பரஸ்பர மதிப்பு, போலித்தனமின்மை இவையே அஸ்திவாரம்-நிரஞ்சன் பாண்டியன்

சமூகத்தின் சிந்தனைகளை மொழி, இசை, பிற கலைவடிவங்களை இணைத்து வெளிப்படுத்தும் புத்தாக்கமுள்ள நிகழ்ச்சிகளை யோசித்து உருவாக்குவதும் அவற்றைத் தயாரித்து வழங்குவதும் நான் நடத்திவரும் ‘பிரம்மாஸ்திரா’ (Brahmastra) நிறுவனத்தின் தொழில். இந்நிறுவனத்தின்கீழ் மூன்று இசைக்குழுமங்கள் இயங்குகின்றன.

நிரஞ்சன் பாண்டியன்
இசைநிகழ்ச்சி வடிவமைப்பு, ஒருங்கிணைப்பாளர்

மொழி, இசை, கலைகளின் வழியாக மக்களை இணைப்பதையும் பிணைப்பதையும் நோக்கமாகக்கொண்டது என் நிறுவனம். ஆகவே புதிய திட்டங்களுக்காகப் புதிய பங்காளிகளுடன் இணைந்து செயல்படும்போது முதலில் எங்களுக்கு இடையிலான உறவு போலித்தனமற்றதாகவும் பரஸ்பர மதிப்பின் அடிப்படையிலும் இருப்பதை உறுதிசெய்கிறேன். அதுவே அஸ்திவாரம். அதன்மீதுதான் மொத்த நிகழ்ச்சி உருவாக்கமும் அமைகிறது. ஒருமுறை நாங்கள் வழக்கமாக வழங்கும் சேவைகளைத்தாண்டி சில ஏற்பாடுகளை ஒரு வாடிக்கையாளர் வேண்டினார். வேண்டுகோளை நிராகரிக்க விருப்பமில்லாத அதேவேளையில் எங்களுக்கு அதில் அனுபவம் இல்லை என்பதையும் எங்கள் வரம்புகளையும் விளக்கிவிட்டு ஆனால் முயற்சிசெய்கிறோம் என ஆர்வத்தையும் வெளியிட்டோம். அவர்களும் புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொண்டனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

எங்கள் திறன்கள் செம்மையாக வெளிப்படக்கூடிய இடங்களில் எதிர்பார்ப்புக்கு மேலாகத் தந்து அசத்துவதையும், எல்லைக்குள் செயல்படவேண்டிய இடங்களில் எதிர்பார்ப்புகளை உண்மைநிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்வதையும் எங்கள் தொழிலின் தர்மமாகக் கடைப்பிடித்து வருகிறோம்