வெளிச்சத்தின் வரலாறு

திமத்தி ப்வீ

நெருப்பு உண்டாக்கப்பட்டதிலிருந்து இருளை வெல்லும் வழியைத் தேடிய மனித இனம் காட்டில் மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தீப்பந்தங்களைக் கைவிளக்குகளாகவோ, பிறகு ஆங்காங்கே சுவர்களில் பதித்து குகைகளில் வெளிச்சம் உண்டாக்குவதற்கோ பயன்படுத்தியதிலிருந்து தொடங்கிய விளக்குகளின் பயணம் மிக நீளமானது.

ரோமானியர்கள் தங்கள் வீட்டுவாசல்களில் தாவரஎண்ணெயில் எரியும் விளக்குகளை ஏற்றி, அவற்றை அடிமைகளைக் கொண்டு பராமரித்திருக்கிறார்கள். பீகிங் நகரில் (இன்றைய பெய்ஜிங்) எரிமலைகளில் கசியும் வாயுவை மூங்கில் குழாய்களில் கொண்டுவந்து எரித்துத் தெருவிளக்காகப் பயன்படுத்தியுள்ளனர். குளிர்காலத்தில் 15ஆம் நூற்றாண்டு லண்டன்வாசிகள் அனைவரும் மாலை வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு வெளியே கூண்டுவிளக்குகள் ஏற்றச்சொல்லி அரசு உத்தரவே இருந்திருக்கிறது. பாரிஸ் பிரபுக்கள் இரவில் தெருவில் செல்லும்போது வெளிச்சத்துக்காக ‘லிங்க் பாய்ஸ்’ எனப்படும் கையில் தீப்பந்தம் ஏந்திய சிறுவர்களை பணியில் வைத்திருந்தார்கள். பின்னர் 19ஆம் நூற்றாண்டில் யப்லாச்கோவ் வர்த்தி (Yablochkov candle) எனப்படும் மின்சாரத்தால் எரியும் கார்பன்வில் விளக்குகள் (carbon arc lamp) பயன்பாட்டுக்கு வந்தன. இன்று நகரெங்கும் நாம் காணும் நியான் விளக்குகள், நீண்ட ஆயுளுள்ள LED விளக்குகள் போன்றவை ஒளிரும் நம் வண்ணமயமான வாழ்வு கடந்துவந்த பாதை, அதிலும் குறிப்பாகச் சிங்கப்பூர்த் தெருவிளக்குகளின் வரலாறு, சுவாரசியமானது.

1968இல் பிலிப் ட்டில் காணப்பட்ட
ஒரு குமிழ் விளக்கு

இரவுச் சிங்கப்பூருக்கு ஏதோவொரு ஈர்ப்பு இருக்கிறது. மரீனா பே, மத்திய வர்த்தக வட்டாரத்தின் வானளாவிய கட்டடங்களின் இரவுநேர மினுமினுப்பு சிங்கப்பூரின் அடையாளங்களுள் ஒன்றாகவே ஆகிவிட்டது. ஆண்டுதோறும் பல்லின விழாக்களின்போது ஆர்ச்சர்ட் ரோடு, சைனாடவுன், கேலாங் சிராய், சிராங்கூன் ரோடு பகுதிகள் அவற்றின் வண்ணமிகு ஒளியூட்டல்களுடன் படமெடுத்துக்கொள்வதற்கென்றே திரளும் பெருங்கூட்டத்தைச் சந்திக்கின்றன.

ஆனால் தொடக்ககாலச் சிங்கப்பூரின் இரவுகள் இப்படி ஜொலித்துக்கொண்டிருக்கவில்லை. முதலில் நிறுவப்பட்ட தெருவிளக்குகள் சன்னமான, படபடக்கும் எண்ணெய் விளக்குகள். பிறகு 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் எண்ணெய் விளக்குகளுடன் எரிவாயு விளக்குகளும் சேர்ந்துகொண்டன. அவையும் நகரின் முக்கியப் பகுதிகளில் மட்டுமே. பின்னர் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மின்விளக்குகள் புழக்கத்திற்கு வந்தன என்றாலும் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகுதான் சிங்கப்பூரின் அனைத்துத் தெருக்களும் இரவில் வெளிச்சத்தைப் பெறவேண்டும் என்ற திட்டத்தை ஆட்சியாளர்கள் வகுத்தனர்.

