சிங்கப்பூர்த் தொலைக்காட்சி-60

1963-2023

பண்பாட்டுப் புரட்சித் தருணம்:எஸ்.ராஜரத்னம்

பிப்ரவரி 15, 1963 அன்று மாலை ஆறு மணி எப்போது அடிக்கும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கப்பூரில் எதிர்பார்த்திருந்தனர். விக்டோரியா அரங்கில் தொலைக்காட்சி ஒளிபரப்புத் தொடக்கவிழா நடந்தேறியது. அவ்வரங்கில் 17 தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. சுமார் 300 பேர் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அரங்குக்கு வெளியிலும் சமூக மன்றங்களிலும் வைக்கப்படிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால் சிங்கப்பூரே திரண்டிருந்தது.

சரியாக ஆறு மணிக்கு படபடக்கும் தேசியக்கொடியுடன் மாஜூலா சிங்கப்பூரா ஒளிபரப்பானது. சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் முதலில் தோன்றியவர் அன்றைய கலாச்சார அமைச்சர் எஸ்.ராஜரத்னம். “இன்றிரவு நம் வாழ்வில் சமுதாய, பண்பாட்டுப் புரட்சி தொடங்கும் ஒரு தருணம். புத்திசாலித்தனமாகவும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்தினால் வேறு எந்தத் தகவல்தொடர்பு ஊடகத்தைக் காட்டிலும் தொலைக்காட்சி சரியான விளைவுகளை உண்டாக்கும், சாதாரண மக்களின் அறிவுப்புலத்தை விரிவுபடுத்தும்” என்று பேசினார்.

அவர் பேசிமுடித்ததும் டெலிவிஷன் சிங்கப்புராவின் செய்திப் பிரிவு தயாரித்திருந்த ஒரு படம் ஒளிபரப்பானது. அது தொலைக்காட்சியைப் பற்றி மக்களுக்கு விளக்கும் படம். பிறகு கேலிச்சித்திரப் படம், செய்தி, செய்திப்படம், நகைச்சுவை, கதம்ப நிகழ்ச்சிகள் என அடுத்தடுத்து ஒளிபரப்பாயின. சில வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் தவிர மற்றவை, கருப்பு-வெள்ளையில், விக்டோரியா அரங்கில் தெளிவாகத் தெரிந்தன. நான்கு மொழி நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாயின. அந்த முதல் ஒளிபரப்பு மொத்தம் 100 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

-ஆதாரம்: Straits Budget, பிப்ரவரி 20, 1963, பக்கம் 18

வண்ண ஒளிபரப்பு கருப்பு-வெள்ளைத் தொலைக்காட்சியில் தெரியுமா?

கருப்பு-வெள்ளைத் தொலைக்காட்சி சிங்கப்பூருக்கு வந்து சுமார் பத்தாண்டுக்குப்பிறகு இரண்டு லட்சம் வீடுகளில் கருப்பு-வெள்ளைத் தொலைக்காட்சி இருந்தது. அன்றைய கலாச்சார அமைச்சர் ஜெக் யீயுன் தோங், 1973 மார்ச்சில், ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் 1974ஆம் ஆண்டின் மத்தியில் வண்ணத் தொலைக்காட்சி சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதுவரை மாதத்துக்கு ஏறக்குறைய 2000 கருப்பு-வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனையாகிக்கொண்டிருந்த நிலையில், இந்த அறிவிப்புக்குப் பிறகு சடாரென விற்பனை படுத்துவிட்டது. ஓர் 20 அங்குல வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியின் அன்றைய விலை 2000 வெள்ளி. கருப்பு-வெள்ளையைக் காட்டிலும் மும்மடங்கு விலை அதிகம். ஆகவே அந்த அறிவிப்பு கருப்பு-வெள்ளை விற்பனையை பாதிக்காது என நினைத்திருக்கலாம். பிறகுதான் வண்ணத் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு, கருப்பு-வெள்ளைத் தொலைக்காட்சியில் தெரியாது என்ற புரளி பரவியதே மக்கள் வாங்குவதை நிறுத்தியதற்குக் காரணம் எனத் தெரிந்தது!

