ஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்

மூலம்: டாமி கோ, ஜூலை 2016, IPS Newsletter
இழப்பறு வளர்ச்சி – Sustainable Development (நன்றி : மகுடேசுவரன்)


ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதன் (1945) எழுபதாம் ஆண்டு நிறைவுவிழா சந்திப்பு 2015ல் நியூயார்க்கில் நடந்தது. உலகத்தலைவர்கள் சந்தித்தனர். அதன்பிறகு ஐ.நா.வின் பொதுக்குழு இவ்வுலகை உய்விக்கும் ஒரு திட்டத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. அத்திட்டத்தின் பெயர் “இழப்பறு வளர்ச்சிக்கான திட்டம் 2030”. அத்திட்டத்தில் 2030ம் ஆண்டுக்குள் அடையவேண்டிய 17 குறிக்கோள்களும் 169 இலக்குகளும் உள்ளன. அவற்றில் ஆறாம் குறிக்கோள் 2030 க்குள் உலக மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான அதேநேரம் எளிதில் கிடைக்கக்கூடிய மலிவான குடிநீரை வழங்குதல். ஆசியாவால் இதை அடையவியலுமா?

இக்கட்டுரையில் ஆசியாவின் நீர்த்தேவை எதிர்கொள்ளும் சவால்கள், மேற்கண்ட இலக்கையடைய செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் ஆகியவற்றையும் அது தொடர்பான சிங்கப்பூரின் அனுபவங்களையும் பகிரவிருக்கிறேன்.

ஆசியாவின் நீர்மேலாண்மைச் சவால்கள்

முதல் சவால் நகரமயமாக்கத்திற்கும் அந்நகர மக்களின் நீர்த்தேவைகளுக்கும் இடையே வளர்ந்துவரும் இடைவெளி. 2050ம் ஆண்டில் அறுபது விழுக்காடு ஆசியர்கள் நகரவாசிகளாக இருப்பார்கள். தற்போது சுமார் 27 கோடி ஆசியர்கள் பாதுகாப்பான குடிநீரின்றி தவிக்கிறார்கள். இவ்வெண்ணிக்கையை 2030 க்குள் பூஜ்யமாகக் குறைப்பது எளிதான காரியமல்ல. அதுவும் நகரமயமாக்கம் நாலுகால் பாய்ச்சலிலும் அவற்றின் கட்டமைப்புத் தேவைகள் மெல்ல ஊர்ந்தும் செல்லும் ஆசியச்சூழலில்.

ஆசியாவின் மற்றொரு தீவிரமான பிரச்சனை சுமார் 80% கழிவுநீரைப் போதிய சுத்திகரிப்பின்றி ஆற்றிலும் கடலிலும் கலந்து விடுதல். வியட்நாமில் வெறும் 4% கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. இந்தியாவில் 9%, பிலிப்பைன்சில் 10%, இந்தோனேசியாவில் 14% என்பதே நிலைமை. இதன் விளைவு இக்கழிவுநீர் மொத்த நீராதாரத்தையும் பாழடித்துவிடுகிறது. ஐநாவின் இலக்கு 2030 க்குள் இந்த சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் அளவை பாதியாகக் குறைப்பது.

இரண்டாம் சவால், நிலத்தடி நீரை ஆசியா உறிஞ்சும் அசுர வேகம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் கணக்குப்படி உலகத்தின் 15 பெரிய நிலத்தடி நீர் உறிஞ்சும் அமைப்புகளில் 7 ஆசியாவில் உள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆசியாவின் நிலத்தடிநீரில் 86 சதவீதத்தை உறிஞ்சுகின்றன. இந்நிலை நீடித்தால் நிலத்தடிநீர் இல்லாமற்போகும். அது உணவு உற்பத்திக்கும் மக்களின் தேவைகளுக்கும் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும்.

மூன்றாம் சவால், ஆசியாவின் வெள்ள நிலைமை. 2014 மற்றும் 2015 ம் ஆண்டுகளில் இந்தோனேசியா, மலேசியா, தென்தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் வடகிழக்குப் பருவக்காற்றால் விளைந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்தனர். வெள்ளம் குடிநீர் ஆதாரங்களையும் அசுத்தப்படுத்தியது. பிறகு அசுத்தமான குடிநீர் வியாதிகளைப் பரப்பியது. சுமார் 3.5 லட்சம் சிறார்கள் ஆண்டுதோறும் கழிச்சல் வியாதியால் உயிரிழ்க்கிறார்கள். இவ்வியாதி தூய்மைக்குறைவு, சுகாதாரமின்மை, நல்ல குடிநீர் இல்லாமை ஆகியவற்றால்தான் வருகிறது.

