நட்‘பூக்கள்

சிங்கப்பூரின் ஆர்க்கிட் அரசநயம்

ரெபெக்கா டான்

ஒரு நாடு பிற நாடுகளுடன் அணுக்கமான நட்பைப் பேணுவது, மரியாதையை வெளிப்படுத்துவது, அரசியல் நிலைப்பாடுகள் எடுப்பது, சில நிகழ்வுகள் குறித்த தன் கருத்துக்களைச் சொல்வது அல்லது சொல்லாமல் விடுவது என்று பலவகைகளில் அரசநயத்தை (Diplomacy) வெளிப்படுத்துகிறது. அரசநயத்தில் பல நாடுகள் பலவழிகளைக் கையாளுகின்றன.

இந்தியா 1970களில் சீனாவுடன் மேசைப்பந்து விளையாட்டு வீரர்களைப் பரிமாறிக்கொண்ட Ping-Pong Diplomacy, 1980-இல் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் மாம்பழம் அனுப்பிக்கொண்ட Mango Diplomacy, கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளைக் காண பாகிஸ்தான் பிரதமர்கள் இந்தியா வருவது, ஆப்கானிஸ்தானில் இந்தியா கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைத்துத்தருவது போன்ற Cricket Diplomacy என்று விரிந்து, பேருந்து, இரயில், தேநீர் போன்றவையும் அரசநயத்தில் பங்கெடுத்துள்ளன. சீன அதிபர் சபர்மதியில் ஊஞ்சலில் அமர்ந்து உரையாடிய Swing Diplomacy, இஸ்ரேலின் விண்கலத்தை ரஷ்ய ராக்கெட் ஏந்திச்சென்ற Rocket Diplomacy, ஜப்பான் ரஷ்யாவுக்கு நாய்க்குட்டி அளித்த Puppy Diplomacy போன்றவையும் ஆச்சரியம் அளிப்பவை. எல்லாவற்றுக்கும் மேலாக கலிபோர்னியாவில் சிறை ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த கியூபாவின் உளவு அமைப்பின் தலைவர் ஜிரார்தோ ஹெர்னான்டஸ், கியூபாவில் இருந்த அவர் மனைவியைக் கருத்தரிக்க அனுமதித்த Semen Diplomacy கூட உண்டு! இவ்வாறு உலக நாடுகளுக்கிடையேயான அரசநயம் பல்வேறு வகைகளில் பேணப்படுகையில் சிங்கையின் அரசநய அணுகுமுறைகளில் முக்கியமான ஒன்று ஆர்க்கிட் மலர்கள்.

சென்ற ஆண்டு (2021) ஆகஸ்ட்டில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது இஸ்தானாவில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் லீ சியென் லூங் அவருக்கு ஊதா கலந்த இளஞ்சிவப்பு நிற ஆர்க்கிட் மலர்களைப் பரிசாக அளித்து வரவேற்றார். அந்தக் குறிப்பிட்ட ஆர்க்கிட் வகைக்கு Papilionanda Kamala Harris என்று பெயரும் சூட்டப்பட்டது. சிங்கைக்கு வருகை தரும் அயல்நாட்டு தலைவர்களுக்கு சிறப்பாக அவர்கள் பெயர் சூட்டப்பட்ட சிறப்பான கலப்பின ஆர்க்கிட் மலர்கள் பரிசளிக்கப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. தலைவர்கள் மட்டுமல்லாமல் இங்கு வருகை தரும் மற்ற துறைகளில் புகழ்பெற்ற பிரபலங்களின் பெயரிலும் கூட ஆர்க்கிட் மலர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏன் ஆர்க்கிட் மலர்கள்? அதிலும் ஏன் கலப்பின வகை?

ஆர்க்கிடேசி (Orchidaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஆர்க்கிட் மலர்கள் அவற்றின் துடியான நிறங்கள், உரமிக்க தன்மை, மீள்திறன் ஆகியவற்றுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சிங்கப்பூரை வலுவான தோற்றத்துடன் முன்வைக்க அவை உதவுகின்றன. இரு வெவ்வேறு தாவர இனங்களைக் கலந்து உருவாக்கப்படும் கலப்பின ஆர்க்கிட்கள், சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் உலகளாவிய பார்வையையும் பிரதிபலிக்கின்றன. பல சமயங்களில் கலப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் இனங்களே கூடக் கலப்பினங்களாக இருக்கலாம்.

