புள்ளிக்கள்வன் சில்லி கிராப்

0
337

ஷாநவாஸ

சிங்கப்பூருக்குப் புகழ் தேடித்தந்த பல உணவு வகைகளில் சில்லி நண்டுக்கு சிறப்பிடம் உண்டு. அதை உருவாக்கியவர் என நம்பப்படும் மேடம் செர் யாம் தியன் (Cher Yam Tian) சென்ற மாதம் காலமானார். மரின் பரேட் வட்டாரத்தில் உள்ள அவருடைய உணவகத்தில் ஒரு சாப்பாட்டுத் தட்டு அளவுக்குப் பெரிதான ஓட்டுடன் இருக்கும் நண்டைப்போல நான் வேறு கடைகளில் கண்டதில்லை.

மிளகாய் சேர்க்காமல் கறுமிளகு மட்டும் சேர்த்து நம் வீடுகளில் சமைக்கும் நண்டு ரசத்தைவிட அப்படி என்ன அதி ருசியாக இருக்கும் என்ற ஆவலில் சிங்கப்பூர் சில்லி கிராப் கடைக்குச் சென்று சாப்பிட்டபோது ஏதோ ஒரு சுவை தூக்கலாக இருந்தது. பெண் நண்டின் முட்டைகளை அரைத்து மேடம் செர் யாம் தியான் ஏதோ ஒரு கலவை சேர்க்கிறார் என்று பேசிக்கொள்வார்கள்.

சிங்கப்பூரில் நண்டு வாங்கிக் கொடுக்கும் சவாலான காரியத்தைப் பெரும்பாலும் ஆண்கள் கையில் எடுப்பதில்லை. ஆண் நண்டா பெண் நண்டா என்ற குழப்பத்தில் தொடங்கி சதை இருக்குமா இருக்காதா என்ற சந்தேகம்வரை பல புள்ளிகளில் வீட்டில் சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. கால் பெரிதாக இருந்தால் அது ஆண் நண்டு அவ்வளவுதான் சூத்திரம். புரட்டிப்போட்டு பிறப்பு உறுப்புகளைப் அடையாளம் காண்பது தேவையில்லாதது.

உணவகத்தில் சாப்பிடும் நண்டின் ருசிக்கும் இல்லங்களில் சமைக்கும் நண்டின் ருசிக்கும் மிகப் பெரிய வேறுபாடுண்டு. வாங்கும்போதே உயிறற்ற நண்டுகளைத் திரும்பவும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து சமைக்கும்போது சுவை குறைந்துவிடும். உணவகங்களில் நாம் உயிரோடு எடுத்துக் கொடுக்கும் நண்டின் கழுத்தில் உடனே கத்தியைச் செறுக மாட்டார்கள். அதிகக் குளிரூட்டப்பட்ட நிலைக்குக் கொண்டுசென்று மயங்க வைத்துச் சமைக்க ஆரம்பிப்பார்கள். மேலும் உணவகங்களில் ஒரு நண்டே 1.5 கிலோவுக்கும் மேலான எடையுடன் தட்டில் வந்து உட்காரும்போது வேட்டைதானே!

உணவகத்தில் சாப்பிடும் நண்டின் ருசிக்கும் இல்லங்களில் சமைக்கும் நண்டின் ருசிக்கும் மிகப் பெரிய வேறுபாடுண்டு. வாங்கும்போதே உயிறற்ற நண்டுகளைத் திரும்பவும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து சமைக்கும்போது சுவை குறைந்துவிடும். உணவகங்களில் நாம் உயிரோடு எடுத்துக் கொடுக்கும் நண்டின் கழுத்தில் உடனே கத்தியைச் செறுக மாட்டார்கள். அதிகக் குளிரூட்டப்பட்ட நிலைக்குக் கொண்டுசென்று மயங்க வைத்துச் சமைக்க ஆரம்பிப்பார்கள். மேலும் உணவகங்களில் ஒரு நண்டே 1.5 கிலோவுக்கும் மேலான எடையுடன் தட்டில் வந்து உட்காரும்போது வேட்டைதானே!

