அனூஜ் ஜெயின் பேட்டி

அனூஜ் ஜெயின்.

சிங்கப்பூர் போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள பட்டாம்பூச்சிகளைப் பாதுகாப்பது தொடர்பான தன் ஐந்து வருட முனைவர் பட்ட ஆய்வை 2016ன் ஆரம்பத்தில் தேசியப் பல்கலைல் கழகத்தில் முடித்திருப்பவர். காடுகள், வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். புதிய துறையான ‘பயோமிமிக்ரி’ என்று சொல்லப்படும் இயற்கையின் ஆதாரமான வடிவமைப்பில் இருந்து கற்றுக்கொண்டு அதை நகரங்களின் வடிவமைப்பில் கொண்டுவருவதிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு சிங்கப்பூரின் தேசிய பட்டாம்பூச்சியைத் தேர்ந்தெடுக்க ஒரு இணைய வாக்களிப்பு நடைபெற்றது. அதில் சுமார் 7500பேர் வாக்களித்து ஒரு பட்டாம்பூச்சியைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த யோசனை உதித்ததும் இவரிடமிருந்துதான்.

சிராங்கூன் டைம்ஸுக்காக அவர் அளித்த நேர்காணல் இங்கே;

உங்கள் பட்டாம்பூச்சி ஆராய்ச்சியைப் பற்றி எளிமையாக எங்களுக்குச் சொல்லுங்களேன்
பட்டாம்பூச்சிகள் தங்கள் உணவுக்காகப் பூக்களை நாடிச்செல்வது அனைவருக்கும் தெரியும். ஆனால் எல்லா பட்டாம்பூச்சிகளும் எல்லா பூக்களிலும் தேன் குடித்துவிட இயலாது. உதாரணமாக ‘மஞ்சள் நாள லேன்சர்’ என்ற இனம் ஒரேயொரு வகைப்பூவில்தான் தன் உணவுத்தேவைகளைத் தீர்த்துக்கொள்கிறது. இவ்வகைப்பூக்கள் கிடைக்காவிட்டால் இந்த இனமே அழிந்துபோகும். சிங்கப்பூரின் செயற்கைத்தோட்டங்களில் பட்டாம்பூச்சிகள் தங்களைப் பொருத்திக்கொள்வது சவாலான விஷயம். இயற்கைக்காடுகளின் வளர்ச்சியும் இதனுடன் தொடர்புடையது என்பது முக்கியமானது. என் ஆராய்ச்சி இவற்றில் மையம்கொண்டதுதான்.

இந்த ஆராய்ச்சியில் எப்படி உங்களுக்கு ஆர்வம் வந்தது?
உயிர்ச்சூழல் பற்றிய ஆராய்ச்சியில் செடிகளைப்பற்றித்தான் முதலில் ஆராய்ச்சிப்படிப்பில் துவங்கினேன். ஆனால் அப்போதிருந்தே கம்பளிப்புழுவாக வாழ்க்கையைத் தொடங்கி திடீரென்று ஒருநாள் பறக்கத்தொடங்கும் பட்டாம்பூச்சி என்னைப் பரவசப்படுத்த ஆரம்பித்திருந்தது. அதன் விளைவாக 2010ல் பொறியியல் துறையில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சிங்கப்பூர் நேச்சர் சொசைட்டியின் ஆர்ச்சர்டின் பட்டாம்பூச்சிப் பாதை வடிவமைப்புத் திட்டத்தில் சேர்ந்தேன். அப்போது மூன்று வருடங்களாக நான் அவர்களுடன் இணைந்து தன்னார்வலராகப் பணிபுரிந்துவந்தேன். மிகவும் களிநயமுள்ளதாகவும் அதேநேரம் சவாலானதாகவும் இருந்த வேலை அது. அங்கிருந்துதான் என் அடுத்தகட்ட பட்டாம்பூச்சி ஆராய்ச்சிக்கான கேள்விகள் பிறந்தன.