1956இல் தொடங்கப்பட்ட இந்த வழக்கத்தின் மூலம் சுமார் 200 வகையான மலர்கள் சிங்கப்பூர் பூமலையில் உள்ள தேசிய ஆர்க்கிட் தோட்டத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பு மலர்களில் முதல் மலர் சிங்கையின் முன்னாள் ஆளுனர் ராபர்ட் ப்ளாக்கின் மனைவி ஆன் ப்ளாக்குக்காக Aranthera Anne Black என்று 1956-இல் பெயர் சூட்டப்பட்டது. அடர் சிவப்பு வண்ணமுள்ள இந்த வகையில் ஒரு கொத்தில் புதிய மலர்கள் பூக்கும்போது பழைய மலர்கள் வாடுவதில்லை என்பது சிறப்பம்சம். சிங்கப்பூர் 1965-இல் சுதந்திரமடைந்த பிறகு அரசநயத்துக்கான ஆர்க்கிட்களின் பெயர்சூட்டு நெறிமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

இரு வெவ்வேறு தாவர இனங்களைக் கலந்து உருவாக்கப்படும் கலப்பின ஆர்க்கிட்கள், சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் உலகளாவிய பார்வையையும் பிரதிபலிக்கின்றன.

கலப்பின ஆர்க்கிட் மலர்களின் உருவாக்கம்

ஆர்க்கிட் கலப்பினங்களை உருவாக்குவது சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவால் நிர்வகிக்கப்படும் ஆர்க்கிட் கலப்பினத் திட்டத்தால் மேற்கொள்ளப்படுகிறது. மலர்களின் பாரிய அளவு, நீண்ட நேர மலர்ச்சி, பூக்களின் அதிக எண்ணிக்கை, மலர்க்கொத்தின் அழகிய அமைப்பு, புதிய தோற்றம் போன்ற பல்வேறு அம்சங்கள் ஆர்க்கிட்களைக் கலப்பினமாக்கும்போது கருத்தில் கொள்ளப்படுகின்றன. மலட்டுத்தன்மையுள்ள தாய்த் தாவரங்கள், முளைத்தடம் அழுகிப் போதல் போன்ற காரணங்களால் அனைத்துக் கலப்பினங்களும் வெற்றியடைவதில்லை.

தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா 1997இல் ஆர்க்கிட் தோட்டத்தில். அவர் பெயரில்
Paravanda Nelson Mandela ஆர்க்கிட் (உள்படம்) பெயரிடப்பட்டது.
விரும்பப்படும் நிறங்கள், தவிர்க்க வேண்டிய நிறங்கள் குறித்து அமைச்சு அளிக்கும் அறிவுரைகளுக்கேற்ப சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா ஆர்க்கிட்களைத் தேர்ந்தெடுக்கும்.

கலப்பின உருவாக்கம் ஐந்து படிநிலைகளைக் கொண்டது:

  • ஆர்க்கிட் கலப்பின வகையை தீர்மானித்து அதற்கேற்ற சரியான குணங்கள் கொண்ட “பெற்றோரை”த் தேர்வுசெய்தல்.
  • ஆண் செடியிடமிருந்து பெண் செடிக்குச் சேர்க்கைக்காக மகரந்தத்தை மாற்றுதல்.
  • கிடைக்கும் கலப்பின ஆர்க்கிட் விதைகளை ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு வளர்ப்பு ஊடகத்தில் விதைத்தல். இவ்வூடகத்தில் விதைகள் முளைத்து நாற்றுகளாக வளரும்.
  • நாற்றுகளை நாற்றங்காலில் உள்ள தொட்டிகளுக்கு மாற்றுவதற்கு முன் 6 முதல் 12 மாதங்கள் வரை குடுவைகளில் (flask) வளர்த்தல்.
  • இறுதியாக, செடிகள் பூக்கும்வரை காத்திருத்தல். பூப்பதற்குப் பொதுவாக இரண்டு, மூன்று ஆண்டுகளாகும்.

