சிங்கப்பூர் சுகப்பிரசவம் அல்ல!

சிங்கப்பூரில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள் வரையிலான காலகட்டத் தமிழர் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை இனி பார்க்கலாம்.

கப்பல் கட்டணம் 1887இல் நாகப்பட்டினத்திலிருந்து பினாங்குக்கு 8 ரூபாய், சிங்கப்பூருக்கு 11 ரூபாய். மறு வழியில், நாகப்பட்டினத்திற்கு சிங்கப்பூரிலிருந்து 11 வெள்ளி, பினாங்கிலிருந்து 8 வெள்ளி கட்டணம். அவசரமாகத் தேவைப்படும் தமிழ்க் கூலிகளை அதிக அளவில் கொண்டுவர 1887லிருந்து மூன்றாண்டுக்குக் கட்டணம் 15 ரூபாயிலிருந்து 8 ரூபாய்க்குக் குறைக்கப்பட்டது.

இந்தியக் கூலித் தொழிலாளிக்கு 1830-40களில் மாதச் சம்பளம் 3 வெள்ளி. தினக்கூலி 9 முதல் 13 காசு. சாதாரண உடலுழைப்பு ஊழியரின் மாதச் சம்பளம் 1890களில் 8 முதல் 10 வெள்ளி. போலீஸ்காரர் சம்பளம் 12 வெள்ளி. அக்கால நாணய மதிப்பு 100 வெள்ளிக்கு 174 ரூபாய்.

எழுத்தர், மொழிபெயர்ப்பாளர் ஆரம்ப ஊதியம் 30 வெள்ளி, 65 வெள்ளி வரை அது உயரும். ஆங்கிலம், தமிழ், இந்தி, மலாய், போர்ச்சுகீஸ் மொழிகளில் தேர்ச்சி பெற்ற ஜே.ஏ.மார்ஷ் என்ற ஆங்கிலேய மொழி பெயர்ப்பாளருக்கு 1867இல் 113 வெள்ளி. உச்ச நீதிமன்றத் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஜான் ஹென்றி லிங்க்கனுக்கு 1893இல் 150 வெள்ளி. சிங்கப்பூர் ஆளுநர் சம்பளம் மாதம் 2000 வெள்ளி, உதவிப்படி 1000 வெள்ளி.

ஏறக்குறைய 160 ஆண்டுகட்குமுன் பவுன் விலை 1857இல் நாலரை வெள்ளி, அதுவே 1903இல் 12 வெள்ளி 50 காசு. அமெரிக்கப் பங்குச் சந்தை அதள பாதாளத்துக்குப் போன 1929இல் 8 வெள்ளி 50 காசு. பிறகு 1955இல் 25 வெள்ளி.

அன்றைய சிங்கப்பூரில் தமிழருக்கு மாட்டு வண்டிதான் பெரிய சொத்து. வியாபாரிகள் சரக்கு ஏற்றிச் செல்ல அதுவே மலிவான வழி. மாட்டுவண்டிச் சொந்தக்காரர் 158 பேர். மாட்டுவண்டி ஓட்டுவோர் 1,325 பேர். இது 1870 நிலவரம். பசு மாடு வளர்த்தவரும் பால் விற்றவரும் சேர்ந்து 152 பேர். மாட்டுக்குப் புல்கட்டு விற்றவர் 486 பேர். வடை பலகாரம் தின்பண்டம் விற்றவர் 465 பேர். நாணய மாற்றுத் தொழிலில் ஈடுபட்ட இந்தியர் 112 பேர். துணி வெளுப்போர் 400 பேர்.

சிங்கை நேசன் மாட்டுவண்டித் தொழிலிலேயே அநேகர் இறங்கிப் போட்டி போட்டுக் கூலியைக் குறைத்து விடுவதைக் கண்டித்தது. தமிழ்ச் சிறுவர்கள் பள்ளிப் படிப்பில் அக்கறை காட்டாமல் எப்படியும் மாட்டுவண்டி ஓட்டிப் பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் அந்தக் காலத்தில் பரவலாக இருந்தது என்பதை மகதூம் சாயபு 1882ஆம் ஆண்டில் நடத்திய ஞானசூரியன் வாரப் பத்திரிகை தெரிவித்தது.

