பாரம்பரியக் கலைகளை விரும்புவது ஏன்?

ப்ரியதர்ஷினி வித்யப்ரகாஷ்

அன்று சனிக்கிழமை. சென்ற வாரம் போலவே இந்த வாரமும் கவிதா சூரியன் உதிக்கும்முன் எழுந்து விட்டாள். இன்னும் குளுமை குன்றாத அந்தக் காலைப் பொழுதிலும் அவளுக்கு ஏனோ குளிர்ந்த நீரிலேயே குளிக்கத் தோன்றியது. அவ்வாறு செய்வது அந்த நாளுக்கான சுறுசுறுப்பையும் தரும் என்று யாரோ சொல்லக் கேட்டிருந்தாள். அன்றைய தினம் சுறுசுறுப்பும் அவளுக்கு அதிகமாகவே தேவைப்பட்டது!

அன்று அவளுக்கு வாராந்திர பரதநாட்டிய வகுப்பு. அமர்ந்த நிலையிலேயே ஐந்துநாள் கணினிமுன் கழியும் அலுவலக வேலைக்கு நேரெதிராக உடலை பம்பரமாகச் சுற்றிச்சுழற்றும் ஆறாம் நாள். சிறுவயதில் காரணம் தெரியாமல் கற்ற அந்த நாட்டியக் கலையை இப்பொழுது மிகுந்த பிரியத்துடன் அணுகுகிறாள். கவிதாவுக்கு ஏன் பரதம் பிடித்திருக்கிறது, அதுவும் இந்த மத்திம வயதில் இவ்வளவு ஆர்வம்?

ஒரு கவிதையில் வாழ்வது தற்காலிகமானது என்றாலும் மூளையின் 
ஏதோ ஓர் இடுக்கில் அவ்வனுபவம் ஆழமாகப் பதிந்து, 
இன்றும் வாழ்வின் பல தருணங்களில் அவ்வப்போது மேலே வருகிறது, ஆற்றுப்படுத்துகிறது.

“சிறுவயதிலிருந்து இரண்டு மூன்று வகையான நடனக் கலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அவை அனைத்திலும் விருப்பம் இருந்தபோதிலும், ஈர்ப்பும், காதலும் பரதநாட்டியத்தின்மீதே அதிகம் வளர்ந்தது.

நிருத்தம், நிருத்யம், நாட்டியம் என மூவகை ஆடல்முறைகளைக் கொண்டது பரதம். நிருத்தம் என்றால் உடலசைவுகளின் சேர்க்கை. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அடவுகள் எனப்படும் அசைவுகள் மட்டுமே. நிருத்யம் என்பது ஒரு கருத்தை வெளிப்படும் நடனம். இதில் சிறப்பம்சமாகப் பாடல் நுழைவதைச் சொல்லலாம். நாட்டியம் என்பதில் கருத்தோடு கதையும் சொல்லப்படும். நாட்டிய நாடகம் நல்லதோர் எடுத்துக்காட்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து செம்மை செய்யப்பட்ட இக்கலையில் மிகநுட்பமாக இவை மூன்றும் செறிவூட்டப்பட்டுள்ளன. அதிலும் கடந்த 100 ஆண்டுகளில் நல்ல பல குருமார்கள், பரதத்தின் தன்மைகளையும், அதன் அடிப்படைகளையும் இன்னும் விரிவாக்கி உலகின் பிற செவ்வியல் கலைகளுக்கு இணையாக வளர்த்திருக்கிறார்கள்.

பரதநாட்டியமானது பக்தி, இந்தியப் பண்பாடு, காவியங்கள், தொன்மங்கள் போன்றவற்றுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறதோ அவற்றின் வழியாகப் புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும் அவ்வளவு இடம் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, ராமன் ராவணனைக் கொன்றவர் ஆனாலும் ராவணனின் அளவற்ற சிவபக்திக்குத் தாள்பணிவார். அது பக்தி. ஆனால் இதை ஒரு நிருத்ய வகை நடனமாக நாங்கள் அரங்கேற்றும்பொழுது, இப்படியும் மனிதர்கள் வாழ்ந்து சென்றிருக்கிறார்களா? என்னிடம் இந்தப்பணிவு உள்ளதா? போன்ற பல உள்நோக்குக் கேள்விகளை எழுப்புகிறது. அது சிந்தனை.

நான் தொடர்ந்து உடலளவிலும், மனதளவிலும் பக்குவமடைய இக்கலை எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது. கலை கலைக்காகவா மக்களுக்காகவா என்று ஒரு விவாதம் பலகாலமாக நடந்துவருகிறது. “என்னைக் கேட்டால் கலை கலைஞர்களுக்காக என்பேன்” என்று உற்சாகமாகக் கூறினாள் கவிதா.

