உதிரிப்பூக்கள்

0
294
மஹேஷ்

லீ குவான் யூ நூற்றாண்டு நினைவு நாணயம்

சிங்கையின் சிற்பி எனப் போற்றப்படும் லீ குவான் யூவின் 100ஆவது பிறந்தநாள் நினைவாகத் தங்க வண்ணத்தில் அலுமினியம்-வெண்கலம் கலப்பிலான 10 வெள்ளிக் காசை சிங்கை நாணய வாரியம் வெளியிடவிருக்கிறது. நாட்டின் நீர் மேலாண்மைக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அந்தக் காசின் ஒரு புறம் லீ குவான் யூ, மரினா பராஜ் உருவங்கள் இருக்கும். அதோடு மத்திய வர்த்தக வட்டாரம், தேசிய அரும்பொருளகம், ஃபுல்லர்டன் ஹோட்டல் போன்றவற்றின் உருவங்களும் இருக்கும்.

கழிவுகளிலிருந்து விமான எரிபொருள்!

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், விலங்குக் கொழுப்புக் கழிவு, தாவர எண்ணெய்க் கழிவு, எத்தனால் தயாரிப்பில் கிடைக்கும் சோள எண்ணெய் போன்ற கழிவுப் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் நீடித்த நிலைத்தன்மையுள்ள விமான எரிபொருளை (Sustainable Aviation Fuel – SAF) உற்பத்தி செய்யும் ஃபின்லாந்தைச் சேர்ந்த ‘நெஸ்டே’ நிறுவனம் சிங்கப்பூரில் துவாஸில் உள்ள தனது சுத்திகரிப்பு ஆலையின் உற்பத்தித் திறனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு 1.3 மில்லியன் டன்களாக இருந்த உற்பத்தி தற்போது 2.6 மில்லியன் டன்களாக அதிகரிக்கும். ஆலையின் அளவும் 19 ஹெக்டேரில் இருந்து தற்போது 45 ஹெக்டேர் பரப்பில் விரிவாக்கம் கண்டுள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை 120இலிருந்து 300 ஆக உயர்ந்துள்ளது. சாங்கி விமான நிலையத்துடன் இணைந்து பல விமான நிறுவனங்களுக்கு இந்த SAF எரிபொருளை விற்பனை செய்யவும் ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன.

பழையன கழிதலும்…

சிங்போஸ்ட் 1957இல் திறக்கப்பட்ட தனது அலெக்ஸாண்டிரா அஞ்சல் நிலையத்தை 66 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 17 அன்று நிரந்தரமாக மூட இருக்கிறது. சிங்கையின் அடையாளங்களில் ஒன்றான இந்தக் கட்டடத்தின் முடிவு பலருக்கு வருத்தத்தை அளித்துள்ளது. வீவக வீடுகளின் தேவைகள் அதிகமாக இருப்பதாலும், நிலப்பற்றாக்குறையாலும் தற்போது பெரும்பாலான அஞ்சல் சேவைகள் இணையத்தில் நடைபெறுவதாலும் இந்த முடிவு. கிட்டத்தட்ட 1500 வீடுகளுக்கான இடம் கிடைக்கும். சிக்லாப், சிம்பாங் பிடோக் போன்ற வெகுசில தனி அஞ்சல் நிலையங்களே தற்போது உள்ளன. வளர்ந்து வரும் நாட்டின் நிலத்தேவைகளுக்கு வழிவிடவேண்டிய கட்டாயத்தில் உள்ள பழைய கட்டடங்களுக்கு வேறு வழி இல்லை என்றுதான் தோன்றுகிறது.

உடனடி மின்சார உற்பத்தி நிலையம்

சிங்கையின் எதிர்கால மின்சக்தித் தேவையையைக் கருத்தில்கொண்டு 680 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட மின்னுற்பத்தி நிலையம் ஒன்று ஜுரோங் தீவில் அமையவிருக்கிறது. இந்த நிலையத்தில் 2025 மத்தியில் இயங்கவிருக்கும் இரண்டு 340 மெகாவாட் திறன் கொண்ட திறந்த சுழற்சி வாயு விசையாழி (Open-Cycle Gas Turbine, OCGT) இருக்கும். இயற்கை வாயு அல்லது டீசல் கொண்டு இயங்கும் இந்த இயந்திரங்கள் அவசரத் தேவைகளின்போது 10 நிமிடங்களுக்குள் தமது உச்ச உற்பத்தித் திறனை அடைந்துவிடும். தற்போது உள்ள இயந்திரங்கள் நீண்டகாலம் உழைத்துவிட்டபடியால் அவை தமது உச்ச உற்பத்தித் திறனை அடைய 12 மணி நேரத்திற்கும் கூடுதலாக எடுத்துக்கொள்கின்றன.