அன்றைய சிங்கப்பூரில் தமிழருக்கு மாட்டு வண்டிதான் பெரிய சொத்து.
 வியாபாரிகள் சரக்கு ஏற்றிச் செல்ல அதுவே மலிவான வழி.

ஓரியன்ட்டல் வங்கி 1849இல் தமிழ், வங்காளம், மலாய், சீனம் ஆகிய நான்கு மொழிகளும் இடம்பெற்ற 5 வெள்ளி, 100 வெள்ளி நோட்டுகளைச் சிங்கப்பூரில் வெளியிட்டுச் சாதனை புரிந்தது. நான்கு ஓரங்களிலும் நான்கு மொழிகள் இடம்பெற்றன. தமிழ் மட்டுமே அறிந்த செட்டிமாரின் வட்டித் தொழில் அப்போது செழிப்பாக நடைபெற்றது. சிங்கப்பூர் சுல்தான் அலி உள்ளிட்ட பல இனப் பிரமுகர்கள் செட்டிகளிடம் வட்டிக்கு வாங்குவது அப்போது சர்வ சாதாரணம். கொடுத்த பணத்தைக்கறாராகத் திரும்பப் பெறுவதற்கு வழக்குப் போடவும் தயங்கவில்லை செட்டிமார்.

இந்தியாவுக்கு அனுப்பும் கடிதங்களும் இந்தியாவிலிருந்து வரும் கடிதங்களும் அதிகரிக்கின்றன. அதனால் கூடுதலாக இரண்டு தபாற்காரர்களை நியமித்துக் கடிதங்களைப் பட்டுவாடா செய்கிறோம்.

இந்தியாவிலிருந்து வந்த சிறைக் கைதிகளின் உழைப்பைக் குறிப்பிடாமல் பண்டைய சிங்கப்பூரின் வளர்ச்சியைப் பேசமுடியாது. பென்கூலின், பினாங்கு பகுதிகளுக்கு 1790களிலேயே கைதிகள் வந்துவிட்டார்கள். சிங்கப்பூருக்கும் மலாக்காவுக்கும் 1825இல் கைதிகளின் முதல் அணி வந்தது. சிங்கப்பூருக்கு மட்டும் 1840-60 காலகட்டத்தில் 1,200, 1,500, 2,275 என்று அணியணியாக அளவில் அவர்களின் வருகை தொடர்ந்து பெருகியது. ஐரோப்பியச் சமூகத்தின் கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் 1873 வரை கைதிகள் வந்த வண்ணம் இருந்தார்கள்.

காடுகளை அழித்துச் சாலைபோடுதல், பாலம் கட்டுதல், கட்டடம் எழுப்புதல் அவர்களின் தலையாய பணி. முக்கியமாக 1860களில் ஃபோர்ட் கேனிங் (Fort Canning) பாசறை, புதிய நீதிமன்றம், பேர்ல்ஸ் குன்றில் (Pearl’s Hill) பெரிய மருத்துவமனை, கவர்னர் மாளிகை, செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம், சிங்கப்பூர் ஆற்றின் குறுக்கே கத்ரிபாலம் (Guthrie’s Bridge) போன்ற பெரும் கட்டுமானப் பணிகளைக் கைதிகள் நேர்த்தியாக முடித்துக் கொடுத்தார்கள்.

