சம்மதப் பொங்கல்

0
451
ஜமால் சேக்

கடந்த ஜனவரி 15 அன்று என் மனைவி காலை உணவாக சர்க்கரைப் பொங்கலைக் கொண்டுவந்து வைத்தார். காலையிலேயே சர்க்கரையா என்று பொங்கல் என்பதையே மறந்துபோய்க் கேட்டேன். “இன்று தை ஒன்று, பொங்கல் திருநாள். இன்று பொங்கல் சமைத்தாக வேண்டும், சாப்பிட்டாக வேண்டும், பேசாமல் சாப்பிடுங்கள்” என்றார்.

திருச்சி பாலக்கரையின் குறுகிய தெருக்கள் ஒன்றில் பிறந்து வளர்ந்த என் மனைவிக்குத் திருமணத்திற்கு முன்பு வயலும் தெரியாது, வாய்க்காலும் தெரியாது, பொங்கலும் தெரியாது. அவர் சிங்கப்பூரில் அடுக்குமாடிக் கட்டடத்தில் வசித்துக்கொண்டு பொங்கல் சாப்பிட வலியுறுத்துவதன் பின்னணியை என் மனம் அசைபோட ஆரம்பித்தது.

என் பெற்றோர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள். என் தாத்தா புதுக்கோட்டை சமஸ்தானத்தில் குதிரை பயிற்றுவிப்பவராக பணிசெய்தவர். எனவே ராவுத்தர் என்ற அடைமொழியுடன் அவரை அழைப்பார்கள்.

ராவுத்தன் என்கிற பதம் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாக கல்வெட்டுக்களிலும் பண்டைய இலக்கியங்களிலும் புழங்குகிறது. அரசரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட விவசாய நிலங்களிலிருந்து அரிசி வந்துகொண்டிருந்த காலம்.

என் தந்தை காலத்தில் எல்லாம் சொந்த நிலத்தின் அளவு குறுகிவிட்டது. சில ஏக்கர் நிலங்களில் நாங்களே விவசாயம் செய்யவேண்டியிருக்கும். என் தந்தை ஏற்றம் இறைப்பதை நான் கண்டிருக்கிறேன். என் தாயுடன் சேர்ந்து நான் களையெடுத்த காலமும் நினைவுக்கு வருகிறது. எரு அடித்து உழுதது, வாய்க்காலைக் கட்டியது, வறட்சிக் காலத்தில் குதிருக்குள் இருந்த விதைநெல்லை அரிசியாக்க வேண்டிவந்தது என்று இளம்பிராய நினைவுகள் முண்டியடித்துக்கொண்டு முன்னே வருகின்றன.

மார்கழிப் பனியில் அதிகாலையில் நெல்வயலில் வரப்பில் நடந்து செல்லும்போது பால்சுமந்த நெல் குருத்துக்களிலிருந்து காற்றுடன் கலந்து கமழும் மணம் நுகர்ந்து பல தசாப்தங்களாகி விட்டது. பொங்கல் என்றாலே புது அரிசியின் வாசமும், கரும்பின் இனிப்பும், பச்சை மஞ்சள் கிழங்கின் வாசமும், புத்தாடையும், பொங்கல் வாழ்த்து அட்டைகளுமாகக் கொண்டாட்டமும் குதூகலமுமாக இருக்கும்.

என் பள்ளித்தோழன் சி.குமாரும் நானும் நாசர் அண்ணனின் கடையில் விதவிதமான பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி வருவோம். வாழ்த்து அட்டைகள் மொத்தமாக சிவகாசியில் அச்சடிக்கப்பட்டு கடைகள் தோறும் விற்க வைத்திருப்பார்கள். ஓர் அட்டை வாங்கினால் அதற்கென ஒரு காகித உறையும் இலவசம்.

உறையில் குண்டு குண்டாக முகவரி எழுதுவதற்கு சித்திரா அக்காவிடம் கெஞ்சிக்கொண்டு இருப்போம். அக்கா சளைக்கவே மாட்டார். அவர் எழுதும் தமிழ்க் கையெழுத்து அளவுகோல் வைத்து வடிவமைத்தது போல் கனகச்சிதமாக இருக்கும். எழுத்துக்களின் புள்ளிகளை வட்டமாகத்தான் போடுவார். புள்ளிகளைப் பேனாவால் குத்தி உருவாக்கும் வன்முறை இல்லாத மென்மையான மனம் உடையவர் சித்திரா அக்கா.