அடுத்த சவால் புவி வெப்பமாதல், காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்படுவது. வெப்பம்-நீராவி-மழை என்ற சுழற்சியில் உண்டாகும் பாதிப்பு ஆற்றுநீரோட்டத்தின் அளவை பாதிக்கிறது. இக்காலநிலை மாற்றங்கள் அடிக்கடி வெள்ளத்தையும் பஞ்சத்தையும் தருவிக்கின்றன. மேலும் ஆசிய நாடுகள் கடல்மட்டத்திலிருந்து குறைந்த உயரத்திலேயே அமைந்துள்ளதால் கடல்மட்ட உயர்வு மோசமான பாதிப்புகளைக்கொடுக்கும். காலநிலை மாற்றங்கள் ஆசியாவின் தண்ணீர்ப் பிரச்சனையை மேலும் மோசமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆசியா செய்யவேண்டியது என்ன?

முதன்மையான தேவை என்னவென்றால், ஆச்சரியகரமாக, அது பணமோ தொழில்நுட்பமோ சம்மந்தப்பட்டது அல்ல. பணத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் நிலவாத தட்டுப்பாடு நல்ல நீர்மேலாண்மையைக் கொடுக்க தலைவர்களின் அரசியல் ஈடுபாட்டுக்கு நிலவுகிறது. 2030க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்க ஆசியத்தலைவர்கள் உறுதிபூண்டுவிட்டால், அதற்குவேண்டிய தகுதியான, நேர்மையான நபர்களை நியமித்து வேலையை முடுக்கிவிட்டால் பிரச்சனை தீர்க்கப்படக் கூடியதுதான். ஆனால் தற்போதைய நிலைமை ஊழலாலும், திறமையின்மையாலும், ஆர்வமின்மையாலும் முடங்கிப்போயுள்ளது. கம்போடியாவின் பினோம் பென்ஹ் தன் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கமுடியுமென்றால் மற்ற ஆசிய நாடுகளால் முடியாதா?

இரண்டாவது தேவை, ஆசியாவின் அரசுகள் ஓர் அமைச்சரையோ அல்லது அதிகாரியையோ நீர்மேலண்மைக்காக நியமிப்பது. சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மைக்காக ஓர் அமைச்சரை நியமித்துள்ளது. ஒருக்கால் இது சாத்தியப்படாவிட்டால் ஒருங்கிணைந்த முகைமையொன்றை அமைக்கலாம். குடிமக்களுக்கு பாதுகாப்பான, மலிவான குடிநீரை வழங்குவதை ஆசிய நாடுகள் தேசிய முன்னுரிமையாக்க வேண்டும். அதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதில் தொடர்ந்த செயல்பாடுகள் மேம்பட்டவகையில் அமையவேண்டும். ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடமிருந்து மற்ற ஆசிய நாடுகள் கற்க வேண்டியது நல்ல நீர்மேலாண்மைக் கொள்கை பொருளாதார வளர்ச்சியையும் பெருக்கும் என்பதைத்தான்.

மூன்றாவது தேவை, நீர்த்தேவை மற்றும் பயன்பாடு குறித்த மக்களின் போக்கை சரியான திசையில் கொண்டுசெல்வது. நீருக்கு என்ன விலை கொடுக்கலாம் என்ற கேள்வி அதில் முக்கியமானது. ஐநா உலக மக்கள் அனைவருக்கும் தூய்மையான நீர் கிடைக்கச்செய்வது மனித உரிமைகளில் ஒன்றாக ஆக்கிவிட்டபோதிலும் அது இலவசமாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீர் அரிய வளங்களில் ஒன்று என்பதால் அதை இலவசமாக அளித்தால் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதும் வீணடிப்பதும் நடக்கும். ஆகவே நீருக்கு ஒரு விலை வைக்கத்தான் வேண்டும். அவ்விலை வரிசெலுத்துவோரால் குறைக்கப்படக்கூடாது. அதேநேரம் நலிவடைந்த பொருளாதார நிலையிலுள்ள குடும்பங்களுக்கு நீர்த்தேவைகளுக்கான உதவிகளைச் செய்யலாம்.

நான்காவது தேவை, நீரைத் திறனுள்ள வகையில் பயன்படுத்துவது. வீடு, தொழில், விவசாயம் ஆகியவற்றில் நீர்ச்சிக்கனத்தை கடைப்பிடிப்பது அவசியம். உலகின் முதன்மையான நீர்த்தேவை விவசாயம் செய்வதற்கே. ஆனால் விவசாயத்தில் நடப்பிலிருக்கும் நீர்ப்பாசன முறைகளோ நூறாண்டுகள் பழமையானவை. சொட்டுநீர்ப்பாசனம் மிகுந்த திறனுள்ளது; சிக்கனமானது. இவ்விஷயத்தில் பெரும் புரட்சியே தேவைப்படுகிறது. மேலும் பல நகரங்களில் நீர் போக்குவரத்துக் கட்டமைப்புகளை புதிதாக மாற்றுவதன் மூலமும் இதைக்கட்டுபடுத்த முடியும்.
சட்டத்தைக் கடுமையாக செயல்படுத்துவதன் மூலம் நீர்த்திருட்டைத் தவிர்க்கலாம். தொழில் நிறுவனங்களில் கழிவுநீர் மறுசுழற்சியில் அக்கறைகாட்டித் திறனுள்ள வகையில் பயன்படுத்தலாம். எந்திரங்கள் குளிர்வித்தல் தொடர்பான தேவைகளுக்கு முடிந்தவரை கடல்நீரைப் பயன்படுத்தலாம். சிங்கப்பூர், கலிபோர்னியா போன்ற நகரங்களில் உள்ளதுபோல் நீரை மறுசுழற்சி செய்வது ஆகக்கூடியதும், திறனுள்ளதுமான ஒருவழி. இன்னபிற வழிகளும் உண்டு.