தென்கிழக்காசிய ஆர்க்கிட் சங்கத்தின் முன்னாள் தலைவரான பெக்கி டான் விவரித்தபடி, ஒரு மலரில் இருந்து மகரந்தத்தை ஒரு பல்குச்சியைக் கொண்டு அறுவடை செய்து, அதை உடனடியாக மற்றொரு பூவின் சூல்தண்டின் மீது வைக்கின்றனர். மகரந்தச்சேர்க்கை வெற்றியடைந்தால், மலர் வாடினாலும் பல வாரங்களுக்குப் பிறகு ஒரு விதை நெற்று உருவாகும்வரை அது தண்டின் மீதே உதிராமல் நீடிக்கும். ஒருவேளை மகரந்தச் சேர்க்கை வெற்றியடைந்தாலும் கலப்பினப் பூக்கள் குறைபாடுடையவையாக இருந்தால் நிராகரிக்கப்படலாம்.

சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் ஆர்க்கிட் இனப்பெருக்க மூத்த ஆராய்ச்சியாளர் யாம் டின் விங், 10 விழுக்காட்டு ஆர்க்கிட் கலப்பினங்கள் மட்டுமே “ஆர்க்கிட் பெயரிடும் விழாக்களில் பயன்படுத்த ஏற்றது. இது ஒரு குழந்தையின் பிறப்பை எதிர்பார்ப்பது போல. அது எப்படி இருக்கும்; எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கும் என நமக்குத் தெரியாது. சில மலர்கள் பார்வைக்கு நன்றாக இருக்கும் ஆனால் செடிகள் பலவீனமாக இருக்கலாம். மற்ற சில ஆரோக்கியமாக வளரும் ஆனால் பூக்காமல் போகலாம்” என்று குறிப்பிட்டார்.

ஆர்க்கிட் கலப்பினங்கள், கலப்பு செய்யப்பட்ட தருணத்திலிருந்து மலர் கையில் கிடைக்க 2 முதல் 6 வருடங்கள்வரை கூட ஆகும். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ 2015-இல் மறைந்தபோது அவர் பெயரிடப்பட்ட Aranda Lee Kuan Yew மலர் முதலில் பூக்க நான்கு ஆண்டுகள் ஆயின.

சிறப்பு விருந்தினர்களின் பெயர்கள் சூட்டப்படுவதற்காக ஆர்க்கிட் கலப்பினங்கள் எப்பொழுதும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த, தாவரவியல் பூங்கா நூற்றுக்கணக்கான கலப்பினங்களை உருவாக்கிப் பெயரிடாமல் வைத்துள்ளது. ஒரு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (1984) அறிக்கை, “சிறப்பு விருந்தினர்கள் வருகை அற்ற நிலையில் சில மலர்கள் பெயரைப் பெறுவதற்கு பத்தாண்டுகளுக்கு மேல் கூட ஆகலாம். ஆனால் ஒரு சில அதிர்ஷ்டக்கார மலர்கள் தங்கள் முதல் மலர்ச்சியிலேயே பெயர்களைப் பெற்றுவிடுகின்றன” என்று குறிப்பிடுகிறது.

விஐபி (Very Important Plants) மலர்களைத் தேர்ந்தெடுத்தல்

சிறப்பு விருந்தினர் ஒருவர் சிங்கப்பூர் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தாவரவியல் பூங்காவிற்கு விருந்தினர் குறித்த விவரங்கள் அடங்கிய ஓர் ஆவணத்தை வெளியுறவு அமைச்சு வழங்குகிறது. அத்தகவல்களின் அடிப்படையில் இதுவரை பெயரிடப்படாத மலர்களில் சில தேர்ந்தெடுக்கப்பட்டு, வெளியுறவு அமைச்சுக்கும் வருகைதரும் விருந்தினரின் பிரதிநிதிகளுக்கும் அனுப்பப்படும். “விரும்பப்படும் நிறங்கள், தவிர்க்க வேண்டிய நிறங்கள் குறித்து அமைச்சு அளிக்கும் அறிவுரைகளுக்கேற்ப சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா ஆர்க்கிட்களைத் தேர்ந்தெடுக்கும்” என்றார் தேசிய ஆர்க்கிட் தோட்டத்தின் உதவி இயக்குநர் சைமன் டான்.