குமாரும் நானுமே ஆளுக்கொரு அட்டையை அஞ்சலில் அனுப்பிக்கொள்வாம். தபால்காரரிடமிருந்து நம் பெயர் போட்டு அஞ்சல் வருவதைப் பிரித்துப் படிப்பதில் அப்படி ஓர் ஆனந்தம். வாழ்த்து அட்டைகள் இல்லாமல் எந்த ஒரு பொங்கலும் நான் பத்தாம் வகுப்பு வரும் வரையில் கிடையாது. அப்போதுதான் 1980களில் தீபாவளி என்கிற பண்டிகை விளம்பரங்கள், தள்ளுபடிகள், இனாம், போனஸ் போன்ற வர்த்தக ஊக்கங்களுடன் புயலாகத் தமிழகத்துக்குள் வந்தது. கலாச்சார ரீதியான பொங்கல், ஊக்கப் பணத்துடன் வந்திறங்கிய வர்த்தக ரீதியான தீபாவளியின்முன் தன் முக்கியத்துவத்தைச் சிறிது சிறிதாக இழக்க ஆரம்பித்தது.

பொங்கல் அன்று பொழுது விடியுமுன்னே மார்கழிக் குளிருக்கு இதமாக இழுத்துப் போர்த்திச் சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும் எங்களை அம்மா தட்டி எழுப்பி, குளத்தில் போய்க் குளித்துவர விரட்டுவார். மார்கழிக் குளிரில், அதிகாலையில் சில்லென்று இருக்கும் குளத்தின் பச்சைத்தண்ணீரில் குளிக்கும் கொடுமையெல்லாம் படித்தால் புரியாது, அனுபவித்தால்தான் புரியும்.

பொதுவாக பொங்கலன்று பனி மூட்டமா, போகியில் எரித்த மீந்த புகையா எனத் தெரியாத வகையில் தெருவே சூரியக் கதிர் தெரியாமல் புகைமூட்டமாகவே இருக்கும். ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வெளியில், அடுப்புகட்டி என்று அழைக்கப்படும், மூன்று கற்களை வைத்து தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அடுப்பில் புது மண்பானையில் பொங்கிய பொங்கல் தயாராகி விடும். சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வார்கள். கூடவே கேசரியும் வடையும் உண்டு. ஊதாங்குழல் வைத்து ஊதி நெருப்பைத் தக்கவைக்க என் தங்கை புகையுடன் போராடிக்கொண்டிருப்பாள். என் உம்மம்மா (அம்மாவின் அம்மா) பாத்திஹா ஓதி முடித்ததும் பொங்கல் சாப்பிட்டு முடிப்போம்.

பிறகு கரும்பு வெட்டித் தின்ன வேண்டும். குறைந்தது இருகட்டு கரும்பு வாங்குவோம். ஒரு கட்டுக்கு 10 கரும்புகள் இருக்கும். என் தந்தை இரண்டு கணு ஒரு துண்டு என்று வெட்டுவார். நடுத்துண்டுகளுக்கு அடிதடி நடக்கும். தங்கையிடம் நுனிக் கரும்பைத் தள்ளிவிட்டுவிடுவோம். அடிக்கரும்பு கடிக்க பல் பலம் வேண்டும். ஈறுகளிலிருந்து ரத்தம் சொட்ட ஒரு வழியாகக் கரும்பைக் கடித்து சாறு உறிஞ்சி சக்கைகளைக் குவிப்போம்.

கரும்பு வாங்குவது ஒரு கலை. குறைந்தது 6, 7 அடி உயரம் இருக்கவேண்டும். கணுக்களுக்கிடையில் ஒரு சாண் அளவாவது இடைவெளி இருக்க வேண்டும். நெருக்கமான கணுக்கள் உள்ள கரும்பைச் சுவைப்பது சுவையான அனுபவமாக இருக்காது. ஆலைக்கரும்பு என அழைக்கப்படும் பச்சைக் கரும்பும் விற்பனைக்கு இருக்கும். அது பெரும்பாலும் சாறு நிறைய இருந்தாலும், இனிப்பு குறைவாக இருக்கும். குவித்துக் கிடக்கும் சக்கைகளை என் அம்மா கூடையில் அள்ளி ஒரு பாயை விரித்து வெயிலில் காய வைத்து விடுவார். மழைக்காலத்தில் அடுப்பெரிக்க ஓர் அற்புத எரிபொருள் அது.

கரும்பும், சர்க்கரைப்பொங்கல் மற்றும் வெண் பொங்கலும் தட்டுக்களில் வைத்து அக்கம் பக்கத்தாருக்குக் கொடுப்போம். அவர்களும் எங்களுக்குத் தருவார்கள். அப்போதுதான் என் அம்மா செய்த சர்க்கரைப் பொங்கல் ருசி எனக்குத் தெரியும்! மறுநாள் மாட்டுப் பொங்கலுக்கான ஏற்பாடுகள் முதல்நாளே நடக்க ஆரம்பிக்கும். சம்பங்கிப்பூ, பீளைப்பூ, ஆவாரம்பூ என விதவிதமான பூக்களைப் பறித்துவந்து அவற்றையெல்லாம் சணல் கயிற்றில் கட்டி மாலைகள் தயார்செய்து விடுவோம்.