சக்தி ஒரு 11 வயது சிறுவன். இன்று அவனுக்கு சிலம்பப் பயிற்சி. கிட்டத்தட்ட தன் உயரம் இருக்கும் ஒரு மூங்கில் கழியைக் கண்ணுக்குத் தெரியாத வேகத்தில் சுற்றிக்கொண்டு, அவ்வப்போது சரமாரியாகக் குதித்தும் சுழன்றும் விளையாடுகிறான். “தம்பி, உனக்கு ஏன் சிலம்பம் பிடித்திருக்கிறது?” என்று கேட்டதற்கு, “என் நண்பர்களை இங்கே சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு சிலம்பம் சுற்றும்பொழுது நான் ஒரு மாவீரனைப்போல் உணர்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தான்.

நேரமாகிவிட்டதால் மதிய உணவு உண்ணச் சென்றேன். அங்கே ஒரு பெண்மணி, தன் பிள்ளை அற்புதமான இசை ஞானத்துடன் கர்நாடக இசையில் தேர்ந்துவருகிறார் என்று மகிழ்ச்சிபொங்கத் தன் சக ஊழியரிடம் கைபேசியில் ஒரு காணொளியைக் காண்பித்துக்கொண்டிருந்தார்.

“எனக்குச் சிறுவயதில் ஓரிரு ஆண்டுகளே கர்நாடக இசை கற்க முடிந்தது. ‘புனரபி ஜனனம், புனரபி மரணம், புனரபி ஜனனீ ஜடரே சயனம்’ என்ற ஆதிசங்கரரரின் கவிதையை என் குரு பிறப்பு இறப்புச் சுழலின் அர்த்தத்துடன் பாடச் சொல்லிக்கொடுத்தார். ஒரு கவிதையில் வாழ்வது தற்காலிகமானது என்றாலும் மூளையின் ஏதோ ஓர் இடுக்கில் அவ்வனுபவம் ஆழமாகப் பதிந்து, இன்றும் வாழ்வின் பல தருணங்களில் அவ்வப்போது மேலே வருகிறது, ஆற்றுப்படுத்துகிறது. ஒரு பண்புமிக்க மனிதனாக வளர, நான் கற்பிக்க விட்டுவிட்டாலும் என் பிள்ளை தானே கற்றுக்கொள்ள இந்த இசைக்கல்வி சொல்லித்தரும் என்றே ஒரு நல்ல குருவிடம் சேர்த்துள்ளேன்” என்று கண்களில் நம்பிக்கையுடன் அந்தத் தாய் கூறிக்கொண்டிருந்தார்.

கவிதா, சக்தி, அந்தத்தாய், அவரது பிள்ளை இவர்கள் வெவ்வெறு வயதினர், வெவ்வேறு காரணங்கள். ஆனாலும் இந்தியப் பாரம்பரியக் கலைகளை ஏதோவொரு விதத்தில் தமக்குள் ஒன்றிணைத்துக்கொள்ளவும், அடுத்த தலைமுறையினரிடத்திலும் கொண்டுசெல்லவும் முயற்சிக்கின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அத்தகைய முயற்சிகள் தேவையானவை என்பதோடு காலப்பொருத்தமானவை என்றும் தோன்றுகிறது.

கற்பவரின் தனித்துவம் மிளிர போதிய இடமளிக்காத மின்னுலகப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் இந்தக் காலகட்டத்தில், நம் பண்பாட்டு வேர்களுடன் ஆழமாகப் பிணைக்கும் பாரம்பரியக் கலைகளை நேர்முகமாகக் கற்பது அனைத்து வயதினருக்கும் உடல், மன ரீதியாக ஒரு மகிழ்ச்சி கலந்த நிறைவைத் தருவதாக நிச்சயம் அமையும். நேரடிச் சந்திப்புகள் நல்ல உரையாடல்களுக்கான சந்தர்ப்பங்களையும் தலைமுறைகளுக்கு இடையே அமைத்துத்தரும்.

நம்முடைய விசால மனப்போக்குடைய நாகரிகத்தையும், பண்பாட்டையும், பெருமையுடன் நம் சந்ததியினரும் தொடர பாரம்பரியக் கலைகளில் கொள்ளும் ஈடுபாடு உதவும். கலைகள் செழிப்பது, நாடும் அதன் மக்களும் செழிப்பதன் அடையாளம். நாடு செழிக்க, பாரம்பரியக் கலைகளுடன் இணைந்து நாமும் செழிப்போம்!