கமலா மன்றம்

0
281

மகளிர் அமைப்புகளின் முன்னத்தி ஏர்

வந்தனா அகர்வால்

கமலா மன்றம் – சிங்கப்பூரில் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த பெண்களை ஒன்றிணைப்பதில் அறுபதாண்டுகளுக்கும் மேலாக முக்கியப் பங்காற்றிவரும் முன்னோடி மன்றம். சமூக ஒன்றுகூடல்கள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், பயிற்சி வகுப்புகள் மூலம் இம்மன்றம் தெற்காசியப் பெண்களுக்கு ஒரு மதச்சார்பற்ற சூழலில் சந்தித்துப் பழகவும் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பளித்தது.

மஹேஷ் குமார்

கொவிட் பெருந்தொற்றின்போது நடவடிக்கைகளில் ஏற்பட்ட சுணக்கத்தை, தன் 1,200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களைக்கொண்டு, இணைய வழியில் கமலா மன்றம் (கமலா என்றால் இந்தியில் “தாமரை”) ஈடுசெய்தது. இந்திய மரபுடைமை நிலையம் போன்ற இடங்களுக்கு வழிகாட்டுச் சுற்றுலா, பெண்களுக்கான இணையவழி யோகா வகுப்புகள், பண்பாட்டு நிகழ்வுகள் என்று பலவகைகளிலும் துடிப்பாகச் செயல்பட்டது.

பெண்களுக்கான மன்றங்கள்

கமலா மன்றம் 1950களில் நிறுவப்பட்டது. ஆயினும் அதன் வேர்களை 1930களின் முற்பகுதியில் உருவான லோட்டஸ் மன்றம் (Lotus Club), பெண்கள் சங்கம் (Ladies’ Union) ஆகிய இரண்டு மகளிர் அமைப்புகளில் காணமுடிகிறது. 1930ஆம் ஆண்டில், இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கத்தின் (YWCA) ஆதரவில் இந்திய மற்றும் இலங்கை பெண்கள் மன்றம் (Indian and Ceylonese Ladies’ Club) தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டே அது லோட்டஸ் மன்றம் எனப் பெயர்மாற்றம் கண்டது. மாதர் சங்கம் என்ற இன்னொரு அமைப்பு 1931இல் தொடங்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அப்போதைய தலைவர்
விஜயலட்சுமி பண்டிட், கமலா மன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகிறார் (1954)

சமூக மன்றங்களாகத் தொடங்கிய இவை சிங்கப்பூரில் இந்தியப் பெண்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தன. அந்தக் காலத்தில் இந்தியப் பெண்களின் புழக்கம் வீட்டைச் சுற்றியே இருந்தது. அந்நிய ஆடவரின் பார்வையில் படாமல் அவர்கள் மறைத்து வைக்கப்பட்டதும் உண்டு. அத்தகைய சூழலில், இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பெண்களுக்குத் தம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுடன் மட்டுமின்றி வெவ்வேறு சாதிகள், மதங்கள், பின்புலங்களைச் சார்ந்த பெண்களுடனும் பழகி உறவாட இம்மன்றங்கள் வாய்ப்பளித்தன.

இம்மன்றங்களில் பிள்ளைப் பராமரிப்பு, சுத்தம், சுகாதாரம் குறித்துக் கற்பதுடன் சற்று ஓய்வாக இருக்கவும் பெண்களுக்கு இயன்றது. மேலும், தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்டுவது, உரைகளை ஏற்பாடு செய்வது, தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக்கொள்வது என்று பல்வேறு வகைகளில் இம்மன்றங்கள் உதவின.

இந்தியப் பெண்கள் தொடர்ந்து ஒன்றுகூடும் ஓர் அமைப்பிற்கான யோசனையை பிரபல இந்தியக் கவிஞரும் தத்துவஞானியும் எழுத்தாளருமான ரவீந்திரநாத் தாகூர் 1927ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்திருந்தபோது முன்வைத்தார். அப்போது ஏற்கெனவே இருந்த ஓர் இந்திய அமைப்பு பெரிதும் ஆண்களின் தேவைகளை முனைவைத்தே செயல்பட்டது.

