மாமழை சிறுகதை

மணிமாலா மதியழகன்

செருப்பில் கால்களை நுழைத்தபோது ஓர் அந்நியமான உணர்வு. ‘ரெண்டு மாசத்துல என்ன மறந்துட்டியா?’ என்பதைப்போலச் செருப்பு பார்த்தது. கண்களை மூடி ஒரு வினாடி அசையாமலிருந்தேன். அடுத்தகணம், நான்கு கால்களுள்ள கைத்தடியைக் கைகள் இறுக்கமாய்ப் பற்றின. பதினைந்தாவது தளத்திலிருந்து மின்தூக்கி கீழே இறங்கியது. இறங்குவரிசையில் ஒளிரும் எண்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்ததில் உள்ளுக்குள் சிறு ஆர்வம் கூடியது.

மின்தூக்கியினுள் அங்குமிங்கும் தென்பட்ட சிமென்ட் பூச்சுகள், யார் வீட்டிலோ புதுப்பிப்புப் பணி நடப்பதைக் காட்டின. ‘ம்… எப்படியாவது மனசை சமாதானப்படுத்திக்க வேண்டியதுதான்…’ ஏழாவது தளத்தில் மின்தூக்கி திறக்க, சிந்தனை தடைபட்டது. காரிடாரில் காற்பந்தை எத்திக்கொண்டிருந்த சிறுவன், என்னைப் பார்த்தவுடன் அதைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான்.

அவர் படுக்கையில விழுந்த நாள் முதலா எச்சரிக்கையா நடந்து நடந்து நடையின் வேகமும் பாதியாப் போச்சி..

‘நாளும் பொழுதும் விடாம மழை தூறிட்டேயிருக்கு. எங்க போய் விளையாடுவான்?’ மூக்குக் கண்ணாடியை அழுத்திவிட்டவாறு என்னைப் பார்த்தான். குறுநகையுடன் பார்த்தேன். அவனது கவனமும் குறைந்து வருகிற எண்களின் மீது விழுந்தது. ‘ம்… எல்லாத்தையும் எண்ணி எண்ணியே…’ மின்தூக்கியின் கதவு திறந்தவுடன் சில்லென்ற காற்று மோதியது. பார்வையிலிருந்து சிறுவன் எப்போது மறைந்தான் என்று தெரியவில்லை.

ஓர் இளம் தம்பதியர் கைபேசியைப் பார்த்தபடி அவ்வழியே சென்றனர். ‘அவரும் நானுமாய் வீட்டைவிட்டு வெளியே போய் எவ்வளவு நாட்களாகிவிட்டன? ம்… எதற்காகப் போனோம்? கேள்விகளுக்குப் பதில் உடனே நினைவுக்கு வரவில்லை. அவரது வலது கையிலிருந்த குடையும் எனது இடது கையிலிருந்த கைத்தடியும் பூமியை ஊன்றிச் செல்ல இருவரும் கை கோர்த்துச் சென்று ஆறாண்டுகள் ஆகிவிட்டனவா?’ வலியைப் பரவவிட விரும்பவில்லை.

‘எங்கு போவது?’ பார்வையைச் சுழற்றினேன். காற்றுடன் சேர்ந்து பறந்த தூறல் கீழ்த்தளத்தை முழுதுமே நனைத்திருந்தது. வெயில் தலைகாட்டி மூன்று வாரங்களுக்கு மேலாகியதால் பூமி குளிர்ந்து கிடந்தது. ‘சிங்கப்பூர் மண்ண மிதிச்ச இந்த அறுபத்திரண்டு ஆண்டுல இப்படி இருந்ததேயில்ல’ கால்களைக் கவனமாக ஊன்றினேன். ‘ம்… அவர் படுக்கையில விழுந்த நாள் முதலா எச்சரிக்கையா நடந்து நடந்து நடையின் வேகமும் பாதியாப் போச்சி…’ மனத்தை மேலும் தளர விடக்கூடாதென அடியை எட்டி வைத்தேன்.

