ஆய்வுநோக்கில் அறபுத்தமிழ்

முனைவர் த. சுந்தரராஜ்
விரிவுரையாளர், தமிழ்மொழி, பண்பாட்டுத்துறை,
தேசியக் கல்விக்கழகம்

புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யு) இந்திய மொழிகள் மையத்தில் முனைவர்பட்ட ஆய்வாளராக 2009இல் சேர்ந்தபோது அறபு மொழியும், அறபு மொழியியல் மரபும் எனக்கு அறிமுகமாயின. செம்மொழியான தமிழைப் பிற செம்மொழிகளோடு ஒப்பாய்வு செய்யவேண்டும் என்ற நோக்கில், தமிழின் முதல் இலக்கணமான தொல்காப்பியத்தை, அறபு மொழியின் முதல் இலக்கணமாக விளங்கும் அல்-கிதாப்போடு (Al-Kitab) ஒப்பிட முயன்றேன். அதற்காக, முதலில் அறபு இலக்கண மரபை வாசிக்கத் தொடங்கினேன்.

பொ.ஆ.எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய அல்-கிதாப்பையும், பொ.ஆ.மு.மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியத்தையும் முழுமையாக ஒப்பிடுவதற்கு ஆய்வுப்பட்டத்திற்கான காலம் போதுமானதாக இருக்காது. எனவே, இரு மரபிலக்கணங்களும் தத்தம் மொழியில் உள்ள ஒலிகளின் பிறப்பைப் பற்றி விரிவாகப்பேசும் ‘பிறப்பியல்’ இயல்களை மட்டும் ஒப்பாய்விற்கு எடுத்துக்கொண்டேன்.

தமிழ் ஒலிகளின் பிறப்பு பற்றி தொல்காப்பியர் கூறுவதையும், அறபு ஒலிகளின் பிறப்பு பற்றி ஸீபவைஹி (Sibawayh) கூறுவதையும் தற்கால ஒலியியல் கோட்பாட்டின் வழி ஒப்பிடுவதாக அந்த ஆய்வு அமைந்தது. இவ்வாறு அறபு-தமிழ் மரபிலக்கணங்களை ஒப்பாய்வு செய்யும் நோக்கில் தொடங்கிய எனது ஆய்வு, அறபும் தமிழும் கலந்த மொழிவடிவமான ‘அறபுத்தமிழ்’ என்னும் இஸ்லாமியர்களின் ஆதர்ச மொழியைப் பற்றியதாகவும் விரிந்தது.

இந்த ஆய்வுக்காலகட்டத்தில் எனக்கு அறபு மொழி குறித்த அறிவைப் புகட்டியவர்கள் பலர். ஜே.என்யு.வின் அறபுப் பேராசிரியரான பஷீர் அஹமது ஜமாலி அறபு மொழியின் இலக்கணத்தையும் அதன் நுணுக்கங்களையும் எனக்குக் கனிவோடு கற்றுக்கொடுத்தார். தமிழ்க் கண்ணாடி வழி அறபு மொழியை ஆராயும் முனைவர் டோர்ஸ்டன் சாஹர் (Torsten Tschacher), அறபுத்தமிழ், தமிழ் முஸ்லீம்கள் குறித்து திடகாத்திரமான ஆய்வுகளை செய்துவருபவர்.

நான் ஜெர்மனியின் கொள்ன் பல்கலைக்கழகத்தில் (Universität zu Köln) வருகைதரு ஆய்வாளராக 2011இல் இருந்தபோது அறபுத்தமிழ் குறித்து விவாதிப்பதற்காக, முனைவர் டோர்ஸ்டனைச் சந்திக்க ஹைடல்பர்க் பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். ஒருநாள் முழுவதும் அறபுத்தமிழ் குறித்தும், தமிழ் முஸ்லீம்கள் குறித்தும் விரிவாக விவாதித்தார். அவ்விவாதம் அறபுத்தமிழ் குறித்த என் பார்வையை கூர்மைப்படுத்தியது. சென்னை அப்துல்ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் நூலகராகப் பணியாற்றிய தக்கலை பஷீர் அவர்கள் என் அறபுத்தமிழ் ஆய்விற்காக சில அறபுத்தமிழ் நூல்களை, இன்முகத்தோடு படியெடுத்துக் கொடுத்து உதவினார்.