நாட்டின் தலைவர்களுக்கு தகுந்த ஆர்க்கிட்டைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரும் அதிபருமான நெல்சன் மண்டேலா 1997-இல் சிங்கை வந்தபோது அவர் பெயர் சூட்டப்பட்ட Paravanda Nelson Mandela சிவப்பு நிறத்துடன் கூடிய பிரகாசமான பச்சை-மஞ்சள் நிறத்தைக் கொண்டது. அதன் சாயல் தென்னாப்பிரிக்கக் கொடியின் நிறங்களை ஒத்திருந்தது. பிரான்சில் 2005-இல் நடைபெற்ற 18-ஆவது உலக ஆர்க்கிட் மாநாட்டில் இது இரண்டாவது பரிசை வென்றது.

அதேபோல இளவரசி டயானா மறைந்த ஒரு மாதத்தில் ஆர்க்கிட் ஒன்றுக்கு Dendrobium Memoria Princess Diana என்று 1997-இல் பெயரிடப்பட்டது. அந்த மலர் வகை வெண்மையானது என்பதால் அது ஓர் “அரச வம்ச நிறம்” என்று யாம் டின் விங் குறிப்பிட்டார். அது கண்ணிவெடிகளைத் தடை செய்தல் போன்ற மறைந்த வேல்ஸ் இளவரசியின் அமைதி மேம்பாட்டு முயற்சிகளைப் பிரதிபலிப்பதாகவும் கூறிய அவர், “பூவின் இதழ்களில் உள்ள இளஞ்சிவப்பு நிறம் இளவரசியின் ஆளுமையைப் போலவே மென்மையாக, அணுக்கமானதாகத் தோன்றச் செய்கிறது” என்றார்.

சில தலைவர்கள் தங்களுக்கு விருப்பமான ஆர்க்கிட் மலர்களைத் தாங்களே தேர்வு செய்திருக்கிறார்கள். பிரிட்டனின் பிரதமர் மார்கரெட் தாட்சர் 1985-இல் சிங்கப்பூர் வந்தபோது அவராகத் தேர்ந்தெடுத்த மலருக்கு ​​Dendrobium Margaret Thatcher என்ற பெயர் சூட்டப்பட்டது. பூங்காக்கள் பொழுதுபோக்குக்கான ஆணையர் சுவா சியான் எங் “அதன் வீரியம் மற்றும் வளர்ச்சிக்காக அந்த ஆர்க்கிட் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்று விளக்கினார். மான் கொம்புகளை ஒத்த இதழ்களைக் கொண்ட அந்த மலர் 1987-இல் சிங்கப்பூர் ஆர்க்கிட் கண்காட்சியில் மூன்று பரிசுகளை வென்றது.

பூமலையில் ராணி இரண்டாம் எலிசபெத் (1972). வலப்பக்கம் அவர் பெயரிடப்பட்ட Dendrobium Elizabeth ஆர்க்கிட் மலர்

ஜப்பானின் பட்டத்து இளவரசர் நருஹிட்டோ 1993-இல் மசாகோ ஓவாடாவை மணந்தபோது, ​​அப்போதைய சிங்கப்பூர் அதிபர் வீ கிம் வீ, திருமணப் பரிசாக டோக்கியோவுக்கு ஓர் ஆர்க்கிட்டை அரச தம்பதிக்கு விமானத்தில் அனுப்பிவைத்தார். Dendrobium Masako Kotaishi Hidenka என்ற பெயரிடப்பட்ட இந்த வெள்ளை ஆர்க்கிட் (Dendrobium Her Imperial Highness the Crown Princess Masako என்றும் அழைக்கப்படுகிறது) பட்டத்து இளவரசி வெவ்வேறு ஆர்க்கிட்களின் புகைப்படங்களைப் பார்த்த பிறகு தேர்ந்தெடுத்த ஒன்றாகும்.

