கடவுளை நம்பினோர்

0
403

கவிதை காண் கதை

கணேஷ் பாபு

நீண்ட நாட்களுக்குப் பின் பானுவைப் பார்க்க வாய்த்தது. திருச்சியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்கிறாள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்லூரி நண்பர்கள் ஓரிருவராவது எப்படியாவது சந்தித்துவிடுவோம். இம்முறையும் நண்பர்களில் எட்டு பேர் வருவதாகச் சொன்னதால் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம். சந்திப்புக்கு நாங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் தனித்துவமானவை. பொதுமக்கள் அதிகம் அறிந்திராத, சுற்றுலா முக்கியத்துவமற்ற இடங்கள் அவை. ஆனால், அவை வெகு சாதாரணமான இடங்களும் அல்ல. கலை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இம்முறை எங்கள் சந்திப்புக்கென ஒரு கோயிலைத் தேர்ந்தெடுத்தோம்.

சந்திப்புக்கு நாங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் தனித்துவமானவை. பொதுமக்கள் அதிகம் அறிந்திராத, சுற்றுலா முக்கியத்துவமற்ற இடங்கள் அவை.

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூருக்கு அருகில் இருக்கும் திருவெள்ளறை என்ற ஊரின் பெருமாள் கோயில். செந்தாமரைக் கண்ணனாக விஷ்ணு வீற்றிருக்கும் தலம். திருவரங்கம் போன்ற புகழ்பெற்ற கோயில் அல்ல. ஆனால், வரலாற்று முக்கியத்துவமுள்ள கோயில் இது. ராமானுஜர் தங்கிய கோயில். இந்தக் கோயிலில் உள்சுற்று மதிலின் சாளரத்திலிருந்து பார்த்தால் திருவரங்கக் கோயிலின் கோபுரம் தென்படும். திருவரங்கக் கோபுரம் அளவிற்கே பெரிய அடித்தளமுள்ள கோபுரம்தான் இங்கும் உள்ளது. ஆனாலும், இந்தக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டிருந்தால், திருவரங்கக் கோயிலின் உயரத்தை எட்டியிருக்கும்.

கல்லூரிக் காலத்தில் நாங்கள் சில முறை இக்கோயிலுக்கு வந்திருக்கிறோம். கோயிலின் முகப்புக் கோபுரத்திற்கு எதிரே இருக்கும் விசாலமான கல் படிகளில் அமர்ந்து பேசியிருக்கிறோம். கோயிலைச் சுற்றியிருக்கும் வெண்பாறைகள், பொட்டல் காடுகள், அந்தரத்தில் அலையடிக்கும் வெயில், ஆளோய்ந்த பிரகாரம், ஊழிவெள்ளத்தில் தப்பியது போன்று தனித்தும் சிறிது அச்சத்தையும் ஏற்படுத்தும் கோபுரம் என இந்த வளாகமே வித்தியாசமான உணர்வுநிலைகளை ஏற்படுத்தக்கூடியது.

நான் கோயிலை அடைந்தபோது வெயில் வடிந்திருந்தது. மாலை அரும்பும் முகாந்திரத்தை உணர்ந்த அந்தச் சிறிய ஊரில் ஆங்காங்கே அசைவுகள் தென்பட்டன. வருவதாகச் சொன்ன நண்பர்கள் எவரும் வரவில்லை. கடைசி நேர சமாளிப்புகள். உண்மை போன்று தோன்றச் செய்வதற்காக சற்று உரத்துச் சொல்லப்பட்ட பொய்கள் என் அலைபேசியில் நிரம்பின. பானு மட்டுமே வந்திருந்தாள்.

“உருப்படாத பசங்க, வர விருப்பம் இல்லன்னா காலையிலேயே சொல்லியிருக்கலாமே? ஏன் கடைசி நேரத்தில இப்படி ஏமாத்துறானுங்க?” என்றாள் பான

 “உருப்படாத பசங்கங்கறது உண்மதான், ஆனா ஏன் பொய் சொல்றானுங்கன்னுதான் தெரியல” என்றேன்.