ஹித்தாச்சி, ஸான்யோ, நேஷனல், ஷார்ப், ஃபிலிப்ஸ் ஆகிய உள்ளூர்த் தொலைக்காட்சிப்பெட்டித் தயாரிப்பாளர்கள் கூட்டாக இணைந்து 1973 மே மாதத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து, வண்ண ஒளிபரப்பை கருப்பு-வெள்ளைத் தொலைக்காட்சியில், எந்தச் சிக்கலும் இல்லாமல் வழக்கம்போலப் பார்க்கலாம் எனத் தெரிவித்தனர்.

-ஆதாரம்: New Nation, செப்டம்பர் 4, 1973, பக்கம் 2

ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சிதான்,அதில் கைவைக்காதீர்கள்!

ஜூன் 1979இல் தொலைக்காட்சித் தமிழ் நிகழ்ச்சிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அம்மாற்றங்கள், குறிப்பாகத் தமிழ் நிகழ்ச்சிகளுக்கான நேரம் குறைக்கப்பட்டது, மக்களிடையே அதிருப்தியை உருவாக்கின. ஏராளமான அதிருப்திக் கடிதங்கள் தொடர்ந்து வந்து குவிவதாகவும் ஒரு கடிதத்தில் ஆக அதிகமாக 53 கையெழுத்துகள் பெறப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டு, சில கடிதங்களை மாதிரிகளாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டிருந்தது.

ஒரு கடிதத்தில், “சிறுவர் உலகம், நாடக அரங்கம், கலை தீபம் ஆகிய நிகழ்ச்சிகளோடு ஒரு படத்தை இரண்டாகப் பிரித்துக் காட்டப்படும் வியாழன், வெள்ளிக் கிழமை ஒளிபரப்புகள் ஆகியவற்றை விரும்பிப் பார்த்துவருகிறோம். கலை தீபத்துக்கு நேரத்தைப் பாதியாகக் குறைத்திருப்பது மோசம். எம் இளையரின் திறன்களைப் பிரதிபலித்துக்கொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி இதுதான்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அக்கடிதத்தில், “தமிழ்ப் படத்தின் முதல் பகுதி இரவு 9 மணிக்கு வந்துகொண்டிருந்தது. அது இனி 10.20க்கு வரப்போகிறது. ஆனால் தமிழ்ப் படத்துக்கு பதிலாக இந்திப்படம் போடவுள்ளது படுமோசம்” என்றும் எழுதப்பட்டிருந்தது. வாராவாரம் வந்துகொண்டிருந்த தமிழ்ப்படத்திற்கு பதிலாக, ஒருவாரம் தமிழ்ப்படம் ஒருவாரம் இந்திப்படம் என மாறிமாறி வருமென அறிவிக்கப்பட்டதாக இன்னொரு கடிதத்திலிருந்து அறியமுடிகிறது.

நாங்கள் நிகழ்ச்சித்தரம் போதவில்லை என்று குறை சொன்னது உண்மைதான் ஆனால் நிகழ்ச்சிகளை நிறுத்திவிடுவதன் மூலம் அக்குறையைக் களைய முற்படும் வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை என ஒருவர் எழுதியிருந்தார்! எங்களுடைய ஒரே பொதுழுபோக்கு தொலைக்காட்சி பார்ப்பதுதான் அதில் கைவைக்கவேண்டாம் என இன்னொருவர் வேண்டியிருந்தார்.

-ஆதாரம்: The Straits Times, ஜூலை 3, 1979, பக்கம் 15

தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கத் தமிழ்ப் பெண்களிடையே ஆர்வம்

தொலைக்காட்சியில் பகுதிநேர நாடக நடிப்புப் பயிற்சிக்கு 18 முதல் 25 வயதுள்ள தமிழ்ப் பெண்கள் சேரலாம் என 1985இல் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம் அறிவிப்பு வெளியிட்டபோது 20 பேர் சேர்ந்தனர். குறைந்தது 10 பேராவது சேர்ந்தால் பயிற்சியைத் தொடக்க நினைத்ததாகவும் ஏனெனில் கடந்தமுறை அறிவித்தபோது நான்குபேர் மட்டுமே விண்ணப்பித்திருந்ததாகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஈ.எஸ்.ஜே.சந்திரன் தெரிவித்தார்.

