சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூக, வரலாற்றுப் பதிவுவளம்

சிவானந்தம் நீலகண்டன்

சிங்கப்பூரின் சுதந்திரப் பொன்விழா ஆண்டான 2015இல் எழுத்தாளர் ஷாநவாஸ் தலைமையில் ஒரு தன்னார்வலக்குழு, தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழுக்குப் புத்துயிர் அளித்து, புதுத்தடம் அமைத்து, புதிய சகாப்தத்தைத் தொடங்கியது. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு தரமான வரலாற்று, சமூக, இலக்கிய, தொழில்நுட்ப எழுத்துத்தளம் வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டிருந்த தொழிலதிபரும் தமிழ்த்தொண்டருமான எம்.ஏ.முஸ்தபா, தன் சொந்தப் பொருளைக் கணிசமாகச் செலவிட்டு, ஓர் அச்சிதழாக தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழை நிறுவினார். இன்றும் அதன் வளர்ச்சிக்கு ஆணிவேராகவும் ஆசிரியர் குழுவின் முடிவுகளில் ஒருபோதும் தலையிடாதவராகவும் முன்னுதாரணமாகச் செயல்பட்டு வருகிறார்.

தி சிராங்கூன் டைம்ஸ் தன் 25ஆம் இதழை 2017இல் வெளியிட்டபோது இதழில் வெளிவரும் கவிதை, சிறுகதை, கட்டுரைகளுக்குக் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் உருவாகியிருந்தது. அதற்குத் தொடக்ககால ஆசிரியர் குழுவின் அங்கத்தினர்கள் கவிஞர்களாகவும் படைப்பிலக்கியவாதிகளாவும் அமைந்தது ஒரு முக்கியக்காரணம். கடந்த சுமார் எட்டாண்டுகளில் ஆசிரியர் குழுவினர் தொடர்ந்து மாறிவந்துள்ள போதிலும், இதழின் நோக்கங்கள் விரிவடைந்துள்ள நிலையிலும் தி சிராங்கூன் டைம்ஸ் ஓர் தரமான இலக்கியத்தளம் என்னும் தன் அடையாளத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு வருகிறது.

ஜனரஞ்சகம் எனப்படும் பொழுதுபோக்கு இதழை ஓர் எல்லையிலும், சிறுபத்திரிகை எனப்படும் தீவிர இலக்கிய இதழை மற்றோர் எல்லையிலும் கற்பனை செய்தால், தி சிராங்கூன் டைம்ஸ் இதழை அவ்விரண்டுக்கும் நடுவில் அமையும் ஓர் இடைநிலை இதழ் எனலாம். அதாவது பரவலாக்கத்தின் பொருட்டுத் தரத்தை விட்டுவிடாத பிடிவாதம்; தரத்துக்காக ஒரு சிறுபகுதியினர் மட்டும் வாசிக்கும் இதழாகச் சுருங்கிவிடாத கவனம். தற்போது மாணவர், ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர், எழுத்தாளர், தொழிலாளர், தொழிலதிபர் எனச் சிங்கப்பூர்த் தமிழச் சமூகத்தின் எந்தவொரு அங்கத்தினரும் தனக்கு ஆர்வமும் பயனும் அளிக்கும் சில படைப்புகளை ஒவ்வொரு தி சிராங்கூன் டைம்ஸ் இதழிலும் கண்டடைய இயலும்.

பரவலாக்கத்தின் பொருட்டுத் தரத்தை விட்டுவிடாத பிடிவாதம்; தரத்துக்காக ஒரு சிறுபகுதியினர் மட்டும் வாசிக்கும் இதழாகச் சுருங்கிவிடாத கவனம்.

தரமான படைப்புகளை சுவாரஸ்யம் குன்றாமல் அளிக்கும் சவாலைத் தனக்குத் தானே இட்டுக்கொண்ட இடைநிலை இதழாகத் தொடர்ந்து வலுப்பெற்றுவரும் தி சிராங்கூன் டைம்ஸ் இதழின் வடிவ, உள்ளடக்கத் தனித்தன்மைகளையும் தமிழ்மொழி, இலக்கிய, சமூகப் பங்களிப்புகளையும் பாராட்டி அண்மையில் தமிழகத்தின் ‘காலச்சுவடு’ இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை முன்னிட்டே தன் குவிமையத்தை அமைத்துக்கொள்ளும் தி சிராங்கூன் டைம்ஸ் உலகத்தமிழர்களின் கவனத்தையும் மதிப்பையும் பெற்றுவருகிறது என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு. எந்த மாற்றமும் விடாமுயற்சியாலும் தொடர்ந்த செயல்பாடுகளாலேயுமே சாத்தியமாகும் என்பது எம் ஆசிரியர் குழுவின் நம்பிக்கை.