வருவதாகச் சொன்ன நண்பர்கள்
 எவரும் வரவில்லை. 
கடைசி நேர சமாளிப்புகள். 
உண்மை போன்று தோன்றச் செய்வதற்காக
 சற்று உரத்துச் சொல்லப்பட்ட பொய்கள்.

சிறிது நேரக் காத்திருப்புக்குப் பிறகு நாங்கள் இருவர் மட்டும் கோயிலுக்குள் சென்றோம். வெயிலின் கால் தடங்களைப் போல பிரகாரத்தின் சில இடங்களில் ஒளி சொட்டியிருந்தது. கல்தரையில் இளஞ்சூடு எஞ்சியிருந்தது. கோபுர மணி “டிம்” என்ற ஒலியெழுப்பியது. அதன் கார்வை காற்றில் எஞ்சி படிப்படியாக மறைந்தது. அந்தப் பேரொலி சற்று விநோதமாக இருந்தது. கற்கட்டுமானம் என்னிடம் ஏதோ பேசவந்து பேசாமல் போவதைப் போலிருந்தது.

அவன் சந்தோசத்த மட்டுமே அனுபவிப்பான்,
 துக்கம்னு ஒன்னு ஏற்பட்டா 
அதத் தாங்கிக்கிற 
சக்தி அவனுக்கு இல்ல.

நாங்கள் இருவர் மட்டுமே பிரகாரத்தில் இருந்தோம். பானு கோயில் கருவறைக்குள் வரமாட்டாள் என்று எனக்குத் தெரியும். பிரகாரத்துக்குள் ஓய்வாக நடந்து சென்று சிற்பங்களைப் பார்க்கப் பிடிக்கும் என்பதால் பிரகாரம், சிற்பக்கூடம் போன்ற இடங்களைத் தவிர்க்க மாட்டாள். சிறிது நேரம் சிற்பங்களைப் பார்த்துவிட்டு அருகில் இருந்த ஸ்வஸ்திக் வடிவக் குளத்தின் படிகளில் அமர்ந்து கொண்டோம்.

கரும்பச்சை நிறத்தில் அலையடித்த குளத்து நீரையே பார்த்துக்கொண்டு மௌனமாகிவிட்ட பானுவைப் பார்த்தேன். பானு சிறுமியாக இருக்கையில் அவளது தந்தை இறந்துவிட்டார். சிரத்தையாகப் படித்து ஊக்கத்தொகையின் மூலமாகவே கல்லூரி படிப்புவரை நிறைவு செய்துவிட்டாள். பணியிடத்தில் தன்னுடன் பணியாற்றிய ஒருவனைக் காதலித்து மணந்துகொண்டாள். முதல் குழந்தை இறந்து பிறந்தது. அடுத்த குழந்தையோ கற்றல் குறைபாடும், பேச்சுத் திறனற்றும், சூழல் பிரக்ஞையும் குறைந்த சிறப்புத் தேவையுள்ள குழந்தை.

சதா கவனம் தேவைப்படும் இந்தக் குழந்தையைக் கவனித்துக் கொள்வது என்பது பெரும் சவாலான பணி. ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி என்று ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள இயலாத அவளது கணவன் பானுவை விட்டுப் பிரிந்து சென்று விட்டான். விவாகரத்து வழக்கு இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. பானுவின் சகோதரியும் அவளது தாயும்தான் இப்போது அவளுக்குத் துணையாக நிற்கிறார்கள்.

