கரிகாற்சோழன் விருது விழா 2022

0
458
ஷாநவாஸ்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறையில், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை வாயிலாக ஆண்டுதோறும் கரிகாற்சோழன் விருது வழங்குவது 2007இல் தொடங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாகத் தொடரும் இந்நிகழ்வு சென்ற நவம்பர் 28, 2022 தஞ்சைத் தமிழ்ப் பல்கலையில் நடந்தேறியது. ஓர் இலக்கிய விருது இத்தனை காலம் தொடர்ச்சியாக நீடிப்பதும் ஒவ்வோராண்டும் முந்திய ஆண்டைவிடச் சிறப்பாக நடைபெறுவதையும் திகைப்புடன் நினைத்து பார்க்கிறேன். இந்தவிழா இவ்வண்ணம் தொடர்வதற்கு முழுமுதல் காரணம் நிறுவனர் முஸ்தபா.

கரிகாற்சோழன் இலக்கிய விருது, தமிழ் ஆய்வுப்பணிகளுக்கு உ.வே.சா. விருது தவிர, தமிழர் அறிவியலுக்கு ஜி.டி. நாயுடு விருது அறிவித்து ஒரு லட்சம் பரிசும் வழங்குகிறது ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை. கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக இவ்விருதுகளுக்கு விழா ஏற்பாடுசெய்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டாலும் 2018, 2019, 2020 ஆண்டுகளின் அனைத்து கரிகாற்சோழன் விருதாளர்களையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு அழைத்து விருதுகளை வழங்க வேண்டுமென்பதில் நிறுவனர் மிகவும் உறுதியாக இருந்தார்.

இலங்கையிலிருந்து தி. ஞானசேகரன், மு.இ. அச்சி முகம்மட், அருணா செல்லத்துரை, சிங்கப்பூரிலிருந்து இன்பா, ஹேமா, எம். சேகர், மலேசியாவிலிருந்து ஏ.எஸ். பிரான்சிஸ், மா. அன்பழகன், கோ. புண்ணியவான் ஆகிய 9 விருதாளர்களில் அழைப்பை ஏற்று 7 பேர் நேரில் விருதைப் பெற்றுக்கொண்டனர். சிங்கப்பூர் விருதாளர்கள் இருவர் நேரில் வர இயலாததால் அவர்களின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலையின் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறையின் தொடர்புவலை இந்த விருதளிப்பு நிகழ்வுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. விழா ஒருங்கிணைப்பு, விருந்தினர் உபசரிப்பு தொடங்கிக் கடந்த இரண்டு மாதங்களாகத் திட்டமிட்டு புத்தம்புதிய அதிக தங்க எடைகொண்ட பதக்கங்களை மூன்று நாடுகளின் விருதாளர்களுக்கு அணிவித்து மனமார வாழ்த்தி முடித்ததுவரை அவர்களுடைய பங்களிப்பு அசாத்தியமானது.

0விருதாளர் முதல் விருந்தினர்வரை அனைவரையும் விழாக்குழுவினர் கவனித்துக்கொண்ட பாங்கும் இவ்வாண்டு நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது. உபசரிக்கும் குழுவை அயலகத் துறை தலைவர் குறிஞ்சி வேந்தன் மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்திருந்தார். துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமையில் தஞ்சாவூர் மேயர் சண். இராம நாதன் விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்வு சிறப்பாக நடந்தேறப் பல்கலைக்கழக மாணவர்களின் உற்சாகமிக்க ஈடுபாடு பாராட்டத் தக்கதாக இருந்தது .

கரிகாற்சோழன் விருது விதிமுறைகள்

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டியில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை எழுத்தாளர்கள் கலந்துகொள்ளலாம். புதினம், கவிதை, புதினம் அல்லாத படைப்புகள், குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் அந்தந்த நாடுகளில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் சமயத்தில் குறைந்தது 18 வயது நிரம்பிய எழுத்தாளர்கள் போட்டியில் பங்கு பெறலாம். ஒவ்வொரு படைப்பும் அனுப்புபவரால் எழுதப்பட்ட அசல் படைப்பாக இருக்கவேண்டும். போட்டியிடும் காலக்கட்டத்தில் படைப்பு வெளியீடு கண்டிருக்க வேண்டும். பல படைப்பாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள், கவிதை, அல்லது கட்டுரைகளின் திரட்டுகள் இந்த விருதுக்குத் தகுதிபெறமாட்டா.