பிறகு, நவம்பர் 1930இல், திருமதி.எட்வர்ட் வேதநாயகம் டேவிஸ் (செச்சா டேவிஸ் என்றும் அழைக்கப்படுகிறார்), திருமதி.ஜான் ட்ரூமன் நவரத்தினம் ஹேண்டி ஆகிya இருவரும், பல்வேறு இந்திய, இலங்கைக் குழுக்களைச் சேர்ந்த பெண்களை YWCAவில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து அவர்களுக்கென ஒரு மன்றத்தை அமைக்கவேண்டியதன் அவசியத்தை விளக்கினர்.

அதற்குப் போதுமான ஆதரவு கிட்டியதால் இந்திய மற்றும் இலங்கை பெண்கள் சங்கம் 1930 டிசம்பரில் YWCA ஆதரவுடன் தொடங்கப்பட்டது.

இந்தியப் பெண்கள் தொடர்ந்து ஒன்றுகூடும் ஓர் அமைப்பிற்கான யோசனையை பிரபல இந்தியக் கவிஞரும் தத்துவஞானியும் எழுத்தாளருமான ரவீந்திரநாத் தாகூர் 1927ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்திருந்தபோது முன்வைத்தார்.

மன்றத்தின் நோக்கம் “இச்சமூகங்களின் பெண்களை சில படைப்பூக்கமுள்ள, மனமகிழ் செயல்பாடுகளிலும், நட்புறவாடலிலும் ஒன்றிணைப்பது, அதேவேளையில் பல பெண்களிடம் மறைந்திருக்கும் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்துவது” என்பதாகும்.

பாரசீக, அரபு, மலாய் சமூகங்களைச் சேர்ந்த பெண்களும் முன்வந்ததால், சங்கம் அதன் பன்முகத்தன்மையைப் பொருத்தமாகப் பிரதிபலிக்கும் வகையில் 1931இல் லோட்டஸ் மன்றம் எனப் பெயரை மாற்றிக்கொண்டது.

தொடர்ந்து சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்தது. சிங்கப்பூர்ச் சமுதாயத்தின் முக்கிய உறுப்பினர்களான திருமதி.மிர்சா முகமது அலி நமாசி, திருமதி.ராஜபாலி ஜுமாபாய் போன்றவர்களும் சேர்ந்தனர். லோட்டஸ் மன்றத்தில், 1932 வாக்கில், சுமார் 15 வெவ்வேறு மொழிகளைப் பேசும் 100 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் இந்தியா, மலாயாவின் முக்கிய மதங்களைப் பிரதிநிதித்தனர். சில நிகழ்வுகளில் குறைந்தது ஏழு மொழிகளில் உரைகள் நிகழவேண்டியிருந்தது.

உறுப்பினர்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ததே மன்றத்தின் பிரபலத்திற்குக் காரணம் என்று மன்றத்தின் கெளரவச் செயலாளர் திருமதி.கிழக்கே முக்கப்புழா ராமன் மேனன் (அமலா மேனன் என்றும் அழைக்கப்படுகிறார்) கருதினார். “படித்த, வசதிபடைத்த பெண்களும் ஆதரிப்பதன் மூலம் மன்றத்தின் பிரபலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் சந்தித்திராத, சமூக வாழ்வின் மகிழ்ச்சிகளைத் துய்க்காத பல பெண்களை மன்றம் ஒன்றிணைத்துள்ளது” என்று அவர் கூறினார்.