அடுத்தநாள் அதிகாலையிலேயே எழுந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு குளத்திற்குச் செல்வோம். அதற்கென தனித்துறை இருக்கும். படித்துறை என்பதுபோல இது படியில்லாத மண்துறை. அங்குபோய் மாட்டைக் குளிப்பாட்டிக் கூட்டி வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். மாடுகள் தண்ணீருக்குள் இறங்க மறுக்கும். வலுக்கட்டாயமாக இறக்கும் முயற்சிகளில் முதல்நாள் காலையில் உறைத்த தண்ணீரின் குளிர் இப்போது எங்களுக்கு உறைக்காது.

குமாரும் நானுமே ஆளுக்கொரு அட்டையை அஞ்சலில் அனுப்பிக்கொள்வாம். தபால்காரரிடமிருந்து நம் பெயர் போட்டு அஞ்சல் வருவதைப் பிரித்துப் படிப்பதில் அப்படி ஓர் ஆனந்தம்.

பிறகு மாடுகளுக்கு அலங்காரம் நடக்கும். பச்சை மஞ்சளில் நடுவிலுள்ள தண்டு போன்ற பகுதியை எடுத்துவிட்டு, சிறிது சுண்ணாம்பு விட்டு, தீக்குச்சியைக் கொண்டு குழப்பும்போது ரத்தச் சிவப்பில் கெட்டியாக வரும் குழம்பைக் கொண்டு மாட்டிற்குப் பொட்டு வைப்போம். கழுத்தில் முன்தினம் கோத்து வைத்திருந்த மாலையுடன் காசுகளையும் முடிந்து வைப்போம். தொழுவத்தின் வாசலில் வைக்கோலைக் குறுக்காகப் பரப்பிப் போட்டு, அதேவாக்கில் உலக்கை ஒன்றையும் குறுக்காக வைப்போம்.

சன்னமாகப் பரப்பியிருக்கும் அந்த வைக்கோலுக்கு நெருப்பு வைத்து, அது எரியும்போதே மாட்டைத் தாண்டச்செய்வோம். மாடு தொழுவத்துக்கு வெளியே குதிக்கும். பிறகு முடிந்தவரை வேகமாக விரட்டிக்கொண்டு ஓடுவோம். பசுமாடு அப்படி என்ன வேகமாக ஓடிவிடப்போகிறது? காசு முடிந்த கழுத்து மாலை பத்தடிக்குள் ஒருவன் கைகளுக்குப் போய்விடும். சிறிது நேரம் மிரண்டு ஓடிய மாடு, பசிக்க ஆரம்பித்தவுடன் வீடுதேடி வந்துவிடும். எங்கள் வீட்டு மாடுகளை வெளியே விட்டவுடன் பிறர் மாடுகளின் கழுத்துக் காசைக் கைப்பற்றும் சாகசம் ஆரம்பமாகிவிடும். அன்றுமாலை பொங்கல் வெளியீடாக வந்திருக்கும் ரஜினி படம் பார்க்க அந்தக் காசு பயன்படும்.

மதியம் கோழி அடித்து, புதிய அரிசிச்சோற்றுடன், தலைவாழை இலையில் சாப்பாடு. சாப்பிட்டு முடித்தவுடன், மஞ்சுவிரட்டு பார்க்கப் போவோம். கோட்டை முனியய்யா கோயிலின் முன்பாக, தட்சிணாமூர்த்திக்கோனார் வயல்களின் வரப்புகளை இடித்துவிட்டு, பெரிதாக ஒரு திடல் உருவாக்கப் பட்டிருக்கும். அதில் மையமாக ஒரு மரத்தை நட்டு அதில் கனமான ஒரு தாம்புக் கயிறு காளையின் கழுத்துப் பட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். திடலின் எல்லைகளைக் கம்பு ஊன்றி கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தியிருப்பார்கள்.

