மொழிக்கற்றல் குறைபாட்டை மீறிவென்ற ஜரீன்!

ரவி சிங்காரம்

கரடுமுரடான வாழ்க்கைப் பாதையின் ஒவ்வோர் அடியிலும் போராடிப் பயணித்து, சாதித்துக் காட்டியுள்ளார் ஜரீன் பைரோஸ். அவர் எதிர்கொண்ட சோதனைகளும் அவற்றைச் சமாளித்து அவர் எட்டிய சாதனைகளும் பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடியவை.

‘டிஸ்லெக்சியா’ எனப்படும் மொழிக்கற்றல் குறைபாடு கொண்டிருக்கும் ஜரீன் அம்மாபெரும் சவாலைச் சமாளித்து, அடுத்த மாதம் (ஜூலை 2023), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆனர்ஸ் பட்டம் பெறவிருக்கிறார். இவரது கல்விப் பயணம் சுலபமானதல்ல.

சிறுவயதிலிருந்தே, மொழிக்கற்றல் குறைபாடு காரணமாக, மொழிப் பாடங்களில் ஜரீன் மிகவும் சிரமப்பட்டார். எழுத்துகளை முறைப்படுத்துதல், கடினமான சொற்களை நினைவுகூருதல், மொழிக்கூறுகளைப் புரிந்துகொள்ளுதல், மனத்தில் பதியவைத்தல் போன்ற பல கற்றல் படிநிலைகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்.

அவருக்கு எவ்வாறு உதவுவது எனவும் எவருக்கும் புலப்படவில்லை. விளைவாக, அவர் அறியாமலேயே, மொழியில் தாழ்வு மனப்பான்மை அவருக்குள் வேரூன்றியது.

அன்று அவருக்கும் அவரது ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் அவருடைய மொழிக்கற்றல் குறைபாடு குறித்துத் தெரியவில்லை. இன்றுள்ள அளவுக்கு டிஸ்லெக்சியா குறித்த விழிப்புணர்வும் பொதுவாக அன்று குறைவே. அதனால், அவருக்கு எவ்வாறு உதவுவது எனவும் எவருக்கும் புலப்படவில்லை. விளைவாக, அவர் அறியாமலேயே, மொழியில் தாழ்வு மனப்பான்மை அவருக்குள் வேரூன்றியது.

அதனால், தொடக்கப்பள்ளியில், அப்போதிருந்த தரநிலைப்பிரிவுகளுள் (EM1, EM2, EM3) ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வேளையில் தன்னால் EM1, EM2 தாக்குப்பிடிக்க முடியாது என்று அஞ்சி, EM3யைத் தேர்ந்தெடுத்தார். அதன்பின்பு, பல தருணங்களில் அவர் EM1 அல்லது EM2க்கு சென்றிருக்கலாமோ என்று ஏங்கியிருக்கிறார்.

டிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு மொழி சார்ந்தது என்பதால் கணக்கு, அறிவியல், ஓவியம், இசைக்கலைகளில் அவரது திறன் பாதிக்கப்படவில்லை. ஆனால், தரநிலைப் பிரிவின்படி ஒன்று அனைத்துப் பாடங்களும் கடினமாக இருக்கும் அல்லது அனைத்துமே எளிமையாக இருக்கும். ஆகவே EM3யில் மொழிப்பாடங்கள் ஜரீனின் கற்றல்திறனுக்கு ஏற்ப அமைந்திருந்தபோதும் கணக்கு, அறிவியல் பாடங்களில் தன் முழு ஆற்றலையும் வெளிக்காட்ட இயலாமல்போவது அவருக்கு வேதனை தந்தது.

உயர்நிலைக் கல்விக்கு தேசியப் பல்கலைக்கழகத்தின் கணக்கு, அறிவியல் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்ற இலட்சியம் அவருக்குள் ஏற்பட்டது. ஆனால், அப்பள்ளியில் விரைவுநிலை மட்டுமே இருந்ததால் அதற்கு உகந்த மொழியாற்றல் இல்லாமல் சமாளிக்க முடியுமா, அப்பள்ளிக்குள் நுழைவதற்கான தேவைகள் மிகவும் கடினமாக இருக்கும்போது ஒரு EM3 மாணவரால் நுழையமுடியுமா, என சந்தேகப்பட்டார்.

உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கே சுமார் 150 வெள்ளி கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது

ஆகவே PSLE முடிவுகளுக்குப் பிறகு, உயர்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பப் படிவத்தில் இருந்த ஐந்து வாய்ப்புகளில், எட்டாக்கனிக்கு ஆசைப்பட்டு ஒன்றை வீணாக்கவேண்டாம் என்று கருதி இடம் கிடைக்கக்கூடிய ஐந்து பள்ளிகளையே தேர்ந்தெடுத்தார்.

ஜரீனுக்கு ஓவியக் கலையாற்றலும் இருப்பது தொடக்கப்பள்ளியின் கலை இணைப்பாட நடவடிக்கைகளின்வழி புலப்பட்டது. அவர் ஈராண்டுகளுக்குத் தன் பள்ளிக் கலைச் சங்கத்தில் சிறந்த உறுப்பினர், தலைவர் என்ற விருதுகளைப் பெற்றார். சிங்கப்பூர் இளையர் விழாவில் அவரது குழு அச்சடித்த ‘பாட்டிக்’ (Batik) தங்கப் பதக்கத்தை வென்றது. இன்றும் உட்லண்ட்ஸ் தொடக்கப்பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அதனால், அவரது ஆசிரியை ஜெயா நன்யாங் நுண்கலைக் கழகத்தின் உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆலோசனை அளித்தார்.

ஆனால், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கே சுமார் 150 வெள்ளி கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது. ஜரீனுக்கு அக்கா, அண்ணன், தங்கை ஆகிய மூன்று உடன்பிறந்தோர் உண்டு. குடும்பப் பொருளாதார நிலையைக் கருதி அவரது பெற்றோரும் அவரை நன்கு சிந்தித்து முடிவெடுக்க வலியுறுத்தினர். “பெற்றோர் உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்க ஊக்குவித்திருக்கலாமே, எனக்கு இது வேண்டும் என்று நான் இன்னும் கொஞ்சம் உறுதியாக இருந்திருக்கலாமே” என்றெல்லாம் ஏக்கங்கள் ஜரீன் மனதில் இன்றுவரை இருக்கின்றன.

இறுதியில், தன் அண்ணன் படித்த, உட்லண்ட்ஸ் வட்டாரத்திலுள்ள ரிவர்சைட் உயர்நிலைப் பள்ளியிலேயே வழக்கநிலையில் (தொழில்நுட்பம்) ஜரீன் சேர்ந்தார். அப்பள்ளி நடனத்திற்குக் கொடுத்த அங்கீகாரத்தால் சீன நாட்டுப்புற மற்றும் இந்திய நடனக்குழுக்களில் சேர்ந்து SYF விழாவில் தங்கப்பதக்கமும் வென்றார்.

உயர்நிலை ஒன்றில் படிக்கும்போது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனை வந்தது. ஜரீனின் தந்தை அவரது மொழிச் சிக்கல்களின் காரணத்தை ஊகித்து டிஸ்லெக்சியா பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். இன்றுவரை இதற்குத் தன் தந்தைக்கு ஜரீன் நன்றிகூறுகிறார். தன் கல்விச் சிக்கலின் காரணம் மொழிக்கற்றல் குறைபாடு என்று தெரிந்தவுடன் ஜரீனுக்குத் தன்னம்பிக்கை ஏற்பட்டது. தன்னையே மேலும் புரிந்துணர்வோடு ஆராய்ந்து, தன் வளர்ச்சியில், சில விஷயங்களில் சற்று மெதுவாகச் செயல்பட வேண்டியிருப்பினும், முயன்று கவனம் செலுத்த விழைந்தார்.

டிஸ்லெக்சியா ஆங்கிலப் பாடம் அடிப்படையிலிருந்து சொல்லிக்கொடுத்தது. ஒவ்வொரு வகுப்புக்கு முன்பும் முன்பு படித்ததை நினைவுகூரவும் செய்தது. அதனால் ஜரீனின் கண்ணோட்டம் மாறியது.