லோட்டஸ் மன்றம் வெற்றியடைந்ததாகத் தோன்றினாலும், மாதர் சங்கம் என்னும் போட்டி அமைப்பு ஒன்று திருமதி.பிரிட்ஜெட் கேதரீன் பீட்ரிஸ் செல்வநாதன் ஹேண்டி தலைமையில் 1931இல் தொடங்கப்பட்டது. லோட்டஸ் மன்றம் YWCAவுடன் இணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் “மாதர் சங்கம் என்பது மலாயாவின் முதல் சுதந்திரமான அமைப்பாகும். இது முழுக்க முழுக்க இந்திய, இலங்கைப் பெண்களால் தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தச் சங்கம் எந்த விதத்திலும் மதம் சார்ந்ததோ வேறு எந்த அமைப்புகளுடனோ இணைக்கப்படவில்லை. சகிப்புத்தன்மையும் பரஸ்பர உதவியுமே சங்கத்தின் முக்கிய நோக்கம். சங்கம் சுதந்திரமாகவும் முற்றிலும் இந்திய முறையிலும் செயல்படும்” என்று திருமதி.ஹேண்டி பெருமையுடன் அறிவித்தார். சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களையும் ஈர்க்கும் நோக்கில் மாதச்சந்தா 25 காசு; ஆண்டுச்சந்தா 3 வெள்ளி என்று நிர்ணயிக்கப்பட்டது.

வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்த உயர்குடிப் பெண்களுக்கானதாக லோட்டஸ் மன்றம் கருதப்பட்ட அந்தச் சமயத்தில் மாதர் சங்கம் அதன் மலிவு மாற்றாகக் கருதப்பட்டது. ஒரே மாதிரியான இரண்டு மன்றங்கள் சிலரை கவனிக்கச் செய்தன. மலாயா ட்ரிப்யூன் வெளியிட்ட ஒரு கடிதத்தில், “என் சமூகப் பெண்களின் நலனிலும் முன்னேற்றத்திலும் ஆர்வமுள்ள ஓர் இந்தியன் என்கிற முறையில், இரு அமைப்புகளின் உறுப்பினர்களையும் போட்டி மனப்பான்மையோடு செயல்படாமல் ஒத்துழைப்புடனும் சகோதரத்துவத்துடனும் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் குறையுமானால், இரு மன்றத்தாராலும் சமூகம் சீர்குலைந்து, வரமே சாபமாகிவிடும் அபாயம் உள்ளது” என்று ஒரு வாசகர் எழுதினார்.

ஒருவரையொருவர் சந்தித்திராத, சமூக வாழ்வின் மகிழ்ச்சிகளைத் துய்க்காத பல பெண்களை மன்றம் ஒன்றிணைத்துள்ளது.

தொடக்க ஆண்டுகளில் இரண்டு அமைப்புகளுக்கும் இடையே தீவிரமான போட்டி இருந்தது. லோட்டஸ் மன்றம் பிப்ரவரி 1932இல் முதல் ஆண்டு விழாவைக் கொண்டாடியது. அவ்விழாவுக்கு அப்போதைய ஆளுநரும் நீரிணைக் குடியிருப்பின் தலைமைத் தளபதியுமான சிசில் கிளமென்டியின் மனைவியான லேடி கிளமென்டியை நிகழ்ச்சிக்கு அழைத்து மன்றத்தின் “ஞானத்தாயாக” (Godmother) நியமித்தது. மாதர் சங்கமும் போட்டியாக 1932இல் அதன் முதல் ஆண்டு விருந்துக்கு அதே லேடி கிளமெண்டியை அழைத்ததோடு அவரை மன்றத்தின் புரவலராகவும் ஆக்கியது.

லேடி கிளமென்டி சமாதான முயற்சியில் இறங்கி, 1933இன் இறுதியில், இரு அமைப்புகளும் இணைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். ஆனால் இரு அமைப்புகளின் தலைவர்களும் செயலாளர்களும் கலந்துகொண்ட சந்திப்பில், லோட்டஸ் மன்றப் பிரதிநிதிகளால் அது ஏற்கப்படவில்லை.

அந்த விருந்தானது, “ஆசியப் பெண்களைத் தனிமைப்படுத்திக் கட்டப்பட்டிருக்கும் ஆசாரவாதக் கோட்டை"யின் மீதான ஒரு தாக்குதலாகப் பாராட்டப்பட்டது.

