கருப்பும் சிவப்பும் அழகோ அழகு

சிவானந்தம் நீலகண்டன்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2022) வெளியான சிறிய சிறார் நூலொன்று கவனத்தைக் கவர்ந்தது. ஊடுபனுவலாக (interactive book) கெட்டி அட்டையுடனும் அழகிய படங்களுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கும் இப்புத்தகம் சிறார் நூலென்றாலும் பெரியவர்களுக்கும் நிறைய வேலைகொடுக்கிறது. அது ‘கருப்பும் சிவப்பும் அழகோ அழகு’ என்ற ஜெயசுதா சமுத்திரனின் புத்தகம். தேவையான, ஆழமான சிந்தனைகளை விதைப்பதற்கு நூற்றுக்கணக்கான பக்கங்களும் சிக்கலான வாக்கியங்களும் வேண்டியதில்லை என்பதை இச்சிறு நூலின் குறுவரிகள் காட்டுகின்றன.

தோலின் நிறம் என்றதும், பல்லினச் சமூகத்தில், இனங்களுக்கிடையிலான ஒப்பீடும் அதுசார்ந்த கெட்டிதட்டிப்போன பார்வைகளும் சிக்கல்களுமே உடனடியாக நினைவிற்கும் விவாதத்திற்கும் வருகின்றன. ஆனால் நம் சமூகத்திற்குள்ளேயே கறுப்பு-சிவப்பு சொல்லாடல்கள் காலகாலமாக இருந்து வருகின்றன. அவை பிஞ்சு உள்ளங்களிலும் இயல்பாகப் பதிந்துபோகின்றன. அவற்றுள் சிலவற்றை எளிமையாகப் பிள்ளைகளுடன் விவாதிக்க வாய்ப்பளிக்கும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெயிலில் விளையாண்டால் கறுத்துப்போவாய், கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாய், கறுப்பு நிறத்துக்கு குறிப்பிட்ட வண்ண உடைகள்தாம் பொருந்தும் என்றெல்லாம் தொடர்ந்து குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் கறுப்பு நிறம் சார்ந்த கருத்துகள் பிள்ளைகளை வந்தடைகின்றன. அவை பொதுவாகக் கறுப்பு குறித்தத் தாழ்வுனர்ச்சியைக் காலப்போக்கில் நம் பிள்ளைகளுக்கு அளிக்கின்றன என்பதை நூல் கவனப்படுத்தியுள்ளது.

கறுப்பு குறித்த சமூகத்தின் மனப்பாங்கை உடனடியாக மாற்றிவிட இயலாது என்றாலும் தோலின் நிறம் குறித்த அறிவியல் உண்மைகள் அத்தகைய பேச்சுகளை எதிர்கொள்ள உதவுகின்றன. மெலனின் நிறமி, புற ஊதாக் கதிர்களின் தாக்கம், பரிணாம வளர்ச்சி போன்ற அறிவியல் கருத்துகள் சிறாருக்கேற்ப எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

முத்தாய்ப்பாக, ‘நான் யார்?’, ‘என்னை நிலை நாட்டும் வேர்கள்’ ஆகிய இறுதிப்பக்கங்களில் தன்னைக் குறித்த உண்மைகளையும் கற்பனைகளையும் பிஞ்சு உள்ளங்கள் கண்டெடுக்க இடமளித்துள்ளது பாராட்டுக்குரியது. வெறுமே வாசிக்கச் செய்யும் நோக்கிலிருந்து வேறுபட்டு சிறாரும் பெரியவரும் ஒன்றிணைந்து யோசிக்கச் செய்யும் நூலாக மிளிர்ந்திருப்பதே இப்புத்தகத்தின் சிறப்பு.

ஜெயசுதாவின் எண்ணங்களுக்கு ஈடுகொடுக்கும் வண்ணங்களை விளக்கப்படம் வழியாக அளித்துள்ள ஸ்டுடியோ29 நிறுவனமும் வரைகலை ஓவியர் ஷகினா பிரிஸ்காவும் பாராட்டுக்குரியவர்கள்.

‘செல்லமே’ புத்தக நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது. புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் இன்னொரு வெளியீடான ‘நான் ஒரு..’ புத்தகமும் காலப்பொருத்தமானதே. இந்தியச் சமூகம் மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர் தொழில்களை மட்டுமே மதித்துப் பிற தொழில்களைப் புறந்தள்ளும் மனப்போக்கில் மாற்றம் கொண்டுவரும் சிறார் ஊடுபனுவல். உஷா குமரனும் ரஸ்மியா பானுவும் எழுதியுள்ள இந்நூலுக்கு மித்துலா பழனிவேல் விளக்கப்படம் போட்டுள்ளார்.