“ஊருக்குப் போயிட்டீங்களோன்னு நினைச்சேன்…” பக்கத்து புளோக் பெண்மணி கையில் பையுடன் நின்றிருந்தார்.

‘போயிருக்கணும்!’ கண்கள் கட்டுப்பாட்டை இழக்கத் தயாராயின.

“ரொம்ப நாளா காணலையா அதான்…”

“இல்ல, கொஞ்சம் உடம்புக்கு முடியல.”

“கோவிட்டா?”

பேச்சைத் தொடர விரும்பாது, “ஆமாம்” என்றேன்.

“ம்… வயசாயிட்டா வர்ற பிரச்சினைய சமாளிக்கவே பெரும்பாடாப் போகுது. இதுவேற புதுசா சேந்துகிட்டு… இப்பப் பரவால்லையா?”

“ம்… சரியாகிடுச்சி.”

“நல்லா சத்துள்ள ஆகாரமா சாப்பிடணும்னு சொல்றாங்க. நீங்க கவுச்சிய தொடாதவங்க வேற… பருப்பு வகைங்கள நெறையா எடுத்துக்கணும். ஒடம்ப பாத்துக்குங்க.”

பொய் சொல்லிவிட்ட குற்றவுணர்ச்சி உள்ளுக்குள் படர்ந்தது. “சரி… எங்கேயோ அவசரமா போயிட்டு இருக்கீங்கபோல…?”

“டின்னு மீனு முடிஞ்சிட்டு. அதான் உங்க புளோக்குலவுள்ள சீனங் கடையில வாங்கிட்டுப் போய்க்கிட்டிருக்கேன். நீங்க…?”

‘என்னவென்று சொல்ல…?’

“கொட்டுற மழையில காலாற நடக்கக்கூடப் போவ முடியாதேன்னு கேட்டேன்.”

“சும்மா அப்படியே புளோக்குக்கு உள்ளயே நடந்துட்டு வரலாம்னுதான்…”

“ஆமாம்… மழையால ஒரு மாசமா வீட்டுக்குள்ளவே அடைஞ்சி கிடக்கல்ல வேண்டியிருக்கு? வேல முடிஞ்சி மவ வந்துடும். வர்றதுக்குள்ள ஆக்கி வைக்கணும். இல்லாட்டிப் போனா நானும் வருவேன்.”

வெள்ளந்தியான மனுசி. மகளது வாழ்க்கை சரியில்லாத குறையைக் கொட்டித் தீர்ப்பார். மற்றவர்களிடம் அக்கறை காட்டுவதிலும் குறை வைக்கமாட்டார்.

மெல்லிய சிரிப்புடன் நன்றி கூறிவிட்டு நகர்ந்தேன். வெள்ளந்தியான மனுசி. மகளது வாழ்க்கை சரியில்லாத குறையைக் கொட்டித் தீர்ப்பார். மற்றவர்களிடம் அக்கறை காட்டுவதிலும் குறை வைக்கமாட்டார். “நான் போட்டிருக்க மாதிரியான சட்டை போட்டுக்கிட்டா சின்னாங்கா இருக்குமுல்ல? ஒரு நாளு கெழமன்னா சேலை கட்டலாம்” என்பார். “இதில் ஒரு சிரமமும் இல்ல” முறுவலுடன் பதிலளிப்பேன்.

கல்யாணம் முடிந்து இங்கே வந்த புதிதில், முட்டி வரைக்குமுள்ள சட்டையை கணவர் வாங்கி வந்தார். சேலையைத் தவிர எதுவும் வேண்டாமென்றதில் அவருக்கு வருத்தம்தான்.

கால்கள் இலக்கின்றி இரண்டு புளோக்குகளைக் கடந்திருந்தன. வீட்டிலிருந்து கிளம்பும்போது, சக்கர நாற்காலியிலிருந்த கணவர் புருவத்தை உயர்த்தினார்.

“சும்மா வெளியே போயிட்டு வர்றேன்”

“ஏதாவது வேணும்னா சுசியை அனுப்ப வேண்டியதுதான சீதா?”

‘எதுவும் வேணாம்னு எப்படிச் சொல்வது?’