முதல் தெருவிளக்குகளின் வருகை

1880 இல் போட் கீ பகுதியை ஒட்டி நிறுவப்பட்ட எரிவாய்வு விளக்குகள்

பிரிட்டிஷார் 1819இல் சிங்கையை ஒரு வணிக மையமாக ஆக்கிய பின்னர் 1824இல் முதல் முதலாகத் தெருவிளக்குகள் வந்தன. சில பாலங்கள், முக்கிய தெருக்கள், டாணா என அழைக்கப்பட்ட காவல் நிலையங்கள், பிரதான கட்டடங்களின் முகப்புகள் ஆகியவற்றில் நிறுவப்பட்ட விளக்குகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. நிலவொளியை மட்டுமே நம்பியிருந்த நிலையிலிருந்து இதுவொரு முன்னேற்றம் என்றாலும் சில பிரச்சனைகளும் இருந்தன.

மிகச்சில விளக்குகளே இருந்தன. அவைகளிலும் ஒருபுறம் மட்டுமே கண்ணாடி இருந்ததால் பெரும் பயனளிக்கவில்லை. வெளிச்சம் போதவில்லை என்பதை நிரூபிப்பதுபோல, என்று விளக்குகள் நிறுவப்பட்டனவோ அதேயிரவில் பூர்விஸ் கிடங்கை உடைத்து சுமார் 500 வெள்ளி மதிப்புள்ள பொருட்களைத் திருடிச் சென்றனர். இக்குறிப்புகளை சார்லஸ் பர்ட்டன் பக்லி (Charles Burton Buckley) 1902இல் An Anecdotal History of Singapore என்ற நூலில் எழுதியிருக்கிறார். சமயங்களில் விளக்குகளேகூடத் திருடுபோயின!

Singapore Chronicle பத்திரிகையில் 1830களில் வெளிவந்த இரண்டு செய்திகளைப் பார்ப்போம்:

1905இல் மெக்கின்ஸி ரோட்டில் தொடங்கப்பட்ட
முதல் மின் உற்பத்தி நிலையம்

1833 – ஆசிரியர் கடிதம் பகுதிக்கு வந்த கடிதம் ஒன்றில், அவ்வப்போது நடக்கும் ஊர்வலங்களின்போது உள்ளூர்க்காரர்கள் தீப்பந்தங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவற்றிலிருந்து நாலாபுறமும் பறக்கும் தீப்பொறிகளால் மரங்களும் அத்தாப்புக்கூரையும் கொண்ட கட்டடங்கள் தீப்பிடிக்கும் அபாயம் உண்டு என்று பயப்படுவதாகவும் எழுதப்பட்டிருந்தது.

1836 – அருகருகே இருந்த இரண்டு வீடுகளில் திருட்டு. ஒருவீட்டில் மேல்வராந்தாவில் இருந்த அனைத்து விளக்குகளும் திருடுபோயின. இன்னொன்றில் படிக்கட்டுக்குக்கீழே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு விளக்கு திருடப்பட்டது.

இரவில் போதிய வெளிச்சமும் போதுமான காவலர்களும் இல்லாததால், இருள் கவிழ்ந்ததும் வன்முறைக் குற்றச் சம்பவங்கள் பெருகின. சிங்கப்பூருக்கென்று முழுநேர போலீஸ் கமிஷனராக தாமஸ் டன்மன் 1843இல் நியமிக்கப்பட்டார். அதே வருடத்தில்தான் சிங்கப்பூருக்கான முதல் அமெரிக்கத் தூதர் ஜோசஃப் பலஸ்டியரின் மனைவி மரியா ரெவர் பலஸ்டியர், பாஸ்டனில் இருந்த அவரது குடும்பத்திற்கு சொந்தமான வார்ப்பகத்தில் (foundry) செய்யப்பட்ட ஒரு மணியை புனித ஆண்ட்ரூ தேவாலயத்திற்கு (1861இல் இடிக்கப்பட்டுப் புனித ஆண்ட்ரூ கதீட்ரலாகக் கட்டப்பட்டது) தானமாக வழங்கினார். அந்த மணிக்கும் சிங்கப்பூரின் அன்றைய வெளிச்சமற்ற இரவுகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு.