அறபுத்தமிழில் மனித உரிமைப் பிரகடனம்

இந்தோனேஷியாவின் ஷியாரிஃப் ஹிதயத்துல்லா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் (Universitas Islam Negeri Syarif Hidayatullah) வருகைதரு ஆய்வாளராக 2016இல் இருந்தபோது, அறபுத்தமிழ், அறபு இலக்கண மரபு, அறபு-தமிழ் இலக்கண ஒப்பாய்வு முதலிய பொருண்மைகளில் உரையாற்றினேன். அவ்வுரைகளின் போதெல்லாம், அங்கு அறபுப் பேராசிரியர்களாகப் பணியாற்றும், முஹம்மது ஃபர்க்ஹான், தர்ஸிதா சுபர்னோ இருவரும் என்னுடனிருந்து அறபு மொழி குறித்து ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்து, விவாதத்தைச் செழுமைப்படுத்தியவர்கள்.

‘அறபுத்தமிழ்’ மொழியைப் பற்றி ஆய்ந்த போது, அறபையும் தமிழையும் இணைக்கும் பல பொருண்மைகளைப் பற்றியும் ஆய்வு நீண்டது. அவற்றுள் சிலவற்றை இங்கு பகிர்கிறேன். முதலில் ‘அறபுக்கும் தமிழுக்கும் இருந்த தொடக்கால உறவு’ பற்றிப் பார்ப்போம்

பொ.ஆ.நான்காம் நூற்றாண்டில் அறேபிய தீபகற்பத்தில் வாழ்ந்த பழங்குடிகளின் வாய்மொழி வழக்காக அறபி இருந்ததற்கான ஆதரங்கள் கிடைக்கின்றன. ஆயினும் பொ.ஆ.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்துதான் இஸ்லாமோடு இணைந்து உலகின் பல பகுதிகளுக்கும் அறபி பரவியது. தமிழகத்துடன் அறேபியர் கொண்ட உறவை இஸ்லாமின் தோற்றத்திற்கு முன், பின் எனப் பிரிக்கலாம். இஸ்லாமின் தோற்றத்திற்கு முன் வாணிப உறவு முதன்மையானதாக இருந்தது. இஸ்லாமின் வருகைக்குப்பின் மொழி ரீதியிலான அடையாளமும் உறவும் வலுப்பட்டது. இன்று அறபுக்கும் தமிழுக்கும் உள்ள மொழி உறவிற்கு இஸ்லாம்தான் அடிப்படை.

‘அறபுத்தமிழ்’ மொழியைப் பற்றி ஆய்ந்த போது, அறபையும் தமிழையும் இணைக்கும் பல பொருண்மைகளைப் பற்றியும் ஆய்வு நீண்டது. அவற்றுள் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

‘சோனகர்’, ‘மிலேச்சர்’, ‘யவனத்துருக்கர்’ எனப் பழந்தமிழ் இலக்கியங்களால் குறிக்கப்படும் அறேபியர்கள் தமிழகத்தோடு கொண்ட முதல் உறவு வாணிப உறவு. தமிழ் மக்களிடமும், மன்னர்களிடமும் முதன்முதலில் அறிமுகமான அறபிகள், கடல் பொருட்களாலும், நூலினாலும் கலைநயத்தோடு செய்யப்பட்ட பொருட்களை விற்று, மிளகு, இலவங்கம், பட்டை முதலிய வாசனைப்பொருட்களைக் கொள்முதல் செய்யும் வணிகர்களாகவே இருந்தார்கள்.

