை வீரரும் கூட. அவரிடம் சொத்து சேகரம் என்று பெரிதாக இல்லை. அவரிடம் இறுதி காலத்தில் கஸ்தூரி வாசனை மிக்க ஐம்பது விதமான மெய்யடியார்கள் உடல் இருந்தது. அங்கு மாமிசத்திற்காக வளர்க்கப்படும் ஒரு எருது பண்ணையில் வேலை செய்தார். அரசாங்கம் எருது காளைகளால் பூட்டி ஓட்டும் வண்டிகளால் சாலைகள் பழுதாகிறது என்று தடை விதித்தன் காரணமாக, எருது பண்ணையின் முதலாளி அவர் வீட்டுக்கு பின்னால் தாத்தாவிற்கு ஒரு எருதுப்பட்டி அமைத்துக்கொடுத்திருந்தார்.

அதில் கொழுத்த எருதுகளை அறுப்பு கத்தியை வைத்து அறுப்பதற்கு முன்பாக அதனை மல்லாக்க கவிழ்த்து கண்களோடு கண்களை வைத்து பேசிக்கொண்டிருப்பார். பின்பு சமயம் பார்த்து அதன் மீது பாய்ந்து கொல்வார். அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடுகளால் வெளியில் எங்கும் செல்லமுடியாத எருதுகள் தாத்தாவோடு மோத ஆரம்பித்தன. பட்டியை உடைத்துக்கொண்டு கூர்மையான கொம்புகளை வைத்து தாக்க ஆரம்பிக்கும்போது தன் கைகளை கொண்டு அவர் தற்காத்து கொண்டார். இருந்தும் அவர் மண்டையெல்லாம் உடைந்தது. எருதுகளிடம் மோதி குத்துயிரும் கொலை உயிருமாக கிடக்கும் போதெல்லாம் எருதுகளிடம் தன்னைத் தாக்கவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.

தொடர்ந்துகொண்டே இருந்த தாக்குதல்களால் எருதுகளிடம் இருந்து தப்பிக்க அவருக்கு அவரே ஒரு தற்காப்புக் கலையை உருவாக்கினார். எதிரில் நிற்கும் எதிரிகளை ஒரு எருதுவாக கற்பனை செய்துகொள்வார். தன் கைகளை எருதுவின் கூர்மையான கொம்பாக தன் நெற்றி புருவத்தில் நினைத்துக்கொள்வார். அப்படி பலமுறை எருதுகள் மீது அவர் நிகழ்திய தாக்குதலில் அவை மிரண்டு போயின.

ஒருமுறை துமாசெக் சுருட்டு சங்கம் நிகழ்த்திய குஸ்தி சண்டையில் முஹம்மது குஞ்சு பயில்வானை தன் எருது கலையின் மூலமாக முதன்முதலில் வீழ்த்தினார். பயில்வானை ஒரு எருதுவாக கற்பனை செய்துக்கொண்டு வீழ்த்தியதன் மூலம் புகழ்பெற்ற சண்டை வீரனானார் தாத்தா. மற்றொரு சண்டையில் தாத்தாவின் பலவீனம் அறிந்த மலாய் வீரன் ஒருவன் அவரின் காதில் தனக்கு போட்டியை விட்டுக்கொடுத்தால் தன்னிடம் இருக்கும் துமாசெக் அரசன் ராமேஸ்வராவின் உடலைத் தருவதாகக் கூறினான். முதலில் அவனை நம்பவில்லை. பிறகு ராமேஸ்வராவின் இரத்தம் தோய்ந்த ஒரு துண்டை அவன் எடுத்துக்காட்டினான். அவன் நிகழ்த்திய தாக்குதலில் தாத்தா நிலைகுலைந்துபோனார். போட்டியில் தோற்றுப்போன தாத்தாவிடம் மலாய் வீரன், புதிய சமய நம்பிக்கையை சூடிக்கொண்ட ராமேஸ்வராவின் உடல் வெள்ளிமலையில் இருக்கும் சமாதியில் இல்லை என்றும் புக்கிட் டிங்கியில் தன் மூதாதையர் வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தான். அந்த சுடரை தான் தரிசிக்க விரும்புவதாக அவனிடம் தாத்தா தெரிவித்தார்.