பட்டாம்பூச்சியைப் பாடாத கவிஞர்கள் உலகத்தில் இல்லை. நீங்கள் அதை ஒரு ஆராய்ச்சிப்பொருளாக மட்டுமே பார்க்கிறீர்களா? அதன் அழகு உங்களை பாதித்துள்ளதா?
உண்மையில் ஒரு கலவையான உணர்வை நான் பெறுகிறேன். பல சமயங்களில் அதன் ஆராய்ச்சியில் மூழ்கிவிடும்போது அதன் அழகு பற்றிய எண்ணம் வருவதில்லை. ஆனால் சில பட்டாம்பூச்சிகள் தன் வண்ணங்களில் என்னை மெய்மறக்கச்செய்துவிடுகின்றன. ஆனால் ஆராய்ச்சிகூட வெகுவான பரவசத்தை அளிக்கக்கூடியதுதான். உதாரணமான முட்டையிலிருந்து புழுவாகி அந்த கட்டத்தில் இருக்கும்போது அதன் உணவுக்காகப் படபடப்புடன் பசுமையான இலைகளைத்தேடி காட்டுக்கோ தோட்டத்துக்கோ ஓடவேண்டிவரும். கொஞ்சமும் தாமதிக்க இயலாத அத்தருணங்கள் மகத்தானவை. அவ்வனுபவத்தை நான் அனைவருக்குமே பரிந்துரைப்பேன்.

சில பட்டாம்பூச்சிகள் மட்டும் தங்களுக்கான பூவாக ஒரு குறிப்பிட்ட வகையை மட்டுமே தேர்ந்தெடுப்பதாகச் சொன்னீர்கள். இன்னும் விரிவாகச் சொல்லுங்கள்.
எளிமையாகச் சொன்னால் மனிதர்களின் உணவுத் தேர்வைப்போன்றதுதான் அது. சிலர் குறிப்பிட்ட உணவுவகைகளையே மீண்டும்மீண்டும் விரும்புவதையும் சிலர் பலவகையான உணவுகளுக்கு மாறிமாறி சென்றுகொண்டிருப்பதையும் போன்றதே. ஆனால் மனிதர்களிடமிருந்து ஓர் அடிப்படையான வேறுபாடு பட்டாம்பூச்சிக்கு உண்டு. மனிதர்கள் இயற்கையான பரிணாமவளர்ச்சியின் மூலம் எதைச்செரிக்கமுடியுமோ அதை மட்டுமே உண்ணவேண்டும் என்பதில்லை. ஆனால் பட்டாம்பூச்சிகள் தங்கள் உறிஞ்சுகுழல்களின் நீளத்துக்கேற்ப மட்டுமே பூக்களைத் தேர்வுசெய்ய இயலும். அதோடு உணவுக்காக அருகாமையிலுள்ள பூக்களைத்தான் அவை நாடும்.

எத்தனை வகையான பட்டாம்பூச்சிகள் சிங்கப்பூரில் உள்ளன? காலநிலை மாற்றங்களை அனைத்துவகைகளும் சமாளித்துவிடுமா?
சுமார் 330 வகைப் பட்டாம்பூச்சிகள் சிங்கப்பூரில் இருக்கின்றன. அதில் பாதி, அதாவது சுமார் 150 வகைகள் நம்முடைய நகரப்பூங்காக்களைச் சார்ந்தே வாழக்கூடியவை. இவை காலநிலைமாற்றத்தால் உண்டாகும் வெப்பம் மற்றும் வறட்சி போன்றவற்றையும்கூடத் தாங்கிவிடும்.

நகரமயமாக்கல் உலக அளவில் பெரும்பாய்ச்சலில் நிகழ்ந்துகொண்டுள்ளது. அதன் வடிவமைப்பில் ஏதும் மாற்றம் வரவேண்டுமா?
பட்டாம்பூச்சி பாதுகாப்பு பெரும்பாலும் அது புழுவாக இருக்கையில் அதன் உணவுக்காக இலையைக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதிலேயே குறியாக இருக்கிறது. அது முக்கியம்தான் ஆனால் அதுமட்டும் போதாது. இப்போது எல்லாப்பூக்களிலும் எல்லா பட்டாம்பூச்சிகளும் உணவுகொள்ள இயலாது என்பது தெரிந்தபின் எந்தமாதிரிப் பூச்செடிகளை நகரப்பூங்காக்களில் அமைப்பது என்பதில் அதிக கவனம்தேவை.