டிஸ்லெக்சியா வகுப்புகளின்வழி தகுந்த ஆதரவைப் பெற்று மொழியாற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. டிஸ்லெக்சியா ஆங்கிலப் பாடம் அடிப்படையிலிருந்து சொல்லிக்கொடுத்தது. ஒவ்வொரு வகுப்புக்கு முன்பும் முன்பு படித்ததை நினைவுகூரவும் செய்தது. அதனால் ஜரீனின் கண்ணோட்டம் மாறியது. அதன்பிறகு அவருக்கு ஆங்கிலக் கட்டமைப்புகளை மனனம் செய்யத் தேவையிருக்கவில்லை – கணிதத்தைப் போலவே ஆங்கிலத்தையும் புரிந்து கற்க அம்மாற்றம் வழிவகுத்தது.

ஆனால், டிஸ்லெக்ஸியா வகுப்புகளை அவரால் முடிக்க இயலவில்லை. ஒரு வகுப்பில் மாணவர்கள் அனைவரும் ஒன்றாகவே அடுத்த நிலைக்குச் செல்லவேண்டும் என்ற விதிமுறையால் மெதுவாகப் புரிந்துகொள்ளும் சக மாணவர்களுக்குக் காத்திருக்க வேண்டியிருந்தது. அவருடைய டிஸ்லெக்சியா வகுப்பு மேல்நிலைக்குச் செல்வதற்குமுன்முன் அவரது உயர்நிலைப் பள்ளி முடிந்துவிட்டது. அதனால் கல்வி அமைச்சிடம் அவர் டிஸ்லெக்சியா வகுப்புகளுக்குப் பெறக்கூடிய மானியமும் முடிந்துபோனது.

ஒவ்வொரு தவணைக்கும் 300 வெள்ளி கட்டுவது தன் குடும்பத்திற்கு மிகப்பெரிய செலவாக இருக்கும் என எண்ணி தனக்கு மிகவும் தேவையாக இருந்த டிஸ்லெக்சியா வகுப்புகளை ஜரீன் நிறுத்தினார். அவருக்குப் பள்ளியிலேயே பியானோ வாசிக்க ஓர் ஆசிரியர் கற்றுத் தந்தார். ஆனால், அந்த ஆசிரியரும் பள்ளியை விட்டுச் சில மாதங்களில் சென்றுவிட்டார்.

அதிர்ஷடவசமாக, ஜரீனின் பள்ளி உயர்நிலை மூன்றில், வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) கணித வகுப்பைத் தொழில்நுட்பநிலை மாணவர்களுக்கும் வழங்கத் தொடங்கியது. ஜரீன் மகிழ்ச்சியாக அப்பாடங்களை எடுத்து சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். அதுபோன்று அறிவியலும் இருந்திருந்தால் அவர் அளவற்ற மகிழ்ச்சியடைந்திருப்பார். மொழிப் பாடங்கள் தவிர மற்ற அனைத்திலும் ‘ஏ’ பெற்று சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

உயர்நிலைப் பள்ளி முடித்ததும் கலை சார்ந்த கட்டட வடிவமைப்பாளர், அல்லது விலங்கு மருத்துவராகும் சிறுவயது கனவை நனவாக்கலாமா என்று சிந்தித்தார். இருப்பினும், தன் கணிதம், அறிவியல் ஆற்றல், வேலை வாய்ப்புகளையும் கருதி, தன் அண்ணனின் ஆலோசனைப்படி தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (மேற்கு) மின், மின்னணுப் பொறியியல் (கணினி வலையமைப்பு) படிக்க முடிவெடுத்தார்.

அன்றாடம் நூல்களைப் படித்தார். சொற்களையும் வாக்கிய அமைப்புகளையும் சன்னஞ்சன்னமாகப் பிரித்துப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொண்டார்.

தொழில்நுட்பக் கல்விக் கழகம், அதுவும் பொறியியல், ஒரு புதிய உலகமாகவே இருந்தது. இதற்கு பழக்கப்பட அவர் அன்றாடம் நூல்களைப் படித்தார். ஒவ்வொரு புரியாத சொல்லின் அர்த்தத்தையும் இணையத்தில் தேடினார். தெரியாத சொற்களையும் வாக்கிய அமைப்புகளையும் சன்னஞ்சன்னமாகப் பிரித்துப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொண்டார்.