“என்ன வேணும்னு சொல்லுங்க மேம்? நான் போயிட்டு வர்றேன்” சுசி மலாயில் கேட்டாள். இந்தோனேசியாவிலிருந்து வந்த சுஜி, என் கணவருக்கு தன் மொழியின் மீதிருந்த பிடிமானத்தால் சுசியாகிவிட்டாள்.

“சும்மாதான் போறேன். கவனமா பாத்துக்க” அம்மொழியிலேயே பதிலளித்தேன்.

“சீதா… போனையாவது எடுத்துக்கிட்டுப் போம்மா” என்ற கணவரிடம் இடமும் வலமுமாகத் தலையசைத்துவிட்டு வெளியாகியிருந்தேன்.

‘வீட்டு போன்லயே பேசிக்கிறோம். கையில வேற எதுக்குப்பா போனு’ன்னு கேட்டு நெடுநாள்களாக மகனிடம் மறுப்புத் தெரிவித்திருந்தோம். அப்பாவைக் காரணம் காட்டி, ‘இனிக் கண்டிப்பா வேணும்’ என்றபிறகு சொல்வதற்கு ஒன்றுமில்லை. மகன், மருமகள், பேரப்பிள்ளையெனப் பாத்துக்கிட்டே பேசுறதுக்கு நல்லாதான் இருக்கு. ஆனா கேக்கக்கூடாத சேதிகளைக் கேட்டதும் அந்தப் போனாலதான்னு சொன்னா, கேக்குறவங்க சிரிப்பாங்க. என்ன செய்ய…?’
தொடராய் இணைந்துள்ள ஆறு புளோக்குகளுக்கு கீழே ஒரு சுற்றுச் சுற்றி முடித்தாகிவிட்டது. ‘தூறலும் ஓய்வெடுக்கப் போயிருக்கோ?’ உள்ளடங்கியிருந்த இருக்கையில் அமர்ந்தேன். அங்குமிங்குமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறு சாம்பல்நிறப் பூனை ஒன்று குரல் கொடுத்துக்கொண்டே நான் இருந்த பக்கமாக வந்தது. என்ன நினைத்ததோ என் கால்களுக்கு அருகிலேயே சுருண்டு படுத்துக்கொண்டது.

‘பசியா இருக்குமோ? சிங்கப்பூரில் பூனையைப் பசியோடிருக்க விட்டுடுவாங்களா என்ன?’ பூனைங்கள இப்படிக் கொஞ்சுறாங்களே என இங்கு வந்த புதிதில் ஆச்சரியப்பட்டதும் நினைவுக்கு வர, பாவாடை தாவணியிலிருந்து சேலைக்கு மாறிய நினைவுகளில் அமிழ்ந்தேன். சிங்கப்பூர் மாப்பிள்ளை என்ற பேச்சைக் கேட்டவுடனே அம்மாவிடம் அடம்பிடித்து அழ, “அப்பா சொல்றேம்மா!” எனும் சொற்கள் அடங்கிப்போக வைத்தன.

“உன்னோட போட்டோவ பாத்தவுடனே இந்தப் பொண்ணைத்தான் முடிக்கணும்னு பையன் ஒத்தைக் கால்ல நிக்குறானாம்” அம்மா சிரித்துக்கொண்டே மாப்பிள்ளையின் புகைப்படத்தை நீட்டினார். கல்யாணம் முடியும் மட்டும் அதைப் பார்க்கவேயில்லையே!

“காலையிலிருந்து நின்னுக்கிட்டேயிருக்கே. கால் வலிக்குதா?” முதன்முதலில் கேட்ட கணவரது கேள்வி மனத்தைக் கரைக்கத் தொடங்கியது. “என்னல்லாம் பிடிக்கும்னு சொல்லு, அதுக்குத் தகுந்த மாதிரி என்னை மாத்திக்கிறேன்” அவர் சொன்னபோது, ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை வேண்டாம்’என உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தது மெல்ல ஆவியாகத் தொடங்கியது.