1900 வாக்கில் கேலாங் ரோட்டில் எரிவாயு விளக்கு

இரவுநேரக் குற்றங்களைத் தவிர்க்க பல நாடுகளிலும் நடைமுறையில் இருந்தது போலவே அப்போது சிங்கப்பூரிலும் இரவுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மணி தானமாக வழங்கப்பட்டபோது ஒரு நிபந்தனையும் வைக்கப்பட்டது. அது, தினமும் இரவில் 8 மணிக்கு குண்டு முழங்கிய பின்னர் 5 நிமிடங்களுக்கு மணி ஒலிக்கப்படவேண்டும் என்பது. அவ்வழக்கம் 1874வரை தொடர்ந்தது. அந்த மணி தற்போது தேசிய அரும்பொருளகத்தில் உள்ளது. திருட்டு, வன்முறைக் குற்றங்களைத்தவிர போதிய வெளிச்சமின்மையால் விபத்துகளும் நடந்துள்ளன.

இன்று ஆசிய நாகரிக அரும்பொருளகம் இருக்கும் இடத்திற்கு முன்புதான் சிங்கப்பூர் ஆற்றின் வடகரைப் படித்துறை அமைந்திருந்தது. படகில் வருவோர் பாதுகாப்பாகக் கரையிறங்க ஏதுவாக அங்கு விளக்குகள் இருக்கவில்லை. ஒரு படகின் தலைமை மாலுமியே படிகளில் தடுக்கி ஆற்றுக்குள் விழுந்து மூழ்கி இறந்திருக்கிறார். ஒரு சிலர் படிகள் முடிந்து எங்கே நீர் இருக்கிறது என்று தெரியாமல் தடுமாறியுள்ளனர்

எனவே படித்துறையில் ஆங்காங்கே விளக்குகள் பொருத்தப்படவேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இதுபற்றி 1844இல் The Singapore Free Pressக்கு ஒருவர் எழுதிய கடிதத்தில் அந்த இடத்தில் தான் காலை உடைத்துக்கொண்டது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். படித்துறையின் மேற்பகுதியில் இரண்டு விளக்குகளாவது பொருத்தப்பட்டிருந்தால் பல விபத்துகளைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

மரியா ரெவர் பலஸ்டியர் ஒரு மணியை தானமாக வழங்கினார். அந்த மணிக்கும் சிங்கப்பூரின் அன்றைய வெளிச்சமற்ற இரவுகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு.

தெருவிளக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 1849இல் ஆண்டுக்கு 300 வெள்ளி செலவில் சுமார் 50 விளக்குகள் பொருத்தப்படும் என்று நகரமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் வெறும் எண்ணெய் விளக்குகளால் பெரும் பயனில்லை; அவற்றில் விரைவில் தூசும் அழுக்கும் சேர்ந்து மங்கலான வெளிச்சமே வருகிறது; அவற்றைப் பராமரிப்போரும் அழுக்குத் துணிகளையும் வடிகால் நீரையும் கொண்டு கழுவுகின்றனர் என்றெல்லாம் புகார்கள் வந்துள்ளன. விளக்கு பராமரிப்போரும் குறைவாக இருந்ததால் குண்டுபோடும் நேரத்திற்கே (இரவு 8 மணி) சில இடங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. மேலும், 1861இல் The Straits Timesக்கு வந்த கடிதம் ஒன்றில் நார்த் பிரிட்ஜ் ரோடு, ஹை ஸ்திரீட் போன்ற இடங்களில் பொதுவாக இரவு 1 மணிக்கெல்லாம் விளக்குகள் அணைந்துவிடுகின்றன என்று கண்டிருந்தது.

இராபர்ட் ரிக் (Robert Rigg) என்ற நகராட்சி ஆணையச் செயலர் சிங்கையில் எரிவாயுத் தெருவிளக்குகள் அமைவதற்கு அஸ்திவாரமிட்டவர் எனக் கருதப்படுகிறார்.

