அகவையில் மூத்த அற்புத இளையர்கள்!

ரவி சிங்காரம்

இன்றைய இளையர்கள் பலருக்கும் அவர்களை ஒத்த வயதிலான நண்பர்கள் இருப்பது இயற்கையே. ஆனால், ஓர் இளையரின் உற்ற தோழர்கள் முதியோராக இருந்தால்? அப்படியும் இருப்பதுண்டு. எனக்கும் அத்தகைய சில அனுபவங்கள் உண்டு.

சிங்கைத் தமிழ்ச் சமூகத்தில், திருமதி.ராமாவைத் தெரியாதவர் குறைவு. கௌசல்யா தேவி ராமச்சந்திரா PBM (சுருக்கமாக திருமதி.ராமா) அதிர்ஷ்டவசமாக என் அண்டைவீட்டுக்காரர். கடந்த 30 ஆண்டுகளாக இவர் சமூக சேவையில் ஈடுபட்டுவந்துள்ளார். புக்கிட் பாஞ்சாங் இந்திய நற்பணிச் செயற்குழுவின் தலைவராகப் பல்லாண்டுகளாக இருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்; பெண்களை மட்டுமே கொண்டு இயங்கும் இச்செயற்குழுவை அமைத்துப் பெண்கள் பலருக்கும் முன்னோடி. வயது 82 என்றாலும் 22 வயது போலத் துருதுருவென்று செயலூக்கத்துடன் திகழ்ந்துவருபவர்.

குறைந்த வருமானங்கொண்ட குடும்பங்களுக்கும் முதியோருக்கும் அனாதைக் குழந்தைகளுக்கும் ஆசிரமக் குடியிருப்பாளர்களுக்கும் பற்பல உதவிகளைச் செய்துவந்துள்ளார். கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உணவுப் பொருள்களைக் கொண்ட ‘கேர்பேக்’ வழங்குவது, முதியோர் இல்லவாசிகளுடன் பேசுவது என அவரது பொதுத் தொண்டுகளின் பட்டியல் நீளமானது.

ஒவ்வொரு மாதமும் ஆலயத்திலிருந்து உணவை வசதி குறைந்தோருக்கும் முதியோருக்கும் வழங்கும் தன்னார்வலப் பணிகளில் என்னையும் சேர்த்துக்கொள்வார்.

ஒவ்வொரு மாதமும் ஆலயத்திலிருந்து உணவை வசதி குறைந்தோருக்கும் முதியோருக்கும் வழங்கும் தன்னார்வலப் பணிகளில் என்னையும் சேர்த்துக்கொள்வார். சமீபத்தில், சிண்டாவுடன் இணைந்து புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் வசிக்கும் வசதி குறைந்தோரின் தேவைகளை அறிய வீடுவீடாகச் சென்று நலம் விசாரித்து, உணவுப் பொருள்களை வழங்கும் ‘டோர் நோக்கிங்’ நடவடிக்கையையும் (DKE) முன்னின்று வழிநடத்தினார்.

கௌசல்யா தேவி ராமச்சந்திரா

எனக்குப் பள்ளிப் பருவத்திலிருந்தே ராமாவை நன்கு தெரியும். அவர் வீட்டிற்குக் கீழே காற்பந்து விளையாடும்போது எழும் இரைச்சலால் அண்டைவீட்டார் ஒரு சில சமயங்களில் காவல் அதிகாரிகளைக் கூப்பிடுவர். அப்பொழுதெல்லாம், எங்கள் எதிர்காலத்தைக் கருதி, காவலர்களிடம் “இம்முறை மன்னித்து விட்டுவிடுங்கள்” என்று எங்கள் சார்பாகப் பேசி எங்களைக் காப்பாற்றுவார். வாய்ப்புக் கிடைத்தால் அவருக்கு என்னால் முடிந்த உதவிகளைத் திருப்பிச் செய்யவேண்டும் என்ற நன்றியுணர்வு எனக்கு அப்போது ஏற்பட்டது. அவரது கண்காணிப்பிலும் நல்லாசிகளோடும் நான் தொடக்கநிலை, உயர்நிலை, கல்லூரி என என் கல்விப் பயணத்தை முடித்தேன்.