சுமார் 3 மணிக்கு ஆரம்பிக்கும் மஞ்சு விரட்டு, அசோகன் மாமா மைக் பிடித்துப் பேச, வீரர்கள் களம் இறங்குவார்கள். யார் மாட்டை அடக்கி மணலில் அமர்த்துகிறாரோ அவர் வென்றவராக அறிவிக்கப்படுவார். கழுத்துப்பட்டியில் இருக்கும் காசு அவருக்குச் சொந்தம். சிலமுறை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து அடக்கி பரிசுக்காசைப் பங்கு பிரிக்கும் பஞ்சாயத்து அடிதடியில் முடிந்திருக்கிறது. குறைந்தது பத்துப் பதினைந்து மாடுகள் களமிறங்கும். இதெல்லாம் முடிய ஆறு மணி ஆகிவிடும். அங்கிருந்து இளந்தாரிகள் கூட்டமாகப் புறப்பட்டு பொங்கல் வெளியீடாக வந்திருக்கும் ரஜினி படம் பார்க்க ‘அசோசியேடட் கமெர்சியல்’ என்கிற வாணி டூரிங் டாக்கீஸுக்குப் படையெடுப்பார்கள்.

விவசாய நிலங்கள் 1985 வாக்கில் வீட்டு மனைகளாக மாறத் தொடங்கின. விவசாய வருமானத்தைவிட வீட்டுமனை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு விலையேறவும், மேற்படிப்புக்காக நகரம் நோக்கி இடம்பெயர வேண்டியிருந்ததால், விளைநிலங்கள் விற்கப்பட்டன. நகரங்களில் கொல்லைப்புறத் தோட்டங்கள் இல்லாத காங்கிரீட் காடுகளுக்குள் குடிபெயர்ந்தோம். ஆனாலும் ஆண்டுதோறும் பொங்கல் பொங்கும் வழக்கும் எங்கள் வீட்டில் நிற்கவே இல்லை.

என் அம்மா வழமையாக பொங்கல் செய்வார். பிறகு பாத்திஹா ஓதியபின், மதியம் தலைவாழை இலையில் சாப்பாடு என்று இன்றுவரை தொடர்கிறது. வயலையும் வாய்க்காலையும் பார்த்திராத என் மனைவிக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. புகுந்த வீட்டின் பழக்கமாக அவரும் பொங்கல் தினத்தன்று பொங்கல் பொங்குவார். பிறகு சிங்கப்பூர் என்னும் காங்கிரீட் நகருக்கள் வீவக பேட்டை வீடுகளிலும் இது தொடர்கிறது. வேறு கால நேரத்தில் வசிக்கும் என் மகள் காணொலித் தொடர்பில் தன் கல்லூரி நண்பர்களுக்கு பொங்கல் செய்து பகிர்வதற்காக என் மனைவியிடம் பொங்கல் சமையல் குறிப்புகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அடுத்த தலைமுறைக்கும் பொங்கல் வழக்கம் கடந்து போவது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது.

மஞ்சு விரட்டுக்கு அடுத்த நாளில், கட்டுமாவடி ரோட்டில் ரேக்ளா ரேஸ் நடக்கும். ரேஸ் நடக்கும் 17 கிலோ மீட்டர் சாலையின் இரு மருங்கிலும் இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் திரண்டு வரும். உற்சாகக் கோஷங்களும், தண்ணீர்ப்பந்தல்களும், குழாய் ரேடியோப் பாடல்களும் என ஊரே கோலாகலமான மகிழ்ச்சியான சூழலுடனும் காணப்படும்.

ரேக்ளா ரேஸுக்குப் போனால், காரணிக்காட்டில் இருக்கும் கலந்தர் சாச்சி வீட்டுக்குப் போவோம். அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரே தமிழ் முஸ்லிம் குடும்பம் அது. அங்கு போனால், துள்ளிக்குதித்தோடிக் கொண்டிருக்கும் கன்னுக்குட்டிக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருப்பார் கலந்தர் சாச்சி. பால் கறக்கும் முன் கன்னுக்குட்டியைப் பிடித்துக் கட்ட வேண்டுமே. மாடுகள் எல்லாம் ‘ரோஸ் பவுடர்’ பூசிக்கொண்டு தாங்களும் மஞ்சுவிரட்டுக்குப் போனதாகச் சொல்லாமல் சொல்லும்.

தமிழ் இஸ்லாமியக் குடும்பங்கள் பொங்கல் கொண்டாடுவார்களா என்று பலருக்கும் ஒரு கேள்வி மனதிற்குள் ஒரு ஓரத்தில் எப்போதும் இருந்திருக்கும். இன்னமும் கிராமங்களில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் விவசாயக் குடும்பங்கள் பொங்கலைக் கொண்டாடி வருகின்றன. மலையாளிகளுக்கு ஓணம் எப்படி மதம் தாண்டிப் பொதுவானதோ, அப்படித்தான் பொங்கல் பண்டிகை மதங்கள் தாண்டி அனைத்துத் தமிழர்களுக்கும் பொதுவானது.