பிற்காலத்தில் படைவீரர்களாகவும், பயணிகளாகவும், மத போதகர்களாகவும் தமிழகக் கடலோராங்களில் வந்திறங்கிய அறபிகளில் பெரும்பான்மையினர் ஏமன், ஓமன், ஈராக், எகிப்து முதலிய பிரதேசங்களைச் சார்ந்தவர்கள். பொ.ஆ.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் அறபுப் பிரபுக்களும், ஆளும் வர்க்கத்தினரும், படையெடுப்பாளர்களும் இந்தியாவிற்கு வந்தனர்.

சங்ககாலத்திலிருந்து தமிழகத்தோடு வாணிப உறவு பேணிய அறபிகளில் சில குழுக்கள் வாணிப வசதிக்காகத் தமிழகத்தில் தங்கவேண்டிய சூழல் வந்தபோது, அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் கடல்வழி வாணிபத்தின் நுழைவாயிலாக விளங்கிய கடலோர கிராமங்களாகும். இன்று தமிழ் இஸ்லாமியர்களின் ஜென்மபூமியாக விளங்கும் காயல்பட்டிணம், கீழக்கரை முதலிய கடலோர கிராமங்கள் தொடக்ககால அறபுக் குடியேற்றத்தில் முக்கியப்பங்கு வகித்தன. இக்கடலோர கிராமங்களில் நிலையாகத் தங்கிய அறபிகள் தமிழர்களுடன் மணவுறவு கொண்டு இரண்டறக் கலந்தனர்.

அறபிகளால் மணமுடிக்கப்பட்ட தமிழ்ப்பெண்களில் பெரும்பான்மையினர் கடல்புறங்களில் பரவியிருந்த மீனவ சமூகமான பரதவ சமூகப் பெண்களே என்று பரதவர் வாய்மொழிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அறபு நாடுகளிலிருந்து குதிரை இறக்குமதி செய்பவர் (ராவுத்தர்), மரக்கலங்களைக் கொண்டு கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபடுபவர் (மரக்காயர்), அறபியை ஓதக் கற்றுக்கொடுப்பவர் / பாய்நெய்பவர் (லெப்பை), துருக்கியிலிருந்து வந்தவர் (துலுக்கர்) எனத் தொழில், இடப் பெயர்களால் அழைக்கப்பட்டனர்.

கடலோர கிராமங்களில் குடியிருந்த தமிழ் இஸ்லாமியர்கள் சமுகம் பிற்காலத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கும் இடம்பெயர்ந்தது. தமிழகத்தில் அவர்கள் முதன்முதலில் குடியமர்ந்த பல பகுதிகள் இன்றும் அச்சமூகப் பெயரில் வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: ராவுத்தநல்லூர், ராவுத்தன்பட்டி, ராவுத்தர்பாளையம், ராவுத்தராயன் குப்பம்; மரக்காணம், மரக்காயர் பட்டிணம்; துலுக்கபட்டி, துலுக்கன் குளம், துலுக்கன் குறிச்சி, துலுக்கமுத்தூர்; சோனகன்விளை, சோனகன் பேட்டை.

இன்று  தமிழ் இஸ்லாமியர்களின் ஜென்மபூமியாக விளங்கும் காயல்பட்டிணம் கீழக்கரை முதலிய கரையோர கிராமங்கள் தொடக்க காலா அரபு குடியேற்றத்தில் முக்கியப்பங்கு வைத்தன. 