அவன், தான் ஒரு கோழைன்னு ஆரம்பத்துல இருந்தே தன்னையுமறியாம எனக்கு உணர்த்திக்கிட்டேதான் இருந்தான். நான்தான் காதல் மயக்கத்துல அதை கண்டுக்கிடல. சினிமாவுக்குப் போனா சந்தோசமான காட்சிகள மட்டும் பார்ப்பான், சோகமான காட்சிகளப் பார்க்க மாட்டான், எழுந்து போயிடுவான். அந்தக் காட்சி முடிஞ்ச பிறகுதான் வருவான். அதையெல்லாம் பார்த்து, வாழ்க்கையோட பாஸிடிவ் பக்கத்த மட்டுமே பாக்குறவனாக இருக்கானே, நம்மள நல்லபடியா வச்சுக்குவான்னு நினைச்சேன். அவன் என்ன விட்டு ஓடிப்போன பிறகுதான் தெரிஞ்சது, தன்னுடைய வாழ்க்கையிலயும் அவன் சந்தோசத்த மட்டுமே அனுபவிப்பான், துக்கம்னு ஒன்னு ஏற்பட்டா அதத் தாங்கிக்கிற சக்தி அவனுக்கு இல்லன்னு. சினிமா தியேட்டர்ல எந்திருச்சி போனமாதிரி என் வாழ்க்கையில இருந்தும் வெளியேறிட்டான்” என்றாள் பானு.

“ஆனா, நான் அப்படியில்ல. இந்தத் துன்பத்தையும் தாங்குவேன், இதுக்கு மேல வந்தாலும் தாங்குவேன். இதையே தாங்குறோம், இனி எதையும் தாங்கலாம்” என்றாள்.

நான் சும்மா இருக்கப் பிடிக்காமல், “கடவுள் எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்காரு பானு” என்று ஆரம்பித்தேன

சட்டென அவள் வேறொருத்தியாய் மாறினாள், “கடவுள்னு பேச்செடுத்த வாய ஒடச்சிருவேன். அவரு எல்லாத்தையும் பாத்துக்கிட்டு மட்டும்தான இருக்குறாரு. இந்தப் பாவம், புண்ணியம், கடவுள் எல்லாமே பெயின் கில்லர் மாத்திரை மாதிரிதான். அப்போதைக்கு கொஞ்சம் ஆசுவாசமா இருக்கும், அதத்தாண்டி ஒன்னுமில்ல. என் வலியத் தாங்கிக்கிறேன்னு நான் முடிவெடுத்ததால, எனக்கு இந்த பெயின் கில்லர் தேவையில்ல. தன்னுடைய துயரத்த தாங்கிக்கிட்டு மத்தவங்கள சொஸ்தப்படுத்திய ஏசு எனக்குத் தேவையில்ல. நீ அடிக்கடி சொல்வியே, தஸ்தாயெவ்ஸ்கி தன்னுடைய துயரத்தத் தாங்கிக்கிட்டு ஒளிமிக்க படைப்புகள உலகத்துக்குக் கொடுத்தாருன்னு. ஏசுவுக்கு இவரு எத்தனையோ மேலுன்னு எனக்குத் தோணுது” என்றாள்.

“நீ வேணும்னா போய் சாமி கும்பிட்டுட்டு வா. நான் இங்கயே இருக்கேன். இந்தப் படிக்கட்டுல உக்காந்துட்டு இருக்குறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

நான் யோசித்தேன். “சரிதான், பானுவின் தரிசனம் பெருமாளுக்குக் கிடைக்கவில்லை” என்று நினைத்துக்கொண்டு நானும் அவளுடனே குளக்கரையில் அமர்ந்துகொண்டேன்.

கோயிலை விட்டு வெளிவரும்போது கோபுரம் இருள் சூடியிருந்தது. கோபுரத்தையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு “சரி, போலாம்” என்றாள் பானு.

ஒரு பந்தென இருக்கிறோம்
கடவுளின் கைகளில்
அவரதைத் தவற விடுகிறார்
தொப்பென வீழ்ந்து
விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் ஏற்றி
புஜங்களில் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கிடையே
மாறி மாறித் தட்டி
விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்
“நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை: உன்னைக்
கைவிடுவதுமில்லை”
பிதாவே! தயவு பண்ணி எம்மைக்
கைவிடும்”.

கவிஞர் இசை எழுதிய இந்தக் கவிதையை வாசித்தபோது பானுவின் நினைவு எழுந்தது. பானுவைப் போலக் கடவுளை கைவிட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால், கடவுள்தான் இவர்களை கைவிட மறுக்கிறார். இவர்களைத் தன் கைகளில் விளையாட்டுப் பாவைகளாக, பந்துகளாக வைத்து விளையாடியபடியே இருக்கிறார்.