பதிப்பிக்கப்பட்ட படைப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தகுதி பெற, படைப்புகள் நூல் வடிவத்தில் பதிப்பிக்கப்பட்டு வர்த்தக அடிப்படையில் வெளியிடப்ட்டிருக்க வேண்டும். மின்புத்தகங்கள், கேட்பொலி (ஆடியோ) புத்தகங்கள் விருதுக்குத் தகுதியற்றவை. இதற்கு முன்னர் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், இணையத்தளங்களில் பதிப்பிக்கப்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் நூல் வடிவிலான திரட்டுகள் தகுதி பெறுபவையாகக் கருதப்படும். ஆனால், வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் நூல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். மறுபதிப்புகள், முந்தைய ஆண்டுகளிலிருந்து புதுப்பிக்கப்பட்ட பதிப்புகள், மறுவெளியீடுகள் போட்டிக்குத் தகுதியற்றவை.

ஒரு மொழியிலிருந்து மற்றொரு அதிகாரப்பூர்வ மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு, நாங்கள் வரையறுத்துள்ள காலக்கட்டத்தில் பதிப்பிக்கப்பட்டிருந்தால் கரிகாற்சோழன் விருதுப் போட்டிக்குத் தகுதி பெறும். படைப்புகள் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். மொழி பெயர்க்கப்பட்ட படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகள் அனுப்பலாம். இணை எழுத்தாளர்களின் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. போட்டிக்கு அனுப்பபடும் படைப்புகள் மின்னியல் வடிவிலோ அல்லது அச்சுவடிவிலோ முன்னரே பதிப்பிக்கப்பட்டிருக்கக் கூடாது .

விருதுக்குழு

தகுதிபெற்ற நூல்களைத் தஞ்சைப் பல்கலைக்கழக நடுவர் குழுவும் சிங்கப்பூர், மலேசிய, இலங்கை அனைத்துலக நடுவர்களும் மதிப்பீடு செய்வர். கருத்திணக்க அடிப்படையில் விருதை வழங்குவதோ வழங்காமலிருப்பதற்கோ நடுவர் குழுவுக்கு உரிமை உண்டு. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. எந்த வகையான விவாதமோ, கடிதப் போக்குவரத்தோ பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான பன்னாட்டு அளவிலான கரிகாற்சோழன் இலக்கிய விருது (2020) நான் எழுதிய ‘எனக்கான நிழல்’ கவிதை நூலுக்குக் கடந்த நவம்பர் மாதம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது. சிங்கப்பூரைப் பிரதிநிதித்து அந்த விருதைப் பெற்றதை எனது இலக்கியப் பங்களிப்பில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கிறேன்.

நான் பொதுவாக எதிலும் ‘கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே’ என்னும் கீதை உபதேசத்தின் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருப்பவன். இலக்கியத்திலும் அப்படித்தான். என் எழுத்துகள் எனக்கும் வாசகர்களுக்குமான தொடர்பாடலாக இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும் அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து பயணிக்கிறேன். எனக்கான இலக்கும் வாசிப்பும் தேடலும் இந்த விருது பெறும் அளவிற்கு என் படைப்பின் தரத்தை உயர்த்தியிருப்பது எனக்கு உண்மையில் மனநிறைவாக இருக்கிறது. அந்த நிறைவின் உச்சத்தை சான்றோர் கூடியிருந்த சபையில் கரிகாற்சோழன் விருது பெற்ற கணத்தில் என்னால் உணரமுடிந்தது.

கரிகாற்சோழன் விருது ஓர் இலக்கியப் படைப்பாளிக்குக் கிடைக்கக்கூடிய உன்னதமான அங்கீகாரமாகவே நான் பார்க்கிறேன். அந்த அங்கீகாரத்தை வழங்கிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளைக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
                                                                                                                                     - எம். சேகர்

கரிகாற்சோழன் விருது:
படைப்புத் தரத்துக்கான கிரியா ஊக்கி

கோ. புண்ணியவான்

கரிகாற்சோழன் விருது தமிழ்நாட்டுக்கு வெளியேயும் தமிழ்ப் படைப்பாளர்களுக்குப் பெருங்கனவாகவே இருந்து வருகிறது. காரணம் இவ்விருது மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என விரிந்து அனைத்துலக கவனத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறது. எனக்கும் விருது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து உவகை பெருகிக்கொண்டே இருந்தது.