தமிழகக் கடலோரப்பகுதிகள் மட்டுமன்றி ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் (இந்தியாவின் மேற்குக்கடற்கரை, இந்தோனேசியா, மொசாம்பிக், தான்சானியா, கென்யா) வணிக நோக்கில் குடியமர்ந்த அறபிகள் மூலம் மெதுவாகப் பரவிக்கொண்டிருந்த அறபுமொழி இஸ்லாமின் தோற்றத்தால் வேகமெடுத்தது. பொ.ஆ.ஏழாம் நூற்றாண்டிலிருந்து அறபி இஸ்லாமின் மொழியாக உருவெடுத்தது. இஸ்லாமும் அறபியை தன் முதன்மையான அடையாளமாக முன்னிறுத்தியது. இதுதான் பிற்காலத்தில் பல்வேறு பண்பாட்டுச் சூழல்களுக்குள் இருந்து இஸ்லாமை ஏற்ற உலக இஸ்லாமியர்களுக்குள் ஓர் ஓர்மையை உண்டாக்கியது. அதனால் அறபு மொழியை இஸ்லாமியர்கள் தீவிரமாக ஊக்குவித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவியிருந்த இஸ்லாமியர்கள் தங்கள் இறைவழிபாட்டில் அறபுப் பாரம்பரியத்தையைப் பின்பற்றினர். வழிபாட்டுமுறை, வழிபாட்டு மொழி (அறபு), பலியிடுதல் (குர்பானி) (“அன்ஆம்” – ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை மட்டும் பலிகொடுத்தல்) முதலியவற்றில் இஸ்லாம் தோன்றிய அறபு மண்ணின் வாசனை இருந்தது. இஸ்லாமியர் அனைவருக்கும் பொதுவாக இஸ்லாம் உருவாக்கிய மத உறவை அறபு-தமிழ் பண்பாட்டு உறவு மேம்படுத்தியது.

அரபு தமிழ் நூல்

அறேபியர்-தமிழர் வாணிப உறவு, திருமண உறவு, இஸ்லாம் மூலம் உருவான மத உறவு என அறபு-தமிழ் உறவு மென்மேலும் வலுப்பட்டே வந்தது. இஸ்லாமின் வருகைக்குப்பின் அறபுக்கும் தமிழுக்கும் மொழி உறவும், இலக்கிய உறவும் ஏற்பட்டது. வாணிப உறவிலும், திருமண உறவிலும் பெயரளவில் இருந்த அறபுப் பயன்பாடு, இஸ்லாம் ஊக்குவித்த அறபு அடையாளத்தால் உச்சம் தொட்டது.

அறபு-தமிழ் மொழி உறவில் தமிழில் கலந்த அறபுச்சொற்களும், அச்சொற்களைத் துல்லியமாக உச்சரிக்கும், எழுதும் நோக்கில் உருவான அறபுத்தமிழும் முதன்மையானவை. குற்ஆனை மூலமொழியில் வாசிப்பதற்காக அறபியைக் கற்ற இஸ்லாமியர்கள், அறபு-பாரசீக இலக்கியங்களிலும் பரிச்சயம் கொண்டவர்களாக உருவாயினர். அது அறபு-தமிழ் இலக்கிய உறவிற்கு வழிவகுத்தது. அதன்மூலம் அறபு-பாரசீக இலக்கிய வகைகளான கிஸ்ஸா, மஸாலா, நாமா, முனாஜாத், படைப்போர் முதலியன தமிழில் அறிமுகமாயின. அவை இன்று இஸ்லாமிய தமிழிலக்கியத்தின் முதன்மையான அடையாளங்களாக விளங்குகின்றன.

மொழி வழியிலான இன அடையாளமே மனிதனின் முதன்மையான அடையாளம். இனத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மொழியை மதத்தின் அடையாளமாக முன்னிருத்தும் போக்கு பௌத்தம், சைவம் முதலிய சமயங்களிலேயே தோன்றிவிட்டது. இஸ்லாம், அறேபியர்களின் அடையாளமாகத் திகழ்ந்த அறபியை தனது அடையாளமாகவும் ஏற்றது. உலகில் தோன்றிய எல்லா மதங்களும் மொழி அடையாளத்தை வலியுறுத்தவில்லை, இஸ்லாம் போன்ற மிகச்சில மதங்களே அதைக் கட்டாயாமாக்கின.

ஒரு மொழியை குறிப்பிட்ட மதம் வலியுறுத்துவதற்குப் பல அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. கருத்துக்களை பலதரப்பட்ட மக்களுக்களிடம் எளிதாக எடுத்துச்செல்லவும், அவர்களை ஒரே கருத்தியலின் கீழ் ஒருங்கிணைக்கவும் மிகச்சிறந்த ஊடகமாகத் திகழ்கிறது மொழி. ஆகவே சில மதங்கள் மொழி பற்றிய சிந்தனையில் தீவிரம் காட்டின. அவை தம் கருத்தியல்களோடு மொழியையும் இணைத்தே சித்தாந்தங்களை உருவாக்கின.

