
இவ்வாண்டு (2024) சிங்கப்பூர்த் தமிழ்ச்சிறுகதை நூற்றாண்டா?
முதல் தமிழ்ச் சிறுகதையை சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த சிங்கை நேசன் (1887-90) வார இதழில் அதன் உரிமையாளரும் ஆசிரியருமான சி.கு.மகுதூம் சாயபு ‘வினோத சம்பாஷனை’ என்ற தலைப்பில் தொடர் உரையாடலாக எழுதிவிட்டார் என்று உலகுக்கு அறிவித்தவர் ஆய்வாளர் நா.கோவிந்தசாமி (1946-99). அக்கண்டுபிடிப்பை 1989 மொரிஷியஸ் உலகத் தமிழ் மாநாட்டில் முன்வைத்துத் தமிழ் இலக்கிய உலகில் நா.கோ. ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார்.
மேலை இலக்கிய வடிவமான சிறுகதையை அதன் பண்புகளுடன் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் முதலில் எழுதியது பாரதியாரா, அ.மாதவையாவா, வ.வே.சு.ஐயரா, செல்வக்கேசவராய முதலியாரா என்ற ஆராய்ச்சி தீவிரமாக இருந்த காலம் அது. அச்சூழலில், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே முதல் தமிழ்ச் சிறுகதை சிங்கப்பூரில் எழுதப்பட்டுவிட்டது என்று நா.கோ. அதிரடியாக அறிவித்ததும் ஒட்டுமொத்த ஆய்வுலகின் பார்வையும் சிங்கப்பூரின் பக்கம் திரும்பியது.

தமிழ்ப்புனைவு வரலாற்றைச் சிறுகதையாகவும் நாவலாகவும் பிரித்துக்கொண்டு விரிவாக ஆராய்ந்த சிட்டி-சிவபாதசுந்தரம் உள்ளிட்ட ஆய்வாளர்கள் பலர் ‘வினோத சம்பாஷனை’யை வாசித்துப்பார்த்து அதற்கும் சிறுகதை என அழைக்கப்படும் வடிவத்துக்கும் குறிப்பிடும்படியான தொடர்பில்லை என்ற முடிவுக்கு வந்தனர். அம்முடிவை உறுதிசெய்யும் வகையில், ‘எது முதல் தமிழ்ச் சிறுகதை? அது எங்கே இருக்கிறது’ என்று ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரையை ஆய்வாளர் பாலபாஸ்கரன் 2009இல் எழுதி மறுத்தார். மேலும், சிங்கப்பூரில் வெளிவந்த பொதுஜன மித்திரன் (1923-25) பத்திரிகையில் 28 மே 1924 அன்று ‘நமது கதைப்பக்கம்’ என்ற பகுதியில் வெளியான ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ கதையே சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதை என்ற தம் ஆய்வு முடிவை வெளியிட்டு, சிறுகதையின் இலக்கணமாகக் கருதப்படும் எட்டுப் பண்புகள் அக்கதையில் அமைந்து வந்திருக்கும் விதத்தையும் விளக்கியிருந்தார்.
‘பாவத்தின் சம்பளம் மரணம்’ வெளியான பொதுஜன மித்திரனில் அக்கதையை எழுதியவரின் பெயர் இல்லை. அக்கால வழக்கப்படி அப்பத்திரிகையின் ஆசிரியர் டி.எஸ்.நடேச முதலியார் எழுதியிருக்கலாம் என்று பாலபாஸ்கரன் ஊகித்தார். கடந்த 15 ஆண்டுகளாக பாலபாஸ்கரனின் ஆய்வுமுடிவுக்கு மறுப்பு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. ஆகவே அந்த அடிப்படையில் இவ்வாண்டு (2024) சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைக்கு முதல் நூற்றாண்டு நிறைகிறது.
முதல் சிறுகதை 1924இல்தான் வெளியானது என்பது முற்றான முடிவா?

பாலபாஸ்கரனின் ஆய்வு முடிவை ஏற்பது, மகுதூம் சாயபுவுக்கோ நா.கோ.வுக்கோ எந்த மதிப்புக் குறைவையும் உண்டாக்கவில்லை, மாறாகப் பெருமையையே அளிக்கிறது. ஆய்வு முன்னகரும் வழி அது. மறுப்புகளும் புதிய முன்மொழிவுகளும் இல்லாவிடில் ஆய்வு தேக்கம் பெற்றுவிடும்.
முதல் சிறுகதையை சாயபு எழுதவில்லை என்றாலும் தமிழ் இதழியலிலும் பதிப்புத்துறையிலும் அவர் பிரம்மாண்டமான ஓர் ஆளுமை. தீனோதய வேந்திரசாலையை (Denodaya Press) 1873இல் தொடங்கி, 1875இல் சிங்கப்பூரின் முதல் தமிழ் இதழ் என்று அறியப்படும் சிங்கை வர்த்தமானி, பிறகு தங்கை நேசன், அடுத்தது ஞானசூரியன் ஆகிய மூன்று இதழ்களை நடத்திய சாயபுவை சிங்கப்பூர்த் தமிழ் இதழியலின் தந்தை எனத் தயக்கமின்றி விளிக்கலாம். அதைப்போலவே, நா.கோ. ‘வினோத சம்பாஷனை’யை முதல் சிறுகதையாக முன்வைத்ததால்தான் அது ஆய்வுலக கவனத்தை ஈர்த்து ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ வெளிவருவதற்கு வழிவகுத்தது. இரண்டு முடிவுகளுக்கும் இடைப்பட்ட ஆய்வுக்காலம் 20 ஆண்டுகள்!

