ஆக்குச் செய்யறிவும் அசல் மெய்யறிவும்:
கவிதையளவே தூரம்

சிவானந்தம் நீலகண்டன்

கடந்த ஆண்டு (2022) நவம்பரில், OpenAI அமெரிக்க நிறுவனத்தால், ChatGPT என்னும் ஆக்குச் செய்யறிவுப்பொறி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அறிவுலகம் அல்லோலகல்லோலப்பட்டு வருகிறது. இக்கட்டுரை எழுதப்படும்போது அப்பொறி புழக்கத்திற்குவந்து (https://chat.openai.com/chat) சுமார் 100 நாள்களே கடந்துள்ள நிலையில், நியூயார்க் டைம்ஸிலிருந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்வரை, அதன் செயல்விதம், செயல்திறன், நன்மைதீமைகள் குறித்த அலசல்களும் அது மானுடவாழ்வை எவ்வாறு புரட்டிப்போடப் போகிறது என்னும் ஆரூடங்களும் அனேகமாக ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன.

Chat Generative Pre-trained Transformer என்னும் முழுப்பெயருடைய அந்த ஆக்குச் செய்யறிவுப்பொறி இவ்வளவு பரபரப்பைக் கிளப்பியிருப்பது ஏன்? ஏழாண்டுகளுக்கு முன்பே அந்நிறுவனம் தொடங்கப்பட்டுவிட்டது என்றாலும் ஆக்குச் செய்யறிவுப்பொறியின் சில வடிவங்கள் இதற்குமுன்னரே வெளிவந்துள்ளன என்றாலும் இந்த அளவுக்குத் திறமானதாக இதுவரை வந்த வடிவங்கள் இல்லை. ஆகவே கடந்த நூற்றாண்டிலும் நடப்பு நூற்றாண்டிலும் கணிப்பான் (calculator), கணினி, தானியங்கிக் கருவிகள் ஆகியவை வந்தபோது ‘இனி மனிதருக்கு வேலையில்லை’ என்று கிளம்பிய தற்காலிகப் புயல்களைப் போலத்தான் இதுவும் என்று புறந்தள்ளிப் போகமுடியவில்லை.

உடற்திறனில் மனிதரைக்காட்டிலும் மேம்பட்ட, சிந்திக்கக்கூடிய திறனும் உள்ள சிம்பன்ஸி, கொரில்லா, ஓராங் ஊத்தான் ஆகிய நம் மூதாதைகளால் மொழியை ஒரு கட்டத்துக்குமேல் மேம்படுத்த இயலவில்லை. ‘கோபி பந்தை உதைத்தான்’ என ஒரு சிம்பன்ஸிக்குப் புரியவைத்துவிடலாம். ஆனால் ‘பந்தை உதைத்த கோபி, அவன் நண்பனையும் உதைத்தான்’ என அடுத்தகட்டத்துக்குப் போகமுடியாது. இது என் கண்டுபிடிப்பல்ல, விரைவில் நொபெல் பரிசு பெறுவார் என எதிர்பார்க்கப்படும், மூளைநரம்பியலாளார் விளையனூர் சுப்ரமணியன் ராமச்சந்திரனின் கூற்று.

ஆக்குச் செய்யறிவுப்பொறியான ChatGPT மனிதரைப்போலவே உரையாடுகிறது, சிந்திக்கிறது, கற்றுக்கொள்கிறது.

இன்னொரு பக்கத்தில், கணினி. கணினி மனிதரைக் காட்டிலும் பலமடங்கு நினைவாற்றல், அதிவேகமாகக் கணக்கிடும் திறன் இவற்றோடு மொழியை லாவகமாகக் கையாளும் திறனும் கொண்டது என்றாலும் அது திறனுள்ள ஓர் அடிமை மட்டுமே. கணினி பலரின் வேலையைப் பறித்துவிடும் என்று அஞ்சிய நிலை அடியோடு மாறி இன்று கணினி இல்லையென்றால் உலகத்தில் எந்தவேலையும் ஓடாது என்னும் நிலைக்கு வந்திருக்கிறோம். ஆயினும் எத்தகைய திறன்மிக்க ஒரு கணினிக்கும்கூட ஒரு சாதாரண சிம்பன்ஸியைப்போலத் தன்னியல்பாகச் சிந்திக்கும் திறனில்லை.