ஆர்வம் அதிகரித்திருப்பதை சந்திரன் வரவேற்றார். கழகத்தில் தமிழ் நடிகைகளுக்குப் பஞ்சம் நீடிப்பதற்கு இந்தியப் பெண்கள் நடிப்புத்துறைக்குள் நுழைய வெட்கப்படுவதும், ஓர் ஆடவருடன் இணைந்து நடித்துவிட்டால் பிறகு திருமண வாழ்க்கை அமைவது கடினம் என்று சிலர் அஞ்சுவதுமே காரணங்கள் என அவர் விளக்கினார்.

கழகத்தின் தமிழ் நாடகப்பிரிவு ஆண்டொன்றுக்கு 26 அரைமணிநேர நாடகங்களைத் தயாரிக்க வேண்டியிருந்தது. ஆயினும் நடிகைகள் போதிய அளவில் கிட்டாத காரணத்தால் ஒரே நடிகை பல நாடகங்களில் நடிக்கவேண்டிய சூழல் இருந்தது. பெண்களிடையே தயக்கத்தைப் போக்க முதலில் அவர்தம் பெற்றோரிடையே பேசிப் அச்சத்தைத் தெளியவைக்க வேண்டியிருந்தது என்றும் அதற்கும் நடிப்புப் பயிற்சிகள் உதவின என்றும் ஒரு நேர்காணலில் சந்திரன் பின்னாளில் தெரிவித்தார்.

-ஆதாரம்: The Straits Times, டிசம்பர் 19, 1985, பக்கம் 14

தொலைக்காட்சி வைத்திருப்போர் உரிமத்தொகை செலுத்தவேண்டும்!

வானொலி வைத்திருப்போர் ஆண்டுக்கு ஒரு தொகையை உரிமக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய நடைமுறை 1930களிலிருந்தே சிங்கப்பூரில் நடப்பிலிருந்தது. ஆகவே 1963இல் கருப்பு-வெள்ளைத் தொலைக்காட்சி அறிமுகம் கண்டபோது அதற்கும் உரிமம் செலுத்தவேண்டும் என்பது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னாளில் வண்ணத் தொலைக்காட்சிக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது.

எண்பதுகளின் மத்தியில் வானொலிக்கு 18 வெள்ளி, வண்ணத் தொலைக்காட்சிக்கு 80 வெள்ளி வருடாந்திரக் கட்டணம். தரமான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் செலவு கூடிக்கொண்டே போவதால் உரிமத் தொகையை அதற்கேற்ப அதிகரித்துச் செல்ல வேண்டியிருப்பதாக ஒலிபரப்புக்கழகம் விளக்கியது. கழகத்தின் வருவாயில் நான்கில் ஒருபங்கு உரிமத்தொகையிலிருந்து வந்துகொண்டிருந்தது. வண்ணத் தொலைக்காட்சி உரிமத்தொகை 1990இல் 100 வெள்ளி ஆக்கப்பட்டது. வானொலி உரிமமும் அதிலேயே அடங்கிவிடும் எனச் சலுகை அளிக்கப்பட்டது.

பிறகு வானொலிக்கான உரிமத்தொகை நீக்கப்பட்டது என்றாலும் அது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வானொலிக்கு மட்டுமே பொருந்தும்; வாகனத்தில் இருக்கும் வானொலிக்குக் கட்டணம் உண்டு. ஒருவழியாக அனைத்து வானொலி, தொலைக்காட்சி உரிமத்தொகைகளும் 2011இல் ஒழிக்கப்பட்டன. பொதுச்சேவை ஒலிபரப்புகளை ஆதரிக்கவும் உள்ளூர்க் கலைத்துறையை வளர்க்கவும் அரசாங்கம் அச்செலவினத்தை ஏற்றுக்கொண்டது.

