உதிரிப்பூக்கள்

0
232
மஹேஷ்

சோயா கழுவுநீரிலிருந்து மீன் உணவு!

சோயா பீன்ஸ் சார்ந்த உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வீணாகும் சோயா கழுவுநீரில் உயிர்ச்சத்துகளும் (vitamins) ஊட்டச்சத்துகளும் (nutrients) உள்ளன. நுண்ணுயிரிகள் அவற்றை உண்டு பல்கிப் பெருகியதும் நீரை உலரவிட்டு நுண்ணுயிரிகளைப் பிரித்து மீன்களுக்கான புரதச்சத்து மிக்க உணவாக ஆக்குவதில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகண்டுள்ளனர். இந்தப் புதிய முறையை சோயா தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே நிறுவி சிக்கனமாகப் புரத அறுவடை செய்யலாம். இந்த உணவில் மீன்களுக்கு வேண்டிய அமினோ அமிலங்களும் ஊட்டச்சத்துகளும் கிடைப்பதால் அவற்றின் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு மீன் வளர்ப்பிடங்களில் இறப்பும் குறைவதாகவும் சோதனைகளில் கண்டுள்ளனர். சோயா மட்டுமின்றி அரிசி, இதர தானியங்கள் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளில் கிடைக்கும் கழுவுநீரிலும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

நீரில் இயங்கும் உந்துபொறி!

விண்வெளியில் செயற்கைக்கோள்களை உந்திச்செல்ல உதவும் ‘ஹால் விளைவு’ அயனி உந்திகளில் (ion thruster) பொதுவாக ஸெனான் (Xenon) போன்ற மந்தவாயுக்களைப் பயன்படுத்துவர். தற்போது சிங்கையைச் சேர்ந்த ஏலியனா (Aliena) நிறுவனம் ஒரு பிரிட்டன் நிறுவனத்துடன் இணைந்து நீரில் இயங்கும் ஓர் அயனி உந்தியை உருவாக்கியுள்ளனர். நீரில் மின்சாரத்தைச் செலுத்தி ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மூலக்கூறுகளைப் பிரிக்கின்றனர். உந்தியில் உள்ள எதிர்மின்வாய் (cathode) ஹைட்ரஜன் எலெக்ட்ரான்களைக்கொண்டு ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை அயனிகளாக மாற்றுகிறது. அந்த அயனிகள் உந்தியிலிருந்து மிகுந்த வேகத்துடன் வெளியேறும்போது உந்தி அதற்கு எதிர்த்திசையில் உந்தப்படுகிறது. சுமார் 200 கிலோ எடைவரை உள்ள செயற்கைக்கோள்களில் இந்தப் பொறிகளைப் பயன்படுத்தலாம். குறைந்த செலவில் அதிக உந்துசக்தி கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நுண்ணியிரிகளும் லித்தியம் தயாரிப்பும்!

பயன்படுத்தப்பட்டப் பழைய லித்தியம் மின்கலங்களிலிருந்து நுண்ணுயிரிகளைக்கொண்டு லித்தியம், மாங்கனீஸ், கோபால்ட், நிக்கல் போன்ற உலோகங்களைப் பிரித்தெடுக்கும் வழிமுறையை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சோதனைச் சாலையிலிருந்து தயாரிப்பு நிலைக்கு வெற்றிகரமாகக் கொண்டுசென்றுள்ளனர். ஐந்து ஆண்டு ஆய்வின் விளைவாக, அடர் அமில நிலைகளில் உயிர்வாழ்ந்து உலோகங்களைப் பிரிக்கும் நுண்ணுயிரிகளுக்கு உணவாக பழைய லித்தியம் மின்கலங்களைக் கூழாக்கித் தருகிறார்கள். அதிலிருந்து 85 முதல் 92 விழுக்காட்டு உலோகத்தை நுண்ணுயிரிகள் வளர்சிதைக் கழிவுகளாகப் (metabolites) பிரித்துவிடுகின்றன. சுமார் 1 டன் லித்தியம் தயாரிக்க, சுரங்கங்களில் எடுக்கப்படும் 250 டன் லித்தியம் தாதுவும் 750 டன் உவர்நீரும் தேவை. ஆனால் இந்த உயிரி இறுத்தல் (bioleaching) முறையில் வெறும் 28 டன் பழைய லித்தியம் மின்கலங்களே போதும். மேலும் இவை வெறும் 40 பாகை வெப்பத்தில் இயங்குவதால் எரிசக்திப் பயன்பாடும் மிகமிகக் குறைவே.

வெள்ளணுக்கள் தானத்தில் புற்றுநோய்ச் சிகிச்சை!

சிங்கையைச் சேர்ந்த சைடோமெட் (CytoMed)எனும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமும் புற்றுநோய் ஆராய்ச்சி மையமும் இணைந்து சுமார் 20 வகையான புற்றுநோய்களுக்கான புதிய சிகிச்சை முறையை சோதனைசெய்து வெற்றியும் கண்டுள்ளனர். ஆரோக்கியமான நபர்களிடமிருந்து T செல்கள் எனப்படும் ஒருவகை வெள்ளை அணுக்களை தானமாகப் பெற்று, அவற்றின் மீது CAR எனப்படும் ஒரு புரதத்தைச் சேர்த்து புற்றுநோயாளிகளின் உடலில் செலுத்துவதன் மூலம் மிகச் சரியாகப் புற்று பாதிக்கப்பட்ட செல்களை மட்டும் குறிவைத்து அழிக்க முடியும். ஈராண்டுகள் சோதனைக்குப் பிறகு கடந்த மாதம் மிகச்சில நோயாளிகளிடம் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது முதல்முறை என்பதால் குணமானபிறகு புற்று மீண்டும் வர வாய்ப்புள்ளதா என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சி தொடர்கிறது.