சுருங்கச் சொன்னால் இதுவரை மனிதகுலம் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சிக்கு இணையாக அறிவியல் வளர்ச்சிகளின் எந்தப்புள்ளியும், மொழியைக் கையாளுதல், சிந்தித்தல் ஆகிய இருதிறன்களையும் மனிதர்களின் அளவுக்கு ஒருங்கே பெறவில்லை. ஓர் அர்த்தமுள்ள கவிதையை மனிதர்கள் மட்டுமே எழுதமுடிகிறது. இந்தப் பின்புலத்தில்தான் செய்யறிவு (Artificial Intelligence) என்னும் அறிவியல் வளர்ச்சி ஒரு பாய்ச்சலை நிகழ்த்துகிறது. ஆக்குச் செய்யறிவுப்பொறியான ChatGPT மனிதரைப்போலவே உரையாடுகிறது, சிந்திக்கிறது, கற்றுக்கொள்கிறது. கட்டுரை, கதை மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள கவிதைகளையும் எழுதுகிறது!

“ஒரு பெண் ஒரு குழந்தைபெற 10 மாதம் ஆகுமென்றால், ஐந்து பெண்கள் ஒரு குழந்தைபெற எத்தனை மாதமாகும்?” என்று கேட்டேன்.

எங்கோ மறைந்திருக்கும் ஒரு தகவலை நொடியில் தேடித்தரும் கூகுளைப்போன்ற தேடுபொறியல்ல ChatGPT. இணையம் புழக்கத்திற்குவந்த கடந்த கால்நூற்றாண்டில் உலகெங்கும் சேர்ந்திருக்கும் எண்ணற்ற சொற்களையும் தகவல்களையும் தன் திறன்மிக்க நிரல்களால் ஆராய்ந்து, ‘சிந்தித்து’, ஒருங்கிணைத்து இதுவரை எங்குமில்லாத ஒரு புதிய ‘படைப்பை’ நொடியில் ChatGPT அளிக்கிறது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் அது உரையாடுகிறது என்றாலும் அவற்றில் பல குறைபாடுகள் உள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் அசர அடிக்கிறது. ஓர் எடுத்துக்காட்டைச் சொன்னால் ஆழம் விளங்கிவிடும்.

ஜார்ஜ் ஆர்வெல் 1948இல் எழுதிய ‘1984’ என்ற நாவலை இலக்கிய நண்பர்கள் சிலர் சேர்ந்து விவாதித்தோம். அவ்விவாதத்தில், இங்கிலாந்து சர்வாதிகார நாடாகிவிட்டால் எப்படி இருக்கும் என்பதைக் குறித்த அக்கறையுடன் கவலைப்பட்டு எழுதியுள்ள ஆர்வெல்லுக்கு உலக நாடுகளைக் காலனித்துவ அடிமைகளாக்கிய இங்கிலாந்தைக் குறித்த விமர்சனம் ஏதும் கிடையாதோ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னோம். என்ன இருந்தாலும் ஒரு வெள்ளைக்காரர் என்பதால் காலனித்துவத்தை நியாயப்படுத்திக்கூட அவர் சிந்தித்திருக்கலாம் என்பதுபோன்ற கருத்துகளும் எழுந்தன.

அன்றிரவு ChatGPT-யிடம் அந்தக் கேள்வியைக் கேட்டேன். ஓர் அனுபவம் வாய்ந்த ஆங்கில இலக்கியப் பேராசிரியர்கூட அந்த அளவுக்குத் துல்லியமான எடுத்துக்காட்டுகளுடன் அவ்வளவு விரைவாக ஒரு தீர்க்கமான வாதத்தை முன்வைப்பாரா என வியந்தேன். ChatGPT அளித்த பதிலின் மொழிபெயர்ப்பு இங்கே:

“ஜார்ஜ் ஆர்வெல் காலனித்துவத்தையும் வல்லதிகாரத்தையும் விமர்சிப்பவர். பிற நாடுகளின் மீதான பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாடு நியாயமற்றது, சுரண்டுவது என்று நம்பியவர். அதைத் தன் புனைவுகள், கட்டுரைகள், இதழியல் பங்களிப்புகளில் அடிக்கடி வெளிப்படுத்தியவர். தன் ‘Burmese Days’ நாவலில் ஒரு காலனித்துவக் காவல் அதிகாரியாகத் தன் அனுபவங்களையும் அங்கு தான் கண்ட இனவாத, சுரண்டல் போக்குகளையும் எழுதியுள்ளார்.