சிங்கப்பூருக்குள் தோட்டங்கள் உள்ளன என்ற நிலையைத்தாண்டி சிங்கப்பூரே தோட்டத்துக்குள் உள்ளது என்பதைக்கொண்டுவருவதை நாம் கனவாகக்கொண்டுள்ளோம். உங்கள் ஆராய்ச்சி இக்கனவை நனவாக்குவதில் பங்குவகிக்குமா?
சந்தேகமில்லாமல் பங்குவகிக்கும். சிங்கப்பூரைப் பசுமையாக்குவதில் நம் கண்களுக்கு அவை அழகாகத் தெரிவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மற்ற உயிரினங்களின் வாழ்வாதாரத்தைக் கவனித்துக்கொள்வதும் முக்கியம். இந்த இடத்தில் திட்டமிடுதலின்போதே என் ஆராய்ச்சி பயனளிக்கும்.

சிங்கப்பூரை அவ்வப்போது சூழும் புகைமூட்டம் எவ்வாறு பட்டாம்பூச்சிகளை பாதிக்கிறது?
துரதிருஷ்டவசமாக அதைப்பற்றிய தகவல்கள் தற்போது நம்மிடமில்லை. ஆனால் என் சொந்த அனுபவத்தில், புகைமூட்டம் சூழும்போது பட்டாம்பூச்சிகள் தன் நடமாட்டத்தை வெகுவாகக் குறைத்துக்கொள்வதைக் கண்டிருக்கிறேன். பட்டாம்பூச்சி சூரியவெளிச்சத்தை விரும்பக்கூடியது. புகைமூட்டம் வெளிச்சத்தை பாதிப்பதால் இந்த நடமாட்டம் குறைவு பிரச்சனை இருக்கலாம். சராசரியாக ஒரு பட்டாம்பூச்சி மூன்றுவாரங்களே வாழும். இந்த நேரத்திற்குள் அவை இனப்பெருக்கம் செய்தாகவேண்டும். மூன்றுவாரங்கள் நீடிக்கும் ஒரு புகைமூட்டத்தின்போது குறைந்த நடமாட்டத்தினால் இவற்றின் இனப்பெருக்கம் நிகழாமலேகூட போய்விடும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்த பொதுமக்கள் விழிப்புணர்ச்சியால் ஏதும் நன்மைகள் விளையக்கூடுமா?
நிச்சயமாக. நாம் புகைமூட்டத்தால் பாதிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் காற்றின் மாசைக்கட்டுப்படுத்த இயலாத சூழலில் அது மற்ற உயிரினங்களையும் செடிகொடிகளையும் எவ்வாறு பாதிக்கும் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். அது புகைமூட்டப் பிரச்சனை குறித்த நம் அறிவை முழுமையாக்கும். செடிகொடிகளும் பூச்சிகளும் நம்மைப்போல் N95 முகமூடிகளை அணிந்தோ, காற்று பதப்படுத்தப்பட்ட அறைகளுக்குள் புகுந்தோ தப்பிக்க இயலாதல்லவா?

செந்தோசாவிலும் அறிவியல் கூடத்திலும் பட்டாம்பூச்சி பற்றிய விவரங்கள் பார்வையாளர்களை ஈர்த்துவருகின்றன. மேலும் என்ன செய்யலாம்?
பட்டாம்பூச்சிகளோடு உறவாடவும் அவைகுறித்து கற்றுக்கொள்ளவும் இம்மாதிரியான இடங்கள் அவசியம்தான். ஆனால் வெளியில் உலவும் பட்டாம்பூச்சிகளைப் பார்ப்பது நமக்கு மேலும் உற்சாகமாக இருக்கும். சிங்கப்பூர் பரப்பளவில் மிகவும் சிறியதே. எனவே இயற்கை உயிரினங்களை இயற்கையான வழியிலேயே வெகுதூரம் பயணம் செய்யாமலேயே பார்க்கமுடியும். அதன் அனுபவமே தனிதான். நம் எல்லோருக்குமே அதை உணர்ந்துபார்க்கும் வாய்ப்பிருக்கிறது.

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்