ஆரேபியத்தமிழர் வாணிப உறவு , திருமண உறவு இஸ்லாம் மூலம் உருவான மத உறவு என அரபு தமிழ் உறவு மென்மேலும் வலுவுபட்டே வந்தது. 

மதங்கள் பின்பற்றிய மொழிக்கொள்கை இரண்டு வகைப்பட்டது. முதல் வகை, மக்களுடைய மொழிக்குத் தன்னை மாற்றிக்கொள்வது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு

கிறிஸ்தவம். இன்று புனித நூல்களிலேயே அதிகமான மொழிபெயர்ப்புகளைக் கொண்டதாக பைபிள் திகழ்வதற்கு இதுவே காரணம். இரண்டாவது வகை, மக்களைத் தன் மொழிக்கு (மதம் தோன்றிய மொழி) மாற்றுவது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவை சைவம், வைணம், இஸ்லாம் முதலியன. இந்த மதங்கள் பிற மொழியினரிடம் தன்னைத் தன் மொழியில்தான் (சமஸ்கிருதம், அறபி) அணுகவேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தின.

இஸ்லாம் அறபியை மத அடையாளத்திற்கு மாற்றியபோது நல்ல வரவேற்பைப் பெற்றது. அறபியை முன்னிறுத்துவதற்கு இஸ்லாம் கூறிய காரணங்கள் மதப்புனிதத்துவம் கொண்டவையாக இருந்ததால் இஸ்லாமை ஏற்றவர்கள் அறபியையும் மகிழ்ச்சியோடு ஏற்றனர். மொழி சார்ந்த புனிதத்துவம் என்று இஸ்லாம் வலியுறுத்தியது ஒலித்தூய்மையை. அதாவது அறபு மொழியில் தோன்றிய குற்ஆனை இஸ்லாமியர்கள் பிழையின்றித் துல்லியமாக உச்சரிக்க வேண்டும் என்பதே. இந்த ஒலித்துல்லியமே மதக்கண்ணோட்டத்தில் ஒலித்தூய்மையாகவும், மொழிப்புனிதமாகவும் பரிணமிக்கிறது.

இஸ்லாம் மூலம் நிகழ்ந்த அறபு மொழிப்பரவலால் அறேபியருக்குக் கிடைத்த பலன்கள் அதிகம். அறபியின் மிகச்சிறந்த படைப்புகள் அறேபியரல்லாதாரால் படைக்கப்பட்டன. குறிப்பாகப் பாரசீகர்கள் அறபியில் அதிகம் பங்களித்தனர். இன்று உலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளின் வரிசையில், அறபியை ஐந்தாவது இடத்திற்கு (Nationalencyklopedin, 2007 கணக்கெடுப்பின்படி) முன்னேற்றியதில் இஸ்லாமின் பங்கு கணிசமானது.

இஸ்லாம் கைக்கொண்ட மொழி அடையாளம் இஸ்லாமியரிடையே இரு வகையினரை உருவாக்கியது. இனத்திற்கும் மதத்திற்கும் ஒரே மொழியை அடையாளமாகக் கொண்டவர்கள் – அவர்கள்தான் அறேபியர்கள். மற்றவரெல்லாம் இரண்டாம் வகையினர். அதாவது இனத்திற்கும், மதத்திற்கும் வெவ்வேறு மொழிகளை அடையாளமாகக் கொண்டவர்கள். தமிழ் இஸ்லாமியர்கள் இரண்டாவது வகையைச் சார்ந்தவர்கள். அவர்கள் அறபியை மத அடையாளமாகவும், தமிழை இன அடையாளமாகவும் கருதினர். இவ்விரு அடையாளங்களையும் ஒன்றிணைப்பதாக அமைந்ததே ‘அறபுத்தமிழ்’ என்னும் மொழிவடிவம்.