எல்லைகள் வகுத்துக் கட்டுப்படுத்தினால் மனிதர்களுடன் உறவாட இயலாத அபத்தமாகும். அதற்காகக் கட்டுப்படுத்தாவிட்டால் மனிதர்களைப் போலவே ஆபத்தாகவும் ஆகும்! 

‘Shooting an Elephant’, ‘A Hanging’ போன்ற கட்டுரைகளில் இந்தியாவிலும் பர்மாவிலும் பிரிட்டிஷ் வல்லதிகாரம் இழைத்த வன்முறைக் கொடுமைகளையும் கொடூரங்களையும் விமர்சித்துள்ளார். கீழைநாட்டு மக்களுக்கு நாகரிகத்தையும் முன்னேற்றத்தையும் கற்றுக்கொடுப்பதாகக் கூறிக்கொண்டு அம்மக்களை ஒடுக்குமுறைக்குள் தள்ளும் கபடவேடதாரி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று சாடியுள்ளார். ‘என்ன செய்வது, காட்டுமிராண்டி மக்களை நெறிப்படுத்தும் சுமையை வெள்ளைக்காரர்கள் தாங்கவேண்டியதாகத்தான் இருக்கிறது’ என்று பொய்யான புலம்பலை பிரிட்டிஷ் மக்களுக்கு அளித்து அவர்களை நம்பவைத்தது என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். மேலும், தன் காலனித்துவ அக்கிரமங்களை நல்ல மாற்றங்களை முன்னிட்டுச் செய்யப்படும் கண்ணியமிக்க, அத்தியாவசிய நடவடிக்கைகளே என்று நியாயப்படுத்தியதையும் கண்டித்துள்ளார்.”

மேற்கண்ட பதிலை அளித்துவிட்டு கடைசியாக ஓரிரு வரிகளில் சாராம்சத்தைச் சுருக்கியும் அளித்தது!

கணக்கும் போடுகிறது. கணக்கு வெறும் தர்க்கம்தானே? அதைக் கணினி போடுவதில் என்ன பிரமாதம் எனக் கேட்கலாம், ஆனால் மனிதரைப் போலப் புரிந்துகொண்டு போடுகிறது. எப்படியும் இந்தக் கேள்வியில் மாட்டும் என்ற நம்பிக்கையுடன், “ஒரு பெண் ஒரு குழந்தைபெற 10 மாதம் ஆகுமென்றால், ஐந்து பெண்கள் ஒரு குழந்தைபெற எத்தனை மாதமாகும்?” என்று கேட்டேன். அதற்கு ChatGPT அளித்த பதில்:

“ஒவ்வொரு பெண்ணும் தனித்தனியாகக் குழந்தை பெறவேண்டும் என்பதால் அவர்கள் ஐவருக்கும் அதே 10 மாதம்தான் ஆகும். குழந்தை பெறுவது ஓர் உயிரியல் செயல்பாடு, அதை அதிக ஆட்களைச் சேர்ப்பதன்மூலம் விரைவாகச் செய்யமுடியாது”

நல்லவேளையாக இந்த இயந்திரத்துக்குக் கண்ணியமாகப் பேசக் கற்றுத்தந்துள்ளனர். இல்லாவிட்டால் “இதென்னடா கேள்வி முட்டாள்?” என்று கேட்கும்போலத் தெரிகிறது. ஆனால் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தால் “ஒருமணி நேரத்தில் அளவுக்கதிமான தொடர்பாடல்கள் நடந்துவிட்டன, பிறகு வாருங்கள்” என நிறுத்திக்கொள்கிறது. இடைநில்லாப் பயன்பாடு வேண்டுவோர் மாதத்துக்கு 20 வெள்ளி சந்தா கட்டும் திட்டங்கள் ஏற்கெனவே வந்துவிட்டன.

