சிங்கப்பூரின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் சீனப் பெருநாள்

லோ ஹெய் (Lo hei) என்று அழைக்கப்படும் பல்வேறு உணவுப் பொருட்களின் வண்ணமிகு கலவையை சாப் ஸ்டிக் குச்சிகளால் உயரத் தூக்கி அதிர்ஷ்டத்தையும் சுபிக்‌ஷத்தையும் வரவேற்பது சீனப்புத்தாண்டின் ஒரு முக்கிய அம்சம். சீனர் வீடுகளில் மட்டும் இருந்த இவ்வம்சம் தற்போது நிறுவன, சமூக விருந்துகளிலும் அனைவரும் பங்கேற்கும் நிகழ்வாகியுள்ளது. பொங்கலின்போது நம் வீடுகளில் அனைத்துக் காய்கறிகளையும் கொண்டு கூட்டுக்கறி சமைத்து உண்பதுபோல லோ ஹெய்யை சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் குறியீடாகவும் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

வண்ணவண்ண விளக்குகள் பழைய சிங்கப்பூரில் இல்லை. எழுபதுகளில் சிறிய அளவில் தொடங்கி இப்போது கனவுலகைப்போல ஜொலிக்கும் அலங்காரங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக அந்த ஆண்டுக்கான விலங்கின் உருவங்கள் விதவிதமாக கண்ணைப் பறிக்கின்றன. நகர மன்றம், மக்கள் கழகம் ஆகிய அமைப்புகளும் இவ்வலங்காரங்கள் அமைப்பதில் பங்கேற்கின்றன. சுற்றுப்பயணிகளும் வெகுவாகக் கவரப்படுகின்றனர். ஐம்பது அறுபதுகளில் வாழ்த்து அட்டைகள் அனுப்புவதோ வாழ்த்துப் பரிசுக் கூடைகள் (hampers) அனுப்புவதோ கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. இன்று அது வழக்கமானதாகவும் மிகவும் விரும்பப்படுவதாகவும் மாறிப் பெரும் வணிகத் தொழிலாகவும் ஆகிவிட்டது. இரவுச்சந்தைகள் தொடக்க காலங்களில் பெரிய அளவில் இல்லை. இப்போது அவை தீவெங்கும் களைகட்டுகின்றன.

சிங்க நடனம் சீனப்புத்தாண்டின் மற்றொரு முத்திரை நிகழ்வு. துரதிருஷ்டங்களைத் துரத்தியடிக்கும் இச்சிங்கங்கள் பழங்காலத்தைப்போல சீனர் வீடுகளில் மட்டுமின்றி, தற்போது பல்லின மக்கள் இணைந்துவாழும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில், அனைவரது வீடுகளுக்கும் சென்று ஆடுகின்றன. என் வீட்டுக்கும் எத்தனையோ தடவை வந்துள்ளன. சிங்க நடனம் ஆடுவோருக்கு நாங்களும் ‘அங்பாவ்’ எனப்படும் பண அன்பளிப்பை அளிப்பதுண்டு.

ஒருவருக்கொருவர் அங்பாவ் வழங்குவதற்காகப் புத்தம் புதிய 2 வெள்ளி நோட்டுக்களுக்கு வங்கிகளில் கூட்டம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அலைமோதுகிறது. வங்கிகளும் இதனை ஒரு வியாபார உத்தியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒவ்வொரு சீனப்புத்தாண்டிலும் அந்தந்த ஆண்டின் விலங்கு உருவம் பொறித்த நினைவு நாணயங்கள் வெளியிடுவது நாடு சுதந்திரம் பெற்றபிறகு வழக்கத்திற்கு வந்தது. இந்த நாணயங்களைப் பெறுவதற்கு வங்கிகளில் கூட்டம் அலைமோதும். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன். அவையெல்லாம் தற்போது என் பேத்தி வசம்.

மு. கார்மேகம்

இம்மாற்றங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவை சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியையும், அதனுடன் இணைந்து நம் சமுதாயம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சிகளையும், அவற்றின் வெவ்வேறு வெளிப்பாடுகளையும் பிரதிபலிக்கின்றன என்று நினைக்கிறேன்.