உதிரிப்பூக்கள்

0
383
மஹேஷ்

விலங்கியல் தோட்டத்தில் புது வரவுகள்

மண்டாய் விலங்கியல் தோட்டம், ஜுரோங் பறவைப் பூங்கா ஆகியவற்றில் 2022இல் மட்டும் ஏறத்தாழ 800 குட்டி விலங்குகளும் பறவைகளும் பிறந்துள்ளன. இவை 126 விலங்கு / பறவை இனங்களைச் சேர்ந்தவை. அதில் 36 இனங்கள் அழிந்து போகக்கூடிய இனங்களின் பட்டியலில் உள்ளவை. விலங்குப் பாதுகாப்பு, பராமரிப்பில் சிங்கை உயிரியல் பூங்காக்கள் மிகுந்த அக்கறையுடனும் தீவிரத்துடனும் இருக்கின்றன. பிக்மி நீர்யானைகள், சிறுவிரல் நீர்நாய்கள், வளையவால் லெமூர்கள், இராட்சத எறும்புதின்னிகள் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. அதிலும் லின்னி இருவிரல் தேவாங்கு, பர்மிய நட்சத்திர ஆமை உள்ளிட்ட மிக அருகிய நிலையில் உள்ள 21 இனங்களுக்கு சிங்கையில் இது முதல் பிறப்பு. மண்டாய் வனவிலங்கு குழுமம் (Mandai Wildlife Group) கிட்டத்தட்ட 160 அனைத்துலக வனவுயிர்ப் பாதுகாப்புக் குழுக்களுடன் இணைந்து பல்வேறு திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-படம் நன்றி: mothership.sg

போக்கிமான் கரப்பான்!

பூச்சியியலாளர்கள் இருவர் சிங்கையில் ஒரு புதியவகைக் கரப்பான் பூச்சியைக் கண்டறிந்துள்ளனர். இவர்களில் ஒருவர் சிங்கப்பூரர். மற்றொருவர் பிலிப்பீன்ஸ் நாட்டவர். Nacticola Pheromosa என்ற இந்த வகைக் கரப்பான் சிங்கையில் ஆவணப்படுத்தப்படுவது ஒரு பெருமைதான். Nocticolodae குடும்பத்தில் இதுவரை 32 வகைக் கரப்பான்கள் இனம் காணப்பட்டுள்ளன. 2016இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பூச்சி பற்றிய ஆய்வுரை பல ஆராய்ச்சிகளுக்குப்பின் முடிவாக இந்த வருடம் வெளியாகியுள்ளது. கண்டுபிடித்த இருவருமே போக்கிமான் விளையாட்டுப் பிரியர்கள் என்பதால் இந்தக் கரப்பான் வகைக்கு போக்கிமான் விளையாட்டில் உள்ள ஒரு பாத்திரமான ஃபெரொமொசா (Pheromosa) பெயரைச் சூட்டியுள்ளனர். இதேபோலத் தென்னமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதுவகை தேனீக்கு இன்னொரு போக்கிமான் பாத்திரமான பிகாச்சு (Pikachu) பெயர் சூட்டப்பட்டுள்ளது.
-படம் நன்றி: Lee Kong Chian Natural History Museum via Facebook

ஆயுதப் படைகளுக்கு அதிநவீனக் கருவிகள்

அகச்சிவப்பு உணரிகளுடன் கூடிய அதிதெளிவுக் படக்கருவிகள் (high resolution cameras) சிங்கை ஆயுதப் படைகளின் (Singapore Armed Forces SAF) பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆட்கடத்தல் சம்பவங்கள், பணயக்கைதிகள், துப்பாக்கிச் சூடு போன்ற நெருக்கடிக் காலங்களில் சம்பவ இடத்தைக் கண்காணிக்க இந்தக் கருவிகளை மிக எளிதாகவும் விரைவாகவும் நிறுவி ஒரு ஆணை மையத்துடன் இணைத்து நிலைமையை சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சரியான முடிவுகளை எடுக்கவும் முடியும். இந்தக் கருவிகளை தொலைவிலிருந்தே இயக்கலாம். மேலும் இவை இரவு நேரங்களிலும் துல்லியமாக நோக்கும் திறன் படைத்தவை; நகரும் மனிதர்களை, வாகனங்களைக் கூட அணுக்கமாகக் கண்காணிக்க முடியும் என்பது கூடுதல் வசதி. மிகச் சிக்கலான கள நிலவரங்களை பாதுகாப்பாகவும் திறமையாகவும் கையாள இத்தகைய புதிய திறன்கள் மிக அவசியம்.
-படம் நன்றி: The Straits Times

நிபுணத்துவ சிகிச்சைகளுக்கு பாவனைப் பயிற்சி மையம்

இதயம், நெஞ்சு, இரத்த நாளங்கள் (cardiac, thoracic, vascular) தொடர்பான அறுவை சிகிச்சைகளுக்காக ஒரு பாவனைப் பயிற்சி மையம் (simulation center) சிங்கைப் பல்கலை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட மெய்நிகர் பாவனை இயந்திரங்கள் நிறுவப்பட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ஒரு பயிற்சிக் களமாக ஆகவுள்ளது. மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளைப் பலமுறை செய்துபார்த்து சாத்தியமுள்ள பல அபாயங்களைத் தவிர்க்க முடியும். எடுதுக்காட்டாக மைட்ரல் வால்வு சிகிச்சையின்போது கருவிகளை எவ்வாறு, எங்கே வைப்பது, படக்கருவியை எந்தக் கோணத்தில் வைப்பது, எப்படித் திருப்புவது என்று பலவிதமாகச் செய்து பார்த்து சிறப்பான ஒரு வழிமுறையைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கலாம். வியட்நாம், இந்தோனீசியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இங்கு பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
-படம் நன்றி: The Straits Times