“நாம்பாட்டுக்கு பேசிக்கிட்டிருக்கேன், வாயே திறக்கமாட்டியா?” என்று கேட்டதும் நான் லேசாகத் தலையை உயர்த்திப் பார்த்ததும் நேற்றைப்போலிருக்கிறது. “உங்களுக்கு என்ன பிடிக்கும்?” கேட்டு முடிப்பதற்குள் நடுக்கம் பரவ, வியர்த்துக்கொட்டியது!

“அசைவ உணவு ரொம்ப பிடிக்கும்” அவர் சொல்ல ஆடிப்போய்ச் சட்டெனத் தலை உயர்த்த “ஏன்… உனக்குப் பிடிக்காதா?” என்றார். அதன் பக்கம் பார்வையே செலுத்தாதவள் என்பதைத் திணறலுடன் சொல்ல, “அதனாலென்ன? இனி நானும் அப்படியே இருந்துக்கிறேன்” மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டார். அடுத்தநாளே தம்பியிடம், ‘அசைவ சமையல் செய்வது எப்படி?’ புத்தகத்தை வாங்கிவரச் சொன்னதைப் பார்த்துக் குடும்பமே சிரித்தது.

“நீ கதறுன கதறல்ல வங்கக் கடலே பொங்கிடுச்சே!” நாகப்பட்டினத்தில் கப்பலேற வந்தபோது கலங்கியதைக் கணவர் கிண்டலாகச் சொல்வார்! வீட்டைவிட்டு ஒருநாள்கூட வெளியே சென்று தங்கியறியாதவள் அம்மா, அப்பா, இரு தம்பிகள், தங்கை, மற்ற சொந்த பந்தங்களைப் பிரிந்து அதுவும் கடல்தாண்டி வருவதென்றால் சும்மாவா?

கப்பலில் சில நாட்களுக்குப் பிறகு வாந்தி, மயக்கம் மட்டுப்பட்டபோதும் சோறு, தண்ணி உள்ளே இறங்குவேனா என்றாக, சீக்காளியைப்போல சிங்கப்பூருக்கு வந்து இறங்கியது பெரிய கதை. அம்மா, அப்பாவிற்கு கடிதம் எழுதுவதன் வழி சுமை நாளடைவில் குறையத் தொடங்கியது.

மாமியாரின் உதவியால், சில மாதங்களில் அசைவ உணவு வகைகள் அத்துப்படியாயின. “இவ்ளோ ருசியா சமைச்சிட்டு அதச் சாப்பிடமாட்டேங்கிறியே சீதா?” ஆதங்கத்துடன் கேட்கும் கணவருக்கு புன்னகையையே பதிலாக்குவேன்.

அப்பாவின் நம்பிக்கையை கணவர் பொய்யாக்கிவிடவில்லை என்பதில் மனத்தில் என்றுமே தனிக் கர்வம்தான். கொஞ்சநேரம் பார்வையில் இல்லாவிட்டால்கூட “சீதா… என்னம்மா செய்றே?” என இன்றும் குரல் கொடுத்துவிடுவார்.

உடன் பிறந்தோருடைய கல்யாணத்துக்கென இந்தியாவுக்கு கிளம்பிப்போனது மறக்க முடியாதது. அந்தக் கல்யாணப் புகைப்படங்கள் பார்த்துப் பார்த்தே மங்கிப்போயின.

அப்பாவுக்கு உடம்பு சரியில்லையெனத் தந்தி வந்தபோது ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு மூவருமாகக் கிளம்பியதை மறக்க முடியுமா? பதற்றம், கவலை எல்லாம் சேர்ந்துகொண்டதில் முதல்முறை விமானப் பயணம் என்கிற எண்ணம்கூட ஏற்படவில்லை!

ல மாதங்களில் படித்து முடித்து மகன் வரப்போகிறான் எனக் காத்திருந்தவேளையில் மனத்துக்கு பிடித்தவளைப்பற்றிக் கூறினான்.

