இருபத்தியொரு வயது இளைஞனாக, சிங்கப்புரா துறைமுகத்தை கப்பலில் வந்தடையும் திரு. கோ.சாரங்கபாணியும், உடன்வரும் தமிழ்க் கூலிகளுமாகத் தொடங்கிய நாடகத்தில் தன்னோடு வந்த கூலி வசந்தபாலனை கங்காணி தாக்கி அழைத்துச் செல்ல, கோபக்கார இளைஞனாக கங்காணியை எதிர்த்து நிற்பவராகவும், சமரசமில்லாத கொள்கை வீரனாக வேலையில் இருந்ததற்காக ‘முன்னேற்றம்’ இதழிலிருந்து வெளியேற்றப்பட்டவராகவும், சிற்றுண்டிக் கடை நடத்தும் சீனக் கைம்பெண்ணின் மகளான நியோவிடம் புரட்சிவாதியாக ஆரம்பித்து காதல்வாதியாகக் குழையும் இளைஞனாகவும், பெரியாரின் வழியில் நின்றும், நேதாஜியின் பணியோடு பங்கு கொண்டவனாகவும், ‘தமிழ் முரசு’ இதழையும் ‘இந்தியன் மெயில்’ ஆங்கிலப் பத்திரிகையயும் தோற்றுவித்த லட்சியவாதியாகவும், சாதி மதம் அற்ற தமிழினம் ஒன்றை அடைய முயற்சித்தவராக, தமிழர் திருநாளைக் கொண்டாடியவராக, சீனப் பெண்ணை மணந்தாலும் தமிழருக்காக, தமிழுக்காக மலேயா முழுவதும் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவராக, குடியுரிமை பெற தமிழர்களை உந்தியவராக, உடன் இருந்தோர் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பின்னும் உற்ற நண்பர்களும் மறைந்த பின்னும் தனிமையிலும், ‘வெஞ்சமரில் வீழ்ந்தாலும் தமிழ் என்றும் வாழும்’ என்ற திடமான எண்ணத்தோடும் வேட்கையோடும் அச்சு எந்திரத்திற்கு முன் நிற்கும் இறுதிக்காட்சிவரை ஏறக்குறைய இருபத்திரண்டு காட்சிகளாலும் இரு காணொலிகளாலும் கோ.சாவின் வாழ்க்கையை நச்சென்று இயக்கியிருந்தார்.