இரண்டு அமைப்புகளும் அதனதன் இடத்தை சமூகத்தில் நிலைநிறுத்திக்கொண்டன. லோட்டஸ் மன்றம் அதன் செயல்பாடுகளுக்கு YWCAஇல் உள்ள வசதிகளைப் பயன்படுத்தியபோது, 1932இல் மாதர் சங்கம் பாலஸ்டியர் திடலில் கொஞ்சம் நிலத்தைச் சமன்செய்து துத்தநாகத் தகடுகளைக்கொண்டு கூரைவேய்ந்து ஒரு கூடத்தை உருவாக்கிக்கொண்டது. அந்த இடம் டென்னிஸ், இறகுப்பந்து மைதானங்கள் அமைக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. மேலும் ஒரு புதிய மனமகிழ் மன்றக் கட்டடம் கட்டவும் நிதிதிரட்ட ஆரம்பித்தது. உடனே லோட்டஸ் மன்றமும் தனது சொந்தக் கட்டடத்திற்காக நிதிதிரட்டத் தொடங்கியது.

மன்றத்தையும் சங்கத்தையும் ஒன்றிணைத்தல்

போட்டி இருந்தபோதிலும், மன்றமும் சங்கமும் அக்கால சிங்கப்பூரின் இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தன. மாதர் சங்கத்தின் நிறுவன உறுப்பினரான திருமதி.லட்சுமி நாயுடு, 1982ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் “அப்போதெல்லாம் நம் இந்தியப் பெண்கள் பொதுவாக எங்கும் வெளியே செல்ல மாட்டார்கள்; பிறருடன் பேசிப்பழக மாட்டார்கள்; எப்போதும் வீட்டிலேயே இருப்பார்கள். அதனால்தான் நாங்கள் அவர்களை வெளியில் அழைத்துவந்து அவர்களுக்குத் தையல், காகிதப்பூ தயாரித்தல் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தோம். அவ்வப்போது மருத்துவர்களையோ வேறு சிலரையோ உரையாற்றவும் அழைத்தோம்” என்று நினைவுகூர்ந்தார்.

இரண்டு அமைப்புகளும் செய்த ஏற்பாடுகள் பர்தா (purdah) நடைமுறையைக் கடைப்பிடித்த பெண்களுக்கும் வீட்டிற்கு வெளியே சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது. பர்தா என்பது பெண்ணைத் தனிமைப்படுத்திய ஒரு மத, சமூக நடைமுறையாகும். அந்நிய ஆடவரிடமிருந்து சுவர்கள், திரைகள், திரைச்சீலைகள் ஆகியவற்றின் வழியாகப் பெண்டிரைப் பிரித்து வைக்கும் ஓர் ஐதீக நடைமுறை.

மே 1935இல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அரியணை ஏறியதன் வெள்ளிவிழாவைக் கொண்டாட லோட்டஸ் மன்றம் ஓர் இரவு விருந்தை ஏற்பாடு செய்தது. அந்நிகழ்வுக்கு முதல் முறையாக ஆண் விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர். பல பெண்கள் பர்தா நடைமுறையைக் கடைப்பிடிப்பதால் அதற்கேற்ப திட்டமிட வேண்டியிருந்தது. அந்த விருந்தானது, “ஆசியப் பெண்களைத் தனிமைப்படுத்திக் கட்டப்பட்டிருக்கும் ஆசாரவாதக் கோட்டை”யின் மீதான ஒரு தாக்குதலாகப் பாராட்டப்பட்டது.

மாதர் சங்கத்தைச் சேர்ந்த, திருமதி.மாலதி பிள்ளை 1948இல் சிங்கப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி

இரவு விருந்து, சுற்றுலா போன்ற சமூக நிகழ்வுகளுக்கு அப்பால் பெண்கள் தொண்டூழியத்திலும் ஈடுபட்டனர். பசார்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் ஒருங்கிணைத்து நிதிதிரட்டினர். செப்டம்பர் 1933இல் மாதர் சங்கம் நடத்தியத் தொண்டூழிய விற்பனையின் மூலம் கிடைத்த வருமானம் குழந்தைகள் நலச் சங்கத்திற்கும் தொழுநோயாளிகள் புகலிடத்திற்கும் அளிக்கப்பட்டது. இதேபோல், லோட்டஸ் மன்றமும் அந்த ஆண்டு அக்டோபரில் ஒரு விழாவை ஏற்பாடு செய்து 800 வெள்ளி திரட்டியது.