நான் தேசிய சேவையில் இருக்கும்போது எனக்குப் பல சிரமங்கள் ஏற்பட்டு வெளியாகிவிட நேர்ந்தபோது, எனக்காக அதிகாரிகளிடம் நிறையப் பரிந்துபேசினார், மேலும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டினார். பின்னாளில் வேலைதேடும் படலத்தின்போதும் பலரிடமும் எனக்காக வேலைவாய்ப்புகளைக் கேட்டார். என் தாய் இந்தியாவிற்குச் செல்லும்போதும் நான் இரவில் வேலை முடித்து வீடு திரும்பும்போதும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பலமுறை அறுசுவை உணவு சமைத்தும் கொடுத்துள்ளார்.

பொதுவாக அனைவர்மீதும் அளவுகடந்த அன்பு வைத்திருப்பவர். அவரைக் கண்டு உரையாடினாலே வாழ்வில் அத்தனை அரிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்!

ஒவ்வோர் அன்னையர் தினக் கொண்டாட்டங்களின்போதும் தாய்மார்கள் பலருக்கு, அவர்கள் பெறவேண்டிய அங்கீகாரத்தைச் சிறப்பாக வழங்கி கெளரவிக்கிறார். அவரது தொண்டூழியத்திற்குப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்; இனியும் பெறுவார். புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் ஒவ்வொரு வாரமும் மெதுநடையையும் ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்கும் இவர், துடிப்பான மூப்படைதலுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. கணினியைப் பயன்படுத்தவும் இவருக்குத் தெரியும். இவரது இளமைத் துள்ளலைக் காணும் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இவரைப் போன்று சமூக சேவை செய்யவேண்டும் என்ற ஊக்கமும் எனக்குள் ஒளிர்விடுகிறது.

எனக்கு இசைமீது, குறிப்பாகப் பாடலின்மீது, என்றுமே அலாதி ஆர்வம். ராமாவின் உந்துதலால் புக்கிட் பாஞ்சங் கரோக்கி (கருவி இசையுடன் சேர்ந்து பாடுதல்) குழுவில் சேர்ந்தேன். அதன்வழி வழி எனக்கு மற்றொரு மிக நெருங்கிய தோழர் கிடைத்தார். அவருக்கு வயது? 78!

நாகலிங்கம் வீரமுத்து (சுருக்கமாக திரு.லிங்கம்) ஒரு பிரபலமான தப்லா வாசிப்பாளர். ஃபெப்ரா, சங்கம் பாய்ஸ், மறுமலர்ச்சி ஆகிய இசைக்குழுக்களில் வாசித்துப் பரவலாக அறியப்பட்டவர். தாய்லந்து, மலேசியா, இந்தியா எனப் பன்னாடுகளிலும் “முருகையா” என்ற இவரது புனைப்பெயரைக் கூறினாலே இசையுலகைச் சார்ந்தோருக்கு நன்கு தெரியும்.

நாகலிங்கம் வீரமுத்து

பிரபல ‘வசந்தம் பாய்ஸ்’ குழுவினர் முகமது நூர், முகமது பஷீர், முகமது ரஃபி, பிரசித்தி பெற்ற இசைக்குழு ‘மறுமலர்ச்சி’யின் தலைவர் ரவிஷங்கர் அனைவருக்கும் குருவாக இருந்தவர். இவ்வளவு பிரசித்தி பெற்ற கலைஞர் எங்கள் சமூக நிலையக் கரோக்கி குழுவில் இடம்பெற்றது எனக்கு மட்டுமல்ல, எங்கள் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமே.

எங்கள் அனைவருக்கும் மேன்மேலும் சிறப்பாகப் பாடுவது எப்படி எனப் பல தருணங்களில் தன் அனுபவ ஆலோசனைகளை வழங்குவார். சிறந்த பாடகர் ஆவாய், வாழ்வில் முன்னுக்கு வருவாய் என எப்பொழுதும் ஆசீர்வாதங்களும் ஊக்கமும் அளிப்பார். அவரது ஊக்குவிப்பால் நான் என் இசைப்பயணத்தில் அதிக நாட்டத்தைக் காண்பித்து, இசை வகுப்புகளுக்கும் செல்கிறேன். அவரைக் குருவாக மதிக்கும் பியானோ கலைஞர் முகமது பஷீரிடம் என்னை அறிமுகப்படுத்தி, பல அறிவுரைகளை அவரிடமிருந்தும் பெற வழிவகுத்தார். அண்மையில் ‘மாஸ்க் ஸ்டூடியோஸ்’ உன்னிகிருஷ்ணன் பாடல் போட்டியில் நான் பங்குபெறுவதற்கும் அவரே மூலக்காரணம்.