ஓர் ஆர்க்கிட் மலர் பெயரிடப்பட்டவுடன் லண்டனில் உள்ள ஆர்க்கிட் கலப்பினங்களுக்கான அனைத்துலகப் பதிவு ஆணையமான ராயல் தோட்டக்கலைச் சங்கத்தில் பதிவு செய்யப்படுகிறது. சிறப்பு விருந்தினர்களுக்குக் குறிப்பிட்ட ஆர்க்கிட் கலப்பினத்தின் பெற்றோர், தோற்றம், மகரந்தச் சேர்க்கை தேதி, முதலில் மலர்ந்த தேதி போன்ற விவரங்களுடன் அதிகாரப்பூர்வ பிறப்புச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. விரும்பினால் அவர்கள் அந்த ஆர்க்கிட் மலரையும் அவர்களுடன் வைத்திருக்கலாம்.

சிறப்பு விருந்தினர்களுக்குக் குறிப்பிட்ட ஆர்க்கிட் கலப்பினத்தின் பெற்றோர், தோற்றம், மகரந்தச் சேர்க்கை தேதி, முதலில் மலர்ந்த தேதி போன்ற விவரங்களுடன் அதிகாரப்பூர்வ பிறப்புச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

தலைவர்கள் தங்கள் பெயரிடப்பட்ட ஆர்க்கிட்டை தங்கள் நாட்டில் வளர்க்க விரும்பினால் சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா அவர்களுக்கு ஆர்க்கிட் செடியை எவ்வாறு பராமரிப்பது என்பதற்கான வழிமுறைகளுடன் மலர்த்தண்டுகளுடன் கூடிய குறிப்பிட்ட ஆர்க்கிட் செடியை வழங்கும். வெட்டப்பட்ட செடியின் தண்டும் மலர்களும் ஒரு பெட்டியில் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படும். அவர்கள் நாட்டில் கோரப்படும் அனைத்து தாவர இறக்குமதி ஆவணங்களும் முழுமையானதாகவும் ஒழுங்குடனும் இருப்பதையும் சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா உறுதி செய்கிறது.

தலைவர்கள் வருகையின்போது தாவரவியல் பூங்காவின் மற்ற அம்சங்களையும் பார்வையிடுவதுண்டு. சீன அதிபரும் அவரது மனைவியும் 2015-இல் வருகை தந்ததன் நினைவாக Papilionanda Xi Jinping-Peng Liyuan எனப் பெயரிடப்பட்டதை அடுத்து தாவரவியல் பூங்காவில் உள்ள ‘கார்னர் ஹவுஸ்’ உணவகத்தில் அவர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. பிரதமர் லீ சியென் லூங்கும் அவரது மனைவி ஹோ சிங்கும் விருந்தளித்தனர். அந்த மலர் சிவப்புப் புள்ளிகளுள்ள இளஞ்சிவப்பு இதழ்களும், ஆரஞ்சும் சிவப்பும் கலந்த சூலகமும், ஆரஞ்சு கலந்த மஞ்சள் நடுப்பகுதியும் கொண்டது.

பிரபலங்களுக்கான ஆர்க்கிட் மலர்கள்

தலைவர்கள், அரச குடும்பம், உயர்பதவியாளர்கள் மட்டுமின்றி, நாட்டிற்குப் பெருமை சேர்த்த பிரபலங்கள், சிங்கப்பூரர்களின் பெயர்களையும் சூட்டும் வகையில் இவ்வழக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர்ப் பாடகி ஸ்டெஃபனி சன் ஓர் ஒலிப்பதிவுக் கலைஞராக வெற்றி அடைந்ததைப் போற்றும் வகையில் 2006-இல் தன் பெயரில் ஆர்க்கிட் மலரைப் பெற்ற முதல் சிங்கப்பூர்ப் பிரபலம் ஆனார். சன் ஒரு தூய வெள்ளைக் கலப்பினத்தைத் தேர்ந்தெடுத்தார். அதற்கு Dendrobium Stefanie Sun என்று பெயரிடப்பட்டது. “நம் பெயரில் ஒரு பூ இருப்பது சிறப்பு, பெருமையும் கூட. தூய வெள்ளை ஆர்க்கிட் மிகவும் எளிமையானதாகவும் நேர்த்தியாகவும் தோன்றியது” என்றார்.

ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் (2016) முறையே ஜோசப் ஸ்கூலிங், யிப் பின் ஷியு ஆகியோரின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக 2017-இல் இரண்டு விளையாட்டு வீரர்களும் தங்கள் சொந்த ஆர்க்கிட்களால் கௌரவிக்கப்பட்டனர். Dendrobium Joseph Schooling மலரின் முறுக்கிய இதழ்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். Dendrobium Yip Pin Xiu மலரோ மங்கலான ஊதா நிறத்துடன் வெள்ளை இதழ்களில் மெஜந்தா நிறமும் ஊடுருவியிருக்கும்.

ஹாங்காங் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான், பாடகர்கள் எல்டன் ஜான், ரிக்கி மார்ட்டின், ஓபரா பாடகர் ஆண்ட்ரியா போசெல்லி, கொரிய நடிகர்கள் க்வான் சாங் வூ, பே யோங் ஜுன், ஆடை வடிவமைப்பாளர் மைக்கேல் கோர்ஸ் போன்ற சர்வதேச பிரபலங்களுக்காக ஆர்க்கிட் மலர்கள் பெயரிடப்பட்டுள்ளன. Dendrobium Jackie Chan சானை மிகவும் கவர்ந்தது. அவர் 2005-இல் சிங்கை வந்தபோது அம்மலரை அரவணைத்து ஒரு படம் எடுத்துக்கொண்டார். அந்த மலரின் இதழ்கள் “டிராகனின் மூக்கு போல்” உள்ளதாக வருணிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற முதனியலாளரும் (primatologist) மானுடவியலாளருமான ஜேன் கூடாலின் பெயர், “இயற்கை பாதுகாப்பு மற்றும் விலங்கு நலனுக்கான” அவரது அசாதாரணப் பங்களிப்புகளுக்காக ஓர் ஆர்க்கிட்டுக்குச் சூட்டப்பட்டுள்ளது.

நிகழ்வுகள், முக்கிய இலக்குகளுக்கான மலர்கள்

சிங்கப்பூரில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் பெயரிலும் ஆர்க்கிட்கள் பெயரிடப்படுகின்றன. இவை தேசிய ஆர்க்கிட் தோட்டத்தில் உள்ள டான் ஹூன் சியாங் மிஸ்ட் ஹவுஸில் வைக்கப்பட்டுள்ளன. நான்காவது ஆசியான் உச்சிமாநாடு 1992-இல் நடைபெற்ற ​​ஆசியான் தலைவர்களின் மனைவிகளும் இதர அமைச்சர்களும் Dendrobium Asean Lady என்ற மலரை வெளியிட்டனர். உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை ஒட்டி Mokara WTO என்ற பெயர் 1996-இல் ஒரு மலருக்குச் சூட்டப்பட்டது.

சிறப்பான இலக்குகளை எட்டும்போது அவற்றை நினைவுகூரும் வகையிலும் ஆர்க்கிட்கள் பெயரிடப்பட்டுள்ளன. சிங்கப்பூர் சுதந்திரப் பொன்விழாவை 2015-இல் கொண்டாடியபோது ​​பிரதமர் லீ சியென் லூங் SG50 ஆர்க்கிட்க்கு அதிகாரப்பூர்வமாக Papilionanthe Singapore Golden Jubilee orchid என்று பெயரிட்டார். ஊதா, வெள்ளை நிற பூக்கள் கொண்ட இந்த ஆர்க்கிட், சிங்கப்பூரின் தேசிய மலரான Papilionanthe Miss Joaquim (முன்பு வாண்டா மிஸ் யோக்கிம் என அறியப்பட்டது) மலரின் வம்சத்தில் வந்தது நாட்டின் வலிமையான வளர்ச்சியைக் குறிக்கிறது.