ஊருக்குப்போய் இறங்கியபோது எல்லாமே முடிந்திருந்தது. அம்மாவுடன் கொஞ்சநாள் தங்கியிருக்க வேண்டும் எனத் தயங்கிக்கொண்டே கணவரிடம் கேட்டதும், “நானே சொல்லணும்னு இருந்தேன் சீதா. எவ்வளவு நாள் வேணுமானாலும் தங்கியிருந்துட்டு வா” என்றது நினைத்துக்கூடப் பார்க்காதது.

“சீதா… அம்மாவுக்கு நீதான ஆறுதல் சொல்லணும். நீயே இப்படியிருந்தா என்னாவது?” கணவர் சிங்கப்பூருக்கு கிளம்பும்போது கேட்டார்.

அவரது கண்டிப்பான சொற்களைப் பற்றிக்கொண்டேன். அப்பாவைத் தொடர்ந்து சில மாதங்களில் அம்மாவும் போனது சொல்ல முடியாத் துயரம்தான். அம்மாவின் இறுதி நாட்களில் உடன் தங்கியிருந்ததுதான் பெரிய ஆறுதல்.

அம்மாவின் முப்பதாம் பூசையை முடித்துவிட்டு சிங்கைக்கு வந்தோம். அதன்பின் நீண்ட இடைவெளி. இந்தியாவுக்குப் போகும் சூழல் ஏற்படவேயில்லை.

தேசிய சேவையிலிருந்த மகன் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்லவேண்டும் என்றான். ‘இங்கேயில்லாத படிப்பா..? இவராவது கொஞ்சம் அழுத்திச் சொல்லியிருக்கலாம்’. முதன்முறையாய் கணவர்மேல் கொஞ்சம் வருத்தம் உண்டானது. “பிள்ளைங்களோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கணும் சீதா” என வாயைக் கட்டிப் போட்டுவிட்டார். சில மாதங்களில் படித்து முடித்து மகன் வரப்போகிறான் எனக் காத்திருந்தவேளையில் மனத்துக்கு பிடித்தவளைப்பற்றிக் கூறினான். “குடும்பத்தோடு செலவழிக்க இங்க நிறைய நேரம் கிடைக்குதும்மா” என்ற மகனது பேச்சில் கணவர் மீதிருந்த சிறு மனத்தாங்கலும் மறைந்தே போனது.

“பொண்ணுக்குக் கல்யாணம் பேசியிருக்கேன் அக்கா. மாமாவால எப்ப வரமுடியுமோ அப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்னு இருக்கோம்” பெரிய தம்பி கடிதம் எழுதியிருந்தான். கணவர் ஒரு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டார். வெகுநாள் கழித்து உடன்பிறந்தோரைப் பார்க்கும் ஆவலில் இருப்புக்கொள்ளவில்லை.

அளவிலா கொண்டாட்டத்தில் கல்யாணவீடு இருக்க, காலனுக்கு என்ன அவசரமோ? வாகன விபத்தில் தம்பியைப் பறித்தான். “ஒரே பொண்ணு கல்யாணத்தை நீங்கதான் நடத்தணும் அக்கா” என என்ன நினைத்து எழுதினானோ? பின்னாளில் கல்யாணத்தை நடத்திவைத்த நினைவுகள் கண்களை நனைத்தன.

காலடியில் சுருண்டிருந்த பூனை ‘என்ன?’ என்று லேசாகத் தலையைத் தூக்கிப் பார்த்தது. கொஞ்சநேரம் விட்டிருந்த மழை மீண்டும் தூறத் தொடங்கியது.

காலியாயிருக்கும் தள்ளுவண்டியை அம்மா உருட்டிக்கொண்டுவர, அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு குழந்தை ஒன்று கால்களை அங்கும் இங்கும் வைத்து தளிர்நடையில் வந்துகொண்டிருந்தது. “ஆன்ட்டி” என்று சிரித்தது. புன்னகையுடன் நான் கையசைக்க, பதிலுக்குக் கையசைத்தது.