பாலபாஸ்கரனின் முடிவு ஆக இறுதியானது எனச் சொல்வதற்கில்லை. சிங்கை நேசனும் பொதுஜன மித்திரனும் கிட்டத்தட்ட அனைத்து இதழ்களும் கிடைத்துவிட்டன. நேசனுக்கும் மித்திரனுக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 25 இதழ்கள் வெளிவந்துள்ளன. முழுமையாக இன்று நமக்குக் கிடைக்காத அவற்றை இலக்கிய ஆர்வமும் ஆங்கில அறிவும் உள்ள ஆசிரியர்கள் பலர் அன்று நடத்தியிருக்கின்றனர். முனைவர் கோட்டி திருமுருகானந்தத்தின் சிங்கப்பூர் இதழியல் வரலாறு (2019) நூலிலிருந்தும் பாலபாஸ்கரனின் Tamil Journalism in Singapore and Malaya (1875-1941) Filling Up The Gap என்ற – இன்னும் வெளிவராத – ஆங்கில நூலிலிருந்தும் அவற்றைக் குறித்து அறியமுடிகிறது. சில இதழ்களின் பிரதிகள் பிரிட்டிஷ் நூலகத்தில் மட்டுமே இருக்கின்றன.
எதிர்காலத்தில் அவ்விதழ்கள் ஆராயப்படும்போது 1924க்கு முன் ஒரு தமிழ்ச் சிறுகதை சிங்கப்பூரில் எழுதப்பட்டிருப்பது கண்டடையப்படுவதற்கான சாத்தியங்கள் அனேகம். அப்படிக் கண்டடைவது மகுதூம் சாயபு, நா.கோ., நடேச முதலியார், பாலபாஸ்கரன் ஆகிய அனைவருக்கும் மேலும் பெருமை சேர்ப்பதாகவே அமையும். சிறுகதை 1924இல் வந்திருக்கிறது என்பதற்கு ஓர் ஆதாரத்தைக் காட்டினால் போதும். ஆனால், அதற்குமுன் வேறு கதைகள் வரவில்லை என்று சொல்வதற்கு முந்தைய அனைத்து வெளியீடுகளையும் ஒன்றுவிடாமல் அலசிப் பார்த்திருக்கவேண்டும். ஆகவே அது நடந்துமுடியும்வரை 1924ஆம் ஆண்டு தற்காலிகமானதே, முற்றான முடிவன்று.
வரலாற்று நோக்கில் பருந்துப் பார்வை
சிங்கப்பூர்ச் சிறுகதையின் முதல் நூற்றாண்டை (1924-2024), வரலாற்று நோக்கில் ஒரு பருந்துப் பார்வை பார்க்கும்போது மூன்று பெரும் காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று தோன்றுகிறது; (1) இதழ்களின் காலம், (2) இயக்கங்களின் காலம், (3) இலக்கிய நுண்ணுணர்வின் காலம்.
இதழ்களின் காலம் (1924 முதல் 1950கள் வரை)
பொதுஜன மித்திரன் 1923இல் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டிலேயே ‘நமது கதைப்பக்கம்’ வெளியிட்டது ஓர் அரிய நிகழ்வு. ஒரு சமகால ஒப்பீட்டுக்காகப் பார்த்தால், கோலாலம்பூரிலிருந்து வெளியான தமிழ் நேசன் (1924-2019) தொடங்கப்பட்டுச் சுமார் எட்டாண்டு கழித்து 1932இல்தான் முதல் சிறுகதையை வெளியிட்டது. முதல் கால்நூற்றாண்டில் நாளிதழ், வாரமிருமுறை இதழ், வார இதழ், மாத இதழ், ஆண்டுமலர்கள், சிறப்பிதழ்கள் எனப் பல்வேறு இதழ்களில் ‘சிறுகதை’ என்ற புதிய இலக்கிய வடிவம் சிங்கப்பூர்த் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


சிறுகதை சிங்கப்பூரில் பிறந்த அதே 1924இல் ஒரு வரலாற்றுத் தற்செயலாக கோ.சாரங்கபாணி திருவாரூரிலிருந்து சிங்கப்பூருக்கு 21 வயது இளைஞனாக வந்துசேர்ந்தார். ஈ.வெ.இராமசாமிப் பெரியாரின் குடிஅரசு இதழ் 1925லிருந்து தமிழ்நாட்டில் வெளிவரத் தொடங்கியது. பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்ட கோ.சா., குடிஅரசுக்குச் சிங்கப்பூரில் சந்தாதாரர்களைச் சேர்ப்பதும் வாரந்தோறும் ஒட்டுக்கடைகளுக்கு இதழ்களை விநியோகம் செய்வதும் என உள்ளூர்ப் பத்திரிகை வாசிப்பு, விநியோக அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். பெரியாருடன் கடிதத் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொண்டார். மலாயாப் பெரியார் என்றழைக்கப்பட்ட அ.சி.சுப்பையாவுடனும் கோ.சா.வுக்கு நெருக்கம் உண்டானது.