அன்றைய அரசு இல்லத்தின்முன் (இன்றைய இஸ்தானா) சுண்ணாம்புக் கலவை அரைவையில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கூலித்தொழிலாளர்கள் (19ஆம் நூற்றாண்டு சிங்கப்பூர்)

கைதிகளின் உழைப்பு எவ்வளவு பெறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக 1851-1852இல் இங்கிருந்த 1,470 கைதிகள் செய்த பல்வேறு பணிகளின்மொத்த மதிப்பு 95,844 ரூபாய் 6 அணா 6 காசு என்பதை வரலாற்றாளர் குறிப்பிடுவதுண்டு. இதில் அதிகபட்சமாக சாலை நிர்மாணிப்புக்கு ரூ 27 ஆயிரமும், கடல் தடுப்புச் சுவருக்கு ரூ 25 ஆயிரமும், படைவீரர் குடியிருப்புக்கு ரூ 22 ஆயிரமும், போட் கீ (Boat Quay) தடுப்பு மதிலுக்கு ரூ 10 ஆயிரமும் செலவானது.

நில அளவையாளர், தச்சர், கொத்தனார், கருமார், செங்கல் சூளை போடுவோர், சிமிட்டி சுண்ணாம்பு கலப்போர், தையற்காரர், மரம் வெட்டுநர், கூடைபின்னுவோர், படகு செப்பனிடுவோர், பாலம் பழுது பார்ப்போர், பெட்ரா பிராங்க்கா (Pedra Branca) கலங்கரை விளக்கப் பாறை உடைப்போர், விறகு சுமப்போர், புலி, நாய் கொல்வோர் என்று பலதரப்பட்ட வேலைகளைக் கைதிகள் மேற்கொண்டார்கள். தெரு பெருக்கிச் சுத்தம் செய்வதும் புல் வெட்டுவதும் பெண் கைதிகளின் வேலைகளாக இருந்தன. கைதிகளைச் சிங்கப்பூர் அரசாங்கம் பயன்படுத்தும் முறைகளை நேரில் அறிய மற்ற வட்டாரங்களிலிருந்து அதிகாரிகள் இங்கு வந்து செல்வதுண்டு.

விலைவாசி நிலவரம் (1894): கீரை முதல் கஞ்சா வரை
ஒரு கட்டுக் கீரை...................		1	காசு
வெற்றிலைக் கட்டு............		1	காசு
முட்டை...........................		2	காசு
தீப்பெட்டி.........................		3	காசு
தேங்காய்	................................	5	காசு
பால் டின்.................................	22	காசு
கோழி....................			10முதல் 50 காசு
கஞ்சா உருண்டை...........			26வெள்ளி 50 காசு

கீழுள்ள பொருட்கள் ஒரு கட்டி (சுமார் அரை கிலோ):
கத்தரிக்காய், வெண்டைக்காய்.............		2	காசு
உப்பு...............................................		2	காசு
ரங்கூன், சியாம் அரிசி......................		5	காசு
  உருளைக்கிழங்கு............................ 		5முதல் 8 காசு
வெங்காயம்....................................		10	காசு
சர்க்கரை.........................................		10	காசு
மீன்......................................			10முதல் 25 காசு

சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் செய்திப் பத்திரிகை சிங்கை வர்த்தமானி. சி.கு.மகுதூம் சாயபும் அவருடைய பெரியப்பா மகன் நா.மு.முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் சேர்ந்து 1875 நடுப்பகுதியில் சொந்த அச்சகத்துடன் தொடங்கிய பத்திரிகை இது. இதன் பிரதி ஒன்றுகூட இன்றுவரை கிடைக்கவில்லை. இது வார இதழாக இருக்கலாம். ஆரம்பித்த ஐந்தாறு மாதம் கழித்து உரிமையாளர் இருவரும் ஒத்துப்போக முடியாமல் பத்திரிகையை நிறுத்த வேண்டியதாயிற்று. அதற்காக மகுதூம் சாயபு அன்றைய சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் அப்சர்வர் (Straits Observer) ஆங்கிலப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார்.