ஐந்தாம் தேவை, ஒருங்கிணைந்த நீராதார மேலாண்மையை நடப்புக்குக் கொண்டுவருபது. இதன் பொருள் துண்டுதுண்டாக நீர் வளங்களை மேம்படுத்த முயலாமல் ஒட்டுமொத்தமாகக் கையாள்வதே. சிங்கப்பூரைப் பொறுத்தவரை இதன்பொருள் நீராதாரங்களைப் பாதுகாப்பதும், கழிவுநீரை ஒரு வளமாக ஆக்குவதும், மரபுசாரா நீராதாரங்களை அதிகப்படுத்துவதும் ஆகும். கடல்நீர் சுத்திகரிப்பு, நீர்சுழற்சி, நிலத்தடிநீர் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். சிங்கப்பூர் ஒருங்கிணைந்த நீராதார மேலாண்மையை சிறப்பாகச் செய்துவருகிறது.

ஆறாவதும் கடைசியுமான தேவை – பணம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம். நீர் தொடர்பான முதலீடுகளுக்கு உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீடு வங்கி ஆகியவை உதவிவருகின்றன. தனியார் முதலீடும் தடையின்றி கிடைக்கத்தான் செய்கிறது. புதிய தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும் ஆசிய நாடுகளில் நீரின் விலையைக் குறைக்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு, கடல்நீர் சுத்திகரிப்பு, நீர்சுழற்சி ஆகியவற்றை மலிவாக்கவும் வெகுவாகப் பயன்படக்கூடிய அளவில் வளர்ந்துள்ளன.

சிங்கப்பூர் அனுபவம்

சிங்கப்பூர் ஒரு சிறிய, நகரமயமாக்கப்பட்ட, நீர்ப்பற்றாக்குறை உள்ள ஒரு தேசம். சுமார் ஐம்பது லட்சம் மக்கள்தொகையும் உற்பத்திசார்ந்த பொருளாதாரத்தை கணிசமான அளவிலும் கொண்டது. அந்த அளவில் நீர்ப்பற்றாக்குறை என்பது மிகமுக்கியமான, கவனமீர்க்கும் ஒரு பிரச்சனை. இந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சிங்கப்பூர் வெற்றிகரமாக நீராதாரங்களிலிருந்து வரத்தை அதிகப்படுத்தியது மட்டுமில்லாமல் தன் நீர்த்தேவையை மட்டுப்படுத்தவும் செய்திருக்கிறது.

ஒழுகலால் வீணாகும் நீரின் அளவு சிங்கப்பூரில் 5%. நீர்த்தேவையைப் படிப்படியாகக் குறைத்துள்ள நாடு இது. 2003ல் சராசரியாக ஒருவர் நாளொன்றுக்கு 165லிட்டர் நீர் பயன்படுத்தினார். இது 2015ல் 151லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. 2030ல் 140லிட்டராக்குவதே இலக்கு. தொலைநோக்கில் ஜெர்மனியின் ஹாம்பர்க் போல 110லிட்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற உத்வேகமும் சிங்கப்பூருக்கு உண்டு.

2003ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதுநீர் (Newater) ஒரு சாதனை. தற்போது சிங்கப்பூரின் புதுநீர் தயாரிப்பு நாட்டின் 30% நீர்த்தேவையை சமாளிக்கப்போதுமானது. 2060ம் ஆண்டில் 55% வரை சமாளிக்கும். மழைப்பொழிவையும் கடல்நீர் சுத்திகரிப்பையும் மனதிற்கொண்டு பார்த்தால் சிங்கப்பூரின் நீர் எதிர்காலம் ஆபத்தில்லாத ஒன்றாகவே இருக்கிறது.

முடிவுரை

2030க்குள் உலகத்தில் அனைவருக்கும் பாதுகாப்பான, மலிவான குடிநீரைக் கிடைக்கச்செய்ய உறுதிபூண்டுள்ள ஐநாவின் குறிக்கோளை நான் ஆதரிக்கிறேன். தற்போது சுமார் 27 கோடி ஆசியர்கள் பாதுகாப்பான குடிநீரின்றி தவிக்கிறார்கள். இவ்வெண்ணிக்கையை 2030 க்குள் பூஜ்யமாகக் குறைப்பது எளிதான காரியமல்ல. ஆனால் நல்ல நீர்மேலாண்மையைக் கொடுக்க உறுதிபூண்ட தலைவர்களின் அரசியல் ஈடுபாட்டுடனும் கொள்கைகளுடனும் அது சாதிக்கமுடியும் ஓர் இலக்குதான்.

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்