அதில் ஒருபாதி கட்டட நிதிக்காகவும் மறுபாதி வேலைவாய்ப்பற்ற இந்தியர்களுக்கு உதவவும் பயன்படுத்தப்பட்டது. இன்றைய பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவை 1935 மே மாதம் ஒரு நிலநடுக்கம் நாசப்படுத்தியது. ஜூன் 25 அன்று லோட்டஸ் மன்றமும் இந்தியர் சங்கமும் இணைந்து குவெட்டா நிவாரண நிதிக்காக (Quetta Relief Fund) விக்டோரியா தியேட்டரில் ஒரு நிதிதிரட்டு இசைக்கச்சேரியை ஏற்பாடு செய்தன.

இந்த இரு பெண்கள் அமைப்புகளும் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளையும் அளித்தன. லோட்டஸ் மன்ற உறுப்பினர்கள் 1932ஆம் ஆண்டு ஒரு சேர்ந்திசைக்குழுவை உருவாக்கினர். அக்டோபர் 1935இல் ஜூபிலி நிதிக்காக இவ்விசைக்குழு ஒரு நிதிதிரட்டுக் கச்சேரியை நடத்தியது. பிற அமைப்புகளின் நாடகங்கள், நடன நிகழ்ச்சிகளும் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அதேசமயம் மாதர் சங்கமும் ஜூபிலி நிதிக்காக ஒரு கதம்ப நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதன் உறுப்பினர்கள் தெலுங்கு, இந்துஸ்தானி, தமிழ், இந்தி மொழிகளில் பாடல்களைப் பாடி, நடனமாடினர். ஓவியங்கள், நாடகங்களும் இருந்தன. நாடகங்களில் ஆண் வேடங்களையும் பெண்களே ஏற்று நடித்தனர்.

பிள்ளைப் பராமரிப்புமுதல் சமுதாயப் பங்காற்றல்வரை பல்வேறு தலைப்புகளில் அமைந்த உரைகளை இவ்வமைப்புகள் ஏற்பாடு செய்தன. அவ்வாறு உரையாற்றியவர்களுள், 1937இல் சிங்கப்பூருக்கு வருகை தந்த, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த ஜவஹர்லால் நேருவும் ஒருவர். அவர் தனது உரையில் மாதர் சங்க உறுப்பினர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “தற்சார்பும் பண்பும் எழிலும் கொண்ட பெண்களே நமது தேவை. விளையாட்டுப் பொம்மைகள் அல்ல” என்றார். மேலும், “ஒருநாடு அதன் பெண்டிரின் தரத்தாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் பின்தங்கியும், எழுத்தறிவற்றும் இருந்தால் அந்நாட்டின் ஆண்கள் எந்நிலையில் இருந்தாலும் அது நன்னாடாக இராது” என்றார்.

போருக்குப் பிந்தைய காலத்தில் நேருவின் அறிவுரைகளைப் பல பெண்கள் மனதார ஏற்று செயலிலும் வெளிக்காட்டினர். சிங்கப்பூர் வட்டார இந்திய காங்கிரஸ் செயலாளராக இருந்த, மாதர் சங்கத்தைச் சேர்ந்த, திருமதி.மாலதி பிள்ளை 1948இல் சிங்கப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி ஆனார். ஈராண்டுகளுக்குப் பிறகு லோட்டஸ் மன்றத்தைச் சேர்ந்த திருமதி.மேரி லோபோ சமாதான நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

திருமதி.லட்சுமி நாயுடு ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போதும் அதற்குப் பின்னரும் தனது தன்னார்வலப் பணிக்காக சிங்கப்பூர் கௌரவச் சான்றிதழை 1954இல் பெற்றார். இந்த இந்தியப் பெண்மணிகள், அவர்களது முன்னோரைப்போல வெளியுலகத் தொடர்பின்றித் தனித்து இராமல், பொதுச்சமூகத்தில் அவர்களுக்கான இடத்தைக் கண்டடைந்தனர். மாதர் சங்கத்திலும் லோட்டஸ் மன்றத்திலும் அவர்களின் செயல்பாடுகள் அம்முன்னேற்றத்திற்குப் பேருதவியாக அமைந்தன.