எண்ணெயிலிருந்து எரிவாயுவுக்கு

இப்படி இளம் சிங்கப்பூர் எண்ணெய் விளக்குகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கையில் 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய நகரங்கள் எரிவாயு பயன்படுத்தும் தெருவிளக்குகளுக்கு நகர்ந்துவிட்டிருந்தன. சொல்லப் போனால் 1819இல் ராஃபிள்ஸ் சிங்கையில் கால்பதிப்பதற்கு ஏழாண்டுகளுக்கு முன்பே முன்பே லண்டனில் Gas Light and Coke Company மூலம் எரிவாயு பொதுப்பயனீட்டில் இருந்தது.

எரிவாயு விளக்குகளை நிறுவுவது அப்போது எளிதானதாக இல்லை. கரியிலிருந்து மீத்தேன் வாயுவைத் தயாரித்து விநியோகிக்க வேண்டியிருந்ததால் பெருமளவிலான கரி தேவைப்பட்டது. மேலும் தீவெங்கும் தரையடிக் குழாய்கள் பதிக்க பெரும்பணம் மட்டுமின்றி சட்டதிட்டங்களும் தேவைப்பட்டன. நகராட்சிகளுக்கு வரி வசூலித்தல், பொதுச் சட்ட அமைப்பு, நகரத் தலைவர்களை நியமித்தல் போன்றவைகளுக்காக 1856இல் இந்தியச் சட்டங்கள் (Indian Acts) என்ற பெயரில் இந்தியாவுக்கும் சிங்கப்பூர் உள்ளிட்ட நீரிணைக் குடியிருப்புப் பகுதிகளுக்கும் தேவையான புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் நகராட்சிகளே தெருவிளக்குகளை நிறுவவும் பராமரிக்கவும் ஒப்பந்ததாரர்களை நியமிக்கும் அதிகாரம் இடம்பெற்றன. அச்சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளில் சிங்கப்பூரும் பிரிட்டனின் நகராட்சிகளைப் போலவே எரிவாயு விளக்குகளை நிறுவத்தொடங்கின.

இராபர்ட் ரிக் (Robert Rigg) என்ற நகராட்சி ஆணையச் செயலர் சிங்கையில் எரிவாயுத் தெருவிளக்குகள் அமைவதற்கு அஸ்திவாரமிட்டவர் எனக் கருதப்படுகிறார். இதற்கென இலண்டனில் 1861 வாக்கில் ‘சிங்கப்பூர் எரிவாயு நிறுவனம்’ (Singapore Gas Company) பதிவு செய்யப்பட்டு 400 எரிவாயு விளக்குகளைப் பெறும் ஒப்பந்தம் முடிவானது. உள்ளூரில் தயாரிப்பதற்கு அன்று தொழில்நுட்பமோ முதலீட்டுச் சந்தையோ இல்லை. இதே நிறுவனம் சிங்கப்பூரில் குழாய் மூலம் தெருவிளக்குகளுக்கு எரிவாயு விநியோகிக்க ‘காலாங் எரிவாயு’ (Kallang Gasworks) எனும் நிறுவனத்தின் கட்டுமானப் பணியையும் 1862இல் மேற்பார்வையிட்டது.
விக்டோரியா மகாராணியின் பிறந்தநாளான மே 24 அன்று 1864இல் முதல் எரிவாயு விளக்குகள் சிங்கப்பூரில் ஏற்றப்பட்டன.

விளக்குக் கம்பங்களைத் தொட்டுத்தொட்டுப் பார்த்து கம்பம் சூடாகாமல் அதன் உச்சியில் எப்படி விளக்கு எரிகிறது என்று வியந்தனர். விளக்கேற்றுபவர்கள் எண்ணெய், திரி எதுவுமின்றி வெளிச்சத்தை கொண்டுவரும் மாயத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் பின்னாலேயே ஒவ்வொரு விளக்குக்கம்பத்துக்கும் பொதுமக்கள் தொடர்ந்தனர் என்று The Singapore Free Press செய்தி கூறுகிறது. ஷு நான் யிங் (Xu Nan Ying) என்பவர் தெருவிளக்குகள் குறித்து 1896இல் ஒரு கவிதை கூட எழுதியிருக்கிறார்.

முக்கிய இடங்களில் எரிவாயு விளக்குகள் வந்த பின்னரும் உட்புறத் தெருக்களில் பழையபடி எண்ணெய் விளக்குகளே தொடர்ந்தன. மேலும், முழுநிலவு நாட்களில் நகராட்சி ஆணைய ஆணைப்படி எரிவாயு விளக்குகள் ஏற்றப்படவில்லை. எண்ணெய் விளக்குகளுக்கும் அன்று ஓய்வுதான்.

