கவிதை காண் காதை (12)

0
256

இரண்டாவது சூரிய உதயம்

கணேஷ் பாபு

மருதமுத்து அய்யாவின் சிறிய வீடுதான் அந்த தெருவின் இறுதி வீடு. வாகனங்கள் செல்ல இயலாத குறுகலான தெரு. அந்தச் சிறிய தெருவில் வசித்தபடியே பெரிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தார் அவர். ஒரு அரசியல் கட்சியில் ஐம்பதாண்டுகளை நிறைவு செய்திருந்தார். அரசியல், கட்சி, பதவி போன்ற சொற்களின் பொருள் மாறத் துவங்கி பல காலம் ஆனபோதிலும் இன்றும் அச்சொற்களின் நேர்ப்பொருளை மட்டுமே பாவித்து செயல்புரிபவர். மருதமுத்து அய்யாவைப் பொறுத்தவரை அரசியல் என்பது சேவை. குரலற்றவர்களின் குரலை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்துச் செல்வதே தன்னுடைய பிரதான பணி என்று நம்புபவர்.

ஒருவகையில் தன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று இளமையிலே ஊகித்துக்கொண்டவராதலால் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. மிகச் சிறந்த படிப்பாளி. அதே சமயம் மிகத் தீவிரமான களப்பணியாளர். எங்களூரில் நடந்த முக்கியமான போராட்டங்களை ஒருங்கிணைப்பவர் அவர்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் தலைமைப் பொறுப்பு மட்டும் கடைசி நேரத்தில் வேறொருவருக்குச் சென்றுவிடும். அதைக் குறித்து அவர் அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை. எதிர்க்கட்சி ஆட்கள் கூட அவரிடம் மரியாதை செலுத்துவதைப் பார்க்கமுடியும்.

“கற்பனைய மட்டும் வளத்துக்குங்க தம்பிகளா. அதுவே உங்கள எங்க கூட்டிட்டுப் போகணுமோ அந்த எடத்துக்குச் சரியா கூட்டிட்டுப் போயிரும்” என்பார்.

என்னைப் போன்ற சிறுவர்கள் அவரது ஆளுமையால் கவரப்பட்டோம். சிறுவர்களையும் அவர் மரியாதையுடன் நடத்துவதும்,அவர்களது கருத்துகளையும் கவனத்துடன் கேட்டுக்கொள்வதும்தான் அவர் மீதான எங்களது ஈர்ப்புக்கு காரணமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் தன்னுடைய சிறிய வீட்டில் ஒரு பெரிய நூலகம் வைத்திருந்தார். அதிலும் சிறுவர் நூல்களுக்கென்றே தனியாக ஒரு அடுக்கு வைத்திருந்தார். விடுமுறை தினங்களில் நாங்கள் சிலர் அவரது வீட்டுக்குச் சென்று அந்த நூல்களை வாசிப்போம்.

அம்புலிமாமா, பூந்தளிர், முத்து காமிக்ஸ், சிறுவர் மலர் போன்ற இதழ்களும் இருக்கும். அவரது வீட்டுக்கு முன்னர் முருங்கை மர நிழலில் சாணி பூசி மெழுக்கப்பட்ட சிறு திண்ணை இருக்கும். அந்தத் திண்ணையில்தான் நாங்கள் எல்லோரும் அமர்ந்து சிறுவர் இதழ்களை வாசிப்போம். ஒருபோதும் திரும்பி வராத நாட்கள் அவை. மனதின் நிலவறையில் ஒரு மூலையில் தேங்கிவிட்டவை. நினைவின் ஒளிபட்டதும் காலங்களின் இருளை மீறி ஒளிர்கின்றன.