நண்டு குடும்பத்திலுள்ள 4000க்கும் மேற்பட்ட வகைகளில் சாப்பிடக் கூடாதவை என்று ஏதுமில்லை. சிலர் துறவி நண்டை சாப்பிடக் கூடாது என்பார்கள். துறவி நண்டுகள் தன் சொந்த வீட்டில் தங்காமல் ஏதாவது ஓட்டுக்குள் புகுந்துகொண்டு வாழ்வதால் சதைப்பற்று இருக்காது. அது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஜப்பானியர்கள் நண்டு வேட்டையில் புகழ் பெற்றவர்கள். அவர்கள் வலையில் 100 ஆண்டுகள் வாழக்கூடிய 20 கிலோ எடையுள்ள நண்டுகள் அடிக்கடிச் சிக்குகின்றன. பெரும்பாலும் பெரிய அளவுள்ள நண்டுகள் அதிக நாட்கள் உயிர் வாழ்வதில்லை. ஏனெனில் அவை சண்டையிலோ அசம்பாவிதமாகவோ காலை இழந்துவிடும் சாத்தியம் அதிகம்.

சீன இலக்கியங்களிலும் புராதனக் கலைப்பொருட்களிலும் நண்டைப் பற்றிய குறிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. பழமையான சீனப் பீங்கான் தட்டில் ஓவியம் வரைந்திருப்பார்கள். அதில் மாதுளம் பழமும், நண்டு ஓடுகளும் அதிகம் காணப்படும். மாதுளம்பழம் வெற்றிக்கயாகவும் நண்டின் உறுதியான மேல் ஓடு குடிமுறை அரசுத் தேர்வுகளின் இறுதியில் அடையும் உயர்பதவிகளின் குறியீடாகவும் திகழ்கின்றன என்கிறார்கள்.

மிங் வம்சத்து பிரபல உணவுப் பிரியர் ஜாங் டாய் ஒரு கவிஞர். அவர் நண்பர்களுடன் நண்டு சாப்பிடுவதைப் பற்றிப் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். தனது நண்பர்களுடன் ஆரம்பித்த நண்டுச் சங்கம் பற்றிய இனிய நினைவுகளையும் அழகாக ஜாங் தொகுத்துள்ளார்.

“அந்த இரவுகளில், ஜன்னல் ஓரத்தில்
எனது விருந்தினர்களும், உபசரிப்பாளர்களும்
பேசிக்கொண்டிருந்தனர்.
கோடைக்கும் குளிர்காலத்துக்கும்
இடைப்பட்ட காலம் இது.
ஆற்றில் நண்டுகளும் மீன்களும் கொழுத்திருக்கும்.
நண்டுகளை வாங்கி ஒயினில் ஊறப்போடுவதற்கு
என்னிடம் பணம் இல்லை.
எதையாவது வரைந்து அந்த உணவை
நான் பெற விரும்புகிறேன்.”

என்று விதவிதமான உணவுவகைகளைக் கொண்டாடும் விதமாகக் கவிதைகளை எழுதியிருக்கிறார்.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு நண்டை ‘கள்வன்’ எனும் பெயராலே சுட்டிக் காட்டுகிறது. சில நண்டுகளின் மீது புள்ளிகள் இருக்கும். ஆதலால் நண்டைப் புள்ளிக்கள்வன் என்னும் சிறப்பு அடைமொழியால் ஐங்குறுநூறு சுட்டிக் காட்டுகிறது. கள்வன் பத்து என அழைக்கப்படும் பகுதியில்,

‘‘முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்துறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்ப[து] எவன்கொல்? அன்னாய்!”

என அல்லித்தண்டைப் புள்ளிக்கள்வன் அறுக்கும் காட்சி அழகாகப் பதிவாகியுள்ளது. பல நாடுகளில் நண்டைப் பற்றிய விவரணைகள் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் நண்டு ஓட்டின் உறுதியும் பற்றும் விவரிக்கப்பட்டுள்ளன.

இரண்டு வித மனிதர்கள் உண்டு; நண்டு சாப்பிடுபவர்கள், அறவே வெறுப்பவர்கள். வெறுப்பவர்கள் அனேகமாக நண்டை உடைத்து வாயில் காயம்படாமல் சாப்பிடும் உன்னதக்கலை அறியாதவர்கள்தான்!