தி சிராங்கூன் டைம்ஸ் இதுவரை வெளியிட்டுள்ள 87 இதழ்களின் 4000க்கும் மேற்பட்ட பக்கங்களில் எவ்விதமான படைப்புகள் இடம்பெற்றுள்ளன? அவற்றின் சில தனித்தன்மைகள் என்னென்ன?

காலத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் 2021இல் இணையத்திலும் தி சிராங்கூன் டைம்ஸ் வெளிவரத் தொடங்கியது. தொடக்கத்தில் பிடிஎஃப் மட்டும் வெளியானது பிறகு நேரடியாக வலைப்பக்கத்திலேயே வாசிக்க ஏதுவாக முழுமையான மின்னிதழாக வெளிவருகிறது. தன் 75ஆம் இதழின் அட்டையில் அதுவரை எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் படைப்புகள் தந்து ஆதரவளித்த 220 படைப்பாளர்களின் படங்களை தொகுத்து வெளியிட்டது. அவர்களுள் சுமார் 90 விழுக்காட்டினர் சிங்கப்பூர்வாசிகள். சிங்கைத் தமிழ்ச் சமூகம் அளித்துள்ள மகத்தான இந்த ஆதரவு தொடரவேண்டும். ஏப்ரல் 2014இல் தன் 100ஆம் இதழை வெளியிடவுள்ள தி சிராங்கூன் டைம்ஸ் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் ஓர் அடையாளமாக நிலைபெறவும் நீடிக்கவும் வேண்டும்.

இதுவரை தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் சுருக்கமான வரலாற்றையும் நோக்கு, போக்குகளில் உருவான மாற்றங்கள், சில குறிப்பான மைல்கற்கள், சாதனைகளை மேலோட்டமாகக் கண்டோம். இப்போது தி சிராங்கூன் டைம்ஸ் இதுவரை வெளியிட்டுள்ள 87 இதழ்களின் 4000க்கும் மேற்பட்ட பக்கங்களில் எவ்விதமான படைப்புகள் இடம்பெற்றுள்ளன? அவற்றின் சில தனித்தன்மைகள் என்னென்ன? என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கலாம்.

முதலாவது, சிங்கப்பூர் வரலாற்றுப் பதிவுகள். சிங்கப்பூர் வரலாறு என்றதும் 1819லிருந்து தொடங்கும் அதன் 200 ஆண்டுகால அரசியல் வரலாற்றையே பெரிதும் பேசிவருகிறோம். அவ்வரலாறு ஆங்கிலத்தில் நிறையவே கிடைக்கிறது. ஆனால் சிங்கப்பூரின் உருவாக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் பங்கு என்னவாக இருந்தது என்பது வரலாற்றின் பக்கங்களில் மங்கலாகவே நீடிக்கிறது. அப்பக்கங்களில் ஒளிபாய்ச்சும் வரலாற்று ஆய்வுகளைத் தேடித்தேடி தி சிராங்கூன் டைம்ஸ் வெளியிடுகிறது. ‘சாமானிய சிங்கப்பூரர் படைத்த சரித்திரம்’ கட்டுரை, தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் ‘சிங்கப்பூர் சுகப்பிரசவம் அல்ல’ கட்டுரைத் தொடர் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். முக்கியமான ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் தம் ஆய்வுப் படைப்புகளை தி சிராங்கூன் டைம்ஸில் தொடர்ந்து வெளியிட விரும்புகின்றனர்.

முக்கியமான ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் தம் ஆய்வுப் படைப்புகளை தி சிராங்கூன் டைம்ஸில் தொடர்ந்து வெளியிட விரும்புகின்றனர்.