சிங்கை அகம்படியார் மகாஜன சங்கத்தின் தலைவரான சுப்பையா, சீர்திருத்தம் வார இதழை 1929லிருந்து நடத்திவந்ததாகத் தெரிகிறது என்கிறார் பாலபாஸ்கரன். அவருக்கும் சொல்லக்கேள்விதான், இதுவரை எந்த இதழும் கிடைக்கவில்லை. அப்போதே கோ.சா.வுக்கு இதழியல் ஈடுபாடு வந்துவிட்டது. பிறகு தமிழர் சீர்திருத்தச் சங்க வெளியீடாக வந்த சீர்திருத்தத்திலும் 1935இல் தமிழ் முரசிலும் கோ.சா. ஆசிரியரானார். சிறுகதையைக் கோ.சா. தத்தெடுத்து வளர்த்தார் என்றே சொல்லவேண்டும். தமிழ் முரசு அன்றிலிருந்து இன்றுவரை சிங்கப்பூர்ச் சிறுகதைகளின் விளைநிலமாகத் திகழ்ந்துவருகிறது. சிங்கப்பூர்ச் சிறுகதையின் ஒரு நூற்றாண்டு வரலாற்றில் சுமார் 90 ஆண்டுகளுக்குத் தமிழ் முரசு பங்களித்துள்ளது.
வே.சின்னையா என்ற இலங்கைத் தமிழர், நவரச கதாமஞ்சரி இனிய கற்பிதக் கதைகள் என்ற நூலை 1930இல் வெளியிட்டார். சிங்கப்பூரின் முதல் சிறுகதைத் தொகுப்பாக இது கருதப்படுகிறது. கதாமஞ்சரிக்கு கோ.சா. மதிப்புரை எழுதியிருக்கிறார். நவநீதம் (எம்.எம்.புகாரி), மலாய்மணி (வி.ஜே.சந்திரராஜ்) போன்ற 1930களில் வெளிவந்த சில மாத, வார இதழ்களிலும் சிறுகதைகள் வெளிவந்துள்ளன, ஆயினும் அவை அற்ப ஆயுளுடன் மடிந்துபோயின. தமிழ் முரசு வாரந்தோறும் வெளியிட்ட கதைகள் மட்டுமின்றி 1940களிலும் 50களிலும் வெளியிட்ட ஆண்டுமலர்கள், மெர்தேகா மலரிலும் (மலாயா சுதந்திரச் சிறப்பிதழ்) சிறுகதைகள் கணிசமாக இடம்பெற்றன.

சிங்கப்பூர்ச் சிறுகதைக்கு வரலாற்றில் வாய்த்த ஒரு நல்வாய்ப்பு இரண்டாம் உலகப்போர்க் காலத்திலும் இடைநில்லாமல் தொடரமுடிந்ததுதான். ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்திலும் (1942-45) சுதந்திர இந்தியா (கே.எஸ்.அனந்த நாராயணன்), யுவ பாரதம் (சி.வீ.குப்புசாமி) போன்ற தமிழ் இதழ்கள் தொடங்கப்பட்டு அவற்றில் சிறுகதைகள் வெளிவந்தன. ஆங்கிலேயரை எதிர்த்து ஜப்பானியரை ஆதரிக்கும் நெருக்கடிகள் இருந்ததால் சிறுகதை என்ற இலக்கிய வடிவம் அதற்குக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. கருவியின் பயன்பாடு எப்படியானாலும் கருவி தொலைந்துபோகாமலும் துருப்பிடித்துவிடாமலும் காப்பாற்றப்பட்டது.
இவ்வரிசையில் மலாயா நண்பன் (1941-52) நாளிதழை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். போருக்குமுன் தொடங்கி, போரின்போது தடைபட்டு, போருக்குப்பின் மீண்டும் வெளிவந்த இதழ். சுவாமி அற்புதானந்தா, ஆர்.பி.எம்.கனி, அப்துல் கரீம் கனி எனப்பல ஆசிரியர்கள் மாறினர். மரியா ஹெர்த்தோக் கலவரத்திற்குக் (Maria Hertogh riots, 1950) காரணமானவர்களுள் ஒருவராகக் குற்றஞ்சாட்டப்பட்டு அப்துல் கரீம் கனி சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டார். மலாயா நண்பனில் சிறுகதைகள் வெளிவர மெ.சிதம்பரம், அ.முருகையன் ஆகியோர் உதவியுள்ளதாகத் தெரிகிறது.

சிங்கப்பூரில் 1950களிலும் 60களிலும் வெளிவரத் தொடங்கிய சுடரொளி, தென்னவன், கலையரசி, இந்தியன் மூவி நியூஸ், மனோகரன், திரையொளி, கலைமலர் போன்ற பல்வேறு இதழ்கள் சிறுகதைகளை வெளியிட்டன. அடிப்படையில் திரைப்படத் தகவல்களை வெளியிடும் பல வணிக இதழ்களுக்கும் ‘இலக்கிய இதழ்’ என்ற அடையாளத்தைச் சிறுகதை அளித்தது. அதேவேளையில் பொதுவாசகர் பலருக்கும் சிறுகதை என்ற பெயரும் வடிவமும் அறிமுகமானது.