இரண்டடி முன்னால் எட்டுவைத்த குழந்தை மறுபடி திரும்பி என்னை நோக்கி வந்தது. “மியா… மியா…” என்று அழைத்துக்கொண்டே, பூனையின் அருகில் அமர்ந்தவாறு அதன் தலையைத் தன் குட்டிக் கைகளால் தடவ, என் உதடுகளில் புன்னகை அரும்பியது. பெற்றோரும் குழந்தையைப் பார்த்து ரசித்தவாறு நின்றிருந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தை “பை… பை… மியா…” எனச் சொல்லிவிட்டு அப்பா, அம்மாவின் கைகளுக்குள் தன் கைகளைக் கோர்த்துக்கொண்டது. மறக்காமல் “ஆன்ட்டி பை.. பை…” எனச் சொல்லிவிட்டுப் போனது.

படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரி எனப் பேரெடுத்த பேத்தியின் நினைவு வந்தது. மூன்றாண்டுகளுக்குமுன் குடும்பத்துடன் வந்த மகன் “எல்லாரும் இந்தியாவுக்குப் போயிட்டு வரலாமா?” எனக் கேட்டான். பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலிருந்தே இந்தியாவுக்குப் போகணும் என்றால் முகத்தைச் சுளிப்பவன், இப்படியொரு கேள்வியைக் கேட்டால் ஆச்சரியப்படாமல் என்ன செய்ய முடியும்? “முன்னல்லாம் சொந்தக்காரங்களிடம் அவங்களைப்போலச் சரளமாப் பேச முடியலையேன்னு தோணும். இப்ப அப்படியில்லையேம்மா” என்றான்.

“மூணு மாசத்துக்கு ஒருவாட்டி, இங்க இருக்குற ஆசுபத்திரிக்கிப் போயிட்டு வர்றதுக்கே பெரும்பாடு பட வேண்டியிருக்கு. இதில் இந்தியாவுக்கா?”

“எந்தச் சிரமமும் இல்லாமப் பாத்துக்கிறது எங்களோட வேலை. ரெண்டு பேரும் சரின்னு மட்டும் சொல்லுங்க.”

‘எப்படிச் சொல்ல முடியும்?’ பலநாள் கேட்டும் பிடிகொடுக்காமல்தான் இருந்தோம்.

“அப்பா… நம்மளோட சொந்த ஊருக்குப் போய்ட்டுத் திரும்புறதுன்னாதான் சிரமம். சென்னையில் இறங்கி, சொந்தக்காரங்களை எல்லாம் அங்கேயே அழைச்சு பாத்துட்டு வந்துடலாம்” என்றான்.

அந்த யோசனை எங்களுக்குப் பிடித்திருந்தது. தம்பி, தங்கையுடன் பேசிக்களித்த அந்தப் பொன்னான ஐந்து நாட்களையும் மறக்கமுடியாது.

“சென்னையில் இருக்கும்போது உன் முகத்துல தனிக் களை தெரிஞ்சது சீதா” கணவர் சொல்வதைக் கேட்கையில் உள்ளுக்குள் பூரிப்பாய் இருக்கும்.

நீண்ட ஆயுள் சும்மா வருவதில்லை. இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்கவேண்டியிருகிறது. கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்தேன்.

திடீரென நெஞ்சுவலி வந்து சின்ன தம்பி இவ்வுலகைவிட்டுப் பிரிந்து ஒரு வருசம்கூட ஆகாத நிலையில் தங்கையைப் புற்றுநோய் கொண்டுசென்றது. அடுத்தடுத்து இப்படிப்பட்ட சோதனைங்க வந்தா தாங்க முடியுமா? நான்கு சுவற்றுக்குள் கலங்கித் தவித்து நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். நீண்ட ஆயுள் சும்மா வருவதில்லை. இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்கவேண்டியிருகிறது. கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்தேன்.

தங்கைக்கு உடம்பு சரியில்லையெனக் கேள்விப்பட்டதிலிருந்தே சென்றுபார்க்க மனம் துடித்தது. ‘கொவிட் 19’ நோய்த்தொற்றின் காரணமாய் மகனாலும் உடனடியாக இங்கே வர முடியவில்லை. “சுசிதான் இருக்கிறாளே. நீ போயிட்டு வா சீதா” அவர் சொல்வதற்காகக் கிளம்ப முடியுமா?