மின்சார விளக்குகளின் வருகை

கட்டடங்களில் 1880களிலேயே மின்விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டாலும் சிங்கப்பூரின் தெருக்களில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மின்சார விளக்குகள் அறிமுகமாயின. அமெரிக்க நகரங்களில் மின்வில் விளக்குகள் (electric arc lamps) 1870களில் புழக்கத்திற்கு வந்தன. இரண்டு கார்பன் தண்டுகளை அருகருகே வைத்து மின்சாரம் பாய்ச்சும்போது அவ்விரு மின்முனைகளுக்கும் இடையே மின்பொறி ஒரு வில் போல ஒளிர்ந்தது.

மின்வில் விளக்குகளை பிரிட்டிஷ் கடற்படையினர் கப்பல்களில் பயன்படுத்தினர். ஆனால் அவை கண்கூசும் அளவுக்குப் பிரகாசமாக இருந்தன. “அஞ்சல் கலங்கள் புலாவ் பிரானி துறைகளிலிருந்து கிளம்பும் அதேசமயத்தில் கடற்படையினர் இந்த விளக்குகளைப் பயன்படுத்துவதால் கண்கள் கூசி கலத்தைச் செலுத்துவது சிரமமாக உள்ளது” என்று அலுத்துக்கொள்ளும் ஒரு கடிதம் The Singapore Free Press and Mercantile Advertiser Weekly Mail Edition பத்திரிகையில் 1890இல் வந்தது. மேலும் இந்த மின்வில் தீ விபத்தை ஏற்படுத்தவும் கூடும் என்ற அச்சமும் இருந்ததால் இவை கட்டடங்களுக்குள் பயன்படுத்தப்படவில்லை.

சிங்கப்பூரின் தந்தி அலுவலகத்தில் 1885இல் 59 எடிசன்-ஸ்வான் (Edison-Swan) தகித்து ஒளிரும் மின்விளக்குகள் (incandescent bulbs) பொருத்தப்பட்டன. விளக்குகளுக்குள் இருக்கும் வெற்றிடத்தில் உலோக இழைகள் மின்சாரத்தால் சூடாக்கப்படும்போது அவை தகித்து ஒளிர்ந்தன. அதைத் தொடர்ந்து 1886இல் ஹில் ஸ்திரீட்டில் இருந்த யூனியன் விடுதியிலும் 1890இல் அரசு இல்லத்திலும் (இன்றைய இஸ்தானா), எரிவாயு விளக்குகள் அகற்றப்பட்டு, தகித்து ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. அவ்விளக்குகளின் சக்தியை 16 அல்லது 32 மெழுகுவர்த்திக்கு இணையான வெளிச்சம் என்று வரையறுத்தனர். அதாவது 20 முதல் 40 வாட் சக்தி எனலாம்.

வீடுகளுக்குள் புழக்கத்தில் வந்துவிட்ட அவை தெருவிளக்குகளாகப் பயன்பட சில காலம் பிடித்தது. எரிவாயுக் குழாய்கள் போலவே மின் விநியோகத்துக்கென கம்பி வடங்கள் பதித்தல், மின்நிலையம் அமைத்தல் என்று வெவ்வேறு சிக்கல்களைச் சமாளிக்கவேண்டியிருந்தது. மின்சார டிராம் வண்டிகளின் வருகை மின்நிலையத்துக்கான தேவையை விரைவுபடுத்தியது.

லண்டனில் 1901இல் ‘சிங்கப்பூர் டிராம்வேய்ஸ் லிமிட்டட்’ நிறுவப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டு மெக்கின்ஸி ரோட்டில் ஒரு மின்னுற்பத்தி நிலையமும் நிறுவனத்தின் தலைமையகமும் அமைக்கப்பட்டது. அது 1905இல் உற்பத்தியைத் தொடங்கியபோது டிராம் வண்டிச் சேவையும் தொடங்கியது. அதே மின்நிலையம் தெருவிளக்குகளுக்கான மின்சாரத்தையும் விநியோகித்தது. ராஃபிள்ஸ் பிளேஸ், எஸ்பிளனேட் (இன்றைய பாடாங்) ஆகிய இடங்களில் 1906இல் முதல் மின் தெருவிளக்குகள் நிறுவப்பட்டன.