சிறுகதை என்ற புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துவது, பரப்புரைக்குப் பயன்படுத்துவது, இதழுக்கு இலக்கிய அந்தஸ்து சேர்ப்பது என வெவ்வேறு நோக்கங்களுடன் இதழ்கள் சிறுகதையைக் கையிலெடுத்தன. விளைவாக, இலக்கியம் என்றவுடன் நினைவுகூரப்படும் வடிவங்களில் புதிய வடிவமான சிறுகதையும் இணைந்தது. அம்மாற்றத்தை நிகழ்த்தியது முதன்மையாக அன்றைய இதழ்களே. ஆகவே, சிறுகதை வரலாற்றைப் பொறுத்தவரை 1924 முதல் 1950கள் வரையிலான காலத்தை ‘இதழ்களின் காலம்’ எனலாம்.
இயக்கங்களின் காலம் (1950கள் முதல் 2000 வரை)

தமிழ் முரசில் 1951-52இல் ‘புதுமைப்பித்தன் மேதையா?’ என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் மாதக்கணக்கில் நடந்த விவாதத்தை இயக்கங்களின் காலத்துக்கு ஒரு தொடக்கப்புள்ளியாகக் குறிப்பிடலாம். புதுமைப்பித்தன் சிறுகதை மட்டுமே எழுதியவர் என்பதால், அவ்விவாதத்தில் சிறுகதையைக் குறித்த சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றன. அதைத்தொடர்ந்து தமிழ் முரசில் 1950களில் ரசனை வகுப்பு, எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்றம் என்று சிறுகதைக்கு இடங்கள் உருவாகிக்கொண்டே இருந்தன.
கோ.சா.தான் அனைத்துக்கும் ஆணிவேர். வை.திருநாவுக்கரசு (வி.டி.அரசு) அப்போது முரசில் துணை ஆசிரியராகச் சேர்ந்திருந்தார். கந்தசாமி வாத்தியார் என்ற புனைபெயர்கொண்ட சுப.நாராயணனின் ரசனை வகுப்பு நெடுநாள் நீடிக்கவில்லை. ரசனை வகுப்பில் ‘தும்பி’யாக இருந்த அரசு தொடர்ந்து கோ.சா.வின் இலக்கியத் தளபதியாகச் செயல்பட்டார். சமயங்களைக் கடந்து அனைத்துத் தமிழருக்கும் ஒரு பொதுநாளாக தமிழர் திருநாளைக் கோ.சா. அறிமுகப்படுத்தியிருந்தார். ஆண்டுதோறும் திருநாளின்போது சிறுகதைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. படைப்புகள் முரசில் வெளியாயின. பல இதழ்களின் ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து சிறுகதைப் போட்டிகளை நடத்தினர். இவ்வாறாகப் பல உதிரிப்புள்ளிகள் இயக்கமாக ஒன்றிணைந்தன.
இதழ்களுடன் வானொலியும் இணைந்தது. ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில் தொடங்கி, சிங்கப்பூருக்குள் தொலைக்காட்சி நுழைந்த 1960களின் முற்பகுதிவரை சுமார் இருபதாண்டுகள் வானொலியின் இந்தியப் பகுதியில் சிறுகதை ஒலிபரப்பு ஓர் அம்சமாக இருந்தது. வாரந்தோறும் சுமார் 15 நிமிடங்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் வானொலியில் வாசிக்கப்படும் சிறுகதைகள் பல்லாயிரம்பேரைச் சென்றடைந்தன. சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் என்ற தம் நூலில் இராம கண்ணபிரான் சிறுகதை வரலாற்றின் ஒருபகுதியாக வானொலிச் சிறுகதைகள் குறித்துப் பல அரிய தகவல்களைத் திரட்டி அளித்துள்ளார்.
அடுத்தது, அகில மலாய எழுத்தாளர் மாநாடு. முதல் மாநாடு 1962இல் சிங்கப்பூரில் நடந்தது. மலாய இலக்கியத்தை ஓர் இயக்கமாக எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்று பல்வேறு அமர்வுகளாக விவாதங்கள் நடந்தன. கோ.சா.வும் வி.டி.அரசும் ஆளுக்கோர் அமர்வுக்குத் தலைமை வகித்தனர். ‘மலாயாவில் தமிழ்ச் சிறுகதை’ என்ற தலைப்பில் அ.முருகையன் கட்டுரை எழுதினார். தமிழ் முரசு ஓராண்டுக்கு (1963-64) வெளிவராதபோது தொடங்கப்பட்டத் தமிழ்மலர் (1964-80, தி.செல்வகணபதி) சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களித்ததோடு முரசுக்குப் போட்டியாகவும் விளங்கியது.
எழுத்தாளர் அகிலனின் 1975 சிங்கப்பூர் வருகை, 1976-80 காலகட்டத்தில் சிங்கப்பூர் இலக்கியக் களம் (நா.கோ.) அமைப்பின் செயல்பாடுகள், 1976இல் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் (வி.இக்குவனம், மெ.சிதம்பரம், பக்ருதீன் சாகிப், இராம.பெரியகருப்பன், ந.பழநிவேலு, த.பாவாடைசாமி, ஏ.பி.இராமன், இரா.துரைமாணிக்கம் உள்ளிட்டோர்) அமைந்தது, பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையிலும் தமிழர் பேரவை இளையர் மன்றத்திலும் (1977-87, முனைவர் அ.வீரமணி) நடத்தப்பட்ட இலக்கிய ஆய்வரங்குகள் ஆகியவற்றை ஒரு பெரிய சிறுகதை இயக்கத்தின் பகுதிகளாகப் பார்க்கலாம். சிறுகதை குறித்த விழிப்புணர்ச்சியை அவை உண்டாக்கின.