“நல்ல கவிதை என்பது அது எழுப்பிய பிரச்சினைகள் முழுவதும் தீர்ந்த பிறகும் பொதுஜன அபிப்ராயங்கள் மாறிய பிறகும் நிலைத்திருக்கும் தன்மை வாய்ந்தது

அவரது கட்சி இதழ்களும் அவரது நூலகத்தில் இருந்தன. ஆனால், ஒருபோதும் அவர் எங்களை அந்த இதழ்களை வாசிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதேயில்லை. இயல்பாக யாராவது ஒருவர் அந்த நூலை நோக்கிச் செல்கையில் மட்டுமே அவர் அவர்களுக்கு அதிலுள்ள விஷயங்களை விளக்கிச் சொல்வார். “கற்பனைய மட்டும் வளத்துக்குங்க தம்பிகளா. அதுவே உங்கள எங்க கூட்டிட்டுப் போகணுமோ அந்த எடத்துக்குச் சரியா கூட்டிட்டுப் போயிரும்” என்பார்.
மரபிலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக வாசிப்பார். அவர் சார்ந்திருந்த கட்சியின் கொள்கைகளில் கடவுள் மறுப்பும் ஒன்று. ஆனாலும், பக்தி இலக்கியங்களை அவர் தீவிரமாக வாசிப்பதை அந்தக் கொள்கையால் தடை செய்ய இயலவில்லை.

சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களானோம். பள்ளி முடித்து, கல்லூரி கடந்து, அச்சிறிய ஊரின் திசைப் பூதங்களையெல்லாம் தாண்டி, எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், நேரமும் சூழலும் வாய்க்கும்போதெல்லாம் இன்றும் அவருடன் தொடர்பில் இருந்து கொண்டுதான் இருக்கிறோம். இலக்கியம் வாசிக்கத் துவங்கியதும், அவருடன் கவிதை குறித்து நிறையப் பேசியிருக்கிறேன்.

அவருக்குக் கவிதை குறித்துச் சில திட்டவட்டமான கருத்துகள் இருந்தன. கவிதைக்குள் இருக்கும் பிரிவுகளை அவர் அங்கீகரிப்பதில்லை. இலக்கணம் சார்ந்து வெளிப்படையாக நிறுவமுடியும் என்பதால் மரபுக்கவிதை, புதுக்கவிதை போன்ற அடிப்படையான வகைமைகளை அவர் ஏற்றுக்கொள்வார். ஆனால், நவீன கவிதையிலேயே கூட அதன் பேசுபொருள் சார்ந்து அடையாளப்படுத்துவதை நிராகரித்துவிடுவார். “அதென்ன அரசியல் கவிதை? இப்படியெல்லாம் கவிதைக்குள்ள கவிதையை வகைப்படுத்திக்கிட்டே போகாதீங்க. கவிதை என்பது சமுத்திரம் மாதிரி. ஒரே சமுத்திரம்தான் நம்ம நாட்டச் சுத்தி இருக்கு.

நாமதான் அத இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடான்னு வகைப்படுத்திக்கிட்டு இருக்கோம். அடிப்படையில், கடல் ஒண்ணுதான். அதேபோலத்தான் கவிதையும்”, என்பார். “ஆனாலும் அடையாளப்படுத்துவதற்கு இதெல்லாம் வசதியாத்தானே இருக்கு”, என்பேன். “அடையாளப்படுத்துவது உன்னோட வேலையில்ல. நீ வாசகன். அந்த வேலைய மட்டும் பாரு. கவிதைய ரசி, அதிலுள்ள நயத்துல லயிச்சுக் கிட. அடையாளப்படுத்துற வேலையெல்லாம் என்னய மாதிரி அரசியல்வாதிகள் கிட்ட விட்டிரு”, என்று நக்கலாகச் சொல்வார்.

“கவிதையை அடையாளப்படுத்துவதும் வகைப்படுத்துவதுமேகூட அதைத் துய்ப்பதன் ஒரு பகுதிதானே”, என்பேன். “நீ அடையாளப்படுத்துவதும் வகைப்படுத்துவதும் இன்னொரு வாசகனை அக்கவிதையைத் துய்ப்பதற்குத் தடையாக இருக்குமே? அடையாளப்படுத்துவதற்கு நீ யார்?” என்று அவர் பதிலுக்குக் கேட்பார்.