இரண்டாவது, இலக்கியப் பதிவுகள். படைப்பிலக்கியத்தைப் பொறுத்தவரைப் பொதுவாக ஓர் இதழில் ஒரு சிறுகதை, ஒரு கவிதை என இரு படைப்புகள் மட்டுமே இடம்பெறுகின்றன என்பதால் அவை தீவிரமான விவாதங்களின் வழியாக கவனமாகவும் பொறுப்புடனும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இங்கே எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ள ‘தேத்தண்ணி’ சிறுகதை, ஒரு பள்ளி மாணவி, அவரது ஆசிரியர்,குடும்பம், சமூகம் எனப்பல கோணங்களில் ஒரு நடைமுறைச் சிக்கலைச் சிங்கப்பூர் சூழலில் வைத்து விசாரிக்கும் கதை. தரமான மொழிபெயர்ப்புக் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிடுவதன்மூலம் அவற்றுக்கிணையான தமிழ்க் கவிதைகளோடு ஒப்பிட்டுக்கொள்ளும் அரிய வாய்ப்பை அளிக்கிறோம். மொழிபெயர்ப்புகளில் தி சிராங்கூன் டைம்ஸ் தனித்துவம் குன்றாமல், கணிசமாகப் பங்களித்துவருகிறது.

மூன்றாவது, பண்பாட்டுப் பதிவுகள். தமிழ்ப் பண்பாடு குறித்த தகவல்களை செய்தித் தொகுப்புகளாக வெளியிடுவதும் அவற்றின்வழியே தமிழ் வாசகரைப் பெருமிதம் கொள்ளச் செய்வதுமே பொதுவான அணுகுமுறை. ஆனால் தி சிராங்கூன் டைம்ஸ் அதிலிருந்து மாறுபட்டு, தமிழ்ப்பண்பாடு தனித்தியங்கும் ஒன்றாக இருக்கமுடியாது என்கிற நோக்கில் காலகாலமாகத் தொடர்ந்துவரும் பண்பாட்டு உறவுகளையும் வெளித்தொடர்புகளையும் முன்வைத்துச் சிந்திக்கச் செய்கிறது. ‘சிங்கப்பூர்த் தாம்பூலம்’ என்கிற கட்டுரையில் வெற்றிலைபாக்குப் போடுதல் சீன, மலாய், இந்திய, பிரனக்கான் சமூகங்களில் புழங்கி மறைந்த விதங்களைச் சுட்டியது ஓர் எடுத்துக்காட்டு.

‘திக்கெட்டும் தீமிதி’ என்ற தீமிதி குறித்த கட்டுரை இவ்வட்டாரத்திலும் உலகின் பல்வேறு பண்பாடுகளிலும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதில் தொடங்கி, இன்று மனவுறுதியை அதிகரிக்கும் ‘கார்ப்பொரேட்’ மேலாளர்களுக்கான பயிற்சியாகத் தீமிதி ஆகியிருப்பதுவரை பேசுவது மற்றுமோர் எடுத்துக்காட்டு. ‘புள்ளிக்கள்வன் சில்லி கிராப்’, ‘பாரம்பரியக் கலைகளை விரும்புவது ஏன்?’ போன்ற கட்டுரைகள் புதிய தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் எளிய மொழியில் வாசிக்க அளிப்பவை.
நான்காவது, தமிழ்மொழி ஆய்வுப் பதிவுகள். பண்பாட்டுக்குக் குறிப்பிட்டதைப்போலவே தமிழ்மொழி வரலாறு, வளர்ச்சி, மாற்றங்கள் குறித்தும் ஆய்வின் அடிப்படையில் அமையும் தகவல்கள், கருத்துகளை மட்டுமே தி சிராங்கூன் டைம்ஸ் முன்வைக்கிறது. ‘தமிழின் பெருமை பழமை அல்ல, செழுமை’, ‘தமிழொளியில் மின்னும் சிந்துவெளி எழுத்துகள்’ ஆகிய கட்டுரைகளை எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். ஈராயிரமாண்டுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியுள்ள தமிழ், சிங்கப்பூர் சிறுபான்மைச் சூழலில், பல்லினச் சமுதாயத்தில் ஊடாடி அடைந்துவரும் மாற்றங்களையும் தி சிராங்கூன் டைம்ஸ் பெருமுயற்சியுடன் பதிவுசெய்து வருகிறது. ‘பேச்சுத் தமிழே மூச்சுத் தமிழ் – சிங்கப்பூரும் ஷிஃப்மனும்’ என்ற கட்டுரை அம்முயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஐந்தாவது, தொழில்நுட்பப் பதிவுகள். தொழில்நுட்பங்களை, குறிப்பாகக் கணினி, இணையம், கைபேசி, செய்யறிவு சார்ந்த சிந்தனைகளைப் பேசும் திறன் தமிழுக்கு உண்டு என்றும் தமிழின் சமகால, நடைமுறைப் பெருமிதம் அத்திறனை அடைவதன் வழியாகக் கிட்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தி சிராங்கூன் டைம்ஸின் தொழில்நுட்பக் கட்டுரைகள் அமைகின்றன. மின்காசு, ஆக்குச்செய்யறிவு போன்ற அண்மைய தொழில்நுட்பங்களை முடிந்தவரை தமிழ்க் கலைச்சொற்களோடும் அதேவேளையில் பொதுவாசகரிடமிருந்து அந்நியப்பட்டுவிடாமலும் அலசும் கட்டுரைகளை எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். அவை நல்ல வரவேற்பும் பரவலாக்கமும் பெற்றுவருகின்றன.

