ஒருவெள்ளி ‘அங்பாவ்’!

0
529


என் பள்ளி நாட்களில், சீனப் புத்தாண்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே, எங்கள் அண்டைவீட்டினராக இருந்த சீனக்குடும்பத்தினர் ‘லவ் லெட்டர்’ தயாரிக்கத் தொடங்கிவிவர். முன்வராந்தாவில் ஒரு கரியடுப்பை வைத்து லவ் லெட்டர் வேலை தொடங்கியதும் நானும் என் சகோதரியும் அந்த வாசனையால் ஈர்க்கப்பட்டு அங்கு சென்றுவிடுவோம். வெந்ததும் எங்களுக்கும் தருவார்கள், அதை அப்படியே சுடச்சுட விழுங்குவோம். பிறகு சிவப்புத் தாளை விதவிதமான வடிவங்களில் வெட்டி, கயிறுகளில் ஒட்டி அவர்கள் வீடெங்கும் அலங்கரிப்போம். பெரிய சிவப்பு லாந்தர்களை வீட்டின்முன் தொங்கவிடுவார்கள். அப்போதே அச்சூழல் விழாக்கோலம் பூண்டு களைகட்டத் தொடங்கிவிடும்.

குடும்ப ஒன்றுகூடல் இரவு விருந்துக்காக அவர்கள் வீட்டுக்கு வரும் உறவினரின் பிள்ளைகளுடன் ஒளிந்துபிடித்து விளையாடுவோம். சீனப்புத்தாண்டு அன்று மாண்டரின் ஆரஞ்சுடன் வேறுபல பொருட்களும் கலந்த பரிசுப்பையை எங்களுக்கு அளிப்பார்கள்.

மகேஸ்

அதையெல்லாம்விட அந்தப் பையுடன் அளிக்கப்படும் ஒரு வெள்ளி அங்பாவ் மேல்தான் எங்கள் குறி! மாலையில் அவர்களுடன் பூத்திரிகள் கொளுத்தி விளையாடுவோம். நாங்கள் வசித்த தோ பாயோ வட்டாரத்தின் சீனப் பெருநாள், தாளலயத்துடன் சிங்க நடனம், கடல்நாக நடனம், எளிமையான விளக்கொளி அலங்கரிப்புகள் என்று பொலிவுடன் மினுக்கும். அண்டைவீட்டுச் சீன நண்பர்களுடன் சேர்ந்து சீனப் பெருநாளையும் விடுமுறைக் காலத்தையும் கழித்தது இனிமையான நினைவுகளாக எனக்குள் நீடிக்கின்றன.