மொழிபெயர்ப்புக் கவிதை

0
461

மொழிபெயர்ப்புக் கவிதை

மஹேஷ்

மணியோசையில் கவிதையில்லாதிருந்தால்
அதைக்கேட்டு நீங்கள்
பிரார்த்தனைகளுக்கு வரமாட்டீர்கள்.

மீன்விற்பவனின் கூவலில் கவிதையில்லாதிருந்தால்
அடுத்த நாளும் அதே நேரத்தில்
நீங்கள் அங்கே காத்திருக்கமாட்டீர்கள்.

இரவின் இருளில் கவிதையில்லாதிருந்தால்
பூக்கள் தாங்கள் மலர்வதை
நாளைக்கு ஒத்திப்போடலாம்.

எனினும்..
அவையெதுவும்
பெருமையுடன் தாங்களே கவிதையாகச்
சமைந்து நிற்பதில்லை.
படிமங்களோ பூடகங்களோ இருப்பதில்லை.
சொற்களும் மிகச் சொற்பமே.

மணியோசையில் கவிதை அதன் நாதமே
இருளில் கவிதை இருளே
துளிக்கூட அதிகமுமில்லை
குறைவுமில்லை.

கவிஞர் பற்றிய குறிப்பு

வீரன்குட்டி

கேரளாவில் நாராயங்குளம் என்ற ஊரில் 1962இல் பிறந்த வீரன்குட்டி, தற்காலக் கவிஞர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். மலையாளம் மட்டுமல்லாது இவர் ஆங்கிலத்திலும் படைத்துள்ள கவிதைகள், பலமொழிகளில் மொழியாக்கமும் கண்டுள்ளன. தமிழகத்திலும் கேரளத்திலும் பல இலக்கிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர். தற்போது மடப்பள்ளி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.