அரசனின் உடலோடு இருபத்தைந்து வீரர்களின் சமாதியின் மஞ்சள் கொடி வீட்டை அவர்கள் தாத்தாவின் தோல்விக்கு கிரயமாக எழுதிவைத்தார்கள். பழைய துமாசெக்கும் விரிவடைந்து நவீனத்தை நோக்கி நகர்ந்தபோது என் தாத்தாவின் மஞ்சள்கொடி வீட்டை நோக்கி அங்கிருந்த மெய்யடியார்களின் உடல்கள் வர ஆரம்பித்தன. மேற்குக்கரை வீட்டைப்போல் தாத்தாவின் மஞ்சள்கொடி வீடு முழுதும் உடல்களால் நிறைந்தன. மஞ்சள்கொடி வீட்டிலிருந்து மஞ்சள் பூக்களின் வாடை தீவு முழுதும் பரவ ஆரம்பித்தன. உடலைப் பாதுகாக்கும் நிமித்தம் தாத்தா எருது சண்டைக் கலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். எருதுப்பட்டிக்குப் போவதையும் நிறுத்திக்கொண்டார். இறுதியாக தாத்தா சுருட்டு புகைத்துக்கொண்டு காட்டு வழியில் சென்றபோது ஒரு சீன இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற இருவரை கொன்று அவரது வீட்டிற்கு எடுத்து வந்திருந்தார். அதுதான் அவர் கடைசியாக எருது சண்டைக் கலையை கடைசியாக பயன்படுத்திய தருணம்.

இறந்த பிரேதங்களுக்கு முன்பாக நின்றுகொண்டு இப்படி பேசஆரம்பித்தார்.

‘..இறைவனிடமிருந்து உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது கிடைத்துவிட்டதா… நீங்கள் நல்லவர்களாக இருப்பின் உங்களுக்கு இறைவனின் நன்மாராயம் …கெட்டவர்களாக இருப்பின் நீடித்த சீழ்ப்பிடித்த நரகம் காத்திருக்கிறது…’

ஒருமுறை தாத்தா இல்லாத நேரம் எருதுகள் மூர்க்கம் கொண்டு பட்டியை உடைத்துக்கொண்டு முதலாளியின் பண்ணை வீட்டிற்குள் புகுந்தன. எதிர்ப்பட்ட எல்லா பொருட்களையும் தமது கூர்மையான கொம்புகளால் குத்திக் கிளறின. இறுதியாக முதலாளியும் எருதுகளின் சீற்றத்திற்கு பலியானார்.

முதலாளியையும் இன்னும் இருவரையும் கொலை செய்த குற்றத்திற்காக டாணாவிலிருந்து போலிசார்கள் தாத்தாவைத் தேடி எருதுப்பட்டிக்கு வந்திருந்தனர். அவர் தப்பித்து மஞ்சள்கொடி வீட்டிற்குள் போய் கதவை தாழிட்டுக்கொண்டார். எவ்வளவோ தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. தீராத மஞ்சள் பூக்களின் வாசனை தீவு முழுதும் வீசியது. பன்னெடுங்காலமாக துமாசெக்கில் வீற்றிருந்த மஞ்சள்கொடி வீடு அன்று முதல் காணாமல் போனது. சுருட்டு புகைத்தாவாறே தாத்தா மேற்குக்கரைக்கு தப்பி வந்திருந்தார். அவரோடு ஒரு கட்டு உடல்கள் இருந்தன.

===

மேற்குக் கரையிலிருந்து கிளம்பிய எனது படகு பலநாட்கள் இரவும் பகலுமாக கடலுக்குள் திக்கு திசையன்றி சுழன்று வந்தது. எனது உடல் உணவும் நீரின்றி மரணிக்கும் அளவிற்கு நொடிந்துப்போனது. பொதிக்குள் இருந்த நால்வரின் உடலையும் அவ்வப்போது எடுத்துப்பார்த்துக்கொண்டேன். ஒரு இரவின் நடுநிசிக்குள் நான் வந்தபோதுதான் பொதிக்குள் இருந்து பெரும் அசரீரி கேட்டது.

பிறகு கடல் இரண்டாக பிளந்தது. இப்போது படகு செங்குத்தாக ஆழ்கடலை நோக்கி போக ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கான டால்பீன்கள் எனது படகை சூழ்ந்து பின் தொடர்ந்தன. கூம்பு முதுகுடைய திமிங்கலங்கள் கடலே வெடிக்கும் அளவிற்கு ஒலி எழுப்பின. கடல் பிளவுக்கு மத்தியில் மிகப்பெரு ஒளிப்பேழை சுடர் விட்டுக்கொண்டிருந்தது. என் படகு ஆழ்கடலின் பாதாள தீவை நோக்கி போய்க்கொண்டிருந்தது. அங்கு ஆயிரக்கணக்கான உடல்கள் நிலத்திலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. அவர்களைச் சுற்றி என்னைப்போல் எத்தனையோ உடல் பொறுப்புதாரிகள். நான் இப்போது என் பொறுப்பில் உள்ள நான்கு உடல்களை இறக்கிவைத்தேன். தூரத்தில் ஒரு முதியவர் சுருட்டு புகைத்தவாறே தன் பொறுப்பில் இருந்த ஒரு கட்டு உடல்களை இறக்கிவைத்துக்கொண்டிருந்தார்