இதன் பின்னர் மின்சாரத்தின் பயன்பாடு மளமளவென அரசு அலுவலகங்கள், வணிகக் கட்டடங்கள், வீடுகள் என ஊடுருவியது. 1909இல் தஞ்சோங் பாகார் துறைமுகத்துக்கென 1909இல் ஒரு தனி மின்நிலையமும், அதிகரிக்கும் தேவையைச் சமாளிக்க 1927இல் செயிண்ட் ஜேம்ஸ் மின்நிலையமும் தொடங்கப்பட்டன. ஒருகட்டத்தில், 1936இல், ஏற்பட்ட ஒரு மின்தடையால் நகரத்தின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு மின்சாரத்தைச் சார்ந்துள்ளன எனத் தெரியவந்தது.

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹை ட் பகுதியில் தெருக்களின் மேலே டிராம் கம்பிவடங்களும், மின்சாரத் தெருவிளக்கும்

குளிரூட்டிகள், திரையரங்குகள், ஏன் அரசு இல்லமும்கூடத் தப்பவில்லை. அந்த மின்தடையை ஆராய்ந்து கட்டுரை வெளியிட்ட Singapore Free Press, கீழை நாடுகளில் மிக முன்னேறிய நகரம் என்று சொல்லப்படும் சிங்கப்பூரில் எட்டில் ஏழு தெருக்கள் இன்னமும் எரிவாயு விளக்குகளை நம்பியே இருக்கின்றன என்று கூறியது. அவ்வாண்டில் வெளியான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தலையங்கம் ஒன்று “உலகத்திலேயே ஆகமோசமாக வெளிச்சம் குறைந்த தெருக்களை” சிங்கப்பூர் கொண்டுள்ளது என வருணித்தது.

சிங்கப்பூரில் ஒரு தெருகூட நல்ல வெளிச்சத்துடன் இல்லை என்றும் பழைய மங்கலான எரிவாயு, எண்ணெய் விளக்குகள் அனைத்தும் முழுவதுமாகவும் உடனடியாகவும் மாற்றப்பட்டு மறுசீரமைப்புச் செய்யவேண்டும் என்றும் ரோட்டரி மன்றத்தின் தலைவர் டி.ஹெச்.ஸ்டோன் 1937இல் கூறியிருக்கிறார். சாலையில் தானியங்கி வாகனங்களின் போக்குவரத்து அதிகமானதால் விளக்குக் கம்பங்களுக்கு இடையே வெளிச்சமில்லாத பகுதிகளில் வாகன ஓட்டிகள் இன்னல்களுக்கு ஆளானதே இவ்வாறான அதிருப்திக் குரல்கள் எழுந்ததற்குக் காரணம்.

சோடியம், மெர்க்குரி வாயு விளக்குகள் 1930களில் கண்டுபிடிக்கப்பட்டு பகல் போல வெளிச்சம் தர ஆரம்பித்தன. “இனி நிரந்தரப் பகல்” என்று ஒரு பத்திரிகை உற்சாகத்துடன் செய்தி வெளியிட்டது. கோலாலம்பூர், ஈப்போ பகுதிகளில் மெர்க்குரி வாயு விளக்குகள் 1937இல் வெற்றிகரமான சோதனை ஓட்டம் கண்டன. போலவே, சிங்கப்பூரிலும் காத்தோங் – சிக்லாப் இடையே கிழக்குக் கடற்கரைச் சாலையில் 300 கஜத்திற்கு ஒரு விளக்கு என நிறுவப்பட்டது.