ChatGPTக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனால் நம்மிடமிருந்து தொடர்ந்து, தீவிரமாகக் கற்றுக்கொள்கிறது. சிங்கப்பூரின் அதிபராக இருந்த ஒரு பழைய இந்தியத் தலைவரைப் பற்றிக்கேட்டபோது அவர் மலாய் இனத்தவர் என்றது. நான் ‘இல்லையே’ என்றதும், மன்னிப்புக் கேட்டுத் திருத்திக்கொண்டு அவர் ஓர் இந்தியர், தமிழர் என்றது. ‘இந்தியர்தான் ஆனால் தமிழரில்லையே’ என்றதும் அதையும் உள்வாங்கி உடனே தன்னைத் திருத்திக்கொண்டது. தவறாகவும் அதற்குக் கற்றுக்கொடுக்க முடியும்தான் ஆனால் விரைவிலேயே பிறருடைய உள்ளிடல்களிலிருந்து அது தன்னைத்தானே திருத்திக்கொண்டுவிடும்.

உலகெங்கிலும் கோடிக்கணக்கோரிடமிருந்து ஒவ்வொரு நுண்நொடியும் உரையாடிக் கற்கும், கற்றதை மறக்காத, அறிவுள்ள, சிந்திக்கும் இயந்திரம் ஒன்றைக் கற்பனை செய்து – வேண்டாம் – நிஜமாகவே பாருங்கள்! விஷயத்தின் வீரியமும் பரபரப்புக்கான காரணமும் விளங்கத்தொடங்கும். இத்தகைய செய்யறிவு நிரல்களை உருவாக்குவோரும் எங்கே செய்யறிவு கைமீறிப்போகுமோ என ஐயப்படும் இடம் இதுதான். தானாகவே கற்றுக்கொள்ளும் நிரல்களை உருவாக்கியபின் அதற்கு எல்லைகள் வகுத்துக் கட்டுப்படுத்தினால் மனிதர்களுடன் உறவாட இயலாத அபத்தமாகும். அதற்காகக் கட்டுப்படுத்தாவிட்டால் மனிதர்களைப் போலவே ஆபத்தாகவும் ஆகும்!

சரி, ஏற்கெனவே உள்ள சொற்களைக்கொண்டுதானே விளையாடுகிறது, புதிய சொல்லாக்கம் செய்கிறதா பார்ப்போம் என்றெண்ணி, ‘work from home’ என்பதற்கொரு புதுப்பிரயோகம் சொல் (coin a new term) என்றேன். இரண்டுநொடி யோசித்து ‘homeployed’ என்றது! நம்மை ஏமாற்றுகிறதா என்று கூகுளில் உள்ளிட்டுத் தேடினேன். இதுவரை அந்தப் பிரயோகம் எங்கும் இல்லை. இது நிச்சயமாக கணிப்பானோ, கணினியோ, தேடுபொறியோ, இணையமோ மட்டுமல்ல – அவையனைத்தையும் திறம்பட இணைக்கும் ஆக்குச் செய்யறிவுப்பொறி.

‘work from home’ என்பதற்கொரு புதுப்பிரயோகம் சொல் (coin a new term) என்றேன். இரண்டுநொடி யோசித்து ‘homeployed’ என்றது

சிங்கப்பூர் அரசு எப்போதும் தொழில்நுட்பத்தை புகுத்தி அன்றாட வாழ்க்கைக்கு வளம்சேர்ப்பதில் முன்னணியில் இருக்கும். ஆக்குச் செய்யறிவுப்பொறி விஷயத்திலும் ஏற்கெனவே வேலையைத் தொடங்கிவிட்டது. OpenAI நிறுவனத்துடன் இணைந்து ஒரு திட்டத்தைத் தொடங்கிச் சில முக்கிய கட்டங்களைத் தாண்டியும்விட்டது. முதல் கட்டமாக, இன்னும் சில மாதங்களில், சுமார் ஒருலட்சம் அரசு ஊழியர்கள் தங்கள் வேலைகளைச் செய்யறிவின் துணையுடன் செய்யவுள்ளனர்.