ஒன்றிணைந்த மன்றங்கள்

ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது (1942-45) லோட்டஸ் மன்றமும் மாதர் சங்கமும் செயலற்ற நிலையில் இருந்தன. அமைதி திரும்பியதும் அமைப்புகள் மீண்டும் தங்கள் சமூக, பண்பாட்டு, நிதிதிரட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்தன. போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று ஜூன் 1950இல் சுதந்திர இந்தியாவின் புதிய பிரதமர் நேரு மீண்டும் சிங்கப்பூர் வந்தது.

அவ்வருகையின்போது நேருவின் மகள் இந்திரா காந்தி இரண்டு அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். தமது தாயை உதாரணமாகக் காட்டிச் சமூகத்தில் பெண்களின் முக்கியப் பங்கு பற்றிப் பேசினார். நேருவும் இவ்விழாவில் கலந்து கொண்டு பெண்களிடம் சுருக்கமாக உரையாற்றினார்.

போருக்குப் பிறகு பல பெண்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டதால், இரு அமைப்புகளுமே குறைந்த உறுப்பினர்களுடன் சிரமப்பட்டுக்கொண்டிருந்தன.

இந்திரா காந்தியின் பேச்சு இரு அமைப்புகளும் ஒன்றிணைவதற்குக் கட்டியங்கூறுவதாக அமைந்தது. அம்முடிவு 17 அக்டோபர் 1950 அன்று எடுக்கப்பட்டது. இணைவின் நோக்கங்கள் நடைமுறைத் தேவைகளாக இருந்தன. நிதர்சனத்தில், போருக்குப் பிறகு பல பெண்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டதால், இரு அமைப்புகளுமே குறைந்த உறுப்பினர்களுடன் சிரமப்பட்டுக்கொண்டிருந்தன. நிறுவன உறுப்பினர்களும் மூப்படைந்துவிட்டபடியால் இரு அமைப்புகளும் தொடர்ந்து செயல்பட அவற்றை ஒன்றிணைக்க வேண்டியிருந்தது.

நேரு விரும்பியபடி, மறைந்த அவரது மனைவி கமலாவின் நினைவாக, புதிய ஒருங்கிணைந்த மன்றத்திற்குக் கமலா மன்றம் (Kamala Club) என்று பெயரிடப்பட்டது. ஆனால் தூதர் கோபிநாத் பிள்ளை – நேரு பேசிய கூட்டத்தில் தூதரின் தாயார் பங்கேற்றிருந்தார் – மன்றத்திற்குப் பெயர் வைப்பது பற்றி நேரு எதுவும் ஆலோசனை கூறவில்லை என்றார். எப்படியானாலும் நேரு தொடர்பான பெயர் வைப்பதில் உறுப்பினர்களிடையே ஒரு நிறைவு இருந்தது.

கமலா மன்றம் அதிகாரபூர்வமாக 21 மே 1951 அன்று திறக்கப்பட்டது. அன்றிலிருந்து எண்ணற்ற இந்தியப் பெண்களுக்குத் தம்மைப்போன்றே சிந்திக்கும் பிற பெண்களுடன் நல்ல நட்புறவை வளர்த்துக்கொள்ள மன்றம் உதவியிருக்கிறது. பெயருக்கேற்பத் தாமரைபோல விரிந்து மலர்ந்த கமலா மன்றம் இன்றும் தொடர்ந்து மணம்பரப்பி வருகிறது.