தீர்த்தோவும் பாரதியும்:

முனைவர் அசார் இப்ரஹீம்

காலனித்துவத்தை எதிர்த்த கீழைக்குரல்கள்

தென்கிழக்காசியத் தீவுக்கூட்டத்திலிருந்தும் (Nusantara Archipelago) தமிழ்நாட்டிலிருந்தும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருவேறு குரல்கள் மேற்கின் காலனித்துவத்திற்கு எதிராக ஒருமித்து எழுந்தன. அவை தீர்த்தோவும் பாரதியும். முறுக்கு மீசை, முண்டாசு என உருவத்தில் தொடங்கி, எழுத்தையே ஆயுதமாக ஆக்கிக்கொண்டதிலும், பத்திரிகையாளர்களாகப் பணியாற்றியதிலும், ஏன், நாற்பது வயதுக்குள் மறைந்ததிலும்கூட அவ்விருவருக்குள்ளும் வியக்கத்தக்க அளவில் பல ஒற்றுமைகள் உள்ளன. அவர்களைத் தெரிந்துகொள்வதும் அவர்கள் ஆற்றிய பணிகளைப் புரிந்துகொள்வதும் இன்றைய வாழ்க்கைக்கும் சில பலன்களை அளிக்கும் என்று கருதுகிறேன்.

தீர்த்தோ ஆர்தி சோர்யோ (Tirto Ardhi Soerjo, 1880-1918) அப்போது டச்சுக்காரர் ஆளுகைக்குட்பட்ட மத்திய ஜாவாவில் பிறந்தவர். டச்சுப் பள்ளியில் படித்து உள்ளூர் மருத்துவர்களுக்கான கல்விபயிலச் சேர்ந்தார். ஆனால் அங்கிருந்து அவர் வெளியேற்றப்பட்டதால் படிப்பைத் தொடர இயலவில்லை. பிறகு இதழியலில் நுழைந்தார். பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி, 1907-இல் Medan Prijaji என்ற முதல் உள்ளூர்ப் பத்திரிகையைத் தொடங்கினார்.

காலனி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவது, கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பது என்று தீவிரமாகச் செயல்பட்ட தீர்த்தோ, அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்ட குற்றங்களுக்காக இருமுறை நாடுகடத்தப்பட்டார். அதனால் தளராத தீர்த்தோ காலனியப் பொருளாதாரத்துக்குப் போட்டியாக உள்ளூர் வர்த்தகர்களை ஒருங்கிணைக்கும் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். குறைந்தகாலமே அவ்வமைப்பு நீடித்தது என்றாலும் உள்ளூர் மக்களுக்குப் புத்தெழுச்சியை அளித்ததோடு பின்னாளில் பல இயக்கங்கள் உருவாக உந்துசக்தியாகவும் இருந்தது. பட்டேவியாவில் (Batavia, இன்றைய ஜகார்த்தா) தீர்த்தோ இயற்கை எய்தினார்.

தீர்த்தோவின் வரலாறு கிட்டத்தட்ட சுப்பிரமணிய பாரதியின் (1882-1921) வரலாறு போலவே இருப்பதைக் காணலாம். காலனி ஆதிக்கத்தை எதிர்த்ததோடு சிறுபான்மையினர், பெண்களுக்காக இருவரும் தம் எழுத்துகளில் குரல் கொடுத்தனர். தீர்த்தோ நாடுகடத்தப்பட்டார் என்றால் பாரதி பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். இருவரும் உயர்குடிப் பிறப்பினர் என்றாலும் தீவிரமாக மானுடச் சமத்துவம் பேசினர்.

இலக்கியத்திலும்கூட தீர்த்தோ நவீன இந்தோனேசிய இலக்கியத்திற்குக் கட்டியம் கூறியவராகக் கருதப்படுகிறார். மானுட ஆற்றலை ஒன்றுதிரட்டவும் சிந்தனை எழுச்சியை விதைக்கவும் மொழியின் பயன்பாடுகளை உணர்ந்து அதையே கருவியாக்கலாம் என இருவரும் தீர்க்கமாக நம்பியுள்ளனர். மேலை ஆதிக்கத்தை எதிர்த்த அதேவேளையில் நவீன அறிவியலையும் முன்னேற்றங்களையும் கிழக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற பார்வை இருவருக்கும் இருந்தது.

ஆயினும், இருவருக்கும் அமைந்த சூழல்கள் சற்று மாறுபட்டவை. தமிழின் செழுமையான இலக்கியத்தை பாரதியால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. ஜாவானிய இலக்கியம் பழமையானது என்றாலும் தீர்த்தோவுக்குப் பல கலாசாரங்களைக் கொண்டோருடன் பேசவேண்டியிருந்ததால் இந்தோனேசியாவின் பொது மொழியான மலாய் மொழியைப் பயன்படுத்தவேண்டியிருந்தது.

பாரதிக்கு அரவிந்தர், லஜபதிராய் என முன்னோடிகள் இருந்தனர். தீர்த்தோவுக்குக் குறிப்பிடும்படி எவருமில்லை. இருப்பினும் இருவரது அணுகுமுறைகளும் சிந்தனைகளும் ஒத்திருந்தன. ‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்ற பாரதியைப் போலவே காலனிய அரசாங்கத்தின் வேலைகளில் சேர்வதை கௌரவமாகக் கருதக்கூடாது, உள்ளூர்க்காரர்கள் தொழில்களில் ஈடுபட்டுச் சிறக்கவேண்டும் என்ற சிந்தனை தீர்த்தோவுக்கும்

தீர்த்தோ 38 வயதிலும், பாரதி 39 வயதிலும் அகால மரணமடந்தனர். வாழ்ந்தபோதும் மறைந்தபோதும் அதிகம் கண்டுகொள்ளப்படாத இருவருக்கும் காலம்கடந்து புகழாரங்கள் குவிந்தன. பாரதி மகாகவி ஆனார் என்றால் தீர்த்தோ இந்தோனேசிய இதழியலின், சுதந்திரத்தின் முன்னோடி ஆனார். இன்று காலனி ஆதிக்கம் இவ்வட்டாரத்திலோ தமிழ்நாட்டிலோ இல்லை என்றாலும் நமக்கு இன்றும் தேவையான சில பாடங்களை இவ்விருவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது, பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்கி விரித்துக்கொள்வதற்குப் பேச்சையும் எழுத்தையும் பயன்படுத்துவது. இரண்டாவது, கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கையையும் திறனையும் வளர்த்துக்கொள்வது. மூன்றாவது, பிற பண்பாடுகளில் உள்ள நன்மைகளைத் தயக்கமின்றி சுவீகரித்துக்கொள்ளும் அதேவேளையில் சொந்தப் பண்பாட்டு வேர்களை இழந்துவிடாமல் உறுதியாக இருப்பது. இறுதியாக, மானுட விடுதலை என்பது அரசியல் விடுதலையைத் தாண்டியது என்ற பரந்த கண்ணோட்டத்தைக் கைக்கொண்டு அதைநோக்கிய மாற்றங்களை இயன்ற அளவில் முன்னெடுப்பது, தொடர்ந்து வலியுறுத்துவது.