சில ஆண்டுகளுக்குமுன் என்னுடைய ‘செலாஞ்சார் அம்பாட் ‘ இந்த விருதைப் பெறும் என்ற மிதப்பில் இருந்தேன். கொத்தடிமைக் களத்தில் மானுட வதை குறித்த அந்நாவல் மலேசியாவில் மூன்று வெவ்வேறு விருதுகளை ஏற்கெனவே பெற்றிருந்தது. ஆனால் கரிகாற்சோழன் விருது கிட்டவில்லை. அவ்வனுபவம் வெள்ளத்தில் சிக்கி அடித்துச்சென்ற ஆட்டுகுட்டியின் தவிப்பையும் ஏமாற்றத்தையுமே தந்தது. ஆனால் அது என்னை மேலும் முயற்சி செய்யத் தூண்டியது. அப்படித்தான் என் ‘கையறு’ நாவல் இவ்விருதுப் போட்டிக்குச் சென்றது.

எழுத்துத் தோழர் ஷாநவாஸ் 2020க்கான கரிகாற் சோழன் விருது ‘கையறு’ நாவலுக்காக எனக்கு அளிக்கப்பட முடிவாகியிருக்கிறது என்று சொன்னவுடன் என் படைப்பைக் குறித்தும் என்னைக் குறித்தும் ஓர் உயர்வுணர்ச்சி கொண்டேன் என்பது உண்மை. எழுத்துத் துறையில் ஒப்பீட்டளவில் என் நிலையை இவ்விருது உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாரபூர்வ விருது அறிவிப்பு வரட்டும் பொதுவில் வெளியிடலாம் என்றே பொறுமை காத்தேன். வல்லினம் ம.நவீன் என்னைக் கேட்டு உறுதி செய்துகொண்டு முகநூலில் பதிவிட்டு மகிழ்ந்தார். சக படைப்பாளிகளும் மகிழும் விருது.

விருதைப் பெற்றுக்கொள்ள விடப்பட்ட அழைப்பை ஏற்று தமிழகம் சென்றேன். விருது நிகழ்ச்சி நேர்த்தியாக ஒருங்கு செய்யப்பட்டு படைப்பாளர்களுக்குத் தரவேண்டிய முதன்மை இடத்தைத் தந்து கௌரவித்தது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் இவ்விருதைக் கொடுத்ததில் அடுத்த எழுத்துத் தலைமுறை உருவாகவேண்டும் என்ற நல்ல நோக்கத்தைக் கண்டேன். அவர்களும் எழுத்துச் சவாலை ஏற்கட்டும்.

இந்தமுறை முஸ்தபா அறக்கட்டளை விருதாளர்களுக்கு அளித்துள்ள தங்கப்பதக்கம் அளித்த பரவசம் அலாதியானது. ஓர் எழுத்துச் சாதனையின் சான்றாக வாழ்நாள் முழுதும் அது மின்னிக்கொண்டிருக்கட்டும். நான் பல்வேறு விருதுகள் பெற்றிருந்தாலும் இந்தவிருது தனித்த அடையாளம் கொண்டது என்பதால் இது என் படைப்புக்குக் கிடைத்த அரிய பரிசாகவே அணைத்துக்கொண்டேன். விருதாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் அளவில் மிகவும் பெரிது. விமானத்தில் வழக்கமான ‘லக்கேஜில்’கூட வைக்க முடியாத அளவு. நான் பாதுகாப்பாகக் கொண்டுவந்தபோதும் கண்ணாடி நொறுங்கிவிட்டது. சான்றிதழைத் தமிழ்நாட்டிலேயே ‘லேமிநேட்’ செய்து கொடுத்தால் போதும்.

இவ்விருது என்னை மேலும் எழுதத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. படைப்புச் செயலின் தொடர் ஓட்டத்தில் அவ்வப்போது சோர்வுறுதலும் உண்டு. அச்சமயங்களின் இவ்வாறான விருதுகள் உந்தித்தள்ளி தொடர்ந்து முன்னகரச் செய்கின்றது என்பது என் அனுபவ உண்மை. முஸ்தபா அறக்கட்டளை முன்னெடுத்த இந்த இலக்கியச் செயல்பாடு பல தரமான நூல்களை வாசகப் பரப்புக்குக் கொண்டு வந்திருக்கிறது. இது தொடரவேண்டும். தொடரும் என்பதை ஒவ்வாராண்டும் முனைப்புடன் நடத்தப்படும் விருது நிகழ்ச்சி மெய்ப்பிக்கிறது.