புத்தகங்கள்

0
190
மஹேஷ்

புத்தகங்கள் அலமாரியிலிருந்து எட்டிப்பார்க்கின்றன
மிகுந்த நிராசையுடன்.
சந்தித்து பல மாதங்களாயிற்று.
அவற்றுடன் நட்புறவோடு இருந்த மாலை வேளைகள்
இன்றைய நாட்களில்
பெரும்பாலும் கணினித் திரைகளின் முன்னே கழிகின்றன.
நம்மை நிம்மதின்றி அலைக்கழித்த அவை
நன்கு உறங்கவும் பழகிவிட்டன.
அவை சொன்ன உண்மைகள்
அழியா வரம் பெற்றவை.
அவை நெருக்கிக் கட்டிய உறவுகள்
இன்று பிரிந்து சிதறியிருக்கின்றன.
பக்கங்களைப் புரட்டும் மெல்லிய ஒலியில்
பலநூறு சொற்கள் புரள்கின்றன.
பக்கங்களற்ற திரை சாவியாகிப் போன வயல்.
அதில் ஒளிரும் சொற்களோ துளிர்க்கவியலாத விதைகள்.
மட்குவளைகளை பீங்கான்கள் விரட்டின.
போலவே பக்கங்களைப் புரட்டிய விரல்களை
ஒரு சுட்டியின் ‘க்ளிக்’ ஓசை
அரை மயக்கத்தில் தள்ளுகிறது.
திரையிலோ பொருளற்றவைகளின் நடனம்.
புத்தகங்களுடனான முயக்கம் நழுவிவிட்டது.
மார்பில் வைத்தபடி உறங்கியிருக்கிறோம்.
மடியில் வைத்தபடி அமர்ந்திருக்கிறோம்.
முழங்கால்களையே ரேஹாலாக்கி வாசித்திருக்கிறோம்.
வெற்று ‘க்ளிக்’ ஓசையில் எதைத் தழுவுவது?
புத்தகங்களுக்குள் வைத்த காய்ந்த மலரின் வசீகரமோ
காகிதமும் மையும் இணைந்து முகிழும் நறுமணமோ
புத்தகங்கள் பெறவும் தரவும் சாக்காக மலர்ந்த காதலோ….
இனிய நினைவுகளைத் துரத்தும் ‘க்ளிக்’குகளை வெறுக்கிறேன்.
புத்தகங்கள் அலமாரியிலிருந்து எட்டிப்பார்க்கின்றன
மிகுந்த நிராசையுடன்.

*ரேஹால் – புத்தகம் வைத்து வாசிக்கும் பலகை

கவிஞர் பற்றிய குறிப்பு

குல்ஸார்

குல்ஸார் என்று அழைக்கப்படும் சம்பூரண் சிங் கால்ரா, பஞ்சாபில் (இன்றைய பாகிஸ்தான்) உள்ள ‘தீனா’வில் பிறந்தவர். கவிஞர், கதாசிரியர், பாடலாசிரியர், இயக்குனர் என்று பன்முகங்கள் கொண்டவர். இந்தி, உருது மட்டுமல்லாமது ப்ரஜ் பாஷா, காரிபோலி போன்ற பல்வேறு மொழிகளிலும் சிறந்து விளங்கியவர். பத்மபூஷண், சாஹித்ய அகாதெமி விருதுகளும் கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக ஆஸ்கர் விருதும் வெற்றவர். திரைத்துறையில் மகத்தான பங்களிப்புக்காக தாதாசாஹிப் பால்கே விருது பெற்றவர்.