எவ்வளவு அடிப்படையான விஷயமாக இருந்தாலும் புரியவில்லையெனில் மற்ற மாணவர்கள் என்ன நினைப்பார்கள் என வெட்கப்படாமல், துணிச்சலாக ஆசிரியரிடம் வினவிக் கற்றுக்கொண்டார். அரும்பாடு பட்டதன் விளைவாக CDC & CCC – ITE உபகாரச் சம்பளம், ஈராண்டுகளுக்கும் இயக்குநர் பட்டியல், வெள்ளி நட்சத்திர விருது, எடுசேவ் (EduSave), ஈகல்ஸ் (EAGLES) போன்ற பல விருதுகளைப் பெற்றார். தேசிய இளையர் சாதனை விருதை அதிபர் டோனி டானிடமிருந்து பெற்றார்.

பின்பு, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின், மின்னணுப் பொறியியலில் பட்டயப் படிப்பை மேற்கொண்டார். அங்கு தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்கள் அதே வகுப்பில் சேர்க்கப்பட்டதால், பழக்கமான சூழலில் கல்வி அனுபவம் மேலும் சீராக இருந்தது. அவரது ஒரே குறிக்கோள் படிப்பைச் சிறப்பாக முடித்து வேலையில் சேரவேண்டுமென்பதே. இங்கும் டான் கா கீ இளம் கண்டுபிடிப்பாளர், இணைப்பாட நடவடிக்கைகளில் தங்கம், இறுதியாண்டுத் திட்டவேலையில் தங்கம் முதலான விருதுகளை வென்றார்.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் 3.557/4 (சுமார் 89 விழுக்காடு) என்ற மதிப்பெண்களோடு சிறப்புத் தேர்ச்சியடைந்தார். சிங்கப்பூர் முழுவதுமான விரிவலைக் கட்டமைப்பை (broadband) நிர்வகிக்கும் ‘நெட்லிங்க்’ நிறுவனத்தில் வடிவமைப்புப் பொறியாளராக அவருக்கு உபகாரச் சம்பளத்தோடு கூடிய வேலை கிடைத்தது.

அவருக்குக் கல்விச்சூழல் மிகவும் பிடித்திருந்ததாலும் வேலையில் மேலும் மேம்படவும் ஈராண்டு வேலைசெய்த பிறகு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொள்ள முடிவெடுத்தார் ஜரீன். தெரிந்த ஒரு நண்பரும் தன்னோடு சேர்ந்து அதே பட்டப்படிப்பை மேற்கொண்டு உதவியாக இருப்பார் என்று முதலில் எதிர்பார்த்திருந்த ஜரீனுக்குச் சற்று ஏமாற்றமே. காரணம், ஜரீன் வேலை செய்துகொண்டே பகுதிநேர மாணவராகப் படித்ததால் அவரது தோழரின் முழு நேரப் பாடநேரங்கள் முற்றிலும் மாறுபட்டன.

பகுதிநேரப் பட்டப்படிப்பு ஜரீனுக்குக் கடினமாகத்தான் இருந்தது. அன்றாடம் உட்லண்ட்ஸிலிருந்து பிடோக்கிற்கு வேலைக்கும், பின்பு பயனியருக்குப் பகுதிநேர வகுப்புகளுக்கும் அவர் பயணிக்க வேண்டியிருந்தது. அதனால், செப்டம்பர் 2019இல் வேலையை விட்டுவிட்டுப் படிப்பிலும், பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே வேலை தேடுவதிலும் கவனம் செலுத்தினார். அவரது முயற்சி வீண்போகவில்லை; தேசிய கல்விக் கழகத்தில் வேலை கிடைத்தது.

பெரிய, காற்றோட்டமுள்ள இடங்களிலும் இயற்கை வெளிச்சத்திலும் படித்துப் பழகிய ஜரீனுக்கு வீட்டில் அடைந்து படிப்பது ஒத்துவரவில்லை.