எடுத்துக்காட்டாக ஓர் அறிக்கை எழுதவேண்டும் என்றால் – அரசாங்கத் தரவுகளுடன் இணைக்கப்பட்ட ஆக்குச் செய்யறிவுப்பொறியின் உதவியுடன் – மைக்ரோசாஃப்ட் வோர்டில் முதல் படியை ஒரே நிமிடத்தில் எழுதிவிடுவர். பிறகு அதைச் சரிபார்ப்பதும் மேம்படுத்துவதும் மட்டுமே அவர்கள் பணியாக இருக்கும். மனிதர்கள் இதுபோல ‘மேலான’ வேலைகளைத்தான் செய்யவேண்டும் எனப் பேச்சுகள் காதில்விழுகின்றன. அரசாங்கத்தின் செய்திகள் கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் பாதுகாப்பு அம்சங்களும் இத்தயாரிப்பில் உண்டு.

ஆக்குச் செய்யறிவுப்பொறி உருவாக்கும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் யார் என்னும் காப்புரிமைச் சிக்கல்களும் எழுந்துள்ளன.

ஆக்குச் செய்யறிவுப்பொறி பிரச்சனைகளையும் கொண்டுவந்துவிட்டது. பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடமாக இனி கட்டுரை எழுதச்சொல்வது கடினம். ஒரே தலைப்பில் ChatGPT பற்பல வடிவங்களில் கட்டுரை எழுதுகிறது. அதுவும் 100 சொற்களில் கொடு என்றால் உடனே முக்கிய கருத்துகளுக்குச் சேதாரமில்லாமல் சுருக்கியும் கொடுத்துவிடுகிறது. ஆய்வுக் கட்டுரைகளில் உசாத்துணையாக ChatGPTயையும் சேர்த்துவிடுகிறார்கள் என்று ஓர் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் இப்பொறியைத் தடைசெய்துவிட்டது.

ஆக்குச் செய்யறிவுப்பொறி உருவாக்கும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் யார் என்னும் காப்புரிமைச் சிக்கல்களும் எழுந்துள்ளன. ‘ஒரு மனிதர் உருவாக்கும் படைப்பு’ என்னும் வரி காப்புரிமைச் சட்டத்தில் இருப்பதால் இயந்திரம் உருவாக்கும் படைப்புக்கு அச்சட்டம் பொருந்தாது. காமிராதான் படம் பிடிக்கிறது என்றாலும் காமிராவை இயக்கிய மனிதருக்கு அவ்வொளிப்படம் சொந்தம். ஆனால் ChatGPTயிடம் ஆணையிட்டவருக்கே படைப்பு சொந்தம் எனச் சொல்லமுடியுமா? ஓட்டுநர் இன்றி செய்யறிவில் தானாக இயங்கும் ஒரு வாகனம் ஒருவரை இடித்துவிட்டால் யார்மீது வழக்குபோடுவது? இன்னும் முடிவுகாணப்படாத கேள்விகள் இவை. எதிர்காலத்தில் மனித-இயந்திர ஊடாட்டங்களும் அவற்றால் எழும் பிரச்சனைகளும் எப்படியிருக்கும் என்பதற்கான முன்னோட்டங்களும்கூட.

ஓர் இலக்கிய நண்பர் என்னிடம் ChatGPT கவிதையும் எழுதுகிறது என்று சொல்லி பாஷோவின் ஹைகூ போல எழுது எனத்தான் ஆணையிட்டதாகவும் உடனே அற்புதமாக எழுதி அசத்திவிட்டதாகவும் இனி கவிஞர்களுக்கு வேலையில்லை என்றும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பாஷோ ‘போல’ கவிதை எழுதுகிறது சரி, ஆனால் நீ பாஷோவாகவே ஆகிவிடு என்றால் என்ன செய்யும்? அந்த அளவில் மனிதர்களுக்குக் குறிப்பாகக் கவிஞர்களுக்கு ஓர் இடம் இன்னும் இருக்கவே செய்கிறது என நினைத்துக்கொண்டேன்.

