சிங்கப்பூரின் முதல் ‘மாங்கா’ நூலகம்

சிவானந்தம் நீலகண்டன்

ஜப்பானிய ‘மாங்கா’ வரைகதை (manga comics) உலக அளவில் மிகவும் பிரபலமானது. மினுமினுக்கும் மின்னிலக்கப் பொழுதுபோக்குகள் வந்திருந்தாலும் கருப்பு-வெள்ளைப் படங்களைக்கொண்டே தன் தனித்துவ முத்திரையுடன் கவரும்படிக் கதைசொல்லும் மாங்கா வரைகதைகள் தொடர்ந்து வாசகர்களை, குறிப்பாக இளையர்களை, ஈர்த்துவருகின்றன.

சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியின் நான்காம் தளத்தில் முதல் மாங்கா நூலகம்

கடந்த பிப்ரவரி மாதம் சிங்கப்பூரில் மாங்கா வரைகதைகளுக்கென்றே பிரத்யேகமான ஒரு நூலகம் செயல்படத் தொடங்கியுள்ளது. லிட்டில் இந்தியா, சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியின் நான்காம் தளத்தில் சுமார் 5000 மாங்கா வரைகதைப் புத்தகங்களுடன் தேசிய நூலக வாரியம் அந்நூலகத்தைத் தொடங்கியுள்ளது. போகிறபோக்கில் புத்தகங்களைக் கொத்திச்செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள அந்நூலகம் அடுத்த ஆறு மாதங்களுக்குச் செயல்படும்.

நூலக உறுப்பினராக இருப்பவர்கள் அடையாள அட்டையைத் தட்டினால் கதவு திறக்கும். உள்ளே சென்று தேவையான புத்தகங்களை எடுத்துக்கொண்டு வெளியேறும் கதவுக்குமுன் சென்று நின்றால்போதும். உங்களிடமுள்ள புத்தகங்கள் உங்கள் கணக்கில் இரவல் பெற்றுக்கொண்டதாகப் பதிவுசெய்துகொள்ளப்பட்டு, கதவு திறந்துவிடும். எங்கும் கைபேசியைக்கூடக் கையில் எடுக்கவோ ஒரு பொத்தானைக்கூட அழுத்தவோ அவசியமில்லை.

ஓவியம்: சம்யுக்தா (தொடக்கநிலை 5, பெய்யிங் தொடக்கப்பள்ளி)

சுமார் 1000 புத்தகங்களை ஜப்பானிய நூல்வெளியீட்டு நிறுவனம் ஷொகாகுகான் ஆசியா அன்பளித்துள்ளது. மாங்கா நூலகம் திறக்கப்பட்டு சில வாரங்களிலேயே பெரும்பாலான புத்தகங்கள் இரவல் போய்விட்டதைக் காணமுடிந்தது. இளையர்கள் தனியாகவும் குழுவாகவும் உள்ளேயே தரையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். பிள்ளைகளுடன் வந்திருந்த பெற்றோர்களும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் மாங்காவைப் புரட்டிக்கொண்டிருந்தனர். உரையாடி விவரங்கள் பெறுவதற்காக வாசலில் வைக்கப்பட்டிருக்கும் திருவாளர் கியாசு (Mr Kiasu) இயந்திர மனிதருடன் சில பிள்ளைகள் வம்பு வளர்த்துக்கொண்டிருந்தனர். உற்சாகமான நூலகமாக இருக்கிறது.

மாங்கா நூலகத்திற்கு வரும் வாசகர்கள் வரைகதை ரசிகர்கள் என்பதால், அவர்களுக்கு சிங்கப்பூர் வரைகதைப் பண்பாட்டை அறிமுகம் செய்வதற்காக, நூலகத்தின் ஒருபக்கத்தில் உள்ளூர் வரைகதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பார்க்கலாம் ஆனால் இரவல் பெறவியலாது. சிங்கப்பூரின் முதல் முழுநீள வண்ண வரைகதையான கேப்டன் V (Captain V, 1987) உள்ளிட்ட இன்று பலரும் அறியாத, மறந்துவிட்ட அரிய உள்ளூர்ப் புத்தகங்கள் ஆர்வலர்களின் அன்பளிப்புகளைக்கொண்டு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புத்தக வெளியீட்டாளர்கள், கடைத்தொகுதி உரிமையாளர்கள், தனியார் ஆர்வலர்கள், இதர பங்காளிகளுடன் இணைந்து நூலக வாரியம் மேலும் பல இடங்களில் பல்வேறு கருப்பொருள்களில் அமைக்கவுள்ள இத்தகைய ‘கொத்திச்செல்லும்’ (Grab-n-Go) நூலகங்கள், எதிர்காலத்தில் சிங்கப்பூரில் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை வழிமறிக்கக்கூடும். ‘லேப்25’ (Libraries and Archives Blueprint 2025, LAB25) என்னும் பெருந்திட்டச் செயலாக்கத்தின் ஒரு பகுதியே இந்த மாங்கா நூலகம். பிள்ளைகளுடன் ஒருமுறை சென்றுபாருங்கள்.