பிறகு 1980களின் இறுதியிலிருந்து தொடங்கி இலக்கிய வளர்ச்சிக்கு அரசாங்க ஆதரவு அதிகம் கிட்டியது. தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம், தேசியக் கலை மன்றம், தேசிய நூலக வாரியம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள், பரிசுகள், விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் உள்ளிட்ட சிறுகதை ஆளுமைகள் பலர் சிங்கப்பூருக்கு அரசாங்க அமைப்புகளால் அழைக்கப்பட்டனர். சுதந்திர வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு 1990இல் இந்தியர் பண்பாட்டு மாதம் கொண்டாடப்பட்டது. அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சி ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றனர். அதன் நூல்வெளியீட்டுக் குழு, முனைவர் அ.வீரமணி தலைமையில் 25 நூல்களை வெளியிட்டது. அவற்றுள் பல சிறுகதைத் தொகுப்புகளும் அடங்கும்.
கலாசார அமைச்சின் நான்கு மொழி கலை, இலக்கிய இதழான சிங்கா (Singa, 1980-90), மூன்று தொகுதிகளாக The Fiction of Singapore (1990, எட்வின் தம்பு, நா.கோ., இளங்கோவன்) என்ற தலைப்பில் வெளியான நூல் ஆகியவை தமிழ்ச் சிறுகதைகள் குறித்த அறிமுகத்தை தேசிய அளவில் அளித்தன. பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி – இலக்கியக் கருத்தரங்கு (1988-97, வி.ஆர்.பி.மாணிக்கம்) நடக்கத் தொடங்கியது. முதல் கருத்தரங்கில் சிறுகதைகள் குறித்து நா.கோ. விரிவாகப் பேசினார்.
அப்படியாக, மொழி, இலக்கியக் கற்றலில் முதலடியை வைத்திருக்கும் மாணவர்கள் முதல் ஏற்கெனவே சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர்கள் வரை, பொதுமக்கள் அனைவருக்கும் சிறுகதையைக் கொண்டுசெல்லப் பல்வேறு முயற்சிகள் நடந்தன. சிறுகதை என்பது மெத்தப்படித்தப் பத்திருபதுபேர் உற்பத்திசெய்யும் ஓர் இலக்கிய வடிவம் என்ற நிலை மாறி கற்கும் ஆர்வமும் மொழித்திறனும் உள்ள எவரும் சிறுகதை எழுதலாம் என்ற எண்ணத்தைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தியதே இயக்கங்களின் காலம். அந்தவகையில் 1950 முதல் 2000 வரையிலான அரைநூற்றாண்டை இயக்கங்களின் காலம் எனலாம்.
சிறுகதைக்கான தளமாக இதழ்களின் பங்களிப்பு தொடர்ந்தது என்றாலும், சிறுகதையை நோக்கித் தமிழ்ச் சமூகத்தை ஈர்க்கும் பல்வேறு செயல்பாடுகள் குவிந்து கூர்கொண்டது இக்காலகட்டத்தில்தான். தனிமனிதர்கள், இதழ்கள், சமூக அமைப்புகள், பிறகு அரசாங்க அமைப்புகள் என அனைவரும் பங்கேற்றப் பல்வேறு இயக்கங்கள் ஒன்றிணைந்த ஒட்டுமொத்தமான பெரும் வரலாற்று ‘இயக்கம்’ அது. சுதந்திரத்துக்குப்பின் ஒரு தலைமுறைக் காலம் சிங்கப்பூரில் தொய்வுற்றிருந்த இலக்கிய கவனத்தை மீட்டெடுக்கும் விசையுடன் அவ்வியக்கம் செயல்பட்டிருக்கிறது எனலாம்.
இலக்கிய நுண்ணுணர்வின் காலம் (2000ஆம் ஆண்டு வாக்கிலிருந்து)
சுதந்திரச் சிங்கப்பூரின் முதல் 50 சிறுகதைத் தொகுப்புகள் புத்தாயிரம் பிறந்தபோது வெளியாகியிருந்தன. அவற்றில் 50 விழுக்காட்டுத் தொகுப்புகள் இராம கண்ணபிரான், பொன் சுந்தரராசு, நா.கோவிந்தசாமி, மு.தங்கராசன், பெ.சிவசாமி, லெட்சுமி தனகோபால், இரா.துரைமாணிக்கம், சீதாலட்சுமி போன்ற உள்ளூர்த் தமிழாசிரியர்களால் எழுதப்பட்டவை. அப்போக்கு 21ஆம் நூற்றாண்டில் மாறத்தொடங்கியது.
இம்முறை இந்தியாவிலிருந்து குடியேறிய புதிய அலை புலம்பெயர்ந்தோர் சிங்கப்பூர்ச் சிறுகதையை அரவணைத்துக்கொண்டனர். அரசாங்க ஆதரவு மட்டுமின்றி தொழில்நுட்ப, தொலைத்தொடர்பு ஆதரவுகளும் இணைந்ததால் சிறுகதை வளர்ச்சி அடுத்தகட்டத்துக்குச் சென்றது. அவற்றுள் சில புள்ளிகளை இங்கே தொட்டுச் செல்லலலாம்.
