சிங்கப்பூர்ப் பெண்டிரின் சீரிய வளர்ச்சி

நித்திஷ் செந்தூர்

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2021ஆம் ஆண்டை, சிங்கப்பூர்ப் பெண்டிரைக் கொண்டாடும் (Celebrating SG Women) ஆண்டாக அர்ப்பணித்தது.

நம் நாட்டின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்து நமது சிங்கப்பூர்ப் பெண்களின் வளர்ச்சியும் சாதனைகளும் சமுதாயத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் மேம்படுத்த உதவியுள்ளன. தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் எனப் பல்வேறு பொறுப்புகளை மகளிர் ஏற்றுள்ளனர். அவர்கள் நமது இல்லங்கள், பள்ளிகள், வேலையிடங்கள், சமூகங்கள் ஆகியவற்றை வடிவமைத்துள்ளனர். பெண்களின் பங்களிப்பு நமது சிங்கப்பூர்க் கதைக்கு இன்றியமையாதது, மதிக்கப்படவேண்டியது.

அரசாங்கம், 2021ஆம் ஆண்டில், சிங்கப்பூர்ப் பெண்களின் மேம்பாடு குறித்த கலந்துரையாடல்களை நிறைவுசெய்தது. ஓராண்டுக் காலம் நாடுதழுவி நடைபெற்ற 160க்கும் அதிகமான கலந்துரையாடல்களில் கிட்டத்தட்ட 6,000 பேர் பங்கேற்றனர். பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், மேம்படுத்தல், ஆதரவளித்தல் ஆகியவற்றைக் குறித்த தற்போதைய முயற்சிகளைப் பற்றி கலந்துரையாடல்களில் அலசி ஆராயப்பட்டன. அதன்மூலம் திரட்டப்பட்ட கருத்துகளும் யோசனைகளும் வெள்ளையறிக்கையாகத் தொகுக்கப்பட்டன. சிங்கப்பூர்ப் பெண்கள் மேம்பாடு குறித்த வெள்ளையறிக்கை 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

வெள்ளையறிக்கையை வாசிக்க விரைவுத் தகவல் குறியீட்டை வருடவும்

அரசாங்கமும் சமுதாயமும் பங்காளிகளாகப் பணியாற்றும் 25 கூட்டுச் செயல்திட்டங்கள் வெள்ளையறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இன்னும் நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான பார்வையை வெள்ளையறிக்கை பிரதிபலிக்கிறது. அதில் ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் என்றும் இருபாலினரும் தங்கள் கனவுகளைச் சுதந்திரமாகவும் முழுமையாகவும் அடைய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மார்ச் மாதம், வெள்ளையறிக்கை வெளியிடப்பட்ட ஓராண்டு நிறைவைக் குறிக்கிறது. ஓராண்டுக் காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைத்துள்ளோம். குறிப்பாக வேலையிடத்தில் சம வாய்ப்புகள், பராமரிப்பாளர்களுக்குக் கூடுதல் அங்கீகாரமும் ஆதரவும், வன்முறை, தீங்கு ஆகியவற்றுக்கு எதிராகப் பாதுகாப்பு ஆகிய அம்சங்களைச் சொல்லலாம்.

இன்னும் செல்லவேண்டிய தூரம் அதிகம். ஆயினும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நெடிய தூரத்தை நொடிப் பொழுதில் நெருங்கிவிடலாம்.

சிங்கப்பூர்ப் பெண்களைக் கொண்டாடுவோம்! அவர்களது பங்களிப்பைப் போற்றுவோம்!

தலைமைத்துவத்திலும் அதிகாரத்திலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளில் பெண்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் சுமார் 25 விழுக்காட்டிலிருந்து ஏறத்தாழ 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பெண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

(ஆதாரம்: சிங்கப்பூர் நாடாளுமன்றம்)
(ஆதாரம்: பிரதமர் அலுவலகம்)
(ஆதாரம்: உச்ச நீதிமன்றம்)

சிங்கப்பூரில் பெண்கள் மேம்பாட்டுக்கு உதவிய சில முக்கிய மைல்கற்கள்

1959: அனைத்துப் பெண்கள் தேர்தலில் வாக்களித்தனர்; ஐவர் சட்டமன்றத்தில் இடம்பெற்றனர்

1960: அனைத்துப் பிள்ளைகளுக்கும் இன, சமய, பாலின பேதமின்றி இலவசத் தொடக்கநிலைக் கல்வி

1961: மாதர் சாசனம் இயற்றப்பட்டது; திருமணத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சட்டபூர்வ சமநிலை சாத்தியமாகியது

1964: தீவெங்கும் மகப்பேறு, குழந்தை சுகாதார மருந்தகங்கள் நிறுவப்பட்டன

1968: வேலை நியமனச் சட்டம் இயற்றப்பட்டது

1978: உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க குடும்ப சேவை நிலையம் முதல்முறையாக நிறுவப்பட்டது

1980: சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றம் உருவாக்கப்பட்டது

1994: உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக லாய் சியு சுயூ (Lai Siu Chiu) பதவி ஏற்றார்

2000: கட்டாயக் கல்விச் சட்டம் இயற்றப்பட்டது; சிங்கப்பூர்க் குடியுரிமையுள்ள பிள்ளைகளுக்குத் தொடக்கநிலைக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது

2001: சிங்கப்பூரர்கள் குடும்பங்களை ஆரம்பிக்கவும் வளர்க்கவும் திருமண, மகப்பேறு தொகுப்புத்திட்டம் அறிமுகம் கண்டது; காலப்போக்கில் படிப்படியாக இந்தத் தொகுப்புத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது

2009: திருவாட்டி லிம் வீ ஹுவா (Lim Hwee Hua) முதல் பெண் அமைச்சராகப் பொறுப்பேற்றார்

2011: பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு நிறுவப்பட்டது

2017: திருவாட்டி ஹலிமா யாக்கோப் குடியரசின் முதல் பெண் அதிபராகப் பதவி ஏற்றார். அவர் நாட்டின் முதல் பெண் நாடாளுமன்ற நாயகராக 2013ஆம் ஆண்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

2020: சிங்கப்பூர்ப் பெண்கள் மேம்பாடு குறித்த கலந்துரையாடல்கள் தொடங்கின

2021: சிங்கப்பூர்ப் பெண்களைக் கொண்டாடும் ஆண்டாக அறிவிக்கப்பட்டது

2022: சிங்கப்பூர்ப் பெண்கள் மேம்பாடு குறித்த வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டது.