தமிழ் மொழியைக் குறித்து ஒரு கவிதை (poem) எழுத ChatGPTக்கு ஆணையிட்டேன். கீழ்க்கண்ட ‘செய்யுளை’ அளித்தது. ஒரு தலைப்பு கொடேன் என்றதும் பொருத்தமான தலைப்பையும் கொடுத்தது. ஆனால் தமிழில் மொழிபெயர்க்கச் சொன்னபோது படு அபத்தமாக மொழிபெயர்த்தது. ஒப்பீட்டளவில் கூகுள் மொழிபெயர்ப்பு பரவாயில்லை எனலாம். ஆனால் கூகுள் மொழிபெயர்ப்பில் செய்யுளுக்கான இசைநயமில்லை.

சரி, இன்னும் மனிதர்களுக்கு மொழியில் கொஞ்சம் வேலை மிச்சமிருக்கிறதுபோல என ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ChatGPT இப்போதைக்கு ஒரு குழந்தைதான் என்பதால், குழந்தைப் பாடலாகவே மொழிபெயர்தேன். ஆக்குச் செய்யறிவோடு இணைந்து பணிபுரிவதே எதிர்காலம் என்பதால் அதையும் கற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? இப்பாடலின் ஆசிரியர் ஆக்குச் செய்யறிவார். நான் மொழிபெயர்ப்பாளர்!

இன்று சற்றுத் தடுமாறினாலும் ஆக்குச் செய்யறிவு மனிதரைப்போலவே மொழிபெயர்க்கவும் கவிதை எழுதவும் போவதை நம் காலத்திலேயே பார்க்கத்தான் போகிறோம். ஆனால் அக்கவிதை ஒரு ‘போலச்செய்தல்’ ஆகத்தான் இருக்கும். ஆனால் ஒரு தேவதேவனை அவரே வியக்கும் அளவுக்கு நகலெடுக்கும், வாடாத நெகிழிப் பூவாகவும் பளபளக்கும். ஆனால் இன்னொரு தேவதேவனைப் பிறப்பிக்குமா? நிஜப்பூவாக மணம்பரப்புமா? அதற்கு இயந்திரம் மனிதரைப்போலப் ‘பிரக்ஞை’யுடன் (consciousness) இயங்கவேண்டும்.

தானாகக் கற்றுக்கொள்ளும் செய்யறிவுக்கு, அறிவாற்றலும் நினைவாற்றலும் முற்றிக்கனிந்து, ஒருகட்டத்தில் தானாகவே பிரக்ஞையும் உண்டாகிவிடலாம் எனச்சில அறிவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ரோஜர் பென்ரோஸ் உள்ளிட்ட அறிஞர்கள் அதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர். அறிவியலின்முன் தொக்கிநிற்கும் ஆகமுக்கியமான கேள்வி இது. உலகின் ஆகச்சிறந்த மூளைகள் அக்கேள்விக்கு விடைகாண முயன்றுவருகின்றன.

Tamil: The Timeless Tongue
Tamil, an ancient tongue,
So profound and old, yet forever young.
Its script, with curves and swirls,
Artistic and beautiful, like rare pearls.
A treasure trove of literature,
Epics, poems, and stories, so pure.
Of love and passion, it does sing,
And of courage, it gives a strong wing.
Tamil, a language of the heart,
That never fades, but leaves a lasting mark.
In joy and sorrow, it’s there to guide,
A faithful friend, standing by your side.

மூப்பில்லா முதுமொழி
அருந்தமிழ் மிகவும் தொன்மையதாம்
பெருந்தமிழ் என்றும் இளையதுமாம்
வளைவும் சுழிவும் அதனழகாம்
களைகட்டி நிற்கும் கலைமொழியாம்!
புதையல் பொக்கிஷம் இலக்கியமாம்
கதைகள் கவிதை காவியமாம்
ஆற்றலும் அன்பும் அதன் குரலாம்
போற்றிடும் வீரம் பெருஞ்சிறகாம்
இதயத்தின் மொழியே தமிழ்மொழிதான்
இதமது நீங்கா நிலைமொழிகாண்
இன்பம் துன்பம் எதுவரினும்
உண்மை நட்பாய் உடன்வருமே!

-மொழிபெயர்ப்பு சிவானந்தம் நீலகண்டன்

விடைதெரியச் சில தலைமுறைகள் ஆகலாம். காத்திருப்போம். அதுவரை… ஆக்குச் செய்யறிவுக்கும் அசல் மெய்யறிவுக்கும் கவிதையளவே தூரம்!