‘வாசகர் வட்டம்’ அமைப்பு, 1980களில் தொடங்கப்பட்டது, 2000இல் புத்தெழுச்சி பெற்றது. ஒரு சிறுகதையை அனைவரும் படியெடுத்துப் படித்து மாதாந்திரச் சந்திப்பில் விவாதித்தனர். விவாதங்கள் வாசகர் வட்ட வலைப்பூவில் வலையேறின. அவை புதிய பங்கேற்பாளர்களைக் கொணர்ந்தன. ரெ.பாண்டியன், சுப்ரமணியம் ரமேஷ், எம்.எஸ்.ஶ்ரீலக்ஷ்மி, சித்ரா ரமேஷ் போன்ற பலரின் ஒருங்கிணைப்பில் கடந்த கால்நூற்றாண்டாக வாசகர் வட்ட விவாதங்கள் சிறுகதை வாசிப்புக்கும் நுட்பங்களைப் புரிந்துகொள்ளும் ரசனைக்கும் விமர்சனங்களுக்கும் பிரதான இடத்தை அளித்துவருகின்றன.

‘தங்கமீன்’ அமைப்பின் பதிப்பகம் (2007), மின்னிதழ் (2010), மாதாந்திரச் சந்திப்புகள் ஆகியவை சிறுகதைகளுக்கு முன்னுரிமை அளித்தன. தங்கமீன் அமைப்பாளர் பாலு மணிமாறன் தொகுத்த வேறொரு மனவெளி (2007) நூலில் 20 சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களின் 20 சிறுகதைகள் இடம்பெற்றன. அவர்களுள் 80 விழுக்காட்டினர் புதிய அலை புலம்பெயர்ந்தோர். பெருந்தொற்று வந்து ‘ஸூம்’ சந்திப்புகள் வழக்கமாவதற்கு சுமார் பத்தாண்டுக்கு முன்பே மாதாந்திரச் சந்திப்புகளில் அவ்வப்போது ‘ஸ்கைப்’ சந்திப்புகள் வழியாக வெளிநாட்டு எழுத்தாளர்களுடன் உரையாட தங்கமீன் ஏற்பாடு செய்தது.
வல்லினம் இணைய இதழ் (2009) ம.நவீன் முன்னெடுப்பில் தோன்றி மலேசியாவிலிருந்து இயங்கிவருகிறது. தொடர்ந்து சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அதில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. வல்லினத்தின் உலகளாவிய வீச்சு சிங்கப்பூர்ச் சிறுகதைகள் உலகத் தமிழரிடையே சென்றடைவதையும் விவாதிக்கப்படுவதையும் அதிகரித்திருக்கிறது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஒருங்கிணைப்பில் (தலைவர்: நா.ஆண்டியப்பன்) சிங்கப்பூரில் 2011இல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடந்தது. கழகம் 2013வரை நடத்திவந்த கவிச்சோலை அதன்பின் கதைக்களமாக மாறியது. இராம வயிரவன் அதன் முதல் அமைப்பாளர். நூறு சந்திப்புகளைத்தாண்டி கதைக்களம் நடந்துவருகிறது. கதைக்களத்தில் எழுதத்தொடங்கியோர் பலர் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.
சிங்கப்பூர் சுதந்திரப் பொன்விழா ஆண்டான 2015இல் புத்துயிர்பெற்ற தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ், “அரசியல், சினிமா, சமையல் தவிர்த்து, படைப்பிலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து…” செயல்படவுள்ளதாக அதன் நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா ஆகஸ்ட் 2015 இதழில் எழுதினார். முதன்மை ஆசிரியர், ஷாநவாஸ். இதுவரை நூறு இதழ்களில் சுமார் 100 சிங்கப்பூர்ச் சிறுகதைகளை வெளியிட்டுள்ளது.
அருண் மகிழ்நன் தலைமையிலான தமிழ் மின்மரபுடைமைக்குழு 1965-2015 காலகட்டத்தில் வெளியான 350 சிங்கப்பூர் இலக்கிய நூல்களை மின்னிலக்க வடிவில் வலையேற்றியது. உள்ளூர் இலக்கியம் கடந்துவந்த பாதையை உட்கார்ந்த இடத்திலிருந்தே தெளிவாகப் பார்க்கமுடிகிறது. இணையத்தில் தேசிய நூலக வாரியத்தின் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் இத்தொகுப்பில் 65 சிறுகதைத் தொகுப்புகள் உள்ளன. அவற்றைக்கொண்டு இலக்கிய ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. விவாதங்கள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
தேசிய வாசிப்பு இயக்கத்தை, எழுதப்படிக்கத் தெரிந்த சமூகம் என்ற நிலையிலிருந்து சிங்கப்பூரை இலக்கியம் துய்க்கும் சமூகமாக (from literate community to literary community) மாற்றும் கனவுடன் 2016இல் நூலக வாரியம் தொடங்கியது. இயக்கத்தின் ‘ஒரு கதை’ (ONE STORY) முன்னெடுப்பு, ஒரு தாய்மொழிக் கதையை பிற மூன்று மொழிகளிலும் மொழிபெயர்த்து, வாசித்தபின் விவாதிக்க ஏற்ற கேள்விகளும் கொடுத்தது. சமூக இலக்கிய அமைப்புகளுடன் கைகோத்துப் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டன. மொழித்தடைகளைத் தாண்டி சிறுகதை சென்றது.