ஒரு கொத்தில் புதிய மலர்கள் பூக்கும்போது பழைய மலர்கள் வாடாத Aranthera Anne Black பெயரிடப்பட்ட முதல் கலப்பின ஆர்க்கிட்

அதே ஆண்டில் சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 50 ஆண்டுகால அரசநய உறவுகளைக் கொண்டாடும் வகையில் Dendrobium Golden Friendship வெளியிடப்பட்டது. சிங்கப்பூர்க் கலப்பினத்திலிருந்தும் ஆஸ்திரேலிய இனத்திலிருந்தும் வளர்க்கப்பட்ட இந்த மலருக்கு அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபட் பெயரிட்டார்.

ஆர்க்கிட் வளர்ப்பில் முன்னோடியான சிங்கப்பூர்

ஆர்க்கிட் வளர்ப்பில் சிங்கப்பூரின் புகழ் 1950களில் தொடங்கியது. ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, வர்த்தகரும் வழக்கறிஞருமான டான் ஹூன் சியாங் மலாயன் ஆர்க்கிட் சங்கத்தின் (இன்றைய தென்கிழக்காசிய ஆர்க்கிட் சங்கம்) தலைவராக ஆனார். அவர் உருவாக்கிய ஒரு கலப்பினம்தான் ஆர்க்கிட் வளர்ப்பில் சிங்கையை முன்னோடியாக்கியது. சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் 1949-இல் விதைக்கப்பட்ட ஆர்க்கிட் செடிகள் வளர்ந்து 1952-இல் மலர்ந்தன.

டான் மறைந்த தனது தந்தையின் நினைவாக அதற்கு Papilionanda Tan Chay Yan என்று பெயரிட்டார். டானின் தந்தை புகழ்பெற்ற டான் டோக் செங்கின் பேரன். அந்த வெளிறிய இளஞ்சிவப்பு ஆர்க்கிட் 1954-இல் செல்சீ மலர்க் கண்காட்சியில் ராயல் தோட்டக்கலை சங்கத்திடமிருந்து முதல்தர சான்றிதழைப் பெற்றது. இந்த ஆர்க்கிட் உலகெங்கிலும் உள்ள ஆர்க்கிட் வளர்ப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள ஆர்க்கிட்களைப் பார்க்க பலர் வந்தனர். டான் பெயரிலேயே Papilionanda Tan Hoon Siang என்ற மலரும் உண்டு.

சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா முயற்சிகள் ஆர்க்கிட் அரசநயத்தின் தொடர்ச்சியான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த உதவுகின்றன.

அப்போதிருந்து சிங்கப்பூர் ஆர்க்கிட் வளர்ப்பதில் நிபுணத்துவம் பெற்றதாக அறியப்படுகிறது. சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா புதிய இனங்கள், கலப்பினங்களைப் பெறுவதைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், ஆர்க்கிட் மரபணுக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு விதை வங்கியையும் அமைத்துள்ளது. இம்முயற்சிகள் ஆர்க்கிட் அரசநயத்தின் தொடர்ச்சியான நம்பகத்தன்மையையும் தேசிய ஆர்க்கிட் தோட்டத்தில் சேகரிப்புகளின் செழுமையையும் உறுதிப்படுத்த உதவுகின்றன. இன்றுவரை ஆர்க்கிட் கலப்பினத் திட்டம் 630க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கலப்பினங்களை உருவாக்கியுள்ளது.

பிடித்த பிரபலத்தின் பெயரிடப்பட்ட ஆர்க்கிட் மீது சிலருக்குப் பெரும் ஆர்வம் இருந்தாலும் இந்தச் செடிகள் விற்பனைக்குக் கிடையாது. தேசிய பூங்காக் கழகமும் கரையோரத் தோட்டங்களும் இணைந்து 2015-இல் கூறியபடி: “இந்த சிறப்பு ஆர்க்கிட் மலர்கள் நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடையாளமாகத் தனிநபர்களின் பெயர்களால் பெயரிடப்படுகின்றன. அவ்வாறு பெயரிடப்பட்ட ஒவ்வொரு ஆர்க்கிடும் பிரத்தியேகமானது என்பதால் விற்பனைக்கு இல்லை. எனவே இந்த அழகான மலர்களை ரசிக்க ஒரேவழி தேசிய ஆர்க்கிட் தோட்டத்திற்குச் செல்வதுதான்.”