நினைவுகளில் மீளும் கம்பத்து
‘லவ் லெட்டர்’

சீனப்புத்தாண்டு என்றாலே, 60-70களின் சிறார்களுக்கு, மனதுக்கு நெருக்கமான கம்பத்து வாழ்க்கையும் அக்கம்பக்கச் சீனர் வீடுகளுக்குச் சென்று ‘லவ் லெட்டர்’ தயாரிக்க உதவியதும்தான் நினைவுக்கு வரும். அரிசிமாவும் தேங்காய்ப்பாலும் கலந்து தயாரிக்கப்படும் சுருள்வடிவ லவ் லெட்டர்கள் (kuih kapit) தயாரிக்கப்படும் விதம் அலாதியானது. வார்ப்புகளில் அழுத்தப்பட்டுக் கரியடுப்பில் வேகவைக்கப்பட்ட மாவு லல் லெட்டராகத் தயாரானதும் அவற்றைப் பிரப்பங் குச்சிகளில் கோர்ப்பதுதான் எங்கள் வேலை.

சிவப்பு ‘ஸ்டிக்கர்’களைக் கதவில் ஒட்டிவிட்டு வருவோம். அது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பது நம்பிக்கை. சீனப்புத்தாண்டுக்கு முதல்நாள் வெடிக்கப்பட்ட வெடிகளால் அடுத்தநாள் சாலைமுழுக்கச் ‘செவ்விதழ்கள்’ பூத்திருக்கும். இந்தியப் பிள்ளைகள் சீன நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று ஆரஞ்சு பானமும் லவ் லெட்டரும் சாப்பிடுவோம்.

அங் பாவ் வாங்குவதற்காகப் பெரியவர்களைச் சென்று பார்ப்பது முக்கியமான அம்சம். ஒரு வெள்ளியும் சில இனிப்பும்தான் அன்றைய அங் பாவ். ஆனால் அவை அளித்த மகிழ்ச்சி அளவற்றது. இன்றும் பசுமையாக நினைவில் நீடிக்கிறது. கம்பத்து வாழ்க்கையில் சுத்தம் சுகாதாரம் எல்லாம் இன்றைய நகரவாழ்க்கையுடம் ஒப்பிடும்போது குறைவுதான் ஆனால் அன்று அதுவொரு பொருட்டாக இல்லை. கம்பத்து வாழ்வில் ஒருவரின் கொண்டாட்டம் அனைவருக்குமான கொண்டாட்டமாக இருந்தது.

-ஜானகி