தேசியக் கல்விக்கழகமும் தேசியக் கலை மன்றமும் ஏற்பாடு செய்த ‘உடனிருந்து பயிற்றுவித்தல் திட்டம்’ 2016இல் மாணவ ஆசிரியர்களுக்குச் சிறுகதைப் பயிற்சியை வழங்கியது. ஜெயமோகன் இருமாதங்கள் சிங்கப்பூரில் தங்கிப் பயிற்சியளித்தார். திட்டத்தைச் செயல்படுத்தியவர் முனைவர் ஆ.ரா.சிவகுமாரன். பயிற்சியின் முடிவில் சிங்கப்பூர்ச் சிறுகதைக்கொத்து நூல் பத்து சிறுகதைகளுடன் 2017இல் சிவகுமாரன் தொகுப்பில் கல்விக்கழக வெளியீடாக வந்தது. ஜெயமோகன் 2016-17 காலகட்டத்தில் சிங்கப்பூர்ச் சிறுகதைகளை விமர்சித்து அவர் இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரைகள் விவாதங்களைக் கிளப்பின.

அரூ மின்னிதழ் 2018இல் பிறந்தது. ஆசிரியர்கள்: ராம்சந்தர், சுஜா, நா.பாலா. கனவுருப்புனைவு (speculative fiction) என்னும் வகைமைக்கும் சோதனை முயற்சிகளுக்கும் முன்னுரிமை அளித்துப் படைப்புகள் வெளியாயின. அறிவியல் சிறுகதைப் போட்டிகளை 2019 முதல் நடத்தி இதுவரை நான்கு தொகுப்புகளை அரூ வெளியிட்டுள்ளது. தமிழில் அறிவியல் புனைவு வாசிக்க விழைவோருக்கு கணிசமான வளத்தை உருவாக்கியுள்ளது.
‘ஆசியப் படைப்பிலக்கிய எழுத்துத் திட்டம்’ 2021லிருந்து தேசியக் கலை மன்றமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் ஹ்யூமனிட்டியும் இணைந்து ஒருங்கிணைக்கப்படுகிறது. அத்திட்டத்தில், சுனில் கிருஷ்ணன் 2023இல் சிங்கப்பூரில் இருமாதங்கள் தங்கி அறிவியல் புனைகதை, சிறுகதை விமர்சனம், குறுங்கதை (microfiction) ஆகியவற்றில் பட்டறைகளையும் நேருக்கு நேர் (writer to writer) எனப்படும் விற்பன்னர் வகுப்புகளையும் நடத்தினார்.
இந்தப்புள்ளியில் சிங்கப்பூர்ச் சிறுகதை நிற்கிறது, இவ்வாண்டில் நூற்றாண்டு காண்கிறது.
அடுத்தகட்டப் பயணம்…
ஒரு புதிய வஸ்துவாகச் சிங்கப்பூருக்கு 1924இல் அறிமுகமான தமிழ்ச் சிறுகதை, முதல் கால்நூற்றாண்டில் இதழ்களின் வழியாக மக்களுக்குப் பழகவும் புரியவும் தொடங்கியது. அடுத்த அரைநூற்றாண்டில் பல்வேறு இயக்கங்களின் வாயிலாக அது அனைவரும் கையாளக்கூடிய இலக்கிய வடிவமாக வளர்ந்தது. புத்தாயிரம் பிறந்ததிலிருந்து இலக்கிய நுண்ணுணர்வையும் உலக இலக்கியப் போக்குகளையும் உள்வாங்கி உருமாற்றம் பெற்றுவருகிறது. பெரும்பாலும் புதிய அலை புலம்பெயர் எழுத்தாளர்களால் எழுதப்பட்டுவருகிறது.
‘மு.வ. காலத்துடன் தேங்கிவிட்டது’, ‘சொல்லுந்தரத்திலில்லை’ போன்ற விமர்சனங்களுடன் தமிழ்நாட்டுச் சிறுகதை விமர்சகர்களால் ஒதுக்கப்பட்ட சிங்கப்பூர்ச் சிறுகதைகள் புத்தாயிரத்தில் பெருவளர்ச்சிகண்டு, குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் தமிழிலக்கியத்தின் தவிர்க்கப்படவியலாத ஓர் அங்கமாக ஆகியிருக்கிறது. சிங்கப்பூர்ச் சிறுகதை தன் அடுத்தகட்டப் பயணத்துக்கு இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தலாம்; தமிழாசிரியர் சிறுகதைப் பயிற்சி மற்றும் சிறுகதைச் செம்மையாக்கம். முன்னது, சிறுகதை எழுத்தாளர் எண்ணிக்கைத் தொடர்ச்சிக்கு. பின்னது, எழுத்துத்தர மேம்பாட்டுக்கு.
மலேசியச் சிறுகதை எழுத்தாளர்களுள் பத்தில் ஒன்பதுபேர் அன்றும் இன்றும் தமிழாசிரியரே. தமிழர் சிறுபான்மையினராக வாழும் நிலப்பரப்புகளில் அதுவே நீடித்து நிலைக்கும் வழி. தாய்மொழிப் புழக்கம் தொடர்ந்து வீழும் சிங்கப்பூர்ச் சூழலிலும், நிறுவன ரீதியில் சிறுகதைத் தொடர்ச்சியைத் தக்கவைக்க தமிழாசிரியரை உள்ளிழுக்க வேண்டும். சிங்கப்பூரில் 2000ஆம் ஆண்டுக்குமுன் இருந்ததைப்போலவே உள்ளூர்த் தமிழாசிரியர்கள் சிறுகதையை மீண்டும் கையிலெடுக்க வழிசெய்ய வேண்டும். சிங்கப்பூர்ச் சிறுகதைக்கொத்து தொகுப்பு அது சாத்தியம் என்பதைக் காட்டியுள்ளது. தொடர்ந்து பத்தாண்டுகள் அத்தகைய பயிற்சிகளில் 100 மாணவ ஆசிரியர்கள் பங்குபெற்றால் அதிலிருந்து ஓர் எழுத்தாளர் உருவாகி, தொடர்ந்து எழுத வாய்ப்புண்டு.