உரையாடி பதில்களைச் செறிவாக்குகிறோம். மாதக்கணக்கில் பல கட்டங்களாக உழைத்து ஒரு செம்மையான நேர்காணலை வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

ஆறாவது, ஆளுமைகளின் நேர்காணல்கள். ஓர் ஆளுமையை, சாதனையாளரை நேர்காணலுக்காகக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி அவர்களிடம் ஒரேவிதமான ‘டெம்ப்ளேட்’ கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். அவர்களைக்குறித்து விரிவாக ஆராய்ந்து, நூல்களை வாசித்துக் கேள்விகளை உருவாக்குகிறோம். அவர்களிடம் உரையாடி பதில்களைச் செறிவாக்குகிறோம். மாதக்கணக்கில் பல கட்டங்களாக உழைத்து ஒரு செம்மையான நேர்காணலை வாசகர்களுக்கு அளிக்கிறோம். திருக்குறளை அதன் ஓசைநயமும் கருத்தாழமும் சிதையாமல் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மாவின் அண்மைய நேர்காணல் ஓர் எடுத்துக்காட்டு.

இறுதியாகச் சிறப்பிதழ்கள். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, பயண இலக்கியம் போன்ற கருப்பொருள்களில் சிறப்பிதழ்கள் கொண்டுவந்துள்ளோம். எங்கள் ‘இளையர் சிறப்பிதழ்’ மிகுந்த கவனம் பெற்றது. வரலாறு, அறிவியல், சமூகம், மருத்துவம், மொழி, இலக்கியம் எனப்பல்வேறு களங்களில் சிங்கப்பூர் இளையர் படைத்த அவ்விதழின் படைப்புகள் தனித்துவங்களுடன் மிளிர்ந்தன. குறிப்பாக ‘அஞ்சடி’ தமிழ் இளையர் உட்கலாச்சாரம் குறித்த கட்டுரையின் அணுகுமுறையும் உள்ளடக்கமும் முற்றிலும் புதியவை.

மேற்கண்ட ஏழு பிரிவுகளில் எடுத்துக்காட்டுகளாக அளிக்கப்பட்ட படைப்புகளை சுமார் 40 பக்கங்களில் அடக்கிவிடலாம். ஆனால் தி சிராங்கூன் டைம்ஸ் சேர்த்திருக்கும் அரிய தமிழ் வளத்தின் அளவு தற்போது 4000 பக்கங்களைத் தாண்டிவிட்டது. அதைப்பயன்படுத்துவது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிங்கப்பூரில் தமிழின் உயர்வுக்கும் செழிப்பிற்கும் எத்தகைய வாய்ப்புகளை வழங்கும் என்பதைச் சற்று சிந்தித்துப்பார்க்க எதிர்காலத் தமிழாசிரியர்களாகிய உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

ஜனவரி 2023 முதல் ஒவ்வோர் இதழிலும் ஒரு கருப்பொருளில் சுருக்கமான குறிப்புகளை, ஒவ்வொரு குறிப்பும் சுமார் 100 சொற்களில் அடங்கும்படி அமையும் ஒரு புதிய முயற்சியைச் செய்துவருகிறோம். உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குக் கொண்டுசெல்ல அவ்வடிவம் ஏதுவாக இருப்பதாகச் சில தமிழாசிரியர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். தி சிராங்கூன் டைம்ஸ் இதழ் மற்ற இதழ்களிலிருந்து வேறுபட்டிருப்பதாகவும், மாணவர்களுக்கு மின்னஞ்சல் எழுதுதல் போன்ற பாடப்பகுதிகளில் நேரடியாகவே உதவுவதாகவும் குறிப்பிடும் அவர்கள் தம் பள்ளிகளில் அவர்களாகவே தனிப்பட்ட முயற்சிசெய்து தி சிராங்கூன் டைம்ஸ் இதழை மாணவர்கள் வாங்கிப் பயன்பெற ஏற்பாடு செய்துள்ளனர். தமிழாசிரியர்களின் அத்தகைய முயற்சிகள் இப்போது அளவிற் சிறியவை என்றாலும் கனவிற் பெரியவை. அம்முயற்சிகளை நாங்கள் வணங்கி வரவேற்கிறோம்.