-ஆதாரம்: The Straits Times (Overseas ed), நவம்பர் 3, 1990, பக்கம் 6.

கம்பிவடத் தொலைக்காட்சியால் வம்பு வருமா?

கம்பிவடத் தொலைக்காட்சி (கேபிள் டிவி) 90களில் சிங்கப்பூருக்குள் வரும்போது அதுகுறித்த உற்சாகமும் பரபரப்பும் கூடவே கவலையும் அதிகரித்தன. ஏனெனில் வானலை வழியாக ஒளிபரப்பப்பட்ட ஒளிவழிகள் மிகச்சில. தொலைக்காட்சி நுழைந்த 1963லிருந்து இரண்டு ஒளிவழிகள் மட்டுமே. மூன்றாம் ஒளிவழி 1984இல்தான் அறிமுகமானது.

அந்தச் சூழலில் கம்பிவட இணைப்பு வழியாக சாதாரணக் கட்டணத்துக்கு 10 ஒளிவழிகளும் சிறப்புக் கட்டணத்துக்கு 30 ஒளிவழிகளும் காணக்கிடைக்கலாம் என்றதும் அவ்வளவு பார்ப்பது மக்களிடையே எவ்விதமான பாதிப்புகளை உருவாக்கும் என்பதை குறித்த கேள்விகள் எழுந்தன. ஆனாலும் மேற்குலகம் இவ்விஷயத்தில் 10-20 ஆண்டு முன்னே சென்றுகொண்டிருந்ததால் அவர்களின் அனுபவத்தை வைத்து, மேலும் நேரம் வீணாகுமே தவிரப் பெரிதாக அச்சப்பட ஏதுமில்லை என்ற கணிப்பினால் நிம்மதியும் பிறந்தது.

செயற்கைக்கோள் (சாட்டிலைட்) தொலைக்காட்சி வந்து கட்டுக்கடங்காத நுகர்வையும் கட்டுப்படுத்தமுடியாத ஒளிபரப்புகளையும் அளித்துவிடும் என்கிற கவலை 90களில் அழுத்தமாக இருந்ததால் ஒப்பீட்டளவில் கம்பிவடமே பரவாயில்லை என்ற முடிவை அரசு எடுத்திருக்கலாம் என்கிறார் ஆய்வாளர் செரியன் ஜார்ஜ். எதிர்காலத்தில் தகவல்களை அளிக்கும் நிகழ்ச்சிகளே – அது செய்தியோ, நடப்பு விவகாரமோ, ஆவணப்படமோ, வெளிமொழி நிகழ்ச்சிகளோ – அதிக நேரத்தை ஆக்கிரமிக்கும் என 1994இல் இவர் ஊகித்திருந்தார். அதன்படியே நடந்திருக்கிறது!

-ஆதாரம்: The Straits Times, ஜூலை 3, 1994,

இணையம் அளித்த ‘முத்திரை’ இணைப்பு!

புத்தாயிரத்தை ஒட்டி கணினி, இணைய, கைபேசி ஊடுருவல்கள் அதிகரித்ததும் அதற்கேற்ப தொலைக்காட்சிப் பெட்டிகளும் மின்னிலக்கத்துக்கு மாறின. இணையத் தொலைவழியான ‘நெட்ஃபிளிக்ஸ்’ 2016இல் சிங்கப்பூருக்குள் நுழைந்தது. இணைப்புப் பாலமாக விளங்கும் இணையம் தொலைக்காட்சித்திரை, கணினித்திரை, கைபேசித்திரை என் முத்திரைகளையும் இணைத்தது.

ஓர் இணையத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பெரியதிரையில் தொடங்கி, கணித்திரையில் தொடர்ந்து, கைபேசியில் முடித்துவிடலாம். ஒவ்வொருமுறை நிறுத்தி மீண்டும் தொடங்கும்போது விட்ட இடத்திலிருந்து நிகழ்ச்சி தொடங்கும். இணையத்தில் உலகெங்கிலுமிருந்து ஊடக நிறுவனங்களோ தனிமனிதர்களோ எவரும் நிகழ்ச்சிகளை வழங்கலாம் என்பதால் அவற்றுக்குத் தணிக்கைச் சாத்தியப்படவில்லை. ஆகவே, அதனுடன் போட்டியிட வேண்டிய நிலையிலுள்ள, அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு இயங்கும், மரபார்ந்த உள்ளூர் ஒளிவழிகளுக்கு நிலைமை சாதகமாக இல்லை.