ஆனால், கொவிட் பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளால் வீட்டிலேயே இருந்து ஜுலை 2020க்குப் பின்னர்தான் அவரால் வேலையில் அமர முடிந்தது. தொழில்நுட்ப நிர்வாகியாக இப்புதிய வேலையையும் படிப்பையும் சரிசமமாக சமாளிக்க அவரால் முடிந்தது.
பெருந்தொற்று நெருக்கடியினால் வீட்டிலிருந்து படிப்பது அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. உயர்நிலைப் பள்ளி முதல் பெரிய, காற்றோட்டமுள்ள இடங்களிலும் இயற்கை வெளிச்சத்திலும் படித்துப் பழகிய ஜரீனுக்கு வீட்டில் அடைந்து படிப்பது ஒத்துவரவில்லை.

இருப்பினும் படிப்பறை இல்லாத, இரைச்சல்மிக்க வீட்டுச் சூழலிலும் படிக்கக் கற்றுக் கொண்டார். வரவேற்பறையிலேயே படித்துவிட்டு அங்கேயே தூங்கியும் விடுவார்.

கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, அவர் வீட்டின் அருகே இருந்த ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்திற்குச் சென்று படிக்க முனைந்தார், ஆனால் அதன் மாணவராக இல்லாததால் படிக்க அனுமதிக்கப்படவில்லை. உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்திலும் இரவு 9 மணி வரையே படிக்க முடிந்தது.

சில சமயங்களில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலை நூலகத்தில் இரவு 10.30 மணி வரை படிக்க முயற்சித்தார். தன் அண்ணன் வீடு மாறியபின், கல்லூரி வாழ்வின் மூன்றாம் ஆண்டில், ஜரீனின் 26 வயதில் அவருக்கு ஒரு தனியறை கிடைத்தது. அப்போதும் அமைதியான, படிப்பிற்கு ஏதுவான சூழல் நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணி வரையாகவே அமைந்தது.

கல்லூரியின் கடைசி ஆண்டில் அவர் பாறை ஏறுதல், தமிழ் இலக்கிய மன்றம் முதலான இணைப்பாட நடவடிக்கைகளில் சேர்ந்து ஒத்த சிந்தனை உள்ளோருடன் பழக வாய்ப்பு ஏற்பட்டது. கோலாலம்பூருக்குச் சென்று பாறை ஏறும் வாய்ப்புகளும் கிட்டின. தன் கல்விப் பயணத்தின்வழி, ஒன்றைப் புரியாமல் படிக்கும்போது ஏற்படும் வலியை நன்கு உணர்ந்த ஜரீன், இன்று சக மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களது கல்விப் பயணத்தைச் சீராக்க விரும்புகிறார்.

கற்றல் குறைபாடு குறித்த எந்த அறிதலும் புரிதலும் இல்லாத ஒரு புள்ளியில் தொடங்கி, கரடுமுரடான கல்வி, வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்ட ஜரீன்

மொழிக்கற்றல் குறைபாடு குறித்த எந்த அறிதலும் புரிதலும் இல்லாத ஒரு புள்ளியில் தொடங்கி, கரடுமுரடான கல்வி, வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்ட ஜரீன், தன் 27ஆம் வயதில், வரும் ஜூலை மாதம் பட்டப்படிப்பை முடிக்கவிருக்கிறார். சிறுவயதிலிருந்தே தன் வாழ்வின் முடிவுகளைச் சுயமாக எடுத்து, அவற்றின் நன்மைகளையும் தீமைகளையும் அனுபவித்து, தன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கற்றுக்கொண்டு இன்று வெற்றியாளராக நிமிர்ந்து நிற்கிறார் ஜரீன்.

தன் கலையார்வத்தை முழுநேர வேலையாக மாற்ற முடியாவிடினும், தன் ஆற்றலைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பதில் தணியாத ஆர்வம்கொண்ட ஜரீன், இன்றுவரை தொடர்ந்து ஓவியக்கலையில் ஈடுபட்டுவருகிறார்.

வாழ்வில் பல விஷயங்கள் நம் கைகளில் இல்லை. ஆயினும் நாம் நம்மைப் பற்றியே நன்கு புரிந்துகொண்டு, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, நம் பலவீனங்களை நிவர்த்திசெய்ய முயற்சி செய்தால் பல சிகரங்களை எட்டிப் பிடிக்கலாம் என்பதற்கு ஜரீன் நல்ல எடுத்துக்காட்டு. இரும்பு இதயத்தைக் கொண்டு படிப்படியாக முன்னேறியுள்ள இச்சாதனைப் பெண்மணிக்கு நம் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!