தமிழ் இசுலாமியர்கள் தமிழையும் ஆரபியும் சமமாகவே பாவித்தன. என்பதற்கு சிறப்பு ஆதாரம் தமிழும் அறபுதமிழும் இயற்றப்பட்ட இஸ்லாமிய தமிழிலக்கியம்

தீவிரமான மொழிக் கண்ணோட்டத்தில், தமிழ் இஸ்லாமியர்களின் மொழி அடையாளமாக ‘அறபுத்தமிழ்’ விளங்குகிறது. இஸ்லாமை ஏற்ற அறேபியரல்லாத பிற இனங்கள் அனைத்தும் மத-இன அடையாளத்தை ஒன்றிணைக்கும் இம்மொழி வடிவத்தைக் கைக்கொண்டன. ஸ்வாஹிலி, ஜாவி, ஷாமுக்ஹி, நவயதி, அறபுமலையாளம் முதலிய பெயர்களில் அமைந்த அவ்வடிவங்களில், காலத்தால் அறபுத்தமிழுக்கு முந்தியவையும் உண்டு, பிந்தியவையும் உண்டு.

கேரளத்தில் இஸ்லாமிய பெருஞ்சமூகமான ‘மாப்பிள்ளை’ச் சமூக அறிஞர்கள், தங்கள் சமூகத்தினர் மலையாளத்தையும், ஆங்கிலத்தையும் கற்பதை நெடுங்காலமாக எதிர்த்து வந்தனர். மலையாளம் இந்து மொழி, ஆங்கிலம் காலனியாதிக்க மொழி, அறபுமலையாளமே (மலையாள மொழியை அறபு எழுத்துருவில் எழுதுவது) முற்போக்கான மொழி என்ற கற்பிதம் அச்சமுகத்திற்குள் நிலவியது.

மலையாள மாப்பிள்ளைகள் போலத் தாய்மொழியைத் தீவிரமாக எதிர்க்கும் போக்கு தமிழ் இஸ்லாமியரிடம் இல்லை. குற்ஆனை அறபியில்தான் ஓத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாலும், மதம் சார்ந்த சில கூறுகளிலும், வாழ்வியல் அடையாளத்திலும் தமிழையும் முதன்மைப்படுத்தினர். தமிழ் இஸ்லாமியர்கள் அறபியையும் தமிழையும் சமமாகவே பாவித்தனர் என்பதற்கு சிறந்த ஆதாரம் தமிழிலும், அறபுத்தமிழிலும் இயற்றப்பட்ட இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாகும்.

தமிழில் பல்வேறு வகையான சிற்றிலக்கியங்களைப் படைத்துக் கொண்டிருந்த அதேகாலகட்டத்தில் அறபுத்தமிழிலும் பல இலக்கியங்களைப் படைத்தனர். அறபுத்தமிழில் படைக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழிலக்கியங்களை விட, தமிழ்ச் சிற்றிலக்கியங்களையும், அறபு-பாரசீக இலக்கியங்களையும் மாதிரியாகக் கொண்டு தமிழில் படைக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் இஸ்லாமியரல்லாத தமிழரிடத்திலும் பிரபலமடைந்தன.

இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் தொன்மையான படைப்பாக விளங்கும் ‘ஆயிரம் மஸாலா’ 1572இல் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. சிறந்த இஸ்லாமிய இலக்கியங்களை தமிழ்ச்சமூகம் கொண்டாடியதால் தமிழ் இஸ்லாமியர்கள் தமிழில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கினர். பிரபலமடைந்த அப்படைப்புகளில் சில அறபுத்தமிழில் ஒலிபெயர்க்கப்பட்டன. அறபுத்தமிழில் உருவான பல நூல்கள் தமிழில் ஒலிபெயர்க்கப்பட்டன.

இவ்வாறு தமிழ் இஸ்லாமியர்கள் இஸ்லாம் என்னும் மார்க்கப்பயணத்தில் அறபையும், தமிழையும் இரட்டைக் குதிரைகளாகவே பாவித்தனர். அதனால்தான் “இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி” என்பது தமிழ் இஸ்லாமியரின் வாழ்வியல் கொள்கையாக உருவெடுத்திருக்கிறது.