அடுத்தது சிறுகதைச் செம்மையாக்கம். இவ்விஷயத்தை நிறுவனப்படுத்துவது எளிதன்று. ஆயினும் ஒரே சூழலில் வசிக்கும் எழுத்தாளரிடையே நட்புறவுள்ள உரையாடல்களாலும் கருத்துப் பரிமாற்றங்களாலும் ஒரு சிறுகதை பொதுவெளிக்கு வருவதற்கு முன்பே வாசிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வழியுண்டு. கடந்த ஐந்தாண்டுகளில் சிங்கப்பூர்ச் சிறுகதை எழுத்தாளர்கள் பலரிடம் அப்போக்கு காணப்படுகிறது. பிரதி செம்மையாக்குநர் எனத்தனியாக ஒருவர் உருவாகவும் அவரிடம் படைப்பை நம்பிக்கொடுக்கவும் நிலைமை மாற மேலும் அரைநூற்றாண்டு ஆகலாம்.
தமிழகப் பதிப்பகங்கள் பிரதி செம்மையாக்குநர்களை விரைவில் உருவாக்கக்கூடும். தற்போது சிங்கப்பூர்ச் சிறுகதைத் தொகுப்புகளில் பெரும்பான்மையானவை தமிழகப் பதிப்பகங்களால் வெளியிடப்படுகின்றன. அவ்வகையில் செம்மையாக்கக் கனவு நனவாகலாம். அரூ நேர்காணல் ஒன்றில், செம்மையாக்கம் குறித்து, “குழந்தை பெற்றோருடையதுதான், ஆனால் மகப்பேறு பார்ப்பவர் குழந்தையை நலமாகப் பிறக்கச்செய்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறார்” என்றார் ஜேசன் எரிக் லுண்ட்பர்க். மனநிலை மாற்றமும் நம்பிக்கையும் அவசியம். அவை வரும்போது வரட்டும்.
முதல்படியாக, ஒரு பத்தாண்டுத் திட்டமிட்டு, புதிய தமிழாசிரியர்களைக் குறிவைத்து உடனிருந்து பயிற்றுவிக்கும் சிறுகதைப் பயிற்சியை ஆண்டுதோறும் அளித்துப் பார்க்கலாம். ஒருவேளை சிங்கப்பூர்ச் சிறுகதை 2049இல் 125ஆம் ஆண்டு நிறைவுகாணும்போது அதன் விளைச்சல் அறுவடைக்கு வரக்கூடும்.
குறிப்பு: தமிழ் நேசனுக்கும் அதன் கதை வகுப்பு, கு.அழகிரிசாமி சிறுகதைப் பயிற்சி, பவுன் பரிசு போன்ற பல்வேறு முன்னெடுப்புகளுக்கும் ஒரு காலகட்டத்தின் சிங்கப்பூர்ச் சிறுகதை வளர்ச்சியில் கணிசமான பங்குண்டு. விரிவஞ்சி இக்கட்டுரையில் அவை சேர்க்கப்படவில்லை. உசாத்துணைப் பட்டியலிலுள்ள பல நூல்கள் அவற்றை விவரித்துள்ளன, ஆர்வமுள்ளோர் வாசித்துப்பார்க்கலாம்.
உசாத்துணை
- Tamil Journalism in Singapore and Malaya (1875-1941) Filling Up the Gap, Bala Baskaran. Unpublished manuscript.
- நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி, தொகுப்பாளர்கள்: புஷ்பலதா நாயுடு, சுந்தரி பாலசுப்ரமணியம், சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரிய வெளியீடு, 2011
- சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும், சிவானந்தம் நீலகண்டன், காலச்சுவடு, 2019
- மலேசியத் தமிழ்ச் சிறுகதை, ந. பாஸ்கரன், அரசி பதிப்பகம், 1995
- கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை, பால பாஸ்கரன், சொந்த வெளியீடு, 2016
- சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், இராம கண்ணபிரான், கிரிம்சன் ஏத் வெளியீடு, 2021
- சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும், ஏ.ஆர்ஏ.சிவகுமாரன், சீதாலட்சுமி, சுப.திண்ணப்பன், 2001
- சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஓர் அறிமுகம் – ப.ஆ: சுப.திண்ணப்பன், நா.ஆண்டியப்பன், சுப.அருணாசலம், 2011
- சிங்கப்பூர் இதழியல் வரலாறு, கோட்டி திருமுருகானந்தம், Pass Foundation, 2019
- புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை 1951-52, எம்.எஸ்.ஶ்ரீலக்ஷ்மி, தருமு பப்ளிகேஷன்ஸ், 2006
- 50 Years of Indian Community in Singapore, A Veeramani, Editors Gopinath Pillai and K. Kesavapany, World Scientific Publication, 2016
- http://balabaskaran24.blogspot.com/2008/05/blog-post_21.html
- https://vallinam.com.my/version2/?p=4999
- https://vallinam.com.my/version2/?p=7689