மேற்கத்திய, சீன, தென்கொரிய நிகழ்ச்சிகள் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் சிங்கப்பூரில் உள்ளூர்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் தொடர்ந்து குறைந்துவருவதாக ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது. உள்ளூர் ஒளிவழிகள் போட்டியே இல்லை என்ற இடத்திலிருந்து கிட்டத்தட்ட போட்டியிலேயே இல்லை என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இருப்பினும் கூட்டாக அல்லது குடும்பத்துடன் கண்டுகளிக்கும் ஃபார்முலா 1 கார்ப்பந்தயங்கள், தேசியதினப் பேரணி போன்ற நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்புகள், சிங்கப்பூர்த் தனித்துவங்களுடன் படைக்கப்படும் இதர நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் உள்ளூர்ப் படைப்புகள் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்துவருகின்றன.

-ஆதாரம்: https://www.straitstimes.com/tech/tech-news/online-tv-streaming-in-singapore-gets-boost-from-wfh-south-korean-shows

தொலைக்காட்சியின் எதிர்காலம்:மூன்று முக்கியப் போக்குகள்

வானலை, கம்பிவடம், செயற்கைக்கோள், இணையம் இப்படி எந்தவழியாக ஒளிவழிகள் செயல்பட்டாலும் அதற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு ஆடாமல் அசையாமல் நடுவீட்டில் அமர்ந்திருக்கும் – அல்லது சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் – சாமர்த்தியத்தைத் தொலைக்காட்சிப்பெட்டிக் கற்றுக்கொண்டுவிட்டது. படுக்கையறைக்குள்ளும் நுழைந்துவிட்டது. ஆகவே எதிர்காலத்திலும் பெரும்பாலான இல்லங்களில் குறைந்தது ஒரு தொலைக்காட்சிப் பெட்டியாவது நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தொலைக்காட்சிப் பெட்டியின் வடிவங்களில் மட்டுமின்றி அதைப்பார்ப்போரிடமும் காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நீக்குப்போக்குள்ள நிகழ்ச்சித் தேர்வுகள், விளம்பரங்களற்ற நிகழ்ச்சிகள், ஊடாடும் திரைகள் ஆகிய மூன்று முக்கியப் போக்குகளை எதிர்காலத் பார்வையாளர்களிடம் எதிர்நோக்கலாம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு கட்டாகக் கட்டித்தரப்படும் ஒளிவழிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை இணையத் தொலைவழிகளின் பெருக்கத்தால் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரம் ஆக அரிதான வஸ்துவாக ஆகிவிட்டதால் கூடக்கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லை என விளம்பரங்களை அறவே தவிர்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துவிட்டனர். திரையுடன் ஊடாடி நிகழ்ச்சியின் போக்கைத்தன் விருப்பத்திற்கேற்ப மாற்றும் வாய்ப்புகள் வந்துள்ளன, எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.

விளம்பரங்கள் ‘இரண்டாம்நிலைத் திரைகள்’ எனப்படும் கைபேசி, கைத்தட்டைத் திரைகளுக்கு இடத்தை மாற்றிக்கொள்ளும். மெய்நிகர், முப்பரிமாணத் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து செம்மையுற்றுக்கொண்டே போவதால் அமர்ந்து, சாய்ந்து, உண்டுகொண்டே கண்டுகளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு ஓடி, குதித்து, வியர்த்து, விறுவிறுத்து உடல்நலம்பேணும் நிகழ்ச்சிகளும் அதிகரிக்கலாம்.


-ஆதாரம்: https://www.investopedia.com/articles/investing/021816/3-predictions-tv-next-10-years.asp