மொழிபெயர்ப்புக் கவிதை

0
262

இரவலன்

மஹேஷ்

அவன் வருகிறான்
நொறுங்கிய இதயத்துடன்..
கழிவிரக்கத்துடன்..
பாதையில் வருகிறான்.
வயிறும் முதுகும் ஒன்றாயிருக்க
கோலூன்றியபடி வருகிறான்.
கைப்பிடி அரிசிக்காக… பசியை விரட்ட…
நைந்து போன பையின் வாயைத் திறந்துவைத்தபடி
அவன் வருகிறான்.
நொறுங்கிய இதயத்துடன்..
கழிவிரக்கத்துடன்…
பாதையில் வருகிறான்.
கூடவே இரண்டு பிள்ளைகளும்..
ஒரு கை வயிற்றைத் தடவியபடியும்
மறு கை புரவலரின் கருணைக்காக நீட்டியபடியுமாக.
பசியில் உதடுகள் உலரும்போது
கொடுப்பவர் எவரும் இல்லாதபோது
கண்ணீரையே பருகி நிற்கின்றனர்.
தெருவில் நின்றபடி எச்சிற்கலையை நாவால் தீண்டியபடி
பாயத் தயாராயிருக்கும் நாய்களுக்கிடையே.
என் இதயத்தில் அமுதம் பொங்குகிறது.
நான் உனக்குப் பாய்ச்சுகிறேன்.
அபிமன்யுவைப் போல ஆகலாம் நீயும்.
உன் துக்கத்தை என் இதயத்தில் பாய்ச்சிக்கொள்கிறேன்.

கவிஞர் பற்றிய குறிப்பு

நிராலா

‘நிராலா’ என்னும் சூர்யகாந்த் திரிபாதி (1896 – 1961) வங்கத்திலுள்ள மிட்னாபூரில் பிறந்தவர். பல கவிதைகள், கதைகள், நாவல்களை எழுதிய நிராலா வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறந்து விளங்கியவர். “ச்சாயாவாத்” எனப்படும் உள்ளத்தை உருக்கும் புதுயுகக் கவிதைகளை, சமகாலக் கவிஞர்களான மஹாதேவி வர்மா, ஜெய்சங்கர் பிரசாத் போன்றோருடன் முன்னெடுத்துச் சென்றவர். சமூக அவலங்களுக்கு – முக்கியமாகப் பெண்கள் சந்தித்த சிரமங்களுக்கு – எதிரான தன் குரலை அழுத்தமாகப் பதிவு செய்தவர்.

1921ல் எழுதப்பட்ட “பிக்‌ஷுக்’’ எனும் இந்தக் கவிதையை நிராலாவின் சமூக சிந்தனைக்காகவும், கருணைக்காவும், பசி எனும் கொடிய நோயுடனும் சமூகத்துடனும் தனியே போராடும் இரவலனை அபிமன்யுவுடன் ஒப்பிட்டதற்காகவும் அவரது சிறந்த கவிதைகளில் ஒன்றாகக் கொண்டாடுகின்றனர்.