சாலை விபத்துக்களைத் தவிர்க்கவும், போக்குவரவுப் பிரச்னைகளைக் களையவும் 1937இல் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு தெருவெளிச்சக் குறைவும் ஒரு காரணம் எனக்குறிப்பிட்டு தெருவெளிச்சத்தைத் தரப்படுத்த சில பரிந்துரைகளை முன்வைத்தது. முக்கிய வழிகளை ‘குரூப் ஏ’ என வகைப்படுத்தி வகைப்படுத்தி அவற்றில் சோடிய, மெர்க்குரி வாயு விளக்குகளை நிறுவப் பரிந்துரைத்தது. அவற்றுள் பீச் ரோடு, ஆர்சர்ட் ரோடு, காலாங் ரோடு, புக்கிட் தீமா ரோடு, சிராங்கூன் ரோடு ஆகியவையும் அடங்கும். ஆனால் நகராட்சி ஆணையமோ அப்பரிந்துரைகளை ஏற்காமல் தன்னுடைய திட்டத்தையே செயல்படுத்தியது. கிளெமென்சி அவென்யூவில் ஒரு பகுதிக்கு 1940இல் மெர்க்குரி வாயு விளக்கு வந்தது. அத்தோடு போர் மேகங்கள் சூழ்ந்துவிட, விளக்கு நிறுவும் பணிகள் மேற்கொண்டு தொடரவில்லை.

போரில் சேதமடைந்திருந்த விளக்குகளைச் சரிசெய்யவும் மாற்றவும் ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் (1942-45) பராமரிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன்விளைவாக 43 முக்கிய சாலைச் சந்திப்புகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. போருக்குப்பின் மலாயாவிலிருந்தும் மற்ற பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் சிங்கைக்கு வர, எரிவாயுவுக்கான தேவை அதிகமானதால் எரிவாயு விளக்குகளுக்கு எரிபொருள் கிட்டுவது சவாலான ஒன்றாக ஆனது. பிறகு, 1946 இறுதியில் 30,000 வெள்ளி செலவில் விக்டோரியா தெரு, பிராஸ் பாசா, ரிவர் வேலி, ஊட்ரம் பகுதிகளில் 72 மின்விளக்குகளைப் பொருத்தினர்.

1862இல் தொடங்கப்பட்ட காலாங் எரிவாய்வு நிறுவனம்

முறையான ஐந்தாண்டுத் திட்டம் 1947இல் தீட்டப்பட்டு, மேலும் 3000 தெருவிளக்குகளுக்குமேல் நிறுவ ஒரு மில்லியன் வெள்ளி ஒதுக்கினர். அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் 1.5 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டது. பிறகு 1954இல் பயனில் உள்ள சுமார் 530 எரிவாயு விளக்குகள் ஆண்டு இறுதிக்குள் அகற்றப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்படும் என நகர மன்றம் (நகராட்சி ஆணையத்திற்கு அடுத்ததாக வந்த நிர்வாக அமைப்பு) அறிவித்தது.

ஏறக்குறைய 1955ஐ ஒட்டி சிங்கப்பூர் முழுவதும் மின்விளக்குகளுக்கு மாறிவிட்டது. எரிவாயு விளக்குகளை மாலையில் ஏற்றவும் பிறகு காலையில் அணைக்கவும் ஒவ்வொரு விளக்குக் கம்பமாகச் சென்றுவந்துகொண்டிருந்த பணியாளர்களுக்கு வேலையில்லாமற் போனது. இருப்பினும் எரிவாயு விளக்குகளைப் பயன்படுத்தாவிட்டாலும் சுத்தம் செய்து பராமரிக்க விளக்கு உதவியாளர்கள் இருந்தனர். அவர்களை எரிவாயுத்துறை வேலைக்கு வைத்திருந்தது.

மின்விளக்குகள் அதிக வெளிச்சம் தந்ததோடு எண்ணெய் விளக்குகளோடு ஒப்பிடுகையில் குறைவான செலவே ஆனது என்றாலும் அருகிலிருந்த வடிகால்களிலிருந்து வரும் துர்நாற்றத்தை அவற்றால் விரட்ட முடியவில்லை. அதற்காகவே தெலுக் ஆயர் காவல் நிலையம், ஃபோர்ட் கேனிங், குடிநுழைவு அலுவலகம் போன்ற இடங்களில் சில எரிவாயு விளக்குகள் பகலிலும் இரவிலும் தொடர்ந்து எரிந்தன.

மின்சாரப் பரவலாக்கம் நிகழ்ந்த 1960களிலிருந்து சிங்கப்பூர் இரவில் ஜொலிக்கும் நகரமானது. அதன்பிறகு இரவுச் சிங்கப்பூரின் அழகைக் குறித்துப் பாடல்கள் இயற்றப்பட்டன!