நான் மட்டுமல்ல, அவர் பாடச் செல்லும் கரோக்கி குழுக்களில் (புக்கிட் பாஞ்சாங், தோ பாயோ, இயூ டீ, காக்கி புக்கிட்) பாடகர்கள் அனைவரும், அவர் புதியவர், அனுபவமிக்கவர் எனப் பாரபட்சமின்றி வழங்கும் பாராட்டுகளையும் ஆலோசனைகளையும் மிகவும் போற்றுகின்றனர். லிங்கம் எங்கள் அனைவருக்கும் அவ்வளவு நெருங்கிய தோழர்.

லிங்கம் என்மீது மட்டுமின்றிப் பொதுவாக அனைவர்மீதும் அளவுகடந்த அன்பு வைத்திருப்பவர். அவரைக் கண்டு உரையாடினாலே வாழ்வில் அத்தனை அரிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்! எனது நல்ல நேரம் அவரது வீடு என் அலுவலகத்திற்கு அருகே உள்ளது. அவரது சிரித்த முகம், அன்பான பேச்சு ஆகியவற்றில் வேலைமுடித்துத் திரும்பும் களைப்பு நொடிப்பொழுதில் மறைந்துவிடும்.

லிங்கத்தின் கனவு, அவரது வாழ்க்கை அனுபவங்களைப் பிறருடன் சுருக்கப்பெயர்கள் (acronyms) வழி பகிர்ந்துகொள்வது. அவரது அண்டைவீட்டார் விஷ்ணு வரதன், சபரி ஆகியோரின் துணைகொண்டு அவரது கனவை நனவாக்க நாங்கள் முனைகிறோம். அன்பான அவர்களும் அவரிடமிருந்து தப்லா கற்றுவருகின்றனர். விஷ்ணு கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் கரோக்கி பாடுவதற்கு லிங்கத்தைத் தன் உந்துவண்டியில் அழைத்துச் செல்வார். அவர் தனிமையின் வலியை அறியாது பாடி, கலந்துரையாடி மகிழவைப்பார்.

லிங்கம் அண்மையில் கல்லீரல் புற்றுநோய்க்கு உள்ளாகி இப்பொழுது குணமடைந்துவருகிறார். எனினும், தன் வலியைப் பொருட்படுத்தாது, இசையிலும் சுருக்கப்பெயர்களிலும் தன் முழுக் கவனத்தைச் செலுத்திவருகிறார். அவர் அடிக்கடி சொல்வதுபோல, நம்பிக்கை என்பது மிகவும் சக்திவாய்ந்தது; ஆங்கிலத்தில், அவர் உருவாக்கிய ஒரு சுருக்கப்பெயர் HOPE – Hold Onto Positive Energy. நம்பிக்கையைக்கொண்டு அனைத்துச் சிக்கல்களையும் சமாளித்துக் கடந்துவிடலாம்.

மூப்படையும் சமுதாயமான சிங்கப்பூரில் முதியோர் அனுபவம் பொங்கும் நிறைகுடங்களாக இருக்கின்றனர். அவர்களது அறிவுச் சேகரத்துக்கும் வாழ்க்கைச் சாதனைகளுக்கும் அங்கீகாரம் கொடுத்து, அவர்களிடம் செவிசாய்த்தால் நம் இளையர்கள் புத்துணர்ச்சியும் பெருவாழ்வும் வாழ்ந்து சாதிப்பார்கள். முதியோரும் தனிமையில் வாடாது மனம் நிறைவை அடைந்து ஆசீர்வதிப்பர். வயது இடைவெளி நட்புக்கு ஒரு பொருட்டில்லை.