“அரசியல் கவிதைகள் நவீன கவிதைகளாகுமா”? என்று நான் கேட்பேன்.

அவர் சொல்வார், “கவிதை என்பது மொழியின் அழகியல் வெளிப்பாடு. மொழியின் நுட்பங்கள் கவிதையில் கைகூடி வரவேண்டும். அதே சமயம், மொழித்தளத்திலேயே எஞ்சிவிடாமல், தான் சொல்ல வருவதை வாசகனின் அக ஆழத்துக்குள் பாய்ச்சி விடவேண்டும். அப்படிப்பட்ட கவிதைகள் எதையும் பேசுபொருளாகக் கொள்ளலாம். அரசியலும் அதில் ஒன்றாக இருக்கலாம்.”

பிரம்மராஜனின் ஒரு வரியை நான் சொல்வேன், “நல்ல கவிதை என்பது அது எழுப்பிய பிரச்சினைகள் முழுவதும் தீர்ந்த பிறகும் பொதுஜன அபிப்ராயங்கள் மாறிய பிறகும் நிலைத்திருக்கும் தன்மை வாய்ந்தது”.

“அதேதான். சரியாச் சொல்லிருக்காரு. தெரிஞ்சுக்கிட்டே ஏன் கேள்வி கேக்குற?” என்பார். இப்படியே விவாதம் வளரும்.

ஒரு சிலரைப் பார்க்கும்போது இவர்கள் மட்டும் அவர்கள் ஈடுபட்டிருக்கும் துறையை விட்டுவிட்டு பிறிதொரு துறைக்கு வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே என்று நமக்குத் தோன்றுவதுண்டு. அப்படிப்பட்டவர்தான் மருதமுத்து அய்யா. அவர் ஒரு சிறந்த இலக்கிய விமர்சகராக வந்திருக்க வேண்டியவர். மாறாக, அரசியலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். எடுத்துக்கொண்ட துறையில் நேர்மையாகவும் விசுவாசமாகவும் அர்ப்பணிப்புணர்வோடுமே செயல்பட்டார். ஆனாலும், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவேயில்லை. அதைக் குறித்து அவர் கவலைப்படவும் இல்லை. “செய்வதைச் செய்வோம், மற்றவற்றைக் குறித்து யோசித்து பொழுதை வீணாக்க வேண்டியதில்லை”, என்பார்.

பல வருடங்களுக்குப் பின் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்ததுமே தெரிந்தது. படுக்கையை விட்டு எழத் தோதில்லை. அவரது விருப்பத்திற்குரிய நூலகம் காலியாக இருந்தது. வாசிக்கக்கூடிய இளைஞர்களுக்கு நூல்களைக் கொடுத்துவிட்டேன் என்றார். அவரால் அதிக நேரம் பேச முடியவில்லை. அவரது கைகளை வெகு நேரம் பிடித்தபடியிருந்தேன். மூதாதையின் கரங்களின் வெம்மைக்குள் பல கதைகள் ஒளிந்திருக்கின்றன.

அவருக்குப் பிடித்தமான சேரனின் கவிதை இது.

அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.
மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.
இம்முறை தெற்கிலே –
என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.
கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?
சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.
-சேரன்

பிரம்மராஜனின் வரியை சேரனின் கவிதை வரிகள் மெய்ப்பிக்கின்றன. இக்கவிதை எழுப்பிய பிரச்சனை இன்னும் தீராமலிருக்கலாம். ஒருவேளை வருங்காலத்தின் ஏதோ ஒரு புள்ளியில் தீருமென்றாலும் இக்கவிதை அதற்குப் பிறகும் இருக்கும்.