அவ்வளவு சீக்கிரம் அவளது முடிவு வருமென யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் குமுறி அழுததோடு சரி. ‘என்னாலதான உனக்கு இந்தக் கஷ்டம்’ என்பதைப்போலப் பார்க்கும் கணவரது கண்களைக் காணும் சக்தியும் எனக்கில்லை.

மெல்ல எழுந்த பூனை உடம்பை ஒரு குலுக்கு குலுக்கியது. நிமிர்ந்து என்னைப் பார்த்து “மியா…” எனக் குரல் கொடுத்துவிட்டு நகர்ந்தது. அது நடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். தபால் பெட்டியின் அருகே சென்றபின் அங்கிருந்து திரும்பிப் பார்த்தது.

எல்லாத்தையும் மரத்துப்போக வைக்கிற காலமே கிளறிவிட்டு வேடிக்கை பார்க்குதே!

‘இப்போல்லாம் கணவர் சொன்னால், சுசி தபால் பெட்டியைப் பார்த்துட்டு வருகிறாள்!’

இங்கு வந்த அன்றே கடிதம் எழுதத் தொடங்கியது, இன்றும் மாறவில்லை. தொலைக்காட்சியில் பார்த்த படம் முதல் தொலைவிலுள்ள பேத்தி பேசுகிற மழலைச் சொற்கள்வரை யாவும் கடிதத்தில் பறந்தன. பெற்றோரின் பிரிவுக்குப்பின், கடிதப் போக்குவரத்து தம்பி, தங்கைக்குத் திசைமாறியது. பெரிய தம்பிக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு பொறுமை கிடையாது. எல்லாக் கடிதங்களையுமே பொக்கிசம்போலச் சேர்த்து வைத்திருந்தாலும் அவன் எழுதிய ஒன்றிரண்டு கடிதங்களைக் கூடுதல் பாதுகாப்போடு வைத்துள்ளது நினைவுக்கு வந்தது.

சின்ன தம்பியிடமிருந்து இரண்டு மூன்று கடிதங்களுக்குப் பிறகுதான் ஒரு பதில் வரும். “போன்லயே பேசிடுறோம். லட்டர்ல எழுத என்ன இருக்குக்கா?” என்பான். ‘என்ன இருக்குன்னுதான் கிளம்பிட்டானோ?’ கண்ணீர்த் துளிர்த்தது.

அன்றைக்குச் சமைத்ததில் தொடங்கி, அலுவலகத்தில் நடந்தவை, அக்கம் பக்கத்து விவகாரம் என ஒன்றுவிடாமல் தங்கை எழுதுவாள். ஏற்கனவே கேட்ட செய்தியாகயிருப்பினும் கடிதத்தில் பார்க்கும்போது பரவசமாகும்.

‘இனி யார் எனக்கு எழுதப் போறாங்க? நான் இனி யாருக்கு எழுதுவேன்?’

‘ரெண்டு மாசமா வீட்டுக்குள்ளவே கிடந்து தவிச்சதை தாங்க முடியாமதான் வெளியே வந்தேன். அப்படியும் விரட்டுதே. ஒவ்வொருவரது பிரிவும் ஒவ்வொருவிதமான ரணத்தை உண்டாக்கி… ம்… எல்லாத்தையும் மரத்துப்போக வைக்கிற காலமே கிளறிவிட்டு வேடிக்கை பார்க்குதே!’

மழை வலுக்கவும் அதற்கு சளைக்க விரும்பாமல் காற்றும் கைகோத்தது. ‘வீட்டைவிட்டுக் கிளம்பி வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலிருக்கும். இவ்ளோ நேரம் சீதா மந்திரத்தைச் சொல்லாம அவர் உதடுகள் நொந்திருக்குமே’ சட்டென எழுந்தேன்.
மின்தூக்கியை நெருங்குகையில் ஓர் அறிவிப்பு கண்ணில்பட்டது. ‘நினோ’ என்ற பச்சைக்கிளியைக் காணவில்லையாம்!