மகுதூம் சாயபு குத்தலும் கிண்டலுமாக எழுதுவதில் மிகவும் ஆர்வமுடையவர். ஒருவரை ஒருவர் குற்றஞ்சொல்லி அழிந்துபோகவே சிங்கை வர்த்தமானி நின்றுவிட்டதெனப் பின்னாளில் அவர் எழுதியிருக்கிறார். 1875ஆம் ஆண்டுக் கல்வியறிக்கையில் பள்ளிக் கண்காணிப்பாளர் ஏ.எம். ஸ்கின்னர், “சிங்கை வர்த்தமானி என்ற முதல் தமிழ்ப் பத்திரிகை அவ்வாண்டு நடுப்பகுதியில் வெளியானது, ஆனால் முறையான தேதியில் வெளிவருவதில்லை, ஒருவரை ஒருவர் தாக்கி எழுதும் கடிதங்கள் நிறைய இடம்பெற்றன, விரைவில் அப்பத்திரிகை நின்றுவிட்டது” என்று தெரிவித்தார். “எந்த நாய் எப்படி குரைத்தாலும் நாம் கவனியோம். இரண்டு கால் நாய் ஒன்று ஊரை விட்டு ஓடிவிட்டதால் வழக்கிலிருந்து தப்பிவிட்டது” என்றெல்லாம் சாயபு பின்னாளில் சிங்கை நேசன் பத்திரிகையிலும் எழுதினார். மகுதூம் சாயபுவின் தவிர்க்க முடியாத எழுத்துப்பாணி இது.

சிங்கப்பூர் அஞ்சல்துறை நிர்வாகி 1879ஆம் ஆண்டறிக்கையில் அபூர்வமான தகவல் ஒன்றைத் தெரிவித்தார்.

“இந்தியரின் எண்ணிக்கை பெருகிவருவதால் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் கடிதங்களும் இந்தியாவிலிருந்து வரும் கடிதங்களும் அதிகரிக்கின்றன. அதனால் கூடுதலாக இரண்டு தபாற்காரர்களை நியமித்துக் கடிதங்களைப் பட்டுவாடா செய்கிறோம். … ஜோகூருக்குப் போக வேண்டிய ஏராளமான கடிதங்கள் போதுமான அஞ்சல்தலை ஒட்டாமல் சிங்கப்பூரிலேயே தேங்குவதால் அவற்றை அனுப்புவது சிரமமாக உள்ளது. எப்படியும் ஜோகூரில் வெகு விரைவில் அஞ்சல் நிலையம் கட்டாயம் திறந்தே ஆகவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதே சமயம் தோட்டநிர்வாகிகளும் இதைக் கவனியாமல் இருப்பது மிகவும் பரிதாபம்” என்றார் அவர்.

முதன்முறையாக 1871இல் மேற்கொண்ட அதிகாரபூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியரின் எண்ணிக்கை 10,754. இதில் 1,533 மாதர் உட்பட மொத்தம் 9,334 பேர் தமிழர்.

இந்தியாவிலிருந்து வரும் கடிதங்களில் முகவரி தெளிவாக இல்லாத காரணத்தால் அவற்றை இங்கே உரியவரிடம் சேர்க்க முடியவில்லை என்றும், 1879இல் 7,402 கடிதங்கள் திரும்ப இந்தியாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டன என்றும் ஆண்டறிக்கை தெரிவித்தது.

நவராத்திரி விழா உபயம் (1865)

கள்ளுக்கடையினரும் கலப்பத்துக்காரரும்

இந்துக்களின் சமயத் தேவைகளை முக்கியமாக மாரியம்மன் கோவிலும் தண்டாயுதபாணி ஆலயமும் ஆர்ச்சர்ட் ரோடு சிவன் கோவிலும் நிறைவேற்றி வைத்தன. கோவிலில் நடைபெறும் திருவிழாக்களாகிய தீமிதி, தைப்பூசம் பற்றி ஆங்கிலப் பத்திரிகைகள் வியப்பான செய்திகள் போடுவதுண்டு.

“மாரியம்மன் கோவிலில் மாரியம்மன்தான் முதன்மை தெய்வம். சுப்பிரமணியன், திரௌபதி, கிருஷ்ணமூர்த்தி, பெரியாச்சி, பெருமாள், அரவான் எல்லாம் அடுத்தபடிதான்” என்று சிங்கப்பூர் ஃப்ரீ பிரஸ் அதன் வாசகர்களுக்கு (1865 செப்டம்பர் 28) ஒரு விளக்கம் எழுதியது. மாரியம்மன் கோவில் நவராத்திரி விழாவை ஒட்டிய பத்துநாள் கொண்டாட்டங்களின் உபயக்காரர்களையும் அப்பத்திரிகை ஆர்வத்தோடு அறிவித்தது.