காலகாலமாகத் தொடர்ந்துவரும் பண்பாட்டு உறவுகளையும் வெளித்தொடர்புகளையும் முன்வைத்துச் சிந்திக்கச் செய்கிறது.

முதன்மை ஆசிரியர் ஷாநவாஸின் வழிகாட்டுதலில் நடப்பு ஆசிரியர் குழுவில் சிவானந்தம் நீலகண்டன், மஹேஷ் குமார், ஜமால் சேக் ஆகிய தன்னார்வல ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். எங்கள் அனைவரின் தொழிலும் முழுநேர வேலையும் தமிழுடன் தொடர்பற்றவை. ஆயினும் தமிழே எங்களை இணைக்கிறது. இன்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உங்களுடனும் எங்களை இணைத்திருப்பது தமிழ்தான். தமிழுக்கு நம் கடப்பாடு என்றும் உண்டு.

சிங்கப்பூரில் நான்கு மொழிகளுள் ஒன்றாக அரசியலமைப்பில் தமிழ் இடம்பெற்றுவிட்டது. தொடக்கக்கல்விவரை கட்டாயக் கல்விக்குச் சட்டம் இருக்கிறது. தொடக்கக்கல்வியில் தாய்மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. தமிழை மாணவர்களுக்கு முறையாகக் கொண்டுசேர்க்கப் பயிற்சிபெற்ற ஆசிரியர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே அரசியலமைப்பும் அரசும் சட்டமும் ஆசிரியர்களும் சேர்ந்து சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி என்றென்றும் நீடித்திருப்பதை உறுதிசெய்துள்ளனர் எனலாம்.

சில தமிழாசிரியர்கள் அவர்களாகவே தனிப்பட்ட முயற்சிசெய்து தி சிராங்கூன் டைம்ஸ் இதழை மாணவர்கள் வாங்கிப் பயன்பெற ஏற்பாடு செய்துள்ளனர்.

அதேவேளையில் தமிழ் வெறும் பாடமொழியாக வகுப்பறைகளில் மட்டும் நீடிக்கப்போகிறதா அல்லது வாழும் மொழியாகப் புழங்கிச் சிந்தனை மொழியாக நிலைபெறப்போகிறதா என்பதை உறுதியாகச் சொல்லவியலாது. எனினும் அதுவே இலக்கு.

இலக்கை அடையும் முயற்சிக்குத் தேவையான பதிவுவளங்களை உருவாக்குவதில் ‘சிங்கைத் தமிழரின் சிந்தனை’ என்னும் முழக்கவரியுடன் தீவிரமாகச் செயலாற்றிவரும் தி சிராங்கூன் டைம்ஸ் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்பதை ஆசிரியர் குழுவின் பிரதிநிதியாக என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும். தி சிராங்கூன் டைம்ஸ் இதழின் மேம்பாட்டுக்கு உங்கள் ஆதரவும் பங்கேற்பும் ஆலோசனைகளும் வேண்டும். நல்வாய்ப்புக்கு நன்றி!

தேசியக் கல்விக்கழகத்தின் தமிழ்மொழி, பண்பாட்டுத்துறையின் மாணவ ஆசிரியர் கருத்தரங்கில் 13.03.2023 அன்று தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் குழுவைப் பிரதிநிதித்து சிவானந்தம் நீலகண்டன் ஆற்றிய உரை. மாணவ ஆசிரியர்களும் பேராசிரியர்களுமாக சுமார் 30 பேர் பங்கேற்ற அக்கருத்தரங்கின் இறுதியில் பங்கேற்பாளர்களுடன் உரையாடலும் இடம்பெற்றது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2023 இதழ்களின் படிகள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கடும் நேரநெருக்கடிகளுக்கு இடையிலும் இக்கருத்தரங்கைச் சாத்தியமாக்கிய தேசியக் கல்விக்கழகப் பேராசிரியர் சீதாலட்சுமிக்கு ஆசிரியர் குழுவினரின் மனமார்ந்த நன்றி!