உதிரிப்பூக்கள்

0
281

காகிதக் கழிவிலிருந்து மின்கலங்கள்!

படம் நன்றி: தேசிய தொழில்நுட்பப் பல்கலை

தேசிய தொழில்நுட்பப் பல்கலை விஞ்ஞானிகள், ஒருமுறை பயன்படுத்தும் காகிதப்பைகள், அட்டைப் பெட்டிகளில் இருந்து லித்தியம் அயனி மின்கலங்களின் ஒரு முக்கிய அங்கத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். காகிதத்தைத் தூய கரிமமாக மாற்றும் செயல்முறையின் (carbonisation) மூலம் காகிதத்தின் இழைகளை மின்முனைகளாக மாற்றியுள்ளனர். இவை கைப்பேசிகள், மருத்துவக் கருவிகள் போன்றவற்றிற்கான மின்கலங்களாக உருவாக்கப்படலாம். காகிதத்தை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது தூய கரிமம், நீராவியும் உயிரி எரிபொருள் எண்ணெய்களும் கிடைக்கின்றன. ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் இந்தச் செயல்முறையில் மிகக் குறைவான நச்சுக் கரிமமே வெளியாகிறது. இப்படி உருவான கார்பன் நேர்மின்முனைகள் நீண்ட ஆயுள், நெகிழ்வுத்தன்மையுடன் சாதகமான மின் வேதியியல் பண்புகளும் கொண்டவை. இம்மின்கலங்கள் 1,200 முறைவரை மின்னேற்றம் செய்யப்படலாம். இது தற்போதைய மின்கலங்களை விடவும் இரண்டு மடங்கு அதிகம் .கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இத்தகைய உயர்சுழற்சிப் பொருட்கள் ஒரு சாதனைதான்.

கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேரும் பாதையில் ‘கெபாயா’

படம் நன்றி: தி ஸ்டிரெயிட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், புருனை, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து யுனெஸ்கோ தொட்டுணரமுடியாத கலாச்சார மரபுடைமைப் பட்டியலில் (UNESCO Intangible Cultural Heritage) தெற்காசிய பாரம்பரிய உடையான ‘கெபாயா’வைச் சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைக்கும் என்று தேசிய மரபுடைமைக் கழகம் தெரிவித்துள்ளது. இது சிங்கப்பூரின் முதல் பன்னாட்டு முன்மொழிவு என்பதோடு நான்கு நாடுகளை உள்ளடக்கிய முதல் முன்மொழிவு என்ற பெருமையையும் கொண்டது. தென்கிழக்கு ஆசியாவின் கலாச்சாரங்களின் தனித்துவமான கலவையைப் பிரதிபலிக்கும் பெண்களின் பாரம்பரிய ஆடையான ‘கெபாயா’ முதலில் மலேசியாவால் முன்மொழியப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவும் இந்தப் பரிந்துரையில் ஐந்தாம் நாடாக இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடல் நோய்களுக்கு மீநுண் துகள் சிகிச்சை

படம் நன்றி: சேனல் ந்யூஸ் ஆசியா

வயிறு, குடல் தொடர்பான நாட்பட்ட நோய்களுக்கு சிங்கை தேசியப் பல்கலையின் மருத்துவ ஆய்வாளர்கள் பாலிலிருந்து பிரித்தெடுத்த ஒரு வகை மீநுண் துகள்கள் (nano particles) தீர்வாக இருக்கலாம். இந்தத் துகள்கள் லாக்டோஸ் கூறுகளைக் கொண்ட பாலில் இருந்து சில தொடர் செயல்முறைகள் மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றன. இவை மனித முடியின் அகலத்தை விட ஆயிரம் மடங்கு சிறியவை என்பதால் எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். மாட்டுப்பால், ஆட்டுப்பால், தாய்ப்பால் போன்றவற்றிலிருந்து இவற்றைப் பெறலாம் என்று கண்டறிந்துள்ளனர். இவை மிகச்சரியாக நோயுற்ற இடங்களில் சென்று செயல்படுவதால் நோய் குணமாகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்கின்றனர்.

சிங்கையில் முதல் மெய்நிகர் ஒலிம்பிக் போட்டிகள்

படம் நன்றி: அனைத்துலக ஒலிம்பிக் மன்றம்

மெய்நிகர் விளையாட்டு களுக்கான (eSports) முதல் ஒலிம்பிக் போட்டி 2023 ஜூன் 22 முதல் 25 வரை சிங்கப்பூரில் நடைபெறும் என்று அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் அறிவித்தது. இந்த ஒலிம்பிக் வாரம் சிறந்த மெய்நிகர் விளையாட்டுகளைக் காண்பிக்கும் நான்கு நாள் திருவிழாவுடன், அண்மைய தொழில்நுட்பங்கள், குழு விவாதங்கள், கல்வி அமர்வுகள், போட்டிகள் எனப் பலவற்றை அடக்கியதாக இருக்கும். இந்நிகழ்வை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, ஸ்போர்ட் சிங்கப்பூர், சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் ஆகியவை இணைந்து நடத்தும். இந்த விளையாட்டுத் துறையில் சிங்கை ஏற்கெனவே சில அனைத்துலகப் போட்டிகளை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.