பதினைந்தாம் நாள் பட்டாசு

நான் 1950களிலிருந்து சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறேன். சீனர்கள் மிகுதியாக வாழ்ந்த ஜூச்சியாட் பிளேஸ் என் வாழ்விடமாக அமைந்தது. சீனப்புத்தாண்டு பிறப்பைச் சீனர்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள், மகிழ்கிறார்கள். அவர்களுடைய கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்தல் முக்கியமானதாகக் கருதப்பட்டது. என் நினைவில் கூடுகட்டியிருப்பதும் அப்படியொரு பட்டாசு வெடித்த நிகழ்வுதான்.

ஒன்றுகூடல் விருந்துக்கு மறுநாள் தொடங்கும் சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டம் பதினைந்து நாள்கள் தொடரும். பதினைந்து நாள்களும் பட்டாசு வெடிப்பார்கள். ஊசிப்பட்டாசு, ‘டபுள்பாம்’ பட்டாசு, பறக்கும் பட்டாசு, செந்நிறப் பட்டாசு எனப் பலவகைப் பட்டாசுகள். மறுநாள் தெருவெங்கும் செந்நிறம் பூத்திருக்கும். அவற்றை அரும்பாடுபட்டு அப்புறப்படுத்தும் நகரசுத்தித் தொழிலாளர் இடுப்பொடியும். சீனப்புத்தாண்டின் பதினைந்தாம் நாள் ‘சாப் கோ மெ’ (Chap Goh Meh). அதுவே இறுதி நாள். அன்று பட்டாசு வெடிப்பது வெறித்தனமாக இடம்பெறும். பட்டாசு வெடிப்பதில் போட்டா போட்டி நடக்கும். கூடை கூடையாகவும், தெருக்கள் நீளத்திற்கு மலைப்பாம்புபோல் நீட்டியும், பின்னாளில் அடுக்குமாடிகள் வந்ததும் அங்கிருந்து தொங்கவிட்டும் பட்டாசு வெடிப்பார்கள்.

வானை நோக்கிச் சீறிப் பாய வேண்டிய ஒரு டபுள் பாம் வெடி தரையில் சாய்ந்து என்னை நோக்கிப் பறந்து வந்தது. நான் கண்களை மூடிக்கொண்டேன். என் காதருகில் பயங்கர வெடிச்சத்தம். கண்ணைத் திறந்து பார்த்தபோது நெற்றிலும் கன்னத்திலும் கருப்புக் கந்தகம் ஒட்டியிருந்தது. சிராய்ப்புக் காயத்தில் இரத்தம் வடிந்தது. எனக்கு ஏற்பட்டது மிகச் சாதாரணமான பாதிப்பு. 1970இல் பட்டாசு வெடித்ததால் பாதிக்கப்பட்டு நால்வர் மரணமடைந்தனர். இலட்சக்கணக்கான வெள்ளி மதிப்புடைய பொருள்கள் நாசமாயின. அதன் காரணமாகப் பட்டாசு வெடிக்க உருவான கட்டுப்பாடுகள் பிறகு ஆபத்தான வெடிதடுப்புச் சட்டம் 1972இல் அமலானபோது பட்டாசு வெடிப்பது சிங்கப்பூரில் முற்றாகத் தடைசெய்யப்பட்டது. ஒப்புநோக்க இன்றைய சீனப்புத்தாண்டுகள் மிகுந்த அமைதியானவை!

இவ்வளவு வேட்கையுடன் வெடிவெடிப்பதற்கான காரணத்தைத் தேடியபோது ‘வெடிச்சத்தம் தீய சக்திகளை விரட்டும்’ என்ற சீனர்களின் நம்பிக்கையைக் கண்டறிந்தேன்! கேடுகள் விலக தீபாவளிக்கு வெடிவெடிக்கும் நம்பிக்கையைப் போன்றதே இதுவும்.

பொன் சுந்தரராசு

சென்ற ஆண்டில் (2022) ஆண்டாள் அருளிய திருப்பாவையை மொழிபெயர்த்து என்னுடைய நண்பர் ஜான் (C.F.John) என்னும் கலைஞரோடு இணைந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு பாசுரத்தையும் முன்வைத்து ஓர் உரையாடல். இவ்வாண்டிலோ அடுத்த ஆண்டிலோ வெளிவரும் என்று நம்புகிறேன். நாவல் ஒன்றும் எழுதிக்கொண்டு வருகிறேன்.

மொழிபெயர்ப்புத் துறையில் எனக்குள்ள சிக்கல் என்னவென்றால் ஒரு படைப்பை என்னால் தேர்ந்தெடுக்க முடியாது. படைப்புதான் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும். என்னுடைய அனுபவம் அப்படி. ஆகவே அடுத்து என்ன வரும் என்று உங்களைப்போலவே நானும் காத்திருந்துதான் பார்க்கவேண்டும், வேறு வழி இல்லை!

இவ்வினிமையான உரையாடலுக்கு என் பணிவான நன்றி!