முதல் நாள் நகை செய்யும் பத்தர்கள், இரண்டாம் நாள் பால் வியாபாரிகள், மூன்றாம் நாள் கள்ளுக்கடைக்காரர்கள் (கள் இறக்குவோர் நாற்பது பேர். எட்டுக் கள்ளுக்கடைகள், பத்தாயிரம் ஏக்கர் தென்னந்தோப்புகள் இருந்தன), நான்காம் நாள் நாணய மாற்று வணிகர்கள், ஐந்தாம் நாள் கப்பலுக்கு வேண்டிய பொருள்களை ஏற்பாடு செய்யும் துவிபாஷிகள், ஆறாம் நாள் அரசாங்க – வணிகத்துறை எழுத்தர்கள், ஏழாம் நாள் (படகு ஓட்டைகளை அடைக்கும்) கலப்பத்துக்காரர்கள், எட்டாம் நாள் உள்ளூர்ப் போலீஸ்காரர்கள், ஒன்பதாம் நாள் மாட்டு வண்டி ஓட்டுநர்கள், பத்தாம் நாள் கொத்தனார்களும் வீடுகட்டும் பணியாளர்களும்.

முதன்முறையாக 1871இல் மேற்கொண்ட அதிகாரபூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியரின் எண்ணிக்கை 10,754. இதில் 1,533 மாதர் உட்பட மொத்தம் 9,334 பேர் தமிழர். 1,881இல் இந்தியர் 12,138 பேர். இதில் 2,095 மாதர் உட்பட தமிழர் 10,507 பேர். தமிழர் எனும்போது முஸ்லிம்களும் அதில் அடக்கம். அப்போது (1879) பினாங்குத் தீவில் மட்டும் 15 ஆயிரம் இந்தியர்கள் இருந்தனர்.

சிங்கப்பூரின் வரலாற்றை அரசு நிர்வாகக் கண்ணோட்டத்தில் அதியற்புதமாக எழுதிக் கொடுத்தவர் கான்ஸ்டன்ஸ் மேரி டர்ன்புல் (C.M.Turnbull) அம்மையார். பல பதிப்புகள் கண்ட அவருடைய நூலில் அன்றைய சிங்கப்பூரின் இந்தியரைப் பற்றிச் சிற்சில வரிகளே எழுதினார் என்பது மிகவும் துயரமானது. “இந்தியர்கள் (தொடக்க காலத்தில்) ஒரு பெரிய தாக்கத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தியதில்லை. தொழிலாளர்கள், படகோட்டிகள், சிறு வியாபாரிகள் என எல்லாரும் மிகச் சாதாரணமானவர்கள். அவர்களிடம் சரியான தலைமைத்துவம் கிடையாது. மொழி, மதம் ஆகியவற்றாலும் அவர்கள் பிரிந்து கிடந்தார்கள்” என்பதுதான் அவருடைய பார்வை.

‘சிங்கப்பூர் இந்து சங்கம்’ முதலில் 1891இல் நிறுவப்பட்டது. நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் ஆர்.சுப்பையா அதன் தலைவர், மற்றொரு மொழிபெயர்ப்பாளர் எஸ்.சுப்பையன் செயலாளர். அது தொடர்ந்து இயங்கவில்லை. முப்பது வயது இளம் விவேகானந்தர், சிக்காகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்துகொள்ள, 1893 ஜுன் மாதம் சிங்கப்பூர் வழியாகத்தான் போனார். அப்போது அவரை யாரும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. இந்து சமயத்தின் அருமை பெருமைகளை வெளிப்படுத்திப் பெரும் புகழுடன் திரும்பி வந்தார். இந்து சமய மறுமலர்ச்சி இங்கேயும் தழைக்கத் தொடங்கியது.

