
நலம் விழைதல்

என் மனத்தோட்டத்தில் இப்போது இலையுதிர்காலம்.
உனக்கு நான் எந்தப் பூங்கொத்தைக் கொணர்வேன்?
எனினும்…
இருண்ட என் மனவீட்டின் முற்றத்தில்..
உன் வருகைக்காக…
என்னிரு கண்களில்
பனித்துளிகள் விண்மீன்களாய் ஒளிவீசும்.
அவை உன் காதில் மலரினும் மென்மையாய்ச் சொல்லும்
“கொஞ்சும் தென்றலில் இனிய கீதங்கள் இசைக்க
நறுமணங்கள் பொங்கும் வண்ணமயமான வாழ்வை விரும்பும் நீ
விரைவில் நலம் பெறுவாயாக!!
உனக்காக, கிறங்கடிக்கும் உன் புன்னகைக்காக,
அங்கே ஒரு வசந்தகாலம் காத்திருக்கிறது”
மூலம்: Ayadat (ஹிந்தி)
கவிஞர் பற்றிய குறிப்பு

பாகிஸ்தானின் மிகச்சிறந்த உருதுக் கவிஞர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் பர்வீன் ஷகீர். நவீன உருதுக் கவிதைகளின் முன்னோடியாகக் கருதப்படுபவர். பெண்ணின் உடல், மனத் தேவைகளை வெளிப்படையாகவே பேசித் தன் கவிதைகளில் இருக்கும் பெண்ணியத்தை முன்னிறுத்தியவர். 42 வயதிலேயே அகால மரணமடைந்தாலும் உருதுக் கவிதை உலகில் கம்பீரமாக வலம் வருபவர்.