உதிரிப்பூக்கள்

0
206
மஹேஷ்

இராட்சதக் கடற்பஞ்சுகள்

Giant sea sponge எனப்படும் இராட்சதக் கடற்பஞ்சுகள் இன்னமும் முற்றாக அழிந்துவிடவில்லை. இவற்றில் நெப்டியூன் கப் (Neptune Cup) எனும் வகை ஒருமீட்டருக்கும் அதிகமாக உயரமாகவும் பெரிதாகவும் வளரக்கூடியது. சிங்கை கடற்பகுதிகளில் இன்னமும் இருக்கும் ஒருசில கடற்பஞ்சுகளை மீட்கும் முயற்சியில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் தேசியப் பூங்காக் கழகமும் இணைந்து சில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. புலாவ் தெகுகோர், புலாவ் செமகாவ், செயிண்ட் ஜான் தீவுகள் போன்றவற்றில் இருந்த 6 கடற்பஞ்சுகளை சிஸ்டர்ஸ் தீவுகளுக்கு மாற்றிப் பராமரித்து அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர். இவற்றைக் கடல் ஆமைகள், பஃப்பர் மீன்கள் போன்றவை கடித்து உண்டுவிட்டாலும் தொடர்ந்து வளர்ந்துவருகின்றன என்பது நம்பிக்கையூட்டும் செய்தி. இவை பற்றி இன்னமும் தெளிவாக அறிந்துகொள்ள சிங்கை கடற்பகுதியில் மேலும் கடற்பஞ்சுகள் உள்ளனவா என்பது பற்றி ஆராயும் பணிகள் இவ்வாண்டு தொடங்கியுள்ளன.

நீர் சுத்திகரிப்புக்கு நெகிழிக் கழிவுகள்!

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வில் நெகிழிப் பைகள், குப்பிகள் போன்ற கழிவுகளை கந்தக அமிலத்தில் கரைத்து, மெக்ஸீன்ஸ் (MXenes) எனப்படும் ஒரு சேர்மத்ததை உருவாக்குவதில் வெற்றிகண்டுள்ளது. இது குறைகடத்திகளில் பயன்படும் க்ராஃபீன் (graphene) போலவே தன்மைகளைக் கொண்டது. ஆனால் மேம்பட்ட வெப்பம்கடத்தும் திறன் கொண்ட இதனை ஒரு மெல்லிய படலமாக உருவாக்கி நீரை சுத்திகரிக்கும் சூரியத் தொட்டிகளில் பயன்படுத்தலாம். சூரிய வெப்பத்தால் நீர் வேகமாக சூடாகி ஆவியை வடிகட்டுவதன் மூலம் மின்சாரம் இல்லாத இடங்கள், பேரழிவுப் பகுதிகளில் அசுத்த நீரிலிருந்து சுத்தமான குடிநீரைப் பெறமுடியும். இவற்றைத் தயாரிக்கும் செலவும் குறைவு. மேலும் இவற்றை மின்சாரம் சேமிக்கும் மின்கலன்களில் பயன்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.

மீன்வளர்ப்புக்கு மின்காந்த அலைகள்!

லிம் சூ காங்கில் உள்ள ஒரு மீன்பண்ணையில் JAH Cultura எனும் உள்ளூர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பீங்கான் கலப்பு உலோகத்தை (ceramic alloy) உபயோகிப்பதன் மூலம் மீன்களின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் மேம்பட்டிருக்கிறது என்கிறார்கள். இந்தக் கலப்பு உலோகத்தில் வெளிப்படும் மின்காந்த அலைகள் நீர் மூலக்கூறுகளின் அடர்த்தியைக் குறைத்து அவற்றுக்கிடையே உள்ள பிணைப்பை தளர்வாக்குவதால் மீனின் செல் சுவர்கள் மூலம் ஆக்சிஜன், ஊட்டச்சத்துப் பரிமாற்றம் எளிதாக நடக்கிறது. குரூப்பர் மீன்கள் வளர்ப்பில் இரண்டு வாரங்களுக்கு 4-5 மீன்கள் இழப்பு என்ற நிலையிலிருந்து இதன் பயன்பாட்டுக்குப் பின்னர் 1-2 ஆகக் குறைந்துள்ளது; மீன்களுக்கு ஏற்படும் காயங்களும் விரைவில் குணமடைகின்றன என்றும் கூறுகிறார்கள்.

தீயணைப்பு வீரர்களுக்கு மேம்பட்ட உடைகள்!

சிங்கைக் குடிமைத் தற்காப்புப் படையில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு புதிய மேம்பட்ட காக்கி தற்காப்பு உடைகள் (Fire Fighting Protective Suits – FFPS) வழங்கப்பட்டுள்ளன. இவை அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் படைத்தவை. தற்போதைய உடைகளை விட எடை குறைவாகவும் நீட்சித்திறன் கொண்டவையாகவும் இருக்கும். நான்கு தீயணைப்பு நிலையங்களில் சுமார் 400 வீரர்களுக்கு இவை தற்போது வழங்கப்பட்டுள்ளன. ஆண்டிறுதிக்குள் படிப்படியாக மீதமுள்ள 19 நிலையங்களில் உள்ள அனைத்து வீரர்களுக்கும், கடற்படைத் தீயணைப்பு வீரர்களுக்கும் வழங்கப்பட்டுவிடும்.