இந்து சமய சங்கம் (Hindu Religious Society) என்று ஓர் அமைப்பு 1898இல் உருவானது. சுமார் பத்தாண்டுகள் அது இயங்கியது. அதன் பிறகே 1913இல் டாக்டர்.என்.வீராசாமி (1864 – 1926) தலைவர் பொறுப்பேற்ற மற்றொரு புதிய இந்து சங்கம் முக்கிய இந்துப் பிரமுகர்களைக் கொண்டு நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சென்னை ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த சுவாமி சார்வானந்தா கலந்துகொண்டார். இந்தச் சங்கந்தான் நூறாண்டைக் கடந்து இன்றும் செயல்படுகிறது.

இந்தியன் டிஸ்பென்சரி நடத்திய
டாக்டர் வீராசாமி நாயுடு
(1864-1926)

டாக்டர் வீராசாமி தரப்பினர் தைப்பூசத்திற்கு பதிலாகத் தீபாவளிக்கே பொதுவிடுமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி, 1914இல் ஆயிரம் பேர் கூடிய பொதுக்கூட்டத்தை விக்டோரியா அரங்கில் நடத்தி அரசாங்கத்திற்குக் கோரிக்கை அனுப்பினர். அதைத்தொடர்ந்து 1929இல் தீபாவளி நாள் விடுமுறையானது.

சிங்கப்பூரில் 1864இல் பிறந்து ராஃபில்ஸ் பள்ளியில் படித்துச் சொந்தமாகவே நாட்டு, நவீன மருத்துவ முறைகளில் தேர்ச்சி பெற்று 98, 99 ரோச்சோர் ரோடு முகவரியில் 40 ஆண்டுகளாக இந்தியன் டிஸ்பென்சரி நடத்திய டாக்டர் வீராசாமிக்கு, சமாதான நீதவான் (Justice of Peace) பட்டம் (1903), நகராண்மைக் கழக உறுப்பினர் பதவி (1914), இந்து ஆலோசனை மன்றத்தின் முதல் தலைவர் (1917), புக்கிட் தீமாவில் 43 மாணவர்களுடன் தொடங்கிய ராஃபில்ஸ் கல்லூரியின் உருவாக்க, பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர் (1928) எனப் பல்வேறு சிறப்புகள் வந்தடைந்தன.

முப்பது வயது இளம் விவேகானந்தர், சிக்காகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்துகொள்ள, 1893 ஜுன் மாதம் சிங்கப்பூர் வழியாகத்தான் போனார்.

டாக்டர் வீராசாமி சிராங்கூன் ரோடு வட்டாரத்தில் பல கட்டடங்களுக்குச் சொந்தக்காரர். பெரும் பரோபகாரி. எதிர்கால மலாயா-சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்களின் முன்னோடியாக அமைந்த ராஃபிள்ஸ் கல்லூரிக்கு ஐந்து ஆண்டில் மொத்தம் 30 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கியவர். தன் வீடிருந்த 136, சிராங்கூன் ரோடு முகவரியில் பிள்ளைகளின் காதுகுத்துச் சடங்கைப் பெரும்பந்தல் போட்டு நான்குநாள் விழாவாக நடத்தி ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரின் ஒவ்வோர் இனத்தவரையும் மாலை மரியாதையுடன் வரவேற்று உற்சாகமாக உபசரித்தவர்.

கடைசிகாலத்தில் பக்கவாதம் தாக்கி 1926 மே 11 அதிகாலையில் 62ஆம் வயதில் காலமானார். அன்றைய தினமே பிடோக்கில் குடும்பக் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார். இன்றும் வீராசாமி ரோடு அவர் பெயரைத் தாங்கியுள்ளது. இங்கிலாந்தில் மருத்துவம் பயின்ற அவருடைய மகன் வெள்ளைக்கார மனைவியுடன் திரும்பிவந